Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாமரத்து நிழலில்

அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை

கிளையில் கட்டிய ஊஞ்சல்

கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்

வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு

குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது

 

 

கொத்திச்சாறி நாற்றுநட்டு களைபிடுங்கி

அருவிவெட்டில் தப்பிய கதிர்களை தேடிப்பொறுக்கி

கஞ்சியாக்கியவன் குடிசையில்

றொட்டிக்கல்லையும் ஆய்ந்துபார்

வீச்சுவலை மிதப்புருளை

துருப்பிடித்த சூளருவாள்

கடலிறங்கப்பயத்தில் காய்ந்துகிடந்த

கட்டுமரத்தையும் கொத்திப் பிளந்துபார்

 

தூ வெறிபிடித்தவனே

மண்ணை முத்தமிட்டாய் வெற்றிமுழக்கமிட்டாய்

மகிந்தசிந்தனை வென்றதென்றாய்

மக்களிற்கெந்த இழப்புமின்றி மீட்டதாய்

மார்தட்ட வெட்கமில்லை

மறுபுறத்தே உன்பெண்டாட்டி

அனாதைப்பிள்ளைகளை அரவணைக்கும் படம்காட்டி

யாரை ஏய்க்கின்றாய்

 

நாளெடுக்கும் மீள்அமர

போட்டுமுடிய உடல்கள்மேல் புத்தவிகாரை எழணும்

மண்ணைத்தோண்டாமல் பயிர்வளர்க்கும் பக்குவம்சொல்ல

இந்திய விஞ்ஞானி மண் எடுத்துப்போயுள்ளார்

ஆழத்தோண்ட அரச அனுமதி சட்டமும் வரும்

கண்ணிவெடியகற்றவென ஏவல் படைவரும்

எந்த தடையமுமின்றி எரிமருந்து ஊற்றுங்கள்

கண்ணில் படுமிடமெல்லாம் இராணுவத்தை நிறுத்து

 

இழப்பாலே மனமுடைந்து கிடக்கின்றார்

ஓட்டுக்காய் உன்நகர்வும்

இனச்சிதைப்பும் தொடருமெனின்

உழைத்துழைத்து உருக்கேறிய கரங்களை

அடைத்துப்போட்டுள்ளாய் உடைத்தெழும் பார்