Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் பிரபாகரன் மீதும் உண்மையான விசுவாசம் கொண்ட அணிகளும், ஆதரவாளர்களும், அனுதாபிகளும் தாம் நெஞ்சிலே சுமந்த அந்தத் தேசியத் தலைவன் பிரபாகரன் வீரச்சாவை எய்தினார் என்றெண்ணி வீர அஞ்சலி  வீர வணக்கம் செலுத்துவதா அல்லது அவர் பாதுகாப்பானதொரு இடத்தில் நலமாக இருக்கிறார் என்ற செய்தியை இன்னமும் நம்பி ஆறுதல் அடைவதா என்று முடிவு செய்ய முடியாமல் திகைத்துப் போயுள்ளனர்.

 

ஆனால், ஈழத்தின் வன்னிமுள்ளிவாய்க்கால் களப்பிரதேசத்தில் உண்மையில் நடந்தது என்னவென்று இதுவரை நமக்குக் கிட்டியுள்ள தகவல்களைத் தர்க்கரீதியில் தொகுத்துப் பார்க்கும்போது பின்வரும் முடிவுக்கு வர முடிகிறது:

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ""இறுதிப் போர்'' அறிவிப்பு செய்து, மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திய சிங்கள இராணுவம், பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திப் புலிகளின் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சியைக் கைப்பற்றியது.

 

அடுத்து, புலிகள் பின் நகர்ந்து சென்ற முல்லைத் தீவை முற்றுகையிட்டு, புலிகள் நிலை கொண்டிருந்த புதுக்குடியிருப்பையும் தாக்கிக் கைப்பற்றியது. அதன் பிறகும் புலிகள் பின்வாங்கியபடியே நகர்ந்து சென்றனர். இறுதியாக, மே முதல் வாரத்தில், பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் ஆண்டனி; பொட்டு அம்மன், சூசை, நடேசன் ஆகிய தலைவர்கள்  தளபதிகள் உட்பட 2,000 விடுதலைப் புலிகள், சுமார் ஒரு இலட்சம் ஈழத் தமிழர்களுடன் ஈழத்தின் வடகிழக்குக் கோடியில் நந்திக்கடலுக்கும், இந்துமா கடலுக்கும் இடையில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு சில சதுரக் கிலோமீட்டர் பகுதிக்குள், அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 50,000 சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தனர். சிங்கள இராணுவத்தின் முற்றுகையை முறியடித்து  புலிகளின் சொற்களில் கூறுவதானால் ஊடறுத்து  புலிகள் வெளியேறுவதற்கான வாய்ப்பு சிறிதுகூட இருக்கவில்லை. கடல் வழியே புலிகள் தப்பிவிடாமல் சிங்களக் கப்பற்படையோடு இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன; ஏற்கெனவே கடற்புலிகளின் படகுகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன.

 

அந்த நிலையில், சிங்கள இராணுவம் தீர்மானகரமான தாக்குதல் நடத்தி இருந்தால், ஓரிரு நாட்களிலேயே புலிகளின் தற்காப்பு நிலைகள் அனைத்தையும் அழித்து, இறுதி வெற்றி ஈட்டியிருக்க முடியும். ஏற்கெனவே, புலித் தலைமையை, குறிப்பாக பிரபாகரனைப் போர்க்களத்திலேயே கொன்று விடவேண்டும், கைது செய்தாலும் உயிரோடு வைத்திருக்கக் கூடாது என்று அயலுறவுத்துறை அமைச்சர், அதிகாரிகளை நேரடியாக கொழும்புக்கு அனுப்பி, இலங்கை அதிபரிடமும், இராணுவத் தலைமையிடமும் வலியுறுத்தியிருந்தது இந்தியா; இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை இறுதித் தாக்குதல்கள் நடத்துவதை தள்ளி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தது. இந்தியாவின் இந்த விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதை மேற்பார்வையிடுவதற்கென்றே தனிச்சிறப்பாக இந்திய இராணுவ மற்றும் உளவுப்படை ""ரா'' அதிகாரிகள் களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொருத்தவரைக்கும் ஒன்று சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டு மடியவேண்டும்; அல்லது அவர்கள் எப்போதும் கழுத்தில் அணிந்திருக்கும் சயனைடு குப்பிகளைக் கடித்து பெருந்திரளாகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்; அல்லது மிக மோசமான வாய்ப்பாக சிங்கள இராணுவத்திடம் சரணடைய வேண்டும். இவை தவிர, வேறொரு தெரிவு எதுவும் விடுதலைப் புலிகளிடம் இருக்கவில்லை. இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கு சிங்கள இந்தியக் கூட்டின் இராணுவ ரீதியான கொலைவெறித் தாக்குதல் முக்கியமானதொரு காரணம் என்றாலும், கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கி, முல்லைத் தீவுக்குள் முடங்கிய போதே தப்பிச் செல்வதற்கான எல்லாக் கதவுகளையும் அடைத்துக் கொண்டு,""பொந்தில் பதுங்கி இரையாகிப் போவது'' என்பது விடுதலைப் புலிகளே தெரிவு செய்து கொண்டதுதான். இவ்வாறான ""சுய அழிவு'' முடிவெடுத்ததற்கான விளக்கம் எதுவும் புலித்தலைமையிடமோ, புலி விசுவாசிகளிடமோ ஒருபோதும் இல்லை.

 

ஆனாலும், இயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார்; இந்தியா வரும், அமெரிக்கா வரும்; ஜெயலலிதா, வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தார்கள் புலி விசுவாசிகள். புலித் தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று புலிகள் தங்கள் அழிவிற்குத் தாங்களே காரணமாகிப் போனார்கள். இதே போன்ற தொரு குருட்டு நம்பிக்கையில்தான் பிரபாகரன் விசுவாசிகள் இன்னமும் இருத்தி வைக்கப்படுகிறார்கள். மே 13ந் தேதியோடு இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்து போயின. கழுத்துவரை பேரழிவு ஆயுதங்களை நிரப்பி வைத்திருந்த சிங்கள இராணுவம் அடுத்த நாளே  மே 14ந் தேதி வியாழக்கிழமை ""வங்கினுள் பதுங்கிய இரையான'' புலிகளைத் தாக்கி அழிக்கும் இறுதித் தாக்குதலைக் கொடூரமான முறையில் தொடங்கியது. மூன்றே நாட்களில் எல்லாம் முடிந்து போயின. முள்ளிவாய்க்கால் கிராமத்தில் பதுங்கியிருந்த பல ஆயிரம் ஈழத் தமிழர்களும், புலித்தலைமை உட்பட புலிப்படைப் போராளிகள் அனைவரும் சிங்கள இனவெறி இராணுவத்தால் கொடூரமாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.


புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும் ""புதினம்'' என்ற இணையதளம், கடந்த ஆறாண்டுகளாகத் தனது நிறுவனத்தின் இரத்தமும் சதையுமாக இயங்கி, உண்மைச் செய்திகளை மட்டுமே அளித்துவந்த அந்த செய்மதி நிருபர், ""என்னுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு இதுதான் கடைசியாகவும் இருக்கலாம்'' என்று நினைப்பதாகக் கூறி அனுப்பிய செய்தியைப் பின்வருமாறு வெளியிட்டிருக்கிறது: ""கடந்த இரண்டரை வருடங்களாக  உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் சிறீலங்கா நடத்திவரும் தமிழினஅழிப்புப் போர், அதன் இறுதிக் கட்டத்தை இன்று திங்கட்கிழமை காலை அடைந்திருப்பதாகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் இருந்து "புதினம்' செய்தியாளர், செய்மதி மூலம் சொன்னவை அவரது வார்த்தைகளிலேயே:

 

""பீரங்கிக் குண்டுகள் நாலாபுறங்களிலும் இருந்து வந்து எங்கள்மீது வீழ்ந்து வெடிக்கின்றன. கனரக மற்றும் சிறுரக துப்பாக்கிச் சன்னங்கள் எல்லாப் பக்கத்தில் இருந்தும் சீறி வருகின்றன. தாக்குதல் நிகழும் இந்தப் பகுதிக்குள் இன்னமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். காயப்பட்டு வீழ்ந்து தூக்கி எடுக்க யாருமற்றுக் கிடப்போரின், மக்களின் மரண ஓலங்களே எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் பக்கத்தில் இருந்து குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு எதிர்த்தாக்குதல்கள் ஏதுமற்ற நிலையிலும், சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நான்கு பக்கங்களிலும், சகலவிதமான நாசகார ஆயுதங்களைப் பாவித்தும் மேற்கொண்டவாறு மக்களைக் கொன்று குவித்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்; கொல்லப்பட்டு வீழ்ந்த மக்கள் எல்லோரினது உடல்களும் நாலாபுறமும் சிதறிக் கிடக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் பிணக்குவியல்களாகவே இருக்கின்றன. கொல்லப்பட்டோரது உடல்கள் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக அகற்றப்படாத காரணத்தினால், அந்தப் பகுதி எங்கும் பெரும் துர்நாற்றம் வீசுகின்றது. இன்றைய இந்த மூர்க்கத்தனமான தாக்குதலுடன் இங்குள்ள மக்கள் அனைவருமே சிறீலங்கா படையினருக்கு இரையாகிவிடுவர். படுகாயமடைந்தவர்கள் இந்தப் பகுதியெங்கும் விழுந்து கிடந்து அலறுகின்றனர். படுமோசமான காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சையளிக்க எந்த வழியுமற்ற நிலையில் கதறும் பொதுமக்கள், அங்கே இருக்கும் போராளிகளிடம் தம்மை சுட்டுக் கொன்றுவிடுமாறு மன்றாடுகின்றனர். அதேபோல காயமடைந்து சிகிச்சைக்கு வழியற்றுக் கிடக்கும் போராளிகள், தமது "சயனைட்' வில்லைகளைத் தந்துவிடுமாறு கதறுகின்றனர். பதுங்குக் குழிகளுக்குள் இருந்தபோதே கொல்லப்பட்டுவிட்ட மக்களின் உடல்களுக்கு மேலேயே, உயிரோடு எஞ்சியிருக்கும் மக்கள் பாதுகாப்புக்காய் பதுங்க வேண்டிய அவலம் நிலவுகின்றது. ""இப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் மனிதப் பேரவலம் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, ஆயுதப் போராட்டத்தையே விட்டு விடுகின்றோம் என விடுதலைப் புலிகள் சொல்லிவிட்ட பின்பு, யாராவது வந்து எம்மை காப்பாற்ற மாட்டார்களா என மக்கள் இங்கு ஏங்கித் தவிக்கும்போது  மனித உயிர்களைக் காப்பதற்காகவேனும் இந்த உலகம் ஏன் எதனையும் செய்யாதிருக்கின்றது? என்று தழுதழுத்த குரலில் கேள்வி எழுப்பினார்.''

 

தலைமை என்ன செய்தது? எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைத்தான் எஞ்சியுள்ள புலிகளின் பிரதிநிதிகளும், விசுவாசிகளும் பேச மறுக்கின்றனர். அல்லது முரண்பட்ட விளக்கங்களும் தகவல்களும் கொடுத்து, உண்மையை மூடி மறைக்கின்றனர். ஈழப் போரின் கடைசி மூன்று நாட்களில் நடந்த சம்பவங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையைச் சுற்றித் தாம் கட்டியெழுப்பியிருந்த பெருமைக்குக் களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தால், அவை குறித்துப் பரிசீலிக்கவோ, மக்கள் முன் உண்மை விளக்கமளிக்கவோ மறுக்கின்றனர். அவ்வாறான முயற்சியில் ஈடுபடுவோருக்கு எதிரான அவதூறுகளை ஆத்திரம் ஆத்திரமாகக் கொட்டித் தீர்க்கின்றனர். ஆனால், இந்த உண்மைகளைக் கண்டறிந்து, மக்கள் முன் வைப்பதன் மூலம் தான் ஈழ விடுதலைப் போரின் இந்தப் பேரழிவு  பேராபத்துக்குக் காரணமான எதிரிகளின் வக்கிரமான பாசிச இனவெறிப் பேயாட்டங்களை மட்டுமல்ல, சதிகாரர்களையும் துரோகிகளையும்கூட வெளிச்சத்திற்குக் கொண்டு வரமுடியும். ஆனால், நடந்த உண்மைகளை மூடிமறைப்பது ஈழத்தின் எதிரிகளையும் சதிகாரர்களையும் துரோகிகளையும் காப்பாற்றவே பயன்படும். சிங்கள இராணுவம் ஈழத் தமிழின அழிப்புப் போரின் இறுதி தாக்குதலைக் கொடூரமான  வெறித்தனமான முறையில் நடத்திக் கொண்டிருந்த அதேசமயம், பல ஆயிரம் ஈழத் தமிழர்களை ஒரே நாளில் கொன்ற அவப்பெயர் தமக்கும், இறுதிவரைப் போராடி வீரமரணமடைந்த பெருமை புலித்தலைமைக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு சர்வதேச சதியிலும் ஈடுபட்டிருந்தது, சிங்கள பாசிச ஆளும் கும்பல். பிரபாகரன் உட்பட புலித் தலைமையையும், இறுதிவரை புலிகளோடு விசுவாசமாகத் தங்கியிருந்த தமிழர்களையும் படுகொலை செய்து விடுவது என்பதில் உறுதியாக இருந்தது.

 

சிங்கள பாசிச ஆளும் கும்பலும் இராணுவமும். அவர்களுக்குத் தப்பிப் போவதற்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, யுத்தமும்  சாவும் அவர்கள் தொண்டைக் குழிவரை வந்துவிட்ட நிலையில், புலித் தலைமையின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களை ஏமாற்றிச் சரணடைய வைத்து இலகுவாகப் பலியிடுவது என்ற சதியை நன்கு திட்டமிட்டு, ""ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு'' என்ற தூண்டிலை அமெரிக்க  இந்திய நார்வே நாட்டுச் சதிகாரர்கள் மூலம் புலித் தலைமையின் முன்பு வீசியது. புலித் தலைமையை முழுமையாக நம்ப வைக்க சில வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்த பின், 15.5.2009 இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும். அந்த அறிக்கை இலங்கை அரசுடனான கூட்டுச் சதியை நாசூக்காக வெளிப்படுத்துகின்றது. ""இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன'' என்று அவர் 15.5.2009 அன்று அறிவிக்கின்றார். அத்துடன், ""போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வழியாக வெளியுறவுத் துறைக்கு வழங்கியுள்ளது''. அதில் ""போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்கக் கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்'' என்கிறது, அந்த அறிக்கை.

 

நார்வே அமைச்சர் எரிக் சொல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.5.2009 அன்று பல தரம் (வெளி நாட்டு  உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததை, ""இது மிகவும் கோரமானது'' என்கிறார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நா.வைச் சேர்ந்த விஜய் நம்பியாரும் (வெளிநாட்டு  உள்நாட்டு) புலியுடன் தொடர்பில் இருந்துள்ளார். இவையெல்லாம் இவர்கள் கூறியவைகள் தான்.

 

இந்தச் சதியின் மற்றொரு வெளிப்பாடாக மீண்டும் நம்பியார் இலங்கை சென்றார், எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றதும் இதற்காகத்தான். ""ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்தால் பொது மன்னிப்பு'' என்ற சர்வதேச சதிகாரர்களால் வீசப்பட்ட தூண்டிலைப் புலித் தலைமை கவ்வியதா, இல்லையா? பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் சாவில் மிகவும் சர்ச்சைக்குரிய கூறாக விளங்குவது இதுதான். தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் மே 17ஆம் தேதி அன்று ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில், ""நாம் எமது ஆயுதங்களை அமைதியாக்கிச் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு வருகிறோம்... விடுதலைப் புலிகளின் அச்சமற்ற தன்மையையும், தங்கள் கொள்கை மீதுள்ள முடிவில்லாத கடமையுணர்ச்சியையும், அதன் மீது எம்மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும் எவரும் சந்தேகப்பட முடியாது. எமது அழைப்பை எமது பிள்ளைகள் எந்தவொரு கேள்வியுமில்லாமல், மரணத்துக்குப் பயமற்று எடுத்துள்ளார்கள். எமது போராட்டம் எம்மக்களுக்காகவே என்பதை நாம் மறந்துவிடவில்லை என்றும் இப்போதைய நிலைமையில், இந்த யுத்தத்தை சிறீலங்கா இராணுவம் இம்மக்களைக் கொன்று குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பாவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்... மிகச் துணிச்சலோடு நாங்கள் எழுந்து நின்று எமது ஆயுதங்களை அமைதியாக்குகிறோம், எமது மக்களைக் காப்பாற்றுமாறு தொடர்ந்து சர்வதேசச் சமுதாயத்துடன் கேட்டுக் கொள்வதை விட, வேறு தெரிவு எங்களுக்கு இல்லை'' என்று அறிவிக்கிறார்.

 

அதன் பிறகு புலி ஆதரவு இணைய தளமான தமிழ் நெட்டிற்கு பத்மநாதனே வழங்கிய பேட்டியில் ""எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிரிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. எங்களின் முடிவை நாம் சர்வதேசத்துக்குக் கூறியிருந்தும், சிறீலங்காவின் தாக்குதல்களை நிறுத்தச் சொல்லிக் கேட்டிருந்தும், கொழும்பானது அதைப் பொருட்படுத்தாது, இதுதான் முடிவென்று இராணுவத் தாக்குதலைத் தொடர்ந்தது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சரணடைந்து, வெள்ளைக் கொடியைத் தாங்கிச் சென்ற போராளிகளையும் தலைவர்களையும் சர்வதேச மரபைப் பொருட்படுத்தாது இரக்கமில்லாமல் கொன்றுள்ளது. சர்வதேச சமூகமும் சிறீலங்காவுக்கு எதிராக ஒரு திடமான நிலையை எடுத்து, சிறீலங்காவை ஒரு முறையான முடிவை எடுக்கச் சொல்லி ஊக்குவிக்கவில்லை. நடந்த நிகழ்வுகளையிட்டு நாங்கள் துக்கத்திலுள்ளோம்'' என்கிறார்.

 

அதேசமயம் மே 17 அன்று, எப்போதும் இல்லாத வகையில் திடீரென்று புலிகளின் இராணுவத் தளபதிகளில் ஒருவரான சூசை, ""மக்கள் வலையத்தினுள் இருக்கும் அனைத்து மக்களையும், ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துடன் நேரடியாக செல்வரா சா பத்மநாதனூடாகத் தொடர்பு கொண்டு வெளியேற்றுமாறு கேட்டிருந்தோம்'' என்று பேட்டியளித்திருந்தார்.

 

நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைய விரும்புவதாக வடபகுதியில் பணியாற்றிய சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமிருந்தும் சனிக்கிழமை(16.05.09) மாலை தனக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பாலித கொஹனா பிரித்தானிய ஊடகமொன்றிடம் கூறினார். ""இதற்கு ஒரே வழிதான் உண்டு. இராணுவ முறைப்படி கையில் வெள்ளைக் கொடியுடன் பயமுறுத்தாத வகையில் மெதுவாக வந்து சரணடைய வேண்டும் என நான் கூறியிருந்தேன்'' என்கிறார் கொஹனா. ""அவ்வாறு அவர்கள் சரணடைந்தால், உயிர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதுதானே'' என்று கேட்டு நார்வே அமைச்சர் இறுதியாகத் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியையும் கொஹனா அந்த ஊடகத்திடம் காண்பித்துள்ளார். இவற்றையும், இவற்றோடு பிரபாகரனைச் சிங்கள இராணுவ வெறியர்கள் சித்திரவதை செய்தும், கோடாறியால் மண்டையைப் பிளந்தும் கொன்ற பின், அவரது உடலை அவமானப்படுத்தி சிதைக்கப்பட்ட உடலை ஒட்டு வேலை செய்து ஊடகங்களுக்குக் காட்டியதை, ""வீடியோ'' படமாக, டக்ளஸ் தேவானந்தா கருணா ஆதரவு இணைய தளங்கள் சிறிது நேரம் வெளியிட்டு அகற்றியதையும் ஆதாரமாக வைத்து, பிரபாகரன் உட்பட புலித் தலைமை சரணடைந்து படுகொலை செய்யப்பட்டதாக மே 21 அன்றே புலம் பெயர் தமிழரான இரயாகரனின் இணைய தளம் (tamilcircle.net)செய்தி வெளியிட்டது.

 

அதன்பிறகு, மே 22 அன்று பிரபாகரன் சாகவில்லை, உயிருடன் பாதுகாப்பாக  நலமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட செல்வராசா பத்மநாதன், ஒரு வாரத்துக்குப் பிறகு பிரபாகரன் வீரச் சாவெய்தியதாக பி.பி.சி.க்குப் பேட்டியளித்தார். செல்வராசா பத்மநாதனின் முதல் அறிக்கை அடிப்படையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறிவந்த நெடுமாறன் போன்ற தமிழினவாதத் தலைவர்கள், செல்வராசா பத்மநாதன் பிரபாகரன் சாவை உறுதி செய்தவுடன் ""அவர் பன்னாட்டுப் போலீசு அமைப்பால் தேடப்படும் கிரிமினல் குற்றவாளி, அவரது கூற்று ஏற்கத்தக்கதல்ல'' என்று ஒதுக்கிவிட்டு, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற பிரச்சாரத்தைத் தொடர்கின்றனர். ஜூன் 18ந் தேதி அன்று, புலிகளின் வெளியகப் பணிப் பிரிவு புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கதிர்காமத் தம்பி அறிவழகன் ""பிரபாகரன் சரணடையவோ, அல்லது கைது செய்யப்படவோ இல்லை; சிறீலங்கா படையினருடன் போரிட்டே வீரக்காவியம் ஆனார்'' என்று கூறி, செல்வராசா பத்மநாதனின் நிலையை ஆதரித்துள்ளார். இதன் பிறகு தமிழகத் தமிழினவாதிகள் உட்பட, புலி விசுவாசிகள் பிரபாகரன் மரணம் குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.இதற்கிடையே யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் குழு தனது அறிக்கையில், பிரபாகரன் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குப் பின் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.

 

கடைசியாக ஜூன் இறுதியில் வெளியிடப்பட்ட ஜூனியர் விகடனில், இலங்கை இராணுவம் ""சரீன்'' மயக்க மருந்து கலந்த இரசாயனக் குண்டு போட்டு பிரபாகரனைப் பிடித்துச் சித்திரவதை செய்து கொன்றதாக எழுதுகிறது.

 

பிரபாகரன் சரணடையவோ அல்லது கைதுசெய்யப்படவோ இல்லை; போரிட்டே வீரக்காவியம் ஆனார்என்று புலிகளின் அயலுறவு புலனாய்வுத்துறை சொன்னாலும், இந்தப் போர் எப்போது, எங்கே எவ்வாறு நடந்தது என்று கூறவில்லை! அதுவும் ஆயுதங்களை அமைதியாக்கிக் கொள்வதாக புலிகள் அறிவித்த பிறகு, இவ்வாறான போர் நடந்திருக்கக் கூடுமா? இல்லை, சிறீலங்கா இராணுவம் கூறுவதைப் போல பிரபாகரன் ஆம்புலன்சில் தப்பிச் செல்லும்போது (ஊடறுத்துச் செல்லும்போது) சிறீலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டாரா? அப்படியானால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் காட்டும் வீடியோ, பிரபாகரன் உடலை அவமானப்படுத்துவதாகக் காட்டும் புகைப்படங்கள் ஆகிய ஆதாரங்களெல்லாம் வெறும் ஒட்டு வேலைகள்தானா?

 

இதற்கெல்லாம் மேலாக பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பது ஒருபுறம் இருக்க, சிறீலங்கா பாசிச ஆளும் கும்பலிடமும், இராணுவத்திடமும் ஆயுதங்களை அமைதியாக்கி விட்டுச் சரணடைவது என்கிற முடிவுக்கு புலித்தலைமை வந்து விட்டிருந்தது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. ""மேலை நாடுகள் சிலவற்றின் முயற்சியில் கடைசி நேரத்தில் போர் நிறுத்தப் பேச்சு ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்களப் படை அழைத்ததன் பேரில், வெள்ளைக்கொடியுடன் பேச்சு நடத்தப்போன அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன், அமைதிப் பேச்சுச் செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்டோரை சிங்களப் படை சுட்டுக் கொன்றது'' என்று புலிகளின் விசுவாசியான மணியரசன், தனது பத்திரிக்கையில் எழுதுகிறார்.

 

ஆயுதங்களை அமைதியாக்குவதாகப் புலித்தலைமை விடுத்த அறிவிப்பிற்கு முதல் நாளே, அதாவது மே 16ந் தேதி இரவே, புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன் ""ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். ஒபாமா அரசு, இங்கிலாந்து அரசு ஆகியவற்றிடம் பாதுகாப்பு உறுதி கிடைக்க வேண்டும். புலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஐ.நா. அதிகாரியான விஜய நம்பியார் அங்கே இருக்க வேண்டும்'' என்று இங்கிலாந்து ""சண்டே டைம்ஸ்'' நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வினுக்கு தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். பிறகு, இலங்கை நாடாளுமன்ற தமிழ் உறுப்பினரான ரோகன் சந்திரா நேருவை அழைத்து நடேசன் பேசியிருக்கிறார். மேரி கால்வின்  விஜய் நம்பியார் வழியேயும் ரோகன் சந்திரா நேரு வழியேயும் அதிபர் இராஜபக்சேவுக்கு செய்தி போனது; சிறீலங்கா அரசு இந்தச் சரணடைவை ஏற்பதாக பாசிச இராஜபக்சே கூறியதாக, நேரு வழியேயும் விஜய் நம்பியார்  மேரி கால்வின் வழியேயும் மே 17ந் தேதி காலையே நடேசனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

மணியரசன் கூறுவதிலிருந்து சில மேற்கு நாடுகளும் இந்த ஏற்பாட்டில் பங்கு பெற்றிருக்கின்றன. இந்த ஏற்பாட்டை நம்பிச் சரணடையப் போனபோதுதான் நடேசனும் புலித்தேவனும் வேறு சிலருடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். நடேசனும் புலித்தேவனும் மேற்கொண்ட சரணடைவு முயற்சிகள் எல்லாம் பிரபாகரன் உட்பட புலித் தலைமையின் ஒப்புதலுடன் நடந்தனவா, இல்லையா? பிரபாகரன் எதிரிகளுடனான பேச்சு வார்த்தைகள் எதிலும் நேரடியாக ஈடுபட்டதே இல்லை, அரசியல் பிரதிநிதிகளை அனுப்புவதைத்தானே வழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவும் அப்படி நடந்ததுதானா? அல்லது பிரபாகரன் ஒப்புதல் இல்லாமலேயே நடந்ததா? அப்படியானால் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரைத் தியாகிகளாகப் புலி விசுவாசிகள் போற்றுவது ஏன்?

 

இந்தக் கேள்விகளுக்கு புலிகளிடமும் அவர்களின் விசுவாசிகளிடமும் பதில் இல்லை. இன்னும் இரண்டு கேள்விகள் உள்ளன. பிரபாகரன் போரிட்டே மரணமடைந்தார், சித்திரவதை செய்து கொல்லப்படவில்லை என்ற நிலைப்பாடு சிறீலங்கா ஆளும் கும்பல் மீதான சர்வதேச கிரிமினல் போர்க்குற்றவாளி என்ற குற்றச்சாட்டிலிருந்து காப்பதாகாதா? பிரபாகரன் வெளிப்படையாக சம்பந்தப்படவில்லை என்றாலும், சிறீலங்கா பாசிச கும்பலைப் பற்றி அறிந்திருந்தும் நடேசன் வழி மேற்கொள்ளப்பட்ட சரணடைவு முயற்சிகள் அரசியல், இராணுவ ரீதியில் சரியானவைதானா? அது பற்றிய ஆய்வுக்குள் எஞ்சியுள்ள புலிகளும், அவர்களின் விசுவாசிகளும் போக மறுப்பது ஏன்? இந்தக் கேள்விகளுக்கான விடையை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.