எந்தப் பிரச்சினையுமற்று பாதுகாப்பாக வாழ்வபவர்களுக்கு அகதி என்ற வார்த்தையும் அது தரும் ரத்தமும் சதையுயுமான வாழ்க்கையும் அது தரும் வலிகளையும் எந்த அளவுக்கு புரிந்து கொள்ள முடியும்?

 ஏகாதிபத்தியங்களின் உலகமய ஆதிக்க காலத்தில் உள்நாட்டிலேயே அகதிகளைப் போல வாழ்வு மாற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் தேசிய இன ஒடுக்குமுறைகளுக்காக உலகமெங்கும் மக்கள் அகதிகளாய் துரத்தப்படுகிறார்கள். வல்லரசு சூதாட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்த மக்களின் அவலத்தை புரியவைப்பதற்கான முயற்சியே இந்தப்பதிவு. நமக்கு தெரிந்த ஈழத்தின் அகதியான வாழ்க்கை ப்ற்றி வினவு தளத்தில் பல விவாதங்களில் பங்கு கொண்டு உங்களுக்கு அறிமுகமான ரதி இங்கே அந்த முயற்சியை தருகிறார். ஈழத்திலும் பின்னர் தமிழகத்திலும் தற்போது கனடாவிலும்ஈழத்தின் நினைவுகள் - ரதி அகதி என்ற பெயரில் வாழ்க்கைய நகர்த்திக்கொண்டிருக்கும் ரதி ஒரு பெண் என்ற முறையிலும் இந்த நாடோடி வாழ்க்கையின் கசப்புகளை கூடுதலாக உணர்ந்திருப்பார். ஈழம் தற்போது பாரிய பின்னடைவு கண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தின் நினைவுகளை மீட்டிக் கொண்டு வரும் முயற்சியாகவும், வினவில் வாசகராக அறிமுகமாகும் நண்பர்களை படைப்பாளிகளாக உயர்த்த வேண்டுமென்ற எமது அவாவினாலும் இங்கே தோழர் ரதியின் நினைவுகளை பதிவு செய்கிறோம். இந்த நினைவுகள் நாம் எவ்வளவுதான் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஈழப் போராட்டத்தின் கடமைகளை செய்வதற்கு ஒரு சிறிய தூண்டுகோலாகாவாவது இருக்குமென்று நம்புகிறோம். ரதியை உற்சாகப்படுத்துங்கள், அவரது நினைவுகளை உங்கள் நினைவலைகளில் அரசியல் உணர்வோடு சேமித்து வையுங்கள். நன்றி.

நட்புடன்
வினவு

……………………………………………………..

நான் அரசியல் பேசப்போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எங்க‌ள் வாழ்வு எப்படி போர் என்ற சகதியில் சிக்கி சின்னாபின்னப்பட்டது என்று என் அனுபத்தை தான் சொல்ல வருகிறேன்.

இவை என் மனக்குமுறல்கள் மட்டுமே. உலகத்தமிழ் உறவுகள் இந்த பூகோளப்பந்தில் பத்து கோடியாம். அதில் பாதிக்கு மேல், ஆறரை கோடி, தமிழ்நாட்டு உறவுகள். ஆனால், ஈழத்தில் மட்டும் நாங்கள் உயிரோடு இருப்பவர்களை எண்ணாமல், தினம், தினம் செத்துமடிபவர்களைத்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இதுதான் ஈழத்தமிழனின் தலைவிதியா என்று யாரிடம் கேள்வி கேட்பது, ஐ.நா. விடமா அல்லது சர்வதேசத்திடமா? தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால் அந்த நாடு நிச்சயமாக தன் உறவுகளுக்கு நடந்த கொடுமைகளை சர்வதேசத்திடம் தட்டி கேட்டிருக்கும். ஆனால், உலகத்தில் தமிழன் பத்து கோடி என்றாலும் அனைவருமே இரண்டாந்தர, மூன்றாந்தர பிரஜைகளாகத்தானிருக்கிறோம். தமிழனுக்கு என்று ஒரு தாய்நாடு இல்லாமல் போனதிற்கு யார் காரணம்? நினைத்தாலே வேதனையாக இருக்கிறது. தண்ணீருக்கு என்று ஒரு தனிக்குணம் உண்டு. அதை எந்த பாத்திரத்தில் நிரப்புகிறோமோ அதன் வடிவத்தை அது பெறும். அதேபோல் தான் ஈழத்தமிழனையும் இந்திய ஆளும் வர்க்கமும் சர்வதேசம் மற்றும் ஐ. நா. சபையும் எங்களை எந்த பாத்திரத்தை அவர்கள் விரும்புகிறார்களோ அதை நிரப்பச்சொல்கிறார்கள். எதிர்த்தால் எங்கள் நியாயமான போராட்டங்களை கூட மழுங்கடிக்கிறார்கள். எங்கள் மறுக்கப்பட்ட உரிமைகள், வதைமுகாம்களில் உள்ள உறவுகள் பற்றி பேசினால் அவர்கள் மெளனிகளாகி விடுகிறார்கள். சரி, ஈழத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் இனஅழிப்பு நடந்த‌தே, அதையாவது இந்த ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் “இனஅழிப்பு” என்றாவது ஒப்புக்கொண்டார்களா? அதுவும் இல்லை. இன்று உலக இயங்குவிதிகள் இரண்டு என்று நினைக்கிறேன், ஒன்று பணம் (மூலதனம்) மற்றது வல்லாதிக்கப்போட்டி. இன்று இந்துமாசமுத்திரத்தில் இந்த இயங்கு விதிகளில் ஒன்றான உலகநாடுகளின் வல்லாதிக்கப்போட்டியில் ஈழத்தமிழன் வாழ்வா சாவா பிரச்சனை அதை நிர்ணயிக்கும் ஒரு காரணியாகவே மாறிவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது. இதில் நாங்கள் முற்றாக அழிக்கப்படுவோமா அல்லது மீண்டு வருவோமா? எங்களுக்கான நீதி கிடைக்குமா? இதையெல்லாம் தாண்டி மறுக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக தசாப்தங்களாக நடந்த போராட்டம், எங்கள் போரியல் வாழ்வு, அதன் தாக்கங்கள் என்பவற்றைதான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். போர் என்பது பொதுவாகவும் ஒவ்வொரு தனிமனிதனையும் நிறையவே பாதிக்கிறது. போர்ச்சூழலில் மரணம், உளவியல் தாக்கங்கள், மற்றும் சமூக பொருளாதார காரணிகள் எவ்வாறு தனிமனித வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது என்பதை என் அனுபவங்கள் மூலம் சொல்ல முனைகிறேன்.

நான் உலகில் அதிகம் நேசிப்பது மழலைகள், அவர்களின் மொழி, மற்றது பூக்கள். நான் மதிப்பது பெண்களின் மானம், அவர்களின் உரிமைகள், அடுத்தவரை பாதிக்காத அடிப்படை மனித உரிமைகள். நான் அதிகம் வெறுப்பது உங்களில் அனேகமானோருக்கு தெரிந்திருக்கும், “போர்”. நான் விரும்பும், மதிக்கும் அத்தனையுமே என் மண்ணில் போரின் பெயரால் நாசமாக்கப்பட்டுக்கொண்டுடிருக்கிறது. போர் என்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் தான் என் கருத்து. அதற்காக நான் என் தமிழ்சோதரர்களின் இன்னல்களை குறைத்து கூறவில்லை.பொதுவாகவே குழந்தைகள், பெண்கள் என்றால் அவர்களின் இன்னல் கண்டு மனம் இரங்குவார்கள். ஆனால், சிங்கள பேரினவாதிகளிடமும் ராணுவத்திடமும் இதையெல்லாம் எதிர்பார்த்தால், அதைப்போல் முட்டாள்தனம் உலகில் வேறொன்றுமில்லை. வன்னித்தமிழன் முழு இலங்கைக்கும் சோறு போட்டான் என்றார்கள். ஆனால், அவன் குழந்தைகள் வன்னியில் தண்ணீரின்றியே சாகடிக்க‌ப்பட்டார்கள். அந்த பிஞ்சுகுழந்தைகள் என்ன சோறு கேட்டார்களா அல்லது தமிழீழம் கேட்டார்களா? தவித்த வாய்க்கு தண்ணீர்தானே கேட்டார்கள். இது ஒரு குற்றமா? அவர்களுக்கு கிடைத்தது என்னவோ குண்டுமழைதான். வன்னியில் அந்த பிஞ்சுக்குழந்தைகள் “தண்ணீ, தண்ணீ….” என்று அழுதது எப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சை அடைக்கிறது. இப்படி தண்ணீர் இல்லாமல் செத்துமடிந்த எங்கள் செல்வங்கள் எத்தனையோ? இதுவும் போர் விதியா? குழந்தைகளுக்கே இந்த கதி என்றால் என் சோதரிகளின் நிலை சொல்லவே வேண்டாம். சிங்களகாடையர்களாலும் ராணுவத்தாலும் காமப்பசி தீர்க்கும் சதைப்பிண்டங்களாகவே பார்க்க்ப்படுகிறார்கள், நித்தம், நித்தம் சிங்களராணுவத்தால் என் சகோதரிகள் நாசமாக்க்ப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் போர் முறையோ? உலகில் குழந்தைகள் பெண்களின் உரிமைகள் பேசும், காக்கும் அமைப்புகள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கின்றன? அவர்களுக்கு நாங்கள் தான் சொல்லவேண்டியிருக்கிறது ஈழத்தில் எங்கள் குழந்தை செல்வங்களும் பெண்களும் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்வாழ அனுமதி மறுக்கப்படுகிறார்கள் என்று.

ஈழத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பதால், பூக்களுக்கு கூட நாங்கள் வேலை கொடுப்பதில்லை, ஒரு மனிதனின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கு. மனித உடல்களை எரித்துவிட்டோ அல்லது புதைத்து விட்டோ, அதற்கு பக்கத்தில் பதுங்குழி வெட்டி கொண்டோம். பிறகு அதிலேயே பிணங்களாயும் ஆனோம்.

போர் என்ற பெயரில் வாழ்வுரிமை கூட மறுக்கப்பட்டு என் இனம் ஈழத்தில், என் மண்ணில், செத்துமடிவதுதான் விதியா என்று நினைத்தால், என் நெஞ்சுவெடித்து என் உயிர் போய்விடாதா என்றிருக்கிறது. பொதுவாகவே என்னை தெரிந்தவர்கள் சொல்வார்கள், எனக்கு துணிச்சல் அதிகம் என்று. ஆனால், என் உறவுகளின் தாங்கொணா துன்பங்களை நினைத்து நான் தனிமையில் அழாதநாட்களே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். எங்கள் சொந்தமண்ணிலேயே நாங்கள் அகதிகளாய், ஏதிலிகளாய் மூன்றாந்தர பிரஜைகளாக்கூட இல்லாமல் மிருகங்கள் போல் நடத்தப்படுகிறோம். தமிழனாய் பிறந்ததால் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுகிறதா? ஏன் தமிழர்கள் என்றால் மனிதர்கள் இல்லையா?

நான் அகதியாய் ஈழத்திலும், இந்தியாவிலும் தற்போது கனடாவிலும் என் அனுபவங்களை மீட்டிப்பார்க்கிறேன். என் தன்மானம் என்னை எத்தனையோ தடவைகள் சாட்டையாய் அடித்திருக்கிறது. எதற்கு இந்த “அகதி” என்ற பெயர் என்று. கூனிக்குறுகி பலதடவை இந்த அகதிவாழ்க்கை தேவையா என்று என்னை நானே வெறுக்கிற சந்தர்ப்பங்களும் உண்டு. ஏன் எல்லா மானிடப்பிறவிகள் போலும் என் இருத்த்லை, என் உயிரை என்னால் நேசிக்கமுடியவில்லை? காரணம், நான் தமிழ் என்பதலா? அல்லது நான் சுதந்திரத்தை அதிகம் நேசிப்பதாலா? நான் சட்ட‌ப்படியான உரிமைகளோடும், தன்மானத்தோடும் என் மண்ணில் வாழ நினைப்பது ஒரு குற்றமா? நான் அகதியாய் அன்னியமண்ணில் மடிவதுதான் விதியா?

ஈழத்தில் என் பதுங்குழி வாழ்க்கை, இடப்பெயர்வு, கல்விக்கூடங்கள், வாழ்விடங்கள் எதுவும் சந்தோசம் நிறைந்தவை அல்ல. என் சந்தோசமான மாணவப்பருவம் மற்றும் பாடசாலை நாட்களில் கூட போரியல் வாழ்வின் காயங்கள் நிறையவே உண்டு. ஆனால், சுதந்திரம் வேண்டுமென்றால் இதெல்லாம் விலையோ என்று எங்களை நினைக்கத்தூண்டிவிட்டது சிங்கள அடக்குமுறை.

என் அனுபவங்கள் தொடரும்…..

இது எனக்கு ஒரு கன்னி முயற்சி. நான் முன்பு இப்படி நீண்ட பதிவுகள் எழுதி பழக்கமோ அனுபவமோ இல்லை. வினவு கொடுத்த தைரியத்தில் எழுத தொடங்கிவிட்டேன். ஏதாவது குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். என்னை எழுதுவதற்கு ஊக்கம் கொடுத்த வினவு, நண்பர் RV க்கும் என் நன்றிகள். என்னை உண்மையில் எழுததூண்டியது பொல்லாதவன்/சரவணகுமார் என்ற ஒரு தமிழ்நாட்டு சகோதரர் சொன்னதுதான். தமிழ்நாட்டில் சாதாரண மக்களுக்கு ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை எந்த ஊடகங்களும் சொல்வதில்லை என்பதுதான்.