முதற்புள்ளி: ஒரு புள்ளியிலிருந்து ஆரம்பித்த இடத்தைக் குதறியபடி அழித்தவிடத்தில் அதுவே உயிர்ப்புக்கான இன்னொரு புள்ளியாகும், மனதினது இன்னொரு பதிலும் வந்ததில் மேலும் தொடரக்கூடிய இந்த விவாதத்தில் புள்ளிகளின் தோற்றத்தில் துளியளவும் ஆர்வமின்றி-கருத்தின்மீதான கவனத்தைக் குவிப்பதில் ஆர்வங்கொள்ளும் நிலையில்-மையப்படுத்தப்பட்ட எமது போராட்டச் சூழலின்பாலான எங்கள் எண்ணங்களின்மீதான ஒத்தோடல்-எதிர்த்தோடல்கள் சம்பந்தமான குறிப்பைத் தருவதென்பதால் நேர்கோட்டு விளக்கங்கொள்ளும் எவரையும் தள்ளிவைத்துவிட்டு இனிமேலும் தொடரலாம்.
(1)
கருத்துகளை எந்த முடிந்த முடிவுகளோடான தீர்ப்புகளோடு கொன்றுவிடுதல் மிகவும் அபத்தமானது.எனவே,இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் ஒவ்வொருவரது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.
இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.இதுகுறித்து அறியப்பட்ட பிராங்பேர்ட்பள்ளி யூர்கன் ஹபர்மார்ஷ் இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்கள் குறித்து, தனது உரையில்(பதிப்பகப் பரிசு 2001 க்கான உரை,பிராங்பேர்ட் சென் பவுல் தேவாலயம்) தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகச் சொல்கிறார்.
இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நாம் பார்க்கின்றோம்.
உதாரணமாக இன்றையபொழுதில் "இஸ்லாமியப் பயங்கர வாதம்"என்ற சமூக உளவியலுக்குப்பின் படையெடுக்கும் மேற்குலக con-federal துருக்கியை இதுவரை "ஐரோப்பிய ஜனநாயகத்துக்கு"முரணற்ற மக்கள் சுமுதாயமாக அங்கீகரிக்வில்லை.ஐரோப்பிய மையவாத்தின் மொத்த இயல்புகளுக்குள் இன்னொரு தேசத்தையும் அதன் மக்களையும் அங்கீகரித்தலென்பதன் இன்னொரு தொடர் அண்மிக்கும் இடம் இனம்சார்ந்த பெருமைகளாக விரிகிறது.இது, எந்தத் தன்னியல்புகளையும் தனது அண்மையப் பெருமைகளுக்கமைய அங்கீகரத்துவருவதை நாம் பார்க்கிறோம்.இன்றைய இலங்கைப்பிரச்சனையில் சாதிய-பிரதேசவாரியான வாதங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அரசியல்;(In Moral Consciousness and Communicatative Action-Habermas) முழுமொத்த தமிழ்பேசும் மக்களினதும் உரிமைகளையும் வேட்டையாடுவதில் "தன்னிலை அங்கீகரிப்புகளை"கோருகிறது!
"சுய ஊசலாட்டம்"(mit instabilen Ich)எங்கள் மக்கள் கூட்டத்தில் பிரதேசரீதியான வேறுபாட்டு முனைப்பைக் கோரிக்கொண்டது.மிகவும் தற்காலிகமான இந்த வாதம் அங்கீகரிப்புக்காக எடுத்த வைத்த அரசியல் சமாந்திரமாக விரிவடைந்து இன்றைய அரசியல் போக்கில் பாரியவொரு தாக்கத்தைச் செய்கிறது.இதை முன்கூட்டி அறிவதிலுள்ள மார்க்சியப் பொருளாதார முறைமை அத்தகையவொரு வெளியினது தெரிவைப் புறக்கணித்திருக்கும் அரசியல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெறும் உணர்வுத் தளத்தில் பார்க்காத போக்கின் விருத்தியே.இது,இலங்கையின் இன்றைய அரசியலில் சரியானதாகவே படுகிறது.
(2)
இன்று, மனிதர்கள் எல்லோருமே அதீத தனிநபர் வாதத்தில் மூழ்கிச் சுதந்திரத்தைத் தமக்குள் கோருகிறார்கள்.இது,தனித்துவம் எனும் தேர்வில் மிக விருத்தியாகும் மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம் இந்த முதலாளித்துவ வர்த்தகச் சமுதாயத்தின் சந்தைப் பொருளாதாரத்தின் மிக வேகமான தயாரிப்பு.இது,ஒரு வகையான மனிதர்களை உருவாக்கப் பற்பல சமூக நடாத்தைகளைச் சுமூகப் பொருளாதாரத்தின் கட்டங்களாகப் பிரித்து, அவைக்கேற்ற தத்துவார்த்தப் போக்குகளை கருத்தியற்றளத்தில் தோற்றுவித்துத் தமது அடிமட்ட அமைப்பைக் காத்து வருகிறது.எனவே,முதலாளித்துவம் "தன்னை மாற்றி,மாற்றி"ப் புதுப்பிக்கும்-புனர் நிர்மாணிக்கும் நிலைமை மிகவும் இயல்பானவொரு கட்டமாக உருவாகிறது.இவர்கள் இத்தகைய மாறுகாலக்கட்டங்களை வெறுமனவே கருத்தியல்-வன்முறைசார் கருத்துநிலைகளுக்குள் நிகழ்த்தவில்லை.மாறாகத் தமது பொருளாதார உற்பத்திப் பொறிமுறைக்குள்ளும் இவற்றைச் செய்து பார்க்கும்போது மேற்காணும் புதிய மனிதத் தெரிவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குள்ளும் முளையரும்புகிறதாக நான் கருதுகிறேன்.
இதன் தொடர்பான ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு தனிநபர்களையும் இந்தச் சமுதாயத்தை; தூற்றவும்,முதலாளித்துவத்தைச் சலித்துக்கொள்ளவும் அதை விமர்சித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும் சதா அனுமதிக்கிறது.இந்த அனுமதிப்பில் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்து,ஒற்றை மனிதர்களாகப்பட்ட"அதீத சுதந்திர"மனிதர்கள் இந்த முதலாளிய உற்பத்திப் பொறிமுறையிலிருந்து அந்நியப்படுகிறார்கள்.இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் ஒரு கட்சியையோ அல்லது சிறு அமைப்பையோ உருவாக்க முடியாது.
இந்த இடத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தும் தொழிலாளர் சங்கங்கள் ஒரு வடிகாலாக மாற்றங் காண்கிறது.இது, முதலாளியத்துக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் கருத்தியல் மனதை நமக்குள் உருவாக்கும்போது,நாம் தனிநபர் புரட்சிப் பாத்திரத்தோடு தடுத்தாட்கொள்ளப் படுகிறோம்.இங்கே,தனிநபர்களாக இருக்கும் எமது புரட்சிகர மனதுக்கு இந்த முதலாளித்தவத்தின் ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொதிப்பதைத் தவிர வேறுவழியில்லை.
இதுதாம்"வேகம்"குறைவென்ற ஆதங்கம்-திடீர் புரட்சிக்கு உந்தும் மனநிலை!
உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு புரட்சிகர கட்சியின் புரட்சிகர நகர்வு இந்த முதலாளிய ஜனநாயகத்தால் அனுமதித்துச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?-இல்லை.வெறுமனவே,போலிச் சோஷலிசக் கட்சிகள் பாராளுமன்றச் சகதிக்குள்ளும் அதன் வாதத்துக்குள்ளும் வீழ்ந்து மக்களை ஏமாற்ற அதுவே,ஷோசலிசத்தின் தோல்வியாக வர்ணிக்கப் படுகிறது.இது, இன்றைய முதலாளித்துவத்துக்கு மிகவும் ஒத்திசைவாகிறது.
இதை உடைத:துப் புரட்சிகரக் கட்சியின் தோற்றம் எங்கும் உருவாகாதிருக்க இந்த அமைப்பு பலகோடிக்களை கொடுத்துக் கருத்தியல் யுத்தத்தை ஏற்படுத்துகிறது.மறுபுறுத்தில், அணு ஆயுத்தம் தரித்த படைகளைக்கொண்டு பலமாகப் புரட்சியாளர்களைக்கொன்று குவிக்கிறது.
அதாவது,தனிநபர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்க வைத்தவர்கள்,அவர்களை ஒரு அணிக்குள் திரண்டுவிடாது பார்த்துக்கொள்கிறர்ர்கள்.
எங்கே,புரட்சிகரச் சூழலும் அதுசார்ந்து புரட்சிகரமான கட்சி உருவாகிறதோ அங்கோ பற்பல உடைவுகளைச் செய்து,தமது வன்முறை ஜந்திரத்தின்மூலம் புரட்சி ஒடுக்கப்படுகிறது,ஜனநாயகத்தினது பெயரால்.இதன் பின்,"புரட்டுசி" புரட்சிகரத் தன்மையிலான ஒரு சமூகப் பாத்திரத்தை எடுக்கு வைக்கப்படும்போது,அந்தத் தளத்தில் மக்கள் விரோதிகள் கம்யூனிசப் போராளிகளாகவும்,போதகர்களாகவும் நமக்குள் அறிமுகமாகி முதலாளித்துவத்துக்கு ஓலம் போடுகிறார்கள்.அதனால் முதலாளியம் என்றும் நிலைக்க முடிகிறது.எனினும், அதன் பிறப்பில் அது தனது சவக்குழியைத் தொடர்ந்து தோண்டியபடியே இருக்கும்போது பாரிய சரிவுகள் இந்தச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்படுகிறது.அதைச் சரிக்கட்டவொரு தேசத்தைப் பயங்கரவாதிகளின் தாயகமாகக் கருத்துக்கட்டி யுத்தஞ் செய்து கொள்ளையிட்டுக் குறுகிய காலத்துக்கு உயிர்வாழ்வை நீடிக்கிறது.இது தொடர்கதை.
இத்தகைய சூழலில் தனிநபர்களான நாம் "வேகம்"பற்றி வெதும்புவது இயல்பாகிறது.இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.
இனியென்ன நடக்கணும்?
ஓலம்,
அதி தீவிரம்,
வேகமான மாற்றம்,
திடீர் புரட்சி
திடீர் கட்சி,
திடீர் போராட்டம்
திடீர் வெற்றி
அதன் உலகுக்கு அவசியமாகிறது.இது தவிர்ந்த அனைத்தும் மிக வேகங் குறைந்த நிலையாக இருக்கிறது.
முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் ஒரு கணமும் ஓயாது நமக்குள் காரியமாற்றி நம்மைத் தயார்ப்படுத்திச் சமுதாயத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க முனைகிறது.நாளும் பொழுதும் இதுதாம் அதன் வேலைத் திட்டம்!
இந்த நிலையில் நாம் வேறுவிதமாக இந்த நடாத்தைகளை வெற்றிகொள்ள செயற்படுகிறோம்.அங்கே,மேற்காணும் நோக்குக் கிடையாது.எனவே,தனிநபர் வாதமோ அல்லது திடீர் வேகமோ இருப்பதற்கில்லை.அல்லது,இன்றைய சூழலுக்கு அவசியமானதற்ற கருத்து நிலையாகவும் இருக்கலாம்.ஆனால்,இது ஒரு கட்டத்தில் பொது வேலைத்திட்டத்தைப் புரட்சிகரமாக்கிக்கொள்ள முனைதலே புரட்சிகரக் கட்சியின் தோற்றமாக இருக்கும்.
இதையும் மிக வேகமாகப் புரிந்த முதலாளியம்,தொழிலாள வர்க்கத்தை "இழப்பதற்கு அரிய வேலை உண்டு" என்று கருத்தியல் மனதை உருவாக்கி அவர்களை மிக இலகுவாக அடிமைப்படுத்துகிறது.உயிராதாரம் அனைத்தம் உழைப்பினால் தங்கி நிறைவுப்படுத்தும் உலகில்,வேலையே இழப்பதற்கரியதாக மாறுகிறது.இது புரட்சிக்கு எதிராகவே நிற்கும்.
"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை எவரொருவர் குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.
நாம்,நிதானிப்போம்.இத்தகைய நோக்கிலிருந்து சிந்திக்கும்போதுமட்டும்தான் புதிய கோணத்திலான புரிதற்பாடுகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.இந்த ஆரம்பமே நமது விலங்கை நாமே போராடி உடைக்கும் புதிய புரட்சிகரமான பாதையை இனம் காட்டும்.இந்த, இனம் காணும் தருணங்களே எமது உரிமையின் உண்மை நிலையையும்,எது எமது உரிமை,எது சுய நிர்ணயம் என்பதையும் ஓங்கியடித்து எமது முகத்தினதும்,விழிகளினதும் முன் காட்சிப்படுத்தும்.இது மிக அவசியமானது- எமது சமுதாயத்துக்கு.நாம் புலிகளின் பொய்யுரைப்பால் எமது இளைய தலைமுறையையே கையாலாகச் சந்ததியாக மாற்றியபடி, தனிநபர் துதிபாடும் கூட்டமாக மாற்றி வருகிறோம்.இதிலிருந்து மீளவும்,நமது இலக்கை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிப் போராட்டத்தை வர்க்கம் சார்ந்து முன்னெடுக்கவும் நாம் இன்னும் மிக நீண்டதூரம் சென்றாக வேண்டும்.
ப.வி.ஸ்ரீரங்கன்