முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் நடத்திய இறுதித் தாக்குதலில் மட்டும் சுமார் 25,000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலநூறு பேர் படுகாயமுற்றும், உடல் ஊனமுற்றும் மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லலுறுகின்றனர். மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு கண்காணிப்பு முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி அவதிப்படுகின்றனர்.
இப்படி தட்டிக்கேட்க ஆளின்றி இலங்கை அரசு நடத்திவரும் அட்டூழியங்கள் குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஆத்திரத்தை தோற்றுவித்து அவர்களும் மேலைநாடுகளில் தொடர்ச்சியாக போராடி வந்தனர். இது இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரளவு நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதை தணிப்பதற்கு மேலைநாடுகள் முயன்றபோது கை கொடுத்ததுதான் ஐ.நா.சபை தீர்மானம்.
சுவிட்சர்லாந்து தலைநகரம் ஜெனிவாவில் ஐ.நா.சபையின் மனித உரிமைக் கவுன்சில் உள்ளது. இதில் இலங்கை, இந்தியாவையும் உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன. 2006ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்தக் கவுன்சில், உண்மையில் எந்தவித அதிகாரமும் அற்ற ஒரு அலங்காரக்கவுன்சிலாகும். குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக இந்தக் கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அந்த நாட்டில் இதை வைத்தே தலையிடுவதற்கு இந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. அதை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் செய்ய முடியும்.
இந்நிலையில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு இலங்கை நடத்திய போர் மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வர முயன்றது. பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போன்று இந்த தீர்மானம் இலங்கை அரசின் இனப்படுகொலையை கண்டித்து எழுதப்பட்டதல்ல. மாறாக, புலிகள்தான் மக்களை பணயக்கைதிகளாய் பிடித்து வைத்திருந்ததாகவும் அவர்கள்தான் சிவிலியன்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் உள்ளிட்டு ஏனைய மனித உரிமை மீறல்களை இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமெனவும் இந்தத் தீர்மானம் முன்மொழிந்தது. மற்றபடி, சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்கள் குறித்து இந்தத் தீர்மானம் தந்திரமாக மவுனம் சாதித்தது. இதுபோக, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த இடத்திற்குப் போக வழி ஏற்படுத்துதல், முகாமில் இருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கொடுப்பது, சர்வதேச தொண்டு நிறுவனங்களை இம்முகாம்களுக்கு அனுமதித்தல் முதலியவையும் இந்த தீர்மானத்தில் இருந்தன.
இந்த டுபாக்கூர் தீர்மானத்தைத்தான் ஊடகங்கள் ஏதோ இலங்கையின் போர்க் குற்றங்களைத் தண்டிக்கப் போகின்ற மாபெரும் நடவடிக்கையாகச் சித்தரித்தன. ஆனால், இந்த மயிலிறகு தீர்மானத்தைக்கூட இலங்கை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. வாக்கெடுப்புக்கு வந்தபோது தீர்மானத்திற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி, கனடா, சிலி, மெக்சிகோ உள்ளிட்ட 17 நாடுகள் வாக்களித்தன. எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரசியா, மலேசியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களிக்க, எட்டு நாடுகள் நடுநிலைமை வகிக்க, இறுதியில் சுவிட்சர்லாந்து தீர்மானம் தோல்வியடைந்தது.
இதன் கூடவே இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. இதில் இலங்கையில் பயங்கரவாதிகளை வீழ்த்திய இலங்கை அரசுக்கு வாழ்த்து, மற்றும் "பணயக்கைதி களாய்' பிடிபட்டிருக்கும் மக்களை மீட்டு "மனித உரிமையை' நிலைநாட்டிய இலங்கை இராணுவத்துக்கு பாராட்டு, முகாமிலிருக்கும் மக்களின் மறுவாழ்வுக்கு சர்வதேச நாடுகள் உதவுதற்கான வேண்டுகோள் எல்லாம் உண்டு. இப்படி ஆடுகளுக்காய் அழும் ஓநாயின் தீர்மானத்திற்கு ஆதரவாய் 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைக்க, 6 நாடுகள் நடுநிலை வகித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து ஐ.நா.வுக்கான இலங்கைப் பிரதிநிதி தயான் ஜெயதிலகே கூறும் போது ""மனிதஉரிமைக் கவுன்சில் தனது எண்ணத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளதாக'' பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இப்படி எல்லா ஐசுவரியங்களும் கூடிவர, இலங்கை தனது போர்க்குற்றங்களுக்கு ஐ.நா. சபை மூலம் பூமாலை சூடிக்கொண்டது. இதுபோக, இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், இலங்கை அரசை பகிரங்கமாகப் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் இந்த காக்காய் தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வக் குழுக்களும், ஈழ ஆர்வலர்களும் கண்டித்திருக்கின்றன. எனினும், ஐ.நா. சபையின் பின்னணியில் மேலை நாடுகள் நடத்தியிருக்கும் இந்த நாடகத்தின் நோக்கம் என்ன?
முதலில் ஐ.நா. சபை என்பது ஏகாதிபத்தியங்களின் அரசியல் நோக்கத்திற்கு சேவை செய்யும் பஜனை சங்கமாகும். குறிப்பாக, அமெரிக்காவின் நோக்கத்திற்கேற்ப இசுரேலின் மனித உரிமை மீறலை அங்கீகரிக்க வேண்டுமா, வடகொரியா, கியூபாவை மிரட்ட வேண்டுமா இதற்கெல்லாம் ஐ.நா. அம்பிகள் தவறாமல் ஆஜராவார்கள். அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் சென்றார் என்பதற்காக யூகோஸ்லாவிய அதிபர் மில சோவிச்சை, போஸ்னிய முசுலீம்களை கொன்றார், போர்க்குற்றங்களைச் செய்தார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரித்தார்கள். விசாரணை நடக்கும்போதே மிலசோவிச் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அதேபோல, பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக ஒரு பச்சைப் பொய்யைக் கூறி ஈராக்கின் எண்ணெய் வயல்களுக்காக அந்நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கா, அதிபர் சதாம் உசேனைப் பிடித்து, அவர் ஒரு ஷியா கிராமத்தில் 113 மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாயிருந்தார் எனக் குற்றம் சாட்டி, அமெரிக்க கைக்கூலிகளால் நடத்தப்பட்ட ஈராக் நீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வைத்து, தூக்கிலேற்றி கதையை முடித்தது.
இதனால் மிலசோவிச்சும், சதாம் உசேனும் அப்பாவிகள், தவறேதும் செய்யாதவர்கள் என வாதிடவில்லை. ஆனால், அமெரிக்கா போடும் மனித உரிமை நாடகம்தான் முக்கிய மானது. இதே சதாம் உசேனுக்கு வேதியியல் ஆயுதம் கொடுத்து, அதை அவர் ஈரான் மீதான போரில் பயன்படுத்தி பல வீரர்களைக் கொன்றதை விசாரித்தால், சாதாமுக்கு உதவிய அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளைத் தூக்கிலேற்ற வேண்டியிருக்கும். இதேபோன்று சதாம் உசேன் குர்தீஷ் மக்களை ஒடுக்கியதை விசாரித்தால், கூடவே அமெரிக்காவின் அடியாள் துருக்கியின் அத்துமீறலையும் விசாரிக்க வேண்டியிருக்கும். வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியதால் சர்வதேசபொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதே சோதனையை அமெரிக்காவின் கூட்டாளிகள் இந்தியாவும், பாகிஸ்தானும் செய்திருந்தாலும் அந்த தடையை அமல்படுத்துமாறு அமெரிக்கா கோரவில்லை.
எனவே இந்த உலகில் இனப்படுகொலையும், போர்க்குற்றங்களையும் செய்து வரும் அரசுகள் எல்லாம் அமெரிக்காவின் விருப்பத்திற்கேற்ப கண்டுகொள்ளாமலோ அல்லது விசாரிக்கப்படவோ செய்யப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் அத்துமீறலை மட்டும் வாயளவில் கூட யாரும் அதிகாரப்பூர்வமாக கண்டிக்க முடியாது. இதுதான் நிலைமை என்றால், இலங்கை அரசு அதன் போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவில்லை என்பதன் முக்கிய காரணம் அமெரிக்காவும் அதன் அணியிலுள்ள மேலை நாடுகளும் அதை கண்டுகொள்ளாமல் விடவே விரும்பியதெனலாம். மற்றபடி, ஐரோப்பிய நாடுகளில் போராடிய ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு மன ஆறுதலாக இருக்கட்டும் என்பதற்காகவே சுவிட்சர்லாந்து தீர்மானம் உயிரின்றி கொண்டு வரப்பட்டது. இப்படி இந்த விசயத்தில் மேற்கத்திய நாடுகள் பச்சையான அழுகுணி ஆட்டம் நடத்தியிருக்கின்றன.
எனவே, இந்த தீர்மானத்தை ஒட்டி ஏற்பட்ட இருவேறு அணிகளில் பெரிய சண்டையோ சச்சரவோ ஏதுமில்லை என்பதும் முக்கியம். இருப்பினும், இலங்கை அரசுக்கு வெளிப்படையான ஆதரவு கொடுக்க ரசியா, சீனா முதலிய நாடுகள் முன்வரக் காரணம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவிற்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்த வேண்டுமென்ற ஆசைதான். அமெரிக்காவின் அணியிலிருக்கும் பாகிஸ்தான், இலங்கையை ஆதரித்ததற்கு அது ஏராளமான ஆயுதங்களை விற்றதும், இந்தியாவுக்கு போட்டியாக இலங்கையை தாஜா செய்ய வேண்டுமென்ற காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவோ ஈழத்தில் மறைமுகப் போரை நடத்தி இலங்கைக்கு உற்ற துணைவனாக இருந்தாலும், அதைவிட இலங்கை சீனா பக்கம் சாய்வதால் ராஜபக்சேயை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம். கூடவே மனித உரிமை விசாரணை வந்தால் ஆயுதங்கள் கொடுத்த வகையில் இந்தியாவும், சீனாவும், பாக்.கும் கூட விசாரணைக்கு பதில் சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இவையெல்லாம் சேர்ந்து இந்த நாடுகள் சிங்கள அரசை ஆதரிக்க வைத்திருக்கின்றன.
அமெரிக்காவின் பல்லாண்டுத் தடைகளை மீறி உயிர்த்திருப்பதற்குப் போராடும் கியூபா, எப்போதும் அமெரிக்காவின் எதிர்ப்பு அணியிலேயே இருக்குமென்பதால் அந்நாடு இலங்கைக்கு ஆதரவாய் வாக்களித்தது. இப்படி எல்லா அரசியல் புறச்சூழல்களும் பொருத்தமாக கூடி வந்ததால், ராஜபக்சே அரசு தனது இனப்படுகொலைக்கு சர்வதேச நாடுகளிடம் பாராட்டு வாங்க முடிந்திருக்கிறது.
இலங்கை அரசை ஒப்புக்குக் கூட சர்வதேச நாடுகள் கண்டிக்க முன்வரவில்லையே என ஈழத்து மக்களிடம் ஒரு விரக்தி இருக்கிறது. ஆனால், உலகமய காலகட்டத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் அதற்கெதிரான உலக மக்களின் ஆதரவும் இல்லாமல், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் வெல்லவோ, நீடித்திருக்கவோ முடியாது என்ற பாடத்தையும் அவர்கள் இதிலிருந்து கற்றுக்கொண்டு தங்களது போராட்டத்தை தொடரவேண்டும்.