Language Selection

தலைவர் உயிருடனில்லை என்று கூறும் நாடு கடந்த தமிழீழக்காரரும், தலைவர் இன்னமும் உயிருடன் இருப்பதாக கூறுவோரும், எதற்காக தமக்குள் முரண்படுகின்றனர்? மக்களுக்காகவா! அல்லது தம் சுயநலனுக்காகவா? மக்களுக்காக எனின், எப்படி?

இந்த இரு கும்பலும் தங்கள் சொந்த சுயலாபத்துக்காகவே, தமிழ்மக்கள் பெயரால் தமிழ் மக்களுக்கான போராட்டத்தை மழுங்கடிக்கின்றனர். மக்கள் தம் சொந்த வாழ்வு சார்ந்த எதார்த்த உண்மைகள் உணர்ந்து செயல்படுவதைத் தடுக்கும் இந்தக் கும்பல், தங்கள் சொத்து, வியாபாரம், அதிகாரம், நாட்டாமை என்ற எல்லைக்குள், தமிழ் மக்களை அடக்கி வைக்கமுனைகின்றனர்.

 

இவர்களுக்கு இடையில் நடக்கும் பினாமி சொத்துகள் சார்ந்த முரண்பாடு, உண்மைகளை மறுதலிக்கின்றது. இதன் மூலம் புலியின் புலத்து அதிகாரத்தை கைப்பற்றுவதும் அல்லது அதைத் தக்கவைப்பதன் மூலமும், பினாமிச் சொத்தை தம் வசப்படுத்த முனைகின்றனர்.

 

இப்படி புலத்தில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகியுள்ளது. திரைமறைவு சதிகள், சூழ்ச்சிகள், அவதூறுகள் என்று, இதுவே முன்னாள் புலத்து புலிகளிடையேயான போராட்டமாகிவிட்டது. இதை வெளிப்படையாக மக்கள் முன் மூடிமறைக்கவும், இதற்கு ஆதரவைத் திரட்டவும் முனைகின்றனர். இதற்காக நாடு கடந்த தமிழீழம் என்றும், தலைவர் உயிருடன் உள்ளார் என்றும் புலுடா விடுகின்றனர்.

 

புலித் தலைமையில் மக்கள் விரோத வலதுசாரிய அரசியல் பாசிசமாகி, அதன் செயல்தந்திரங்கள் எல்லாம் மாபியாத்தனம் பெற்றது. இதனால் இது தன்னைத்தான் காட்டிக் கொடுத்து, தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டியது. இது உள்ளிருந்து குழிபறிப்புகளை, காட்டிக்கொடுப்பை, சொத்தை அபகரிக்கும் சதிகளை  நடத்தி, முரண்பாட்டின் மொத்த வடிவமெடுத்தது. மாபியாத்தனத்துடன் குழிபறித்தது.

 

இதற்கமைய உருவான தனிநபர் வழிபாடும், கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தலும் சேர்ந்து, புலியை புதைகுழி வரை இட்டுச்சென்றது. புலித் தலைமையின் அரசியல் வறுமையும், வக்கிரமும் இதனுடன் சோந்து, முழுப் போராட்டத்தையும் நாசமாக்கி சீரழித்தது.

 

போராட்டத்தின் பெயரில் பணத்தைக் கொடுத்தவனின் சுயதேவைகள், தமிழர் போராட்டமாக மாறியது. மண்ணில் மக்கள் விருப்புக்கு மாறாக யுத்தம் திணிக்கப்பட்டது. புலத்து பணம், அதை வைத்துக்கொண்டு புலத்தில் இருந்து புலியை வழிநடத்தியவர்களின் சுயநலம், இவர்களுக்குள் சொத்து சார்ந்து உருவான மாபியா சதிகள், மொத்தத்தில் போராட்டம் மேலான குழிபறிப்பாக மாறியது.

 

இயக்கச் சொத்தை அபகரித்தல், அதைக் கொண்டு வாழ்தல், காட்டிக் கொடுத்தல், போலியான நம்பிக்கையைக் கொடுத்தல் என்று, போராட்டத்தின் முழுப்போக்கையும் தமக்கு ஏற்ப மாற்றினர். மக்களை மயக்கத்தில் வைத்து பணத்தைக் கறத்தல் என்பது, அதன் மைய உத்தியாக மாறியது. பொய்கள், புரட்டுகள், கற்பனைகள், இல்லாதது பொல்லாததைச் சொல்லி ஏமாற்றுதல் என்று, மக்களை மந்தைகளாக வைத்து அவர்கள் அறியாத வண்ணம் கறந்தனர். அதையே தனக்குள்ளான அரசியல் உறவுகளாக்கி கொண்டனர். சொத்து சார்ந்த புலியின் உள் முரண்பாடு, வன்னித் தலைமைக்குள் கூட புதிய முரண்பாடாகியது. புலத்திலும் மண்ணிலும் வௌ;வேறு அணிகள், இது சார்ந்து இயங்கியது.

 

புலித்தலைமை இந்தப் போக்கில் தன்னைத்தானே அழிவுக்கு இட்டுச்செல்ல, இலகுவாக அழிக்கப்பட்டது. இந்த அழிப்பில், சொத்து சார்ந்த கும்பலின் குறுகிய  நலன்கள் நேரடியாகவும்  மறைமுகமாகவும் துணைபுரிந்தன.

 

இப்படி புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்து அழித்த கும்பல் இரண்டாகி முரண்பட்டு நிற்கின்றது.

 

1. புலித்லைவர் 'வீரமரணம்" அடைந்து விட்டார் என்று கூறி, தனது துரோகத்தை மறைக்க நாடு கடந்த தமிழீழம் என்கின்றது.

 

2. புலித்தலைர் மரணிக்கவில்லை என்று கூறி, தாம் இன்னமும் தலைவரின் கீழ்  இயங்குவதாக மறுதரப்பு கூறுகின்றது.

 

இப்படி இவர்கள் கூறுவதன் மூலம், இருதரப்பும் தம்மைத் தாம் புலியின் வாரிசுகள் என்கின்றனர். இவை மக்களுக்காக போராடுவதற்காகவல்ல. மாறாக புலிப் பினாமிச் சொத்;தை தம்முடன் தக்கவைக்கவும், கைப்பற்றவும் இவர்களுக்குள் நடக்கும் ஒரு போராட்டமாகியுள்ளது.

 

தமிழ் மக்களுக்கான போராட்டம் என்பது, நடந்ததை முழுமையாக விமர்சனம், சுயவிமர்சனம் செய்வதில் அடங்கியிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு இழைத்த அரசியல் தவறுகளையும், போராட்டத்துக்கு இழைத்த துரோகங்களையும் முழுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்குவது அவசியமானது.

 

கடந்த காலத்தில் நடந்த புலத்து போராட்டங்களையும்,  அது முன்வைத்த கோசங்களையும், அதன் சரி பிழையையும் விவாதத்துக்கு மீள உள்ளாக்க வேண்டும்.

 

நண்பன் யார்?, எதிரி யார்? என்ற கடந்தகால மதிப்பீடுகளை பகிரங்கமான விவாதத்துக்கு உள்ளாக்கி, தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தியிருக்க வேண்டும்.

 

புலியை பயன்படுத்தி பிழைத்த கூட்டத்தையும், பினாமிச் சொத்தின் பின் கட்டமைக்கும் மாயைகளை உடைத்துப் போட்டிருக்க வேண்டும்.

 

புலிகள் பெயரால் மக்களுக்காக போராட முடியாது என்பதை, வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

 

இப்படி இவைகளை இந்த இரு மக்கள் விரோதக் கும்பலும் செய்யவில்லை. மாறாக தம்மால் அழிந்த புலித்தலைமையின் வாரிசுகளாக, தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றனர்.

 

இதற்கு தமிழ்மக்கள் என்று முதுகு தடவி, அவர்களை தம்  சுயதேவைக்கு தொட்டுக்கொள்ள முனைகின்றனர். இதற்கமைய அவர்கள் கட்டமைக்கும் மாயைகள், புலத்து  தமிழர்கள் அரசியல்  எதார்த்தத்தைப் புரிந்து போராடுவதை தடுத்து நிறுத்துகின்றது. மண்ணில் பாசிசம் தலைவிரித்தாட, மக்கள் சந்திக்கும் வாழ்வின் எதார்த்தமோ பயங்கரமானது. அதற்கு எதிராக அந்த மக்களுக்கு உதவும் வகையில், புலத்து மக்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. மக்களிடம் போராட்டத்தின் பெயரில் திருடிய பினாமிச் சொத்தை தமதாக்க, புலத்து மாபியாக்கள் உருவாக்கும் அரசியல் மாயைக்குள் புலத்து தமிழினம் மீண்டும் புழுக்க வைக்கப்படுகின்றது.

 

பி.இரயாகரன்
10.07.2009