இலக்கியச்"சந்திப்புக்காரர்கள்" மற்றும் "சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்.
ஒருவகை உடைப்பினது இயங்கு தளம் தமிழரைச் சொல்லி-சிறு குறிப்பு.
இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது சிங்கள உறுமைய,ஜே.வி.பி. எனப் பல் வகை இனவாதக்கட்சிகளும் அதே அந்நியச் சக்திகளால் வழி நடாத்தப்படுகிறார்கள்.குறிப்பாக இந்தியாவால் என்றுங் கூறமுடியும்.புலி அழிப்புக்காக பல பத்தாயிரம் மக்களைப் பலி கொண்ட இந்திய நலனானது,உலக-பிராந்திய நலன்களோடிணைந்து உருவாக்கும் கட்சிகள்,குழுக்கள் இலங்கை வாழ் உழைக்கும் வர்க்கத்தை மிக நேர்த்தியாகப் பிளவுபடுத்துவதில் குறியாக இருக்கிறது.இதன் உச்சக்கட்டம் புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியில் ஓராயிரம் குழறுபடிகளை இன்னபிற நடிவடிக்கைகள் ஊடாகச் செய்துவருவதை நாம் சமீபகாலமாக இனங்காணலாம்.
இங்கே,இனவாதக் கட்சிகளையும், அதே வடிவத்தில் பக்கா"ஜனநாயக"ச் சக்திகளையும் ஒரோ பாதையில் இருவேறு திசைகளில் அது உலாவிட்டுப்பார்க்கிறது.இதன் தொடர்ச்சியான வேகமானது "இலக்கியச் சந்திப்பு,சமாதானப் பட்டறை,அபிவிருத்திப்பட்டறை,தீர்வுத்திட்ட ஒன்றுகூடல்,சிந்தனையாளர்களது அவைக்கான கருவூலம் அமைத்தல்,என்றும் இன்னபிற வடிவங்களிலும் மிக நேர்மையின்றிப் பொய்யுரைத்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட முனைகிறது.எங்கு நோக்கினும் அந்நிய உளவு முகவர்களின் அணிவகுப்பே நமக்கு முன் நிகழ்கிறது.இது கொள்ளும் முகமூடிகளானது மேற்சொன்ன நிகழ்வுகளாக விரிகிறது.இலங்கையின் கட்சிகள்- இயக்கங்களின் எந்தப் பக்கத்தைப் பார்த்தாலும் அவை குரூரம் நிறைந்த பக்கமாகவே தெரிகிறது.இதை மூடிமறைத்தல் இன்னுமின்னும் நம்மை அழிவுப்பாதைக்கே இட்டுச் செல்லும்.
எனவே இன்றைய புதிய உலகவொழுங்கில் நாம் அரசு என்ற அமைப்புக்குள்ளிருந்து விடுபட்டுவிட்டோம்.இங்கு அரசுகளெனும் வடிவம் நம்மையும் நமது நலன்களைத் தவிர்க்க முடியாது சர்வதேச நலன்களுடன் பின்னிப்பிணைந்துள்ளது.இதன்தொடராக நாம் ஏமற்றப்பட்ட வரலாற்றில் இழந்தவை மிகப் பெரியதாகும்.நமது உணர்திறனுக்கு அப்பாற்பட்ட அரசியல் குழிபறிப்புகள் தினமும் நடந்தேறுகிறது.இதன் குறைந்தபட்சத் தேடுதலாவது புரட்சிகரப்பாத்திரத்தில் நமது மக்களைக் காப்பதற்கான முன் நிபந்தனைகளாக இருக்கும்.எனவே,இன்றைய சதி அரசியலைக் குறித்துக் கவனத்தைக் குவிப்பது நம்மெல்லோரதும் கடமையே.
"வில்லேருழர் பகை கொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழர் பகை." -குறள்:872, பக்கம்:347
வள்ளுவர் பேனா முனையை எதிர்க்காத அரசியல் சொல்ல,சாணாக்கியன் அதனையும் கடந்து மேலே செல்கிறான்.இவனது தந்தரமே மிகக் குள்ள நரித்தனமானதும்,நயவஞ்சகமானதும்கூட!சாணாக்கியனின் உலகத்தில் தடுக்கி விழுபவர்கள்கூட ஒரு உளவாளியின்மீதே விழும் அளவுக்கு உளவுப்படைகள் அவசியமென்கிறான் சாணாக்கியன்.இன்று நமது புலம்பெயர் வாழ்வில் எங்கு நோக்கினும் உளவு அமைப்புகளுக்குத் தொண்டூழியஞ் செய்யவே "இலக்கியச் சந்திப்பு"ச் செய்பவர்களாகவும்,"சிந்தனையாளர்களின்" அவை அமைப்பவர்களாகவும் தமிழ் மக்களது துரோகிகள் தமது அரசியலைத் தமிழ்பேசும் மக்களது பெயரில் முன் தள்ளுகிறார்கள்.இவர்களது எஜமானர்களால் பழிவாங்கப்பட்டுத் தமது உறவுகளைப் பலிகொடுத்தும் தமது வாழ்வை இழந்தும் தடுப்பு முகாமுக்குள்ளும் திறந்தவெளிச் சிறைகளுக்குள்ளும் பரதவிக்கும் தமிழ் மக்களுக்கு இவர்கள் மீளவும் துரோகமிழைத்திட தமக்குள் ஒன்றிணைகிறார்கள்.இதிலிருந்து தமது எஜமானர்களது அரசியலுக்கு வெளியில் மாற்று அரசியல் மையமுறுவதைக் கண்காணிக்கவும்,தடுத்து உடைத்தெறியவும் எதிரிகள் மிக நிதானமாகத் தமக்குள் வலுவடைகிறார்கள்.இது குறித்துப் பரவலாக விளங்க முற்படுவோம்.
உதிர்ந்த புலிகளும் உள்வீட்டுக் குரல்களும்:
கடந்தகாலத்தில் பிரான்சின் வரலாற்றியலாளர் Alexis de Tocqueville தனித்துவமான சுதந்திரத்துக்காக-விடுதலைக்காகப் போராடிய முன்னிலையாளர் என்பதை நாம் அறிவோம்.இத்தகைய தனித்துவமென்பது தமது இனத்துக்கானதாகவே இருக்கும் என்பதை Olivier Le Cour Grandmaison அல்ஜீரிய நடவடிக்கைகளில் பார்க்க முடியும், 1840 களில் அல்ஜீரியக் குடிகளை-குழந்தைகளைப் பெண்களை மிருகங்களிலும் கேவலமாக வருத்திய வரலாறை எவரும் இலகுவில் மறந்திட முடியாது.என்றபோதும், இன்றைய இந்திய-இலங்கை அரசுகளது கூட்டு வன்னிப் படுகொலை யுத்தம் மற்றும் தமிழினப் படுகொலை நெட்டூரம் எந்தவொரு வரலாற்றுத் துரோகத்தோடும் ஒப்பிட முடியாதவையாகவே நான் கருதுகிறேன்.
ஜனாதிபதி இராஜபக்ஷ தமிழ் மக்களை ஏமாற்றியபடி அவர்களைப் பூரணமாகக் கையலாகாதவர்களாக்கப் போடும் அரசியல் சுழிகளில் அகப்பட்ட இலங்கைச் சிறுபான்மை இனங்கள் யாவும், இனிமேற்காலத்தில் இலங்கையில் அடிப்படை உரிமைகளைபெறுவதற்கான எந்த அரசியற்பலத்தையும் பெற்றுவிடமுடியாதளவுக்கு இலங்கையின் இராணுவவாதம் இருக்கிறது.இதைக் கவனிக்காது நாம் புலிகளின் அழிவில் இலங்கைக்கு விமோசனமெனக் கருத்தாடமுடியாது.அது,மிகவும் கேவலமாக இலங்கையின் அரச தந்திரத்துக்குப் பலியாகிப்போவதாகவே இருக்கும்.
இலங்கைக்குள் இரண்டு தேசங்களை உருவாக்கப் புறப்பட்ட பிரபாகரனது தேசியத்தலைமை உலகத்தின் பொருளாதார இலக்குக்காக உருவாக்கப்பட்டு,இறுதியில் அதன் தேவையோடு இல்லாதாக்கப்பட்ட அரசியலில் புலிகளது மிச்சசொச்சங்கள் மக்களையும் குழப்பித் தம்மையும் குழப்பித் தமது வளங்களைக் குறித்தே இயங்குகிறார்கள்-அரசியல் செய்கிறார்கள்.
இதன் தாத்பரியம் தமிழர்களைப் படுகொலைசெய்து குவித்ததுபோகச் சிங்கள அரசினது கொலைக்காரக் குண்டுகளுக்கும் கொத்துக்கொத்தாக அழிந்து போவதுவரை தமிழீழம் முடிந்த முடிவு என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பூரிப்படைந்தார்கள் அன்று.இன்றும் அதே புலிகள் தமது பிளவுகளுக்குள் நின்றபடி போராட்டத்தையும் தமது இயக்கத்தின் தோல்வியையும் குறித்து-"அந்நியச்சதி,துரோகம்,உள்வீட்டுச்சதி"என்றெல்லாம் கருத்தாடுகிறார்கள்.
தமிழ்பேசும் மக்கள் இவ்வளவு தூரம் அழிவுக்குள் உட்பட்டுவரும் இந்தத் தருணத்தில்,எவரெவாரோ அந்த மக்களின் நலன்களைச் சொல்லியே அவர்களை அழித்தும்,அவர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடியும் தத்தமது வாழ்வை மெருக்கூட்டியுள்ளார்கள்-மெருக்கூட்ட முனைகிறார்கள்.இதுவரை நடக்கும் இலங்கை இனப் போராட்டத்தில் நடைபெறும் அரச தந்திரங்கள்-போராட்ட நெறிகள் யாவும் பாசிசப் போக்கினது வழிப்பட்டதாகும்.இதை மிக இலகுவாகச் செயற்படுத்தும் இந்தியாவே நமது மக்களின் வாழ்வோடு மிகக் கேவலமாக யுத்தம் மற்றும் மனித விரோத அரசியலைக் கட்டி வளர்த்து வந்தது-இன்னும் தொடர்ந்து வருகிறது.இதற்காக அமெரிக்காவும், மேற்குலகமும் ஒரு புறமும்,இந்தியாவும்,சீனாவும் மறு புறமாகக் காய் நகர்த்தி எமது தேசத்தை அந்நிய நலன்களின் வேட்டைக் காடாக்கியுள்ளது.இந்நிலையுள்,தமிழ் பேசும் மக்களது அடிப்படைப் பிரச்சனைகளைப் புலியழிப்பிலிருந்து விளங்க முற்படுபவர்கள் மீளவும் வரலாற்றில் உண்மைகளையும் புலிகளுக்கூடாகவே கற்பிக்க முனைகின்றனர்.புலித் தலைமையினது பாதையிலும் மீளவும் நடக்கக் கற்பிக்கின்றனர்.
"மாற்று"க் கருத்தாளர்களும்,மலிந்த துரோகமும்:
இன்றைய இலங்கை அரசியலில் தமிழ்பேசும் சமுதாயத்தினது தலைவிதியானது கயமைமிக அரசியலுக்குள் சிக்குண்டுள்ளது.இதை இந்திய-இலங்கை அரசியல் நலன்களுக்குள் கட்டுண்டுபோன தமிழ்க்கட்சிகள்-முன்னாள் ஆயுதக்குழுக்களெனச் செவ்வனவேயான திட்டத்துக்குட்பட்ட அடக்குமுறை அரசியலுக்கேற்ற நடாத்தையால் நமக்கு நிரூபித்து வருகிறார்கள்.இங்கே "அழிந்துபோன புலிகளது" சர்வதேசச் சீமான்களும் அதே பாதையில் நடைபயில இந்தியாவினது இலக்கு மிக விரைவாக எட்டப்பட்டு வருகிறது.
எங்கும்,பொய்யும் அது சார்ந்து கருத்தியில் போரும் தொடர்கிறது!புலம்பெயர் மக்கள் மத்தியில் மிகக் கணிசமான வீதத்தில் இத்தகைய பொய்யுரைப்புகள் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படுகிறது.
இன்று மாற்றுக் கருத்தாளர்களாகத் தம்மைக் காட்ட முனையும் இலக்கியச் சந்திப்புக்காரர்கள் உண்மையில் இலங்கையில் நடந்தேறும் இனப்படுகொலைகளையும், அதுசார்ந்தியங்கும் சிங்கள ஆளும்வர்க்கப் பிரதிநிதி மகிந்தாவின் பாசிசச் செயற்பாட்டையும் எதிர்த்தியங்கும் இடதுசாரி அரசியலைக் கையிலேந்திக் கறாராகப் போராடும் தோழர் இரயாகரனுக்கும் அவரது கால் நூற்றாண்டுத் தத்துவார்த்தப் போராட்டத்துக்கும் எதிராகவே இயங்கியவர்கள்.புரட்சியைக் காயடிக்க முனையும் இவர்கள் அன்று புலிகள் செய்த அதே சதி அரசியலோடு இந்தத் தளத்தைக் குறித்தும், அதை இல்லாதாக்கவும் தொடர்ந்து இந்திய-இலங்கை அரசுகளோடிணைந்து புலம்பெயர் தளத்திலும் தமது கைவரிசையைக்காட்டுபவர்கள்.
மக்களது நலனிலிருந்து கிஞ்சித்தும் விலத்தாத அரசியலை முன்தள்ளும் தோழர் இராயவினது அரசியல் பாத்திரம், இன்றைய சதிநிறைந்த தமிழர்களது அரசியல்வரலாற்றில் மக்களுக்கான நியாயமான அரசியலை முன்வைப்பது.தமிழ்பேசும் மக்களது அடிமை விலங்கொடிப்புக்கான தத்துவார்த்தத்தைக் கருத்தியற்றளத்திலும், போராட்டத் தளத்திலும் முன்னெடுக்கும் இந்த மூன்றாவது அணியைக் குதறுவதில் ஒரு பெருஞ் சதியைத் தொடரவிரும்பும் இந்திய உளவுத்துறைக்கு ஒத்துதூதும் "இலக்கியச் சந்திப்பு" ஓடுகாலிக்கூட்டம் தமது அழிப்பு அரசியலை மேலும் ஜனநாயகப் பண்புடையவர்களாகக்காட்டும் சந்தர்பங்களில், அவர்களது அரசியல்"தெரிவு"இதுவரை எதுவென்று காட்டிக்கொள்வதில் தம்மைத் தகவமைத்துவரும் தளமே வெட்டவெளிச்சமாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
அராஜகங்களுக்குத் துணைபோவதும்,மனித வாழ்வுக்குக் குறுக்கே நிற்கும் அதிகார வர்க்கத்தோடும் நட்புறுவை வளர்த்துக்கொண்டுள்ள இந்தக்கூட்டம் தம்மை இலங்கை அரச யுத்தக் கிரிமினல்களுக்கு எதிரான சக்திகளாக்கக் காட்டிப் புலம் பெயர் நாடுகளில் திட்டுமிட்டுச் சதிவலை பின்னுவதற்கான முனைப்பை மாற்றுக் கருத்தாகக்காட்டுவதே இவர்களின் நோக்கமாக இருக்கிறது.அன்று புலிகளது அராஜகத்துக் எதிராகப் புலிகளை நேரடியாக எதிர்த்துக் கருத்தாடியும்,அவர்களது தவறான போராட்டப்பாத்திரத்தைக் கேள்விக்குட்படுத்தியும் இறுதிவரை போராடிய நாம், புலிகளது அழிவின்பின்னே இதுவரை மௌனித்திருந்துவிட்டு அரசியல் நடாத்தவரும் இந்தக் குழுக்களை மிக இலகுவாகவே இனங்கண்டாக வேண்டும்.இவர்கள் புலிகளது அழிவுக்கான அரசியலை அன்றே திணித்த இந்திய உளவு நிறுவனத்துடன் மிக நெருக்கமாக இயங்கிய நிலையில், இப்போது நேரடியாக அதே அரசியல் நிகழ்ச்சியை மக்கள் நலன்சார்ந்த அரசியல் தீர்மானமாகக்காட்டுவதில் தமது ஈனத்தனத்தை மறைக்க முற்படுகிறார்கள் என்பதை நாம் தோலுரித்துகாட்ட வேண்டும்.
இதுவரை இலங்கை அரசினது இனப்படுகொலையை எதிர்காது புலியழிப்புக் குறித்து உரையாடியவர்கள்,திடீரெனப் பஜனைகளை மாற்றிப்பாடுவதற்கானவொரு தளமாக இலக்கியச் சந்திப்பில்"தீர்மானங்கள்"நிறைவேற்றுகிறார்களாம்.இந்தத் தீர்மானத்தினுடாகத் தமிழ்பேசும் மக்களது அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கான முயற்சியிலும் தாம் ஈடுபடுவதாகக் காட்டுவதில் மகிந்த அரசினது அரசியல் நிகழ்ச்சி நிரலை புலம் பெயர் மக்களுக்குள் திணிப்பதிலும், அதனை உடைக்க முனையுஞ் சக்திகளைப் பிளப்பதற்கும் நித்தியானந்தன்-ராகவன்,நிர்மலாக் கூட்டத்தோடு நோர்வே சரவணன், பேர்ளின் ந.சுசீந்திரன் குடும்பமும் முழுமூச்சாகவே முனைவது அவர்களது இன்றை எஜமானர்களது தெரிவுக்கு அடிபணிவதாகவே இருக்கிறது.
இக்கூட்டம் இதுவரை தமிழ்பேசும் மக்களது துயரைச்சொல்லி உலக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி அமைப்புகளினது அரசியற்றேவைகளைச் செய்தபடி, தமது வருமானத்தைக் குறித்து இயங்கியவர்களென்பது நிரூபணமானவுண்மையாகும்.இத்தகைய அரசியல் மாபியாக்கள் மீண்டுமொருமுறை தமது கயமைமிகு நோக்கங்கட்கமைய இலக்கிச் சந்திப்பில் "தீர்மானங்"கொள்வதாகச் சொல்லுஞ் சதியில் இலங்கை அரசுக்குமிக அண்மையாகத் தமது கரங்களை இணைத்துப் புலம்பெயர் மக்களுக்குள் வேட்டையை ஆரம்பித்திருக்கிறார்களென்பது மிக நேர்த்தியாகச் சொல்லவேண்டிய செய்தி!இலங்கை அரசினது திட்டமிடப்பட்ட தமிழினப்படுகொலையை எந்தச் சந்தர்ப்பத்திலுங் கேள்விக்குட்படுத்தாத இக்கூட்டத்தின் திட்டமிடப்பட்ட அரசியல் சூழ்ச்சியானது தீர்மானங்களினூடாக மிகக் கறாராக இலங்கை-இந்திய அரசியல் அபிலாசைகளின் தெரிவாகவே நம் முன் கொட்டப்படுகிறது.இதன் உச்சமான தெரிவு இயற்கை மரணமெய்திய இ.முருகையனுக்கு அஞ்சலியாகவும் விரிகிறது!தமிழ்பேசும் மக்களைக் கேவலமாக அடக்கியொடுக்கிவரும் சிங்கள பௌத்தமதச் சியோனிஸ ஆட்சியாளர்களும்,இந்திய பிராந்திய நலனும் இவர்களுக்கு இப்போது தமிழரின் நலன்காக்கும் கட்சிகளாக-நாடுகளாகத் தெரிகிறது!தமது அற்ப அரசியல் இலாபத்துக்காக அரசியல் செய்யும் அனைத்துக் கழகங்களும்,மனிதர்களும் தமிழ்பேசும் மக்களின் இருப்பைக் கொச்சைப்படுத்தி,அவர்களின் தலையில் நெருப்பைவாரிக் கொட்டியுள்ளார்கள்.அது நாளாந்தம் மக்களை அழித்து,அந்நியர்களுக்கு அடிமைப்படுத்துகிறது.இத்தகைய அடிமை வாழ்வை சகஜமாக்க மக்களுக்கு "ஜனநாயகம்"சொல்கிறது இத்தக்கூட்டம்.
கடந்த ஆறு கிழமைகளுக்குமுன் இலங்கைப் பாசிச இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பல பத்தியாரும் மக்களது அழிவுகுறித்துப் பேசித் தீர்மானஞ் செய்யமுடியாத கபோதிகள்,அழிந்த மக்களது பிணங்களின்மீது காறி உமிழும் அரசியலை மகிந்தாவின் துணையுடன் நடாத்தி முடிக்கின்றார்கள்!"இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை"யெனத் தனது எஜமானர்களுக்கேற்ற அரசியலைப் பேட்டிகளுடாக முன்னெடுக்கும் சுசீந்திரன் போன்ற தனநபர்களின் விருப்புக்கொப்பச் சமுதாயத்தின்மீதான எதிர்காலத்தைக்குறித்துக் கதையளக்கும் இந்த "இலக்கியப் பிதா மக்கள்"தமக்குத் தேவையான அரசியலைச் செய்வதில் முனைப்படையுந் தருணம் சந்தேகத்துக்கிடமான அரசியல் பின்னணியோடு சம்பந்தப்படுகிறது.இது குறித்த மிகவும் சாதுரியமான ஆய்வு அவசியமானது இன்றைய சூழலில்.இலங்கையினது ஆளும் வர்க்கத்தோடு-அதிகார வர்க்கத்தோடிணைந்து தமிழ்மக்களை மொட்டையடிக்கும் குவிப்பூக்க விருப்புறுதியானது கணித்துக்கொள்ளத்தக்க எந்தப் புறநிலை மாற்றத்தையும் இரகசியமானமுறையில் வேவுபார்த்துச் சிதைப்பதில் முன்நிலை வகிப்பதிலும்,அதன் தொன்மைமிக்க கருத்தநிலைத் தர்க்கத்தாலும், புதியவகைப் புரிதற்பாட்டினது கட்டுடைப்பின் மீதான மறுதலிப்பையும்-அதன் தன்னுணர்வுமிக்க ஒற்றைத்துருவ வியாக்கிமான கருத்துநிலை தாண்டா திடசங்கற்பத்தாலும்-தமது இருப்பின் மூலத்தையுறுதிப்படுத்தும் மனநிலையைத் தோற்றுவிக்கும் மாதிரி மனித்தேவைகளை -பெரும் பரபரப்பின் வாயிலாக் கொட்டி வைத்திருப்பதில் இதுகாறும் நிலை நாட்டி வருகிறது!இது,தமிழ்பேசும் மக்களது அரசியல் பிரச்சனை குறித்துப் பட்டறைகள் செய்வதென்ற போர்வையில் நிர்மலா(முன்னாள் நித்தியாநந்தன்) கொண்டியங்கும் அந்நிய ஏகாதிபத்தியத் தொண்டூழியத்தைப் புலம்பெயர் மக்கள் மத்தியில் மிக நாசூக்காகப் பரப்புவதில் இலக்கியச் சத்திப்பு உலகு தழுவி நடந்தேறுகிறது!
புலம் பெயர் எதிர்ப்பிலக்கியப் பாரம்பரியத்தின் அறிவின்மீது,மொத்தக் குத்தகைச் செய்தவர்கள் இந்தத் தளத்தின் மீது எவரொருவர் அறிவாந்த தேடலையிட்டுக் கொள்ள முனைந்தாலும் அந்தத் தேடல்மீதான எதிர்போக்கான மறுதலிப்பின் வினையாற்று குறிப்பிட்வொரு தளத்தில் தன் தர்க்கத்துக்குமாற்றான கருதுகோளை -அதன் உச்சபச்ச நிராகரித்தலூடாய் இருப்பிழக்கத்தக்க பனுவல்களாக மாற்றவதிலும்,குறுகிய மனத்தளவான மதிப்பீடுகளின் மாதிரிகளைக் கொண்டு வெற்றிடத்தை நிரப்புதலில் இதுகால வரை காலத்தைக் கடத்திவருகிறது இந்த இலக்கியச் சந்திப்பும், அதன் நிழல் தலைமைகளும்.இவர்களுக்கும் இந்திய-இலங்கை அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் புலம்பெயர் மக்கள்மீதான காயடிப்பு அரசியலெனும் வியூகத்துக்கிணையவே தொடர்கிறது.இது, அடக்குமுறையாளர்களோடு,அ ஒடுக்கப்படும் மக்களைக் கட்டிப்போடும் அரசியலை ஜனநாயகத்தினும்,அபிவிருத்தியினதும் பெயரில் தொடர்கிறது.இதற்கான திட்டமிடப்பட்ட பரப்புரைகளுக்கிசைவாகவே"தீர்மானங்களும்"-உரையாடல்களும்,பயிற்சிப்பட்டறைகளும் கட்டியமைக்கப்படுகின்றனர்.இத்தகைய பண்பினது விருத்தியே மாற்றுக்கருத்தாளர்களை மிகவும் பிளந்து குறுகிய இழிநிலைக் குழுக்கட்டல்களாக விரிந்து தனிமனித் தேவைகளை நிறைவேற்றுகிறது.பரந்துபட்ட மக்களின் உயிரோடு விளையாடும் கொடிய யுத்தப் பிரபுக்களை அண்டிப் பிழைக்கமுனையும் ஒருகூட்டம், தம்மைக் குறித்த புனைவில் தாம் மாற்றுக் கருத்துத்தளத்திலிருந்து வந்தவர்களாககச் சொல்லிக்கொண்டு,இலங்கையினது இனப்படுகொலைகளை நியாயப்படுத்துகிறது.இத்தகைய சதிகாரர்களுடுடன் ஒரே மேசையில் உட்காருவதற்கு மேலுங் சிலர் நமக்குள்ளும் இருக்கத்தாம் செய்கிறார்கள்.அவர்கள் உலகத்தில் ஒடுக்கப்படும் மக்களது மறைக்கப்பட்ட செய்திகளையும் தொடர்ந்து கொணர்வதே தமது கடமையென்றும் தம்பட்டம் அடிப்பதில் திருப்திப்பட்டும் இருக்கட்டும்.
"சிந்தனையாளர்களின் அவை" ஒன்றிற்கான கருவூலப்பத்திரம் போதிப்பவர்களும்,அவர்களது நடுநிலையும்:
நமது மக்கள் பாவப்பட்ட மக்கள். பேதமையான உள்ளங்கொண்ட பாமர மக்களை எவர் காப்பாற்றுவார்?,புலியழிப்பு யுத்தத்தில் நாளும் பொழுதும் கொல்லப்பட்ட மக்களின்மீது எவர் கரிசனைகொண்டார்?இது குறித்து இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லையென மூடி மறைத்த கபோதிகள்தாம் இப்போது"சிந்தனையாளர்களின் அவை"ஒன்று தேவையெனப் பசப்பு வித்தை காட்டுகிறது.தமது எஜமானர்களது வியூகங்களை ஆங்கிலத்தில் எழுதித் தமிழ்ப்படுத்துகிறது தமிழ்ச் சமுதாயத்தின் விடிவுக்காகவாம்.தேவை ஏற்படும்போது வெளிநாட்டு நிபுணர்களினது உதவியோடு சிந்தனையாளர்களின் அவை பற்பல திட்டங்களைச் செயற்படுத்துமாம்.அதுவும் பக்கச் சார்பற்று.கேட்கவே புல்லாரிக்கிறது.
கடந்த முப்பதுவருடமாகப் புலிகளது போராட்டத்தில் காணாத புதுமைகளெல்லாம் இங்கு நடந்தேறுகிறது.ஆனால் ஒரு ஒற்மை என்னவென்றால் வெளிநாட்டு நிபுணர்களின் உதவி என்பதில் புலிகளது போக்குள் இவர்களும் முனைப்புறுவது சாட்சியாகிறது.அடுத்து இவர்களோடு இணைபவர்கள் தமது கடந்தகாலத்து நடவடிக்கைகள் குறித்துக் கேள்வியெழுப்புவது அமைப்பைச் சிதைப்பதில் முடிவுறும் என்பதால்-அதைத் தவிர்த்தபடி கூட்டாகக் கோவிந்தா போடும்படி வற்புறுத்தப்படுகின்றனர்.
ஆம்!,இவர்கள் யார்?
இவர்களுக்கும்,ஒடுக்கப்படும் தமிழ் பேசும் மக்களுக்கும் என்ன தொடர்பு?
பக்கச்சார்பு அற்ற நடுநிலைமையாகச் சிந்திக்க முடியுமா?இலங்கை ஆளும் வர்க்கம் உலக ஆளும் வர்க்கத்தோடிணைந்து விடுதலைவேண்டிப் போராடும் தேசிய இனங்களை இலங்கையில் ஒடுக்கிறது.அது முஸ்லீம் சமுதயாத்தை,மலையகத் தமிழர்களை,ஈழத்தமிழர்களை பூண்டோடு நசுக்கி வருகிறது.நீண்டகால அடிப்படையில் தேசிய இனங்களை வேட்டையாடிச் சிங்களத் தேசிய இனத்துக்குள் திணிக்கும் முயற்சில் அரசியலைக் கொண்டியங்குகிறது.இத்தகைய அதிகாரத்துக்கும்-ஆட்சிக்கும்,ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இடையில் நடு நிலைமை ஒன்று உண்டா?
ஒடுக்குபவனும் நோகமால்,ஒடுக்கப்படுபவனும் நோகமால் நிடுநிலைமை ஒன்று உண்டென்றால் அதையேன் ஒடுக்குமுறையாளன் கைக்கொள்வதில்லை?
பொய்யர்கள் தமது அடிமைச் சேவகத்தூடாகத் தமது பதவிகளைப் பணத்தைக் குறித்து இங்ஙனம் மக்களை வேட்டையாடுவதில் தமது பிழைப்புக்காகப் பொய்யுரைக்கின்றனர்."நடுநிலை-பக்கச் சார்பில்லாத" என்ற துரோகப் பாதையில் இதுவரை தமது பாத்திரத்தை உறுதிப்படுத்தி முன்னாள் புலிகள் இந் நாள் "ஜனநாயகச் சிந்தனையாளர்கள்"என்ற ஓடுகாலிகள் தமது அரசியலை இத் துரோகத்தின்வழி நிறுவுவதற்காகத் தமது கடந்தகாலத்துரோகத்தை-வர்க்கச் சார்பை மறைக்கக் கடந்தகாலத்தைப்பற்றிப் பேசாத "நடுநிலை"குறித்து"சிந்தனையாளர்களது அவை"கட்டுகிறார்கள்.இங்கே,சிந்தனையைத் தவிர மற்றெல்லாச் சதியும் நிறைந்தே காணக்கிடைக்கிறது.
இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பின் போராட்டச் சூழலில் இலங்கையில் மிகவும் கூர்மையடைகிறது.இங்கு இனங்களுக்குள் நிலவும் பரஸ்பர புரிந்துணர்வானது மிகக்கேவலமான அரசியல் சூழ்ச்சியால் உடைத்தெறியப்பட்டு மக்களை அவர்களது மண்ணிலேயே அந்நியர்களாக்கும் இழி நிலையில் நாம் உந்தித் தள்ளப்பட்டுள்ளோம்.தமிழ்பேசும் மக்களின் பிரச்சனையுள் மிக நெருங்கிய உறவுடைய நாடான இந்தியாவின் கபடத்தனமான பொருளாதார ஆர்வங்கள் இலங்கையைக் கூறுபோட்டுக் காரியமாற்றுவதல்ல.மாறாக, இனங்களின் -பிரதேசங்களின் முரண்பாடுகளைக்கூர்மைப்படுத்தி அந்தந்த இனத்தின் வீரியத்தை-படைப்பாற்றலை முழுமையாக அழித்து அந்தத் தேசத்தை முழுமையான தனது அரசியல் ஆதிக்கத்துக்குள் நிலைப்படுத்துவதே அதன் நோக்கமாகும்
இதற்காகப் புலம்பெயர் தளத்தில் இத்தகைய கைக்கூலி மேட்டுக்குடித் தமிழர்கள் மும்மரமாகச் செயற்பட்டுவருகிறார்கள்.இவர்கள் தமது வர்க்க நலனது அடிப்படையில் போடும் திட்டங்கள் கடந்த மே வாதம்வரை இலட்சம் மக்களைப் பலிகொண்ட அரசியல் வரலாற்றில் இப்போது சிந்தனையாளர்களின் அவை எனும் அரசியில் போக்கிரித்தனத்துடன் நடுநிலை-பக்கச்சார்பற்ற போக்கக் குறித்துப் புனைகிறது."கேட்பான் கேனையனானால் கேழ்வரகில் தேன் வடியும்" என்பதுபோற்றாம் இவர்களது அதிரடிக் கொன்செப்ற் நடந்தேறுகிறது.முகத்தை நன்றாக மூடியபடி ஓடுகாலி சிவராஜன் வழி இது மின்னஞ்சலாகப் பலரிடம் சுற்றுக்கு வருகிறது.
இன்றைய உலக நடப்பில் யுத்தங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அந்நிய நலன்கள் தமது பொருளாதாரத்தைக் குறைந்தளவாவது காப்பாற்ற முனையும் அரசியலைக் கொண்டியங்குகிறது.இன்றைய நிலவரப்படி மேற்குலகப் பொருளாதாரம் கனரக வாகனங்களினதோ அன்றிக் கார் உற்பத்தியையோ நம்பிக் கிடக்கவில்லை!முழுக்கமுழுக்க யுத்த ஆயுதத் தளபாடவுற்பத்தியை நோக்கியே அது விரைவாகக் காரியமாற்றுகிறது.இன்றைய இனப்பிரச்சனைகள் முடிவுக்குவராத தேசங்களை நோக்கி உற்பத்தியாகும் ஆயுதங்கள் நகர்ந்தாகவேண்டும்.எனவே,இத்தகைய தேசங்களில் இனங்களுக்கிடையிலான பிரச்சனைகள் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கவேண்டும் என்பது எழுதாத மேற்குலக நலன்சார்ந்த தீர்ப்பு.இன்று உலகு தழுவிய ஆயுதக்கொள்வனவு வருடத்துக்கு 1464 பில்லியன்கள் டொலராகும்.தற்போதைய பொருளாதார நெருக்கடியை ருஷ்சிய தனது ஆயுத ஏற்றுமதியால் தணித்து வருகிறதென்றுஜேர்மனிய முன்னணிச் சஞ்சிகைகள் எழுதுகின்றன.இந்த நிலையில் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்குள் அடக்கம்பெறும் மனிதவுரிமை வாதிகளெனும் போர்வையில் நம்மையும் உலகையும் ஏமாற்றும்"நிபுணர்களான"டாக்டர் இயன் மாட்டின்,மற்றும் "சேர்" நைஜைல் றொட்றி போன்றவர்கள் இந்தத் தமிழ் துரோகச் "சிந்தனையாளர்கள் அவை"கட்டவிரும்பும் இந்திய இலங்கைக் கைக்கூலிகளுக்கு விடிவெள்ளிகளாகிறார்கள்.
இத்தகையவர்களை அழைத்து என்ன பேசுவார்கள்?
ஓடுக்குமுறையாளகளான தமது எஜமானர்களை எங்ஙனம் ஒடுக்கப்படும் வர்க்கத்து மக்களிடமிருந்து காப்பதென்ற அரசியல் ஆய்வுகளா?பெரும்பாலும் நமது மக்களுக்கு இப்போது எவரெவரோ அரசியல் சாசனம் எழுதுகிறார்கள்.இப்படித்தாம் ஒடுக்குமறையாளர்களான மகிந்தா குடும்பமும் நமது மக்களுக்குத் தேவ தூதர்களாகப்பட்டுப் பக்கச் சார்பற்ற சிந்தனை அவசியமாகப்படுகிறது.இது கடந்தகாலத்தைப் பற்றி எவரொருவரிடமம் கேள்வி கேட்காது அவர்கள் சொல்வதை அப்படியே சிரமேற்று நம்பச் சொல்கிறது.நம்மைக் கருவறுக்க நமக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்து அவற்றைத் தமது அரசியல் அறுவடைக்காகக் காரியமாற்ற அந்நியர்கள் நமது மக்கள்சார்ந்து இயங்கும் அரசியலை அழித்துள்ளார்கள்.இதன் தொடரில் இலக்கியச் சந்திப்புக்குள் தமது எஜமானர்களைக் காக்கும் கூட்டம் இன்னொரு வகையில்"சிந்தனையாளர்களின் அவை"ஒன்றை நிறுவுவதில் தமது அதிகாரங்களைக்காத்துக்கொள்வதற்கும் அதன் இரூபத்தில் அந்நிய எஜமானர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தமது நலன்களைக் காக்கவும் முனைகின்றார்கள்!;இதன் வாயிலாக நமது மக்களின் ஒருமைப்பாட்டைக் குலைத்துத் தனிமைப்படுத்தித் தம்மைப் பலப்படுத்துகிறார்கள்.இதன் வாயிலாக அதிகாரமையங்களைத் தமது அரசியல் நட்பு சக்திகளாக்கி இலங்கை மக்களின் முதுகில் குத்தி வேட்டையாட இந்தக் கைக்கூலிக்கூட்டம் பற்பல வடிவங்களில் நம்முன் வருவதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.இது புரட்சிக்கு எதிராக இயங்கிய அந்நிய ஏவற்படையான புலிகளது பாத்திரத்தைப் புதிய வடிவிலும் கருத்தியற்றளத்திலும் ஏற்கத் தயாராகும் அறிகுறியாகவே இனங்காணவேண்டும்.புலிகள் எப்படி எதிர்ப்புரட்சிகரச் சக்தியாக உருவானர்களோ அங்ஙனமே அதன் வெற்றிடத்தில் இத்தகையவொரு கூட்டம் மிக விரைவாக அந்நியச் சக்திகளால் நமக்குள் முன் தள்ளப்படுகிறார்கள்.இத்தகைய மக்கள்விரோதிகளுக்கு அந்நியத் தேசங்களது உளவு நிறுவனங்களே நிதியீடும் செய்து இவர்களைத் தமது நம்பகமான கையாளகவும் பயன்படுத்தித் தமிழ்பேசும் மக்களை மிக நுணுக்கமாகக் கண்காணிக்க முனைகிறது.இதன் தொடராக நமக்குள் கொட்டப்படும் கருத்துகள்,நமது மக்களது விடிவுக்கானதாகவும் பரப்புரை செய்யப்படுகிறது!
இலங்கை உழைக்கும் மக்களினது உரிமைகளைக் குதறி இலங்கையின் சுய வளர்ச்சியை முடுக்கி அதன் அரசியலை மிக இழிவான பாசிச நிலைக்குள் இருத்திவைத்து, மக்களின் சகல படைப்பாற்றலையும் கட்டுப்படுத்தித் தமது பொருள்களையும்,அத்தகைய பொருள்களை உற்பத்தி செய்யும் கூலிகளையும் இலங்கையில் பெற்றுக்கொண்டு கூடவே நீண்ட கால நோக்கில் இலங்கையைத் தமது இராணுவக் கேந்திரப் பரப்பாக்குவதில் வெற்றீயீட்டி வருகிறது ஏகாதிபத்தியங்கள்.இவர்களுக்குச் சேவகஞ் செய்யவும்,இலங்கைப் புரட்சியை ஒடுக்கவும் ஆயுதமற்ற புலிகளை நமக்குள் முன்தள்ளும் இந்த அந்நிய உளவு அமைப்புகள்"சிந்தனையாளகளின் அவை"கட்டவும்,இலக்கியச் சந்திப்புச் செய்யவும் குறிப்பட்ட கயவர்களுக்கு அனைத்து வளங்களையும் கொடுத்து நம்மை மொட்டையடிப்பதில் குறியாக இருப்பதென்பதை நாம் இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.இவர்களை வேரோடு கருவறுக்க இன்னுமின்னும உறுதியோடான வர்க்க உணர்வோடு புரட்சிகர அரசியலை நாம் முன்னெடுபபதே அவசியமானதாகும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
07.07.2009
(இலக்கியச் சந்திப்புப் படங்கள் தலித்துநெட்டுக்குச் சொந்தம்.அதற்கு நன்றி!)
P/S:கீழ்வரும் குறிப்பானது ஓடுகாலிகள் வரைந்த குறிப்பாகும்.இவர்கள் இந்திய-இலங்கை உளவு அமைப்புகளோடு நேரடியான முறைகளில் இயங்கும் தள அரசியலைக் கொண்டியங்குவதென்து உண்மையானது.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் அவலநிலைக்கு விடிவுகாண,வழிவகை செய்ய புலம்பெயர் தமிழர்களுள் சிந்தனையாளர்களின் அவை ஒன்றிற்கான கருவூலப்பத்திரம்.
ஐ. அறிமுகம். (திருத்தம்) யுத்தத்தின் பின் இலங்கைவாழ் தமிழரின் நிலைமையும் அவர்களின் எதிர்காலழும் கவலைக்குரியதாக இருக்கிறது. ஆதனால் இவ்விடையத்;தில் அக்கறை கொண்டுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள அறிவாற்ரல் மிக்கோரின் சந்திப்பு ஒன்று அவசியமானது. இந்த அவசியத்தை நிறைவேற்ர ஒர் அவை தேவை. அப்பேர்பட்ட அவையின் நிர்மாணத்தன்மைபற்றி இவ் ஆவணம் முன்கூறமுனைகின்றது. அச்சந்திப்பில் அக்கற்றறிந்தவர்கள் இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதய நிலையில் உதவ எப்படிப் பங்களிக்கலாம் என்பதை ஆராயமுற்படுவதும் இந்த கருவூலப்பத்திரத்தின் நோக்கமாகும்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்களுள் கடந்த கால நிகழ்வுகளின் சரி, பிழை பற்றி விமர்சிப்போர் எம்மத்தியில் உள்ளனர் என்ற நிலையை ஏற்றுக்கொண்டு அப்பேற்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து பக்கச்சார்பற்ற நடுநிலைமையைக் கொண்ட கற்றறிந்த தமிழர்களின் அவை தமிழர்களுக்காக செயற்பட வேண்டியது அவசியம் எனக் கருதப்படுகின்றது.
ஐஐ.இலக்கு.
இலங்கைத் தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பாரம்பரிய பூமியில் சுயகௌரவத்துடனும் ஒரு ஜனநாயக சமூகத்தில் பிரஜைகள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் கொண்ட ஒரு சமூகம் ஆக வாழ்வதற்கு வழிவகை செய்தல்.
ஐஐஐ.நோக்கம்.
1. ஆரம்ப கட்டமாக ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சகலரையும் பிரதிநிதிப்படுத்தக்கூடிய பக்கச்சார்பற்ற சிந்தனையாளர் அவை ஒன்றை அமைத்தல்.
2. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் விடயங்கள் பற்றிய கருத்து வேறுபாடற்ற விடயங்களை அடையாளம் காணல்.
3. அங்கத்தவர்களைப் பிளவு படுத்தக்கூடிய கருத்து வேற்றுமை உள்ள முக்கியமான விடயங்களை வேண்டுமென்றே கலந்துரையாடுவதைத் தவிர்த்துக்கொள்ளல். அவ்வாறு செய்வதன் மூலம் குறித்த கருத்து வேற்றுமை உள்ள விடயங்கள் பற்றிப் பேசுவதில்லை என்பதில் இணக்கம் கொண்ட ஒரு ஐக்கிய அவையை உருவாக்குதல்.
4. குறித்த அவை தமது இலக்கை அடைவதற்கு சர்வதேச நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று குறித்த இடைவேளைகளில் சந்தித்து தமது இலக்கை அடைவதற்கான வழிவகைகளை நிர்ணயித்துக்கொள்ளல்.
5. மேற்குறித்த இலக்கைக் கொண்ட வேறு அமைப்புக்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுதல்.
ஐஏ. வழிமுறைகள்.
1. மேலே குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு ஐரோப்பாவில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் கற்றறிந்த தமிழர்களைக் கொண்ட ஒரு நடுநிலைமையான சிந்தனையாளர் அவை ஒன்றை உருவாக்க ஊக்குவித்தல். இவ்வகையான சிந்தனையாளர் அவை உச்சநிலை சிந்தனையாளர் அமைப்பொன்றிற்கு கருத்தூட்டும் “தளநிலை அமைப்பு” ஆக இருக்கும்.
2. இவ்வகையான ஒவ்வொரு “தளநிலை சிந்தனையாளர்” அமைப்பும் தெரிவு செய்யப்பட்ட செயற்குழு ஒன்றையும், தலைவர் ஒருவரையும் கொண்டதாக இருக்கும்.
3. இவ்வகையிலான தளநிலை அமைப்புக்கள் குறித்த இடைவேளைகளில் சந்தித்து சொல்லப்பட்ட இலக்குகளோடு சம்பந்தப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கும்.
4. அவ்வாறு எடுக்கப்போகும் தீர்மானங்களை தமது பிரதிநிதிகள் மூலம் உச்சநிலை சபைக்கு அதன் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கும்.
5. ”தளநிலை சிந்தனையாளர்களின்” செயற்குழுவில் இருந்து 3 உறுப்பினர்கள் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பின் குறித்த நாட்டின் சிந்தனையாளர் குழுவின் பிரதிநிதிகளாக இருப்பர்.
6. இவ்வகையில் உருவாகும் உச்சநிலை அவை குறித்து இடைவேளைகளில் சந்தித்து அவ்வப்போது எழும் விடயங்களைக் கலந்தரையாடி இலக்கை அடைவதற்கான வழிமுறைகளை நிர்ணயிக்கும்.
ஏ. பொதுக்குறிப்புகள்.
இக்கருத்தில் நுட்பங்களை அலசி ஆராய ஏதேனும் ஒரு நடைமுறையில் உள்ள அமைப்பு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திற்கு இணக்கம் ஏற்படின் அதற்கென ‘கருத்துப் பரிமாற்றப் பட்டறை’ ஒன்றை நடாத்தி இவ் ஆலோசனைகளின் நுட்பங்களை ஆராய்ந்து நிறுவன நடைமுறை ஒழுங்குகளையும் தயாரித்து குறித்த அமைப்புக்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும்.
கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
1. ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒவ்வொன்றிலும் சகல தமிழர்களுடைய கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படக்கூடிய சிந்தனையாளர்களை ஒன்றிணைத்துக் குழுக்களை அமைக்க முயற்சித்தல். இவ்வகையில் உருவாகும் ஐரோப்பாவின் உச்சநிலை அமைப்பு ஏனைய கண்டங்களில் வாழும் தமிழர்களின் சிந்தனை அமைப்பு அமைய முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2. குறித்த சிந்தனையாளர் குழுக்களை அமைக்கும் போது தள மட்டத்திலும், உச்ச மட்டத்திலும் இக்குழுக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசுபவர்களுள் போதிய எண்ணிக்கையிலான மகளிரையும் சேர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
3. இவ் அமைப்புகள் சகலவற்றிலும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கடந்த காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் பேசுவதோ, கலந்துரையாடுவதோ இல்லை என்ற ஒழுங்கு விதியை கடைப்பிடித்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்கத்தவறின் எமது நோக்கத்தை அடைவதற்கான செயற்பாடுகளில் பாதகம் ஏற்படும்.
4. கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல் முதலியவைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ நடத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஆங்கிலத்தில் தேவைப்படின,; தமிழில் சமகாலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஒழுங்குகள் இருத்தல் வேண்டும். கூட்டப்பதிவுகள் ஆங்கிலத்தில் இருந்தால் சர்வதேச தொடர்புகளுக்கு இலகுவாக இருக்கும்.
5. தேவையேற்படும் தருணத்தில் கருத்துப் பட்டறைக்கோ அல்லது வேறு எந்தக் கூட்டத்திற்கோ அனுபவம் வாய்ந்த சர்வதேச நிபுணர்களைப் பங்கு கொள்ளச் செய்யலாம்.
6. எத்தறுவாயிலும் எக்கூட்டத்திற்கும் சிறப்பு சொற்பொழிவாற்ற கலாநிதி இயன்மாட்டின், சேர் நைஜல்றொட்றி போன்ற நிபுணர்களை அழைத்துக்கொள்ளலாம். (இப்பத்திரத்தில் உள்ளவை ஆக்கியோனின் சிந்தனையே. தேவையேற்படின் கூட்டிணக்கத்தின் மூலம் வேறு கருத்துக்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.)