பாசிட் ராஜபக்சவின் மகன் நாமல் தமிழ் நாசி முகாமில் தாக்கப்பட்டதாக வெளியிட்ட படம் போலியானது(புதிய படம் இணைப்பு)

இதுவோ புலத்து புலிப்பினாமிகளின் சித்து விளையாட்டு. அரசியல் வறுமையின் வக்கிரம். பாதிக்கப்பட்ட மக்களை வைத்தே, தங்கள் குறுகிய சுயநலனை அடையமுனைகின்றனர்.

சிங்களப் பேரினவாத பாசிட்டுகள் அப்பாவி மக்களை தன் நாசிய முகாமில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றது. தண்ணீருக்கு மணிக்கணக்காக கியூ, மலம் கழிக்க கியூ. மருத்துவரை சந்திக்க கியூ. அங்கும் காணாமல் போதல், கடத்தல் என்று இனக் களையெடுப்பு நடக்கின்றது. பெண்கள் தங்கள் பெண் உறுப்புகளுடன், மனிதனாகவே வாழமுடியாத அவலங்கள். எந்தனை கொடுமைகள், கொடூரங்கள் அங்கு நிகழ்கின்றது. 

 

இந்த மக்கள் முன் எந்த சிங்கள பாசிட்டுக்கள் சுதந்திரமாக செல்ல முடியாது. எப்படி தமிழ் பாசிட்டுகள் அங்கு அடி உதையின்றி வாழமுடியாதோ, அதேநிலைதான் சிங்கள பாசிட்டுகளுக்கும் நடக்கும். மக்களை புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறியவர்கள் தான், இன்று  மக்களை அதைவிட மோசமாக வதைத்து வருகின்றனர்.

 

இந்த மக்கள் முன் ராஜபக்ச குடும்பம் தன் பாசிசப் படைகள் இன்றி, சுதந்திரமாக செல்ல முடியாது. மக்கள் அடித்தே கொன்று விடுவார்கள். அவ்வளவு கொடுமைகளை அந்த மக்களுக்கு செய்து வருகின்றனர். இந்த உண்மை ஒருபுறம்.

 

ஆனால் தமிழ் பாசிசத்தை அரசியலாக வளர்த்தவர்கள், பொய்ப் பித்தாலாட்டம் மூலம் எதார்த்த உண்மைகளை புதைக்க முனைகின்றனர். அவர்கள் இதற்காக தயாரித்து வெளியிட்ட போலிப் படம் தான் இதில் உள்ளது. 


 
namal_rajapaksha.jpg

ராஜபக்சவின் மகன் நாமல் படம் ஒன்றை வெட்டி, இனம் தெரியாத ஒரு படத்தின் மேல் செருகி ஒட்டியுள்ளனர். பின்னணிப் படத்தை மறைக்கவும், தமது மோசடித்தனமான ஒட்டுவேலை வெளித் தெரியாத வண்ணம் மூடிமறைக்கவும், நாமல் அல்லாத பின்னணிப் படத்தினை மங்கலாக்கியுள்ளனர். படம் பொய்யானது போலியானது. நாமல் தவிர்ந்த மற்றவை அனைத்தும் மங்கலானவை. உண்மையான படத்தில், அனைத்தும் ஒரு தரத்தில் இருக்கும்.

 namal_org.jpg

உண்மையான மக்களின் வாழ்வை பொய்கள் மேல் கட்டியெழுப்பும்  நிலைக்குள்,  புலத்து புலிகளின் அரசியல் வங்குரோத்து கேவலமானதாக உள்ளது. உண்மையில் இது போன்ற  ஒரு சம்பவம் நடந்தாலும் கூட, இது போன்ற போலியான நடத்தைகளால், அந்த மக்களின் போராட்டங்கள் தான் கொச்சைப்படுத்தப்படுகின்றது.

 

புலத்து மக்களை இது போன்ற செயல்கள் மூலம் குசிப்படுத்தி தம் பின்னால் தக்கவைக்க முனைகின்றனர். இதன் மூலம் புலத்து சொத்துப் போராட்டத்தை, அகதி மக்கள் பெயரிலும்  அரங்கேற்றுகின்றனர். இவை எவையும் மக்கள் நலன் சார்ந்தல்ல. மாறாக அவர்களுக்கு எதிரானது. தம் குறுகிய சொந்த நலனுடன், வக்கிரமாக இட்டுக்கட்டும் பிரச்சாரப் போரையே நடத்த முனைகின்றனர்.

 

புலத்து புலிப்பினாமி இணையமான குளோபல் தமிழ் செய்தி இணையம் முதல் புலி சார்பு இணையங்கள் வரை, எந்த சுய பகுத்தறிவுமின்றி மக்களை ஏமாற்ற இந்தப் பொய் பித்தலாட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

 

மக்கள் உண்மையில் எப்படி வாழ்கின்றனர். இதற்கு இந்தப் படங்களே வெளிப்படையான சாட்சிகளாக உள்ளது. இவையோ அந்த மக்களின் ஒரு பக்கம் தான். முழுமையை அங்கு கண்டறிய முடியாத அளவுக்கு, அங்கு பாசிசம் நிலவுகின்றது. இருந்தபோதும் அந்த வாழ்வின் எதார்த்தத்தை இப் படங்கள் தெளிவாக படிம்பிடித்து காட்டுகின்றது. 

 

 

இந்த எதார்த்தத்தை முன்னிறுத்தி போராட, மக்கள் அரசியல் வேண்டும். மக்களுக்காக சிந்திக்கும் அரசியல் நேர்மை வேண்டும். மக்களை முட்டாளாக ஏமாற்றி அவர்களுக்காக போராடப் போவதாக கூறுவது பொய்யானது, பித்தலாட்டமானது.

 

ஊடகவியலை தங்கள் சொந்த நலன் சார்ந்த வியாபாரமாக கடைவிரித்து வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்க முனைகின்றனர். உண்மையையும், பொய்யையும் கூட அறியமுடியாத மந்தைத் தனத்தில் சமூகத்தை காயடித்து, கடை விரிக்கும் கும்பல்கள் தான் இதைச் செய்கின்றது. இதற்கேற்ப அகதி மக்களின் போராட்டத்தையும், வாழ்வையும் கூட சந்தைப்படுத்த முனைகின்றது. பிரபாகரன் படத்தையே வெட்டியொட்டி நக்கீரன் வியாபாரம் செய்தது போல், மகிந்தாவின் மகனின் படத்தை புலத்துப் புலிகள் வெட்டி ஒட்டி கடைவிரிகின்றனர். எல்லாம் மக்களின் பெயரில். மக்களை விற்று பிழைக்கும் கூட்டம் தான், மக்களின் முதல்தரமான நயவஞ்சகமான எதிரிகளாக இன்று உள்ளனர்.

 

பி.இரயாகரன்
12.07.2009