புலியினது சதி அரசியல் வரலாற்றில் மீளவுஞ் சதியே தொடர்கதை.புலிகளது தவறான போராட்டத்தால்-அந்நிய அடியாட்படைச் சேவகத்தால்,வரலாற்றில் தமிழ்பேசும் மக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டார்கள்.

அதே அந்நியச் சேவையில் புலிகளது இருப்புப் பறிக்கப்பட்ட இன்றைய நிலையில்,தமிழ் மக்களின் வரலாற்று வாழ்வாதாரங்களையும் அவர்களின் ஐதீகங்களையும் மெல்ல அழித்துவரும் அரசியலைத் தமிழ் மக்களைக்கொண்டே அரங்கேற்றி வருகிறது,இலங்கை அரசு!
 
வர்க்கச் சமுதாயத்தில்,பேராசை,பதவி வெறி பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் இப்படித்தாம் சோரம் போகிறார்கள்.இவர்களிடம் இருக்கும் அரசியல் வெறும் காட்டிக்கொடுக்கும் அரசியல்தாம்.நிரந்தரமாகத் தமிழ் மக்களை ஏமாற்றித் தமது அரசியல் இருப்பை உறுதி செய்வதில் அவர்களின் நோக்கம் மையங் கொள்கிறது.ஆனால்,சிங்கள அரசின் அதீத இனவாதப் போக்கானது இலங்கையில் ஓரினக் கோசத்தோடு சிங்கள மயப்படுத்தப்படும் தூரநோக்கோடு காய் நகர்த்தப்படுகிறது.இந்தத் திட்டமானது மிகவும் இனவொடுக்குதலுக்குரிய மறைமுக நோக்கங்களை இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்குள் வற்புறுத்தி வெற்றி கொள்கிறது.இந்த வெற்றியைப் புலிகளை வைத்தே செய்துவந்த இலங்கை அரசு தொடர்ந்து இலங்கையைத் தமது எஜமானர்களின்(சிங்கள ஆளும்வர்க்கம்) வர்க்க நலுனுக்கொப்ப அந்நியச் சக்திகளோடு இணைத்துத் தமது வர்க்க நலனை எட்டமுனையும் சிங்கள ஆளும்வர்கத்துக்கிசைவாக மாற்றிச் சிறுபான்மை இனங்களை ஒட்டக் கருவறுக்கிறது.
 
இந் நிலையிலுங்கூடப் புலம்பெயர் புலிப் பினாமிகளும் அவர்களது சேவகர்களும் ஏதோவொருவகையில் அந்நியத் தேசங்களது புலனாய்வுத் துறையோடிணைந்து திட்டமிடப்பட்ட செயற்கையான சமூக நெருக்கடியையும்,வரலாற்றுத் துரோகத்தையும்(தமிழர் சுயநிர்ணயவுரிமையைப் புலிகளால் நடாத்தப்பட்ட போர்மூலம் காட்டிக்கொடுத்து அழித்தது) ஒரு இனத்தின்மீது கட்டவிழ்த்துவிட்ட யுத்தக் கிரிமினல்களாகவிருக்கும் நாடுகளைப் புலிகளது அழிவின் பின்னான அரசியல் நடாத்தையில் மக்களின் மீட்பர்களாக்கமுனையும் கயமையோடு புலிகளது சர்வதேசப் பொறுப்பாளரெனுங் கபடதாரி கே.பி. மற்றும் புலம்பெயர் பினாமிகளும்,அந்தப் பினாமிகளது ஒரு பிரிவினது செல்வச் செழிப்பில் சுகங்காணும் கூலி சமூக விமர்சகர்களும் புனைபெயரில் புனையும் "ஆய்வுகள்"புலிகளுக்கு வெளியில் மாற்றுக் கருத்தென்றவட்டத்தை நோக்கித் தமது பல்லவிகளைத் தொடர்கிறது.

 

புரட்சிக்கு எதிரான ஊடக வன்முறை:

 

உலக-இந்திய,இலங்கை உளவு அமைப்புகளது நலனுக்குகந்த கருத்தமைகளைத் தமிழ்பேசும் மக்களது நலனுக்கிசைவானதாகக்காட்டும் சதியில் தீவிரமாக புலம்பெயர் தளத்தில் இயங்கும் ஊடகங்களென இன்றைய தமிழ் ஊடகப்பரப்பில், தேனீ மற்றும் தேசம் நெற்போன்ற ஊடகங்கள் இவ்வியூகத்தை முன்னெடுக்கின்றன.இவை தமிழ்பேசும் மக்களது வரலாற்று மண்ணைத்திட்டமிட்டு அடிமைப்படுத்தும் இலங்கை-இந்தியச் சதியில் தமது பங்கையளித்துக் கூலிபெறும் முயற்சியாகவே நாம் பார்க்கிறோம்.புலிகளது அழிவு தற்செயலானது அல்ல.அது திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்டது.அன்று, புரட்சியைக் காயடிப்பதற்காக வளர்க்கப்பட்ட புலிகள் இன்று அதே எஜமானர்களால் அழிக்கப்பட்டபின்னே மீளவும் புரட்சிகரமான சிந்தனையுடையவர்களைக் காவுகொள்ளப் புலிப் பினாமிகளான கே.பி.பிரிவோடு கரங்கோற்க விடப்படும் எழுத்துக்கள் மிகவும் சூழ்ச்சி நிறைந்த அரைகுறைவுண்மைகளைப்பேசிப் புரட்சியை மழுங்கடிக்கும் சதி நிரம்பியது.

 

இது, புரட்சியைக் குறித்து வெறும் மனப்பால் குடித்தபடி, தத்தமது மனக்கணக்கின்படி வகுக்கவிரும்புகிறது.இவர்களுக்கெதிரான கருத்தியல்போர் தொடர்ந்து நடாத்தப்படவேண்டிய அவசியத்தை உணரும் நாம்,மக்களது துயரில் அரசியல் செய்யும் இழியமைப்புகளைத் தோலுரித்துத் துரொகத்தனமான பரப்புரைகளை இனங்காட்டவேண்டியிருக்கிறது.

 

மனித வளர்ச்சியென்பது எப்பவுமே ஒரே மாதிரி ஒழுங்கமைந்த முறைமைகளுடன் நிலவியதாக இருந்ததில்லை.காலா காலமாக மனிதர்கள் ஒவ்வொரு முறைமகளுடனும் போராடியே புதிய அமைப்புகளைத் தோற்றியுள்ளார்கள்.இந்த அமைப்புகள் யாவும் ஏதோவொரு முறையில் சொத்துக்களுடன் பிணைந்து அதன் இருப்புக்கான,நிலைப்புக்கான-காப்புக்கான அமைப்பாக இருந்து வருகிறது.அவை எந்தமுறைமைகளாயினும் சரி,இதுவே கதை.உடல் வலுவை வைத்து மக்களை அடக்கிய காலங்களும் இந்தப் பின்னணியின் ஆரம்க்கட்டமாத்தாமிருந்திருக்கிறது.இதைப் புரியாதிருக்கும் ஒரு காலத்தை இனிமேலும் தக்கவைப்பதற்கு எல்லாத் தரப்பும் அதி சிரத்தையெடுத்தபடி " இலங்கைத் தேசியம்,ஒருமைப்பாடு,சமாதானம்,ஒற்றுமை"பேசுகின்றன.

 

தமிழ்பேசும் மக்களது-இலங்கைச் சிறுபான்மை இனங்களது அடிமை விலங்கொடிக்கும் இந்தப் போராட்டத்தை நெறிப்படுத்தும் காலக்கடமையானது அனைத்துப் புரட்சிகர மாற்றுச் சக்திகளிடமே காலத்தால் கையளிக்கப்பட்டுள்ளது!இந்த வரலாற்றுத் தேவையோடு தமிழ்பேசும் மக்களின் சுய நிர்ணயவுரிமைப் போராட்டமானது இனிமேல் புலிகளின் எஜமானர்களின் நலனுக்குடந்தையாக இருக்கும் நிலையை உடைத்து,ஒன்றிணைந்து இலங்கையில் மக்களினங்கள் பரஸ்பர ஒற்றுமையுடன்கூடிய உரிமையாக மலரவேண்டும்.

 
இதற்கானவொரு போராட்டமானது இனிமேல் அழிந்த புலிகளது பினாமிகள் எதிர்ப்பு அரசியலோடு தேங்க முடியாது.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள்(தேனீ,தேசம்நெற் போன்றவை உட்பட) மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.
 
ஓட்டுக்கட்சி ஆதிக்கம்:
 
இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையமாகிய இலங்கை மண் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒளிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இன்றைய இலங்கையின் அரசியலில் அண்ணன் தம்பிகளான மூன்று மனிதர்களது(மகிந்தா சகோதரர்கள்) அரசியல் நடாத்தையானது அவர்களது விருப்பு வெறுப்பிலிருந்து எழுவதல்ல.மாறாக, அவர்களது பொருளாதாரப் பின்னணியிலிருந்து எழுகிறது.அவர்கள் இலங்கையின் செல்வத்தில் கணிசமான பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள்.அச் செல்வமானது தரகு முதலாளியத் தன்மையுடன்கூடிய நிதி மூலதனமாக மாறியுள்ள நிலையில், மாறிவரும் ஆசிய மூலதனத்துடன் இணைந்து இலங்கைப் பொருளாதாரத்தில் தமது வலுவை இறுகப் பிணைத்து மக்களை ஒட்டச் சுரண்ட முனைகிறது.இதன் தாத்பாரியம் அரை இராணுவத்தன்மையிலான ஆட்சியாக மாற்றப்பட்ட இலங்கையில் அவர்களது கட்சியானது ஆதிக்கத் தன்மையுடன் சிறுகட்சிகளையும் தமக்குள் உள்வாங்கிப் புதியதொரு சர்வதிகாரத்தன்மையுடன் கட்சி ஆதிக்கமாக மாறுகிறது.இதை மிக நேர்த்தியாக உணர்வது அவசியம்.இலங்கைச் சூழலில் இவ்வாதிக்கமும் ,பாசிசமும் மயக்கமுற்று இரண்டையும் ஒன்றாக உணரும் போக்கு நிலவுகிறது(இது குறித்துப் பிறதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்ப்போம்).
 



குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இலங்கையில்-இந்தியாவில் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.
 
 
பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட இலங்கைத் தேசத்தின் கட்சி ஆதிகத்துள் நிலவுவதில்லை.இதை உணர்ந்துகொண்ட கருணாபோன்ற நவீன அரசியல்வாதிகளைப் பின்னிருந்து இயக்கும் கூரிய முதலாளித்துவச் சிந்தனை மிக நாசுக்காக மகிந்தாவுக்குக் காவடி தூக்கக் கருணாவைத் தயார்ப்படுத்துகிறது.கருணாவுக்கான கட்சி அரசியலை-.ஆலோசனையை அன்று புரட்சிபேசிய சில புத்திசீவிகளே முன்நின்று வழங்குவது கண்கூடாகக் கவனிக்கக்கூடியது.இது பாரீஸ்சில் மையங்கொண்டது.
 
இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்(உதாரணம்:எக்ஸ்சில்-ஞானத்தைக் கருணா-பிள்ளையான் குழு வேண்டியது போன்று),செய்திய+டகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.
 
 
நமது போராட்டப்பாதை:
 
 
ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.
 
 
இதன் அரசியல்போக்கால்,சிங்கள-பௌத்த மேலாதிக்க இனவொடுக்குமுறை ஆதிக்கத்தை பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் இலங்கைச் சிறுபான்மை இனங்கள்-குறிப்பாகத் தமிழ்பேசும் மக்கள் தமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் குறித்து விவாதிப்பதும் அடுத்தகட்ட நகர்வுக்காகப் புரட்சிகரமாக அணிதிரள்வதைக் குறித்துக்கூடுவதும்,விவாதிப்பதும்-வாரலாற்றில் புலியின் பாத்திரம் குறித்த மதிப்பீடும் அவர்களது காட்டிக்கொடுப்புப் போராட்ட முறையின் காரணத்தையும் அதன் வாயிலாகத் தமிழ்பேசும் மக்களைப் பல்லாயிரக்கணக்காப் படுகொலை செய்த வன்னி யுத்தத்தில் தமிழர்கள் அடிமைகொள்ளப்பட்ட அரசியல் இலக்கைக்குறித்துக் கறாராக விளங்க முனைதலும் மீளத் தனிநாடு-ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது-இஃது,முதலில் புரிந்துகொள்ளவேண்டிய ஆரம்பப் பாடம்!இனி என்ன செய்ய வேண்டிய நிலையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கின்றார்கள்?
 
 
மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய புலியரசியலைக் கெட்டிதட்டிய பயங்கரவாதமாகக் காட்டிக்கொள்ளும் வியூகத்தோடு உலக அடக்குமுறை ஆட்சியாளர்களின் தயவை நாடியது(இத்தகைய நடாத்தைக்கு ஏதுவாகவே புலியைத் தயார்ப்படுத்திய உலக ஆளும் வர்க்கங்கள்,இறுதியில் புலியை அழிக்க ஏதுவான பல காரியங்களைப் புலிகளுடாகவே செய்வித்தார்கள்.)இத்தகையவொரு சூழலை மையப்படுத்திய வரம்புக்குட்பட்ட இராணுவ ஆட்சியில் மக்களை அடக்கமுனையுந் தருணங்களையும் அந்தவரசு இயல்பாகத் தோற்றுவித்தபடி நகர்ந்தேயிருக்கிறது.இதுவரைத் தமிழ்த் தேசமெங்கும் பாரிய படைகளை நகர்த்தித் தமிழ்பேசும் மக்களைக் கொன்று, அவர்களது வாழ்வாதாரங்களைத் திட்டமிட்ட அழித்துள்ளது.இதற்கு இந்தியாவினது முழு ஒத்துழைப்பும் அதற்குக் கிடைத்தது.நந்திக்கடற்கரையில் கொல்லப்பட்ட புலித்தலைமைகுறித்துப் பேசும் நாம் பல்லாயிரம் தமிழ்பேசும் மக்கள் குறித்துப் பேசுவதற்கு முனையவே இல்லை!
 
மக்கள் நலனுக்கான அரசியல் என்பது வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அடிப்டையை மறுதலித்து இயங்க முடியாது.நமது மக்களது எதிரிகள் தனியே சிங்களத் தரப்பில்மட்டுமல்ல நமது மக்கள் சமுதாயத்துக்குள்ளுமே இருக்கின்றார்கள்.கருணா,பிள்ளையான்,டக்ளஸ்,ஆனந்த சங்கரி என்பதென்றவர்களுடன் கூடி இப்போது புலிப்பினாமிகளும் அவர்களுக்குப் பின்னால் நின்ற புதிய தமிழ் ஆளும் வர்க்கமும், இவை எல்லோருடனும் மையங்கொண்ட நட்போடு நமது மக்களை வேட்டையாடச் சிங்கள ஆளும் வர்க்கத்தோடு கைகோர்க்கும்போது, நாம் மட்டும் சிங்கள உழைக்கும் வர்க்கத்தையும் பகைத்து வர முடியுமா?
 
சிங்கள உழைப்பாள வர்க்கத்தோடு நிர்க்கதியாக்கப்பட்ட தமிழ்பேசும் மக்கள்மட்டுமல்ல இலங்கைச் சிறுபான்மை இனங்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றிணைந்த இலங்கையில் புதியஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவதைத்தவிர வேறு வழி எமக்கு இல்லை.எனவே போராட்டம் என்பது தொடர்கதையானது.இதுள் புலிகள் குறுக்கே நிற்க வைக்கப்பட்ட சக்தி-அவ்வளவுதாம்!நம் முன் போராட்டம் தொடர்கிறது!
 
இப்போராட்டாமானது முழு இலங்கைக்குள்ளும் மகிந்தாகுடும்பத்துப் பாசிச அராஜகத்துக்கெதிராகவும்,அதுவே இனங்களுக்கிடையிலான வெகுஜன எழிச்சியாகவும் விரிந்து வியாபிக்கவேண்டும். தொடரப்போகும் பாரிய இராணுவக் குடியேற்றம் மற்றும் சிங்கள மயப்படுத்தும் புதிய கிராம மாதிரிகள் பண்டுதொட்டு வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் அனைத்து வாழ்வாதாரத்தையும் சிதைத்துவிடக் காத்திருக்கிறது. காலாகாலமாகத் தமிழ்பேசும் மக்கள் ஏமாற்றப்பட்ட அரசியல் வரலாற்றில் புலிகளும் தமக்கான பங்கை தமது உயிர்ப்பலிகளினூடே ஆற்றியுள்ளார்கள்!
 
இன்றைய இலங்கைச் சூழல் புலிகளின் வலுக்கரங்களை மிகவும் பலவீனமாக்கி,அவர்களது இராணுவத் தலைமையைப் பூண்டோடு அழித்து மாற்றுச் சக்திகளின் கரங்களைப் பலமாக்கியுள்ளதை எவரும் நிராகரிக்கமுடியாது.இன்று புலம்பெயர் புலிகள் உலகத்தின்முன் அம்பலப்பட்டது மட்டுமல்ல தமது இராஜதந்திர வியூகத்தையே உலக அரசுகளின்,மக்களின் ஆதிக்கத்துள் இழந்துள்ளார்கள்.அவர்களது ஒவ்வொரு நகர்வும் மிக நுணுக்கமாக உலக அரசுகளால் கவனிப்புக்குள்ளாகிவரும் இந்த நிலையில், இலங்கைப் பாசிச அரசு தமிழ்பேசும் மக்களை ஒட்டக் கருவறுக்கக் காத்திருக்கிறது.
 
தமிழீழப் போராட்டத்துக்குப் பின்பான இன்றைய சமூகச் சூழலில், தமிழ் சமுதாயத்துள் உட்புறம் நிலவும் மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் முன்னெடுப்பும்,அது சார்ந்த சிந்தனா முறையும் ஜனநாயகத்தின் அதிகபட்சக் கோரிக்கைகளை முன்வைக்க முடியாத இலங்கைப்பாசிச அரசினது சமூகப் பொருளாதாரத்தைக் கோரிக்கொண்டிருக்கிறது.இது, தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய அவலமான சூழலுக்கு முக்கியமான காரணியாக விருத்தியாகும்.கடந்த காலங்களில் நிலவிய விசும்பு நிலையான இந்தச் சிக்கல் இப்போது பின்போராட்சச் சூழலில் சமுதாயத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் தன்வயப் படுத்தியுள்ளது.கடந்த காலங்கள்போல் இனிவரும் காலங்கள் இருக்கப்போவதில்லை.
 
தமிழரின் பாரம்பரிய நிலப்பிரதேசத்தில் தமிழ்பேசும் மக்களது சுயவாண்மையை உடைத்தெறிந்த புலிகளது அரசியல்-போராட்ட நிலைமைகளால் தமிழ்ச்சமுதாயம் மிகவும் பலவீனமானவொரு சமுதாயமாக மாற்றப்பட்டிருக்கிறது.இஃது, மகிந்தாவைக் குறித்து இன்னொரு தேவ தூதுவனாகக்கூட கருதிவிடும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.இது,மகிந்தா குடும்பத்துப் பாசிசச் சர்வதிகாரத்தன்மையிலானவொரு அரச நடவடிக்கைக்கு இலங்கையை உட்படுத்தியபடி எம்மைப் பலாத்காரத்தோடு அரசியல் அநாதையாக்கிவிடுகிறது.
 
சமுதாயத்துள் அங்கமுறும் ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் உயிர் ,உடமையிழப்புகளுக்கும்,இடப்பெயர்வுகளுக்கும் உள்ளாக்கப்பட்டதன் பின்பு,அந்தச் சமுதாயத்தின் நெறியாண்மை மிகவும் பாதிப்படைந்துள்ளது.இந்தச் சந்தர்பங்கள் பொருளாதாரச் சிக்கலுக்குள்ளாகும் ஒரு சமுதாயத்தை, எந்த வகையிலும் சமூகப் பிறழ்வுகளுக்குள் திணித்து,அதைச் சிதைப்பதில் முடிவுறுகிறது.
 
 
நமது உரிமையென்பது வெறும் அரசியல் கோசமல்ல.அது கருணா-பிள்ளையான் வகையறாக்கள் சொல்லும்படியுமில்லை.எங்கள் பாரம்பரிய நிலப்பரம்பல் குறுகுகிறது.நாம் நமது தாயத்தை மெல்ல இழந்து போகிறோம்.நமது உரிமைகள் வெற்று வார்த்தையாகவும்,ஒரு குழுவின் வேண்டாத கோரிக்கையுமாகச் சீரழிந்து போகிறது.
 
இஃது திட்டமிட்ட சிங்கள அரசியலின் சதிக்கு மிக அண்மையில் இருக்கிறது.
 
எனவே, சிங்களப் பாசிசம் தன் வெற்றியைக் கொண்டாடுவதும்,அதைப் தமிழ்ப் பொறுக்கிகள் ஜனநாயகத்தின் பேரால் வாழ்த்தி வரவேற்பதும் பொறுக்கி அரசியலின் வெளிப்பாடாகமட்டும் பார்ப்பதற்கில்லை.மாறாக எஜமான் இந்தியாவின் வற்புறுத்தலாகவும் இருக்கிறது.இங்கே, நாம் வெறும் வெட்டிகளாக இருத்தி வைக்கப்படுகிறோம்.புலிகள் எல்லா வகைகளிலும் இந்தப் போராட்டத்தைச் சிதைத்தது வெறும் தற்செயலான காரியமல்ல.இது திட்டமிட்ட அரசியல் சதி.
 
கடந்த காலத்தில்,தமிழ்பேசும் மக்களின் உயிர்-உள ஆதரவானது தமது எதிர்காலத்தை நோக்கியதானது.நாம் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நிற்கிறோம்.
 
இலங்கையின் யுத்தவெற்றியானது ஒரு தேசமெனும் கோசத்தை வலுவாக்குவதற்கும் அதைக் காரணமாகக்காட்டி இராணுவவாதத் தலைமைகளை நிறுவுவதற்குமே வலிந்துபல தமிழ்பேசும் மக்களையும் மற்றும் புலித் தலைவர்களின் படுகொலைகள் நிகழ்தப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.இத்தகைய தந்திரங்களுக்குப் பின்னால் இலக்காகக் கொள்ளப்படும் அரசியல் விய+கமானது பதிலடியெனும் திட்டமிட்ட இனத் துவேசத்தின் வெளிப்பாடும்,சிங்கள இன ஆளும் வர்க்கத்தின் நலுனுக்குமானதாகும்!. தமிழ் மக்களின் உயிரை,உடமையை,மெல்ல அபகரிக்குமொரு அரசை சர்வ சாதரணமான ஒரு தலைமையின் வெளிப்பாடாக அல்லது விருப்பாகப் பார்ப்பதே நம்மில் பலருக்குள்ள அரசியலறிவாகும்.இது தமிழ் ஆளும் வர்க்கப் பித்தலாட்ட அரசில் கட்சிகளிடும் நிரம்ப உண்டு.
 
நாம் நம்மையே ஏமாற்றுகிறோம்:
 
நமது மக்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த அரசியலை எங்ஙனம் முறியடிப்பது?
 
மண்டை வலியெடுக்கத் துவண்டு போகிறோம்!எம்மை அநாதைகளாக்கிய புலிகளது வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிவதில் நம்மைத் தொலைக்கிறோம்.நமது அரசியல் வெறும் விவாதங்களாகவே விரிவுறுகிறது.நம்மிடம் எந்தக் கட்சிவடிவமும் இல்லை.
  
இந்த நிலையுள் இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட "இனவொடுக்கு முறை"யானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இதுவொரு திட்டமிடப்பட்ட பொருளாதாரப் பொறிமுறைகளைத் தாங்கி அந்தப் பொறிமுறைகளுக்குப் பங்கம் வராத ஆர்வங்களால் வழிநடாத்தப்படுகிறது.இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அது பற்பல வியூகத்துக்கூடாக எமது மக்களை ஒடுக்கிவருகிறது.இதன் முதற்கட்டத்தில் புலிகளை வளர்த்தவர்களே அவர்களை அழித்துத் தமிழ்பேசும் மக்களை அரசியல்ரீதியாக அநாதையாக்கியுள்ளனர்.இஃது, திட்டமிட்ட சதி.இதைத்தொடரும் புள்ளியில் புலியின் சர்வதேசப் பொறுப்பாளரென்ற கே.பி.மிக நேர்த்தியாக இயங்குகிறார்.அவர், தமிழ்மக்களைக் காட்டிக்கொடுத்துத் திட்டமிட்ட சதி மூலமாக அவர்களுக்குத் தலைமையே இல்லாதாக்கிய இந்தியாவோடிணைந்து நமது மக்களுக்கு மேலும் மொட்டையடிக்க, மக்களிடம் சேர்த்த பல இலட்சம் கோடி சொத்தே அவருக்கு உடந்தையாக இருக்கிறது.
 
என்றபோதும், இத்தகைய துரோகமும்,சிங்கள அரசின் இன அழிப்பானது அரை இராணுவ ஆட்சித் தன்மையிலான இலங்கையின் அரசபோக்கால் மிகவும் வேறொரு பாணியிலான"முகமூடி"யுத்தமாக வெடிக்கிறது.இது, தமிழ் மக்களின் வாழ்விடங்களைக் காவுகொண்டு அத்தகைய இடங்களைக் இராணுவக் குடியேற்றமாக்கித் தமிழ் பேசும் மக்களைத் தனது குடியேற்றத்துக்குரிய பொருளுற்பத்தியில் பயன்படுத்தி வருவதோடு தமது புறத் தேவைகளையும் நிறைவு செய்யுங் காரணிகளாக்கி வைத்திருக்கிற வியூகத்தை இயக்கி வருகிறது.வன்னி நிலப்பரப்பில் மக்களுடன் படைகளும் தொடர்ந்திருப்பார்கள் எனும் இலங்கை அரசினது கூற்றுக் குடிசார் உரிமைக்கும் சட்டத்துக்கும் புறம்பானது.இதையும் ஜனநாயகத்தின் பெயரால் தமிழ் அரசியல் விட்டேந்திகள் இன்றும் வரவேற்று மகுடி வாசிக்கின்றனர்!
 
நமது மக்கள் தம்மையும் தமது வாழ்வாதாரவுரிமைகளையும் வெறும் சலுகைகளுக்காக விட்டுவிட முடியாது.
 
நாம் இதுவரை இலட்சம் மக்களைப் பலி கொடுத்துவிட்டோம்.சிஞ்கள அரசும்,உலக ஒடுக்குமுறையாளர்களும் வன்னி இறுதியுத்தத்தில் பல பத்தாயிரம் மக்களைச் சில தினங்களுக்குள்ளேயே கொன்றழித்துள்ளனர்.இக்கொடுமையைக்கூட மறைத்தபடி நாம் நம்மையே ஏமாற்றியபடி மகிந்தாவுக்கு ஆலவட்டம் ஏந்துகிறோம்.கருணா மகிந்தாவின் செல்லப் பிராணியாகவே மாறி நமது மக்களுக்குக் குரைப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது.
 
இன்று, அடிமைகளிலும் கேவலமாக இலங்கைப் பாசிச அரசால் தமிழ்பேசும் மக்கள் நடாத்தப்படும்போது, அவர்களின் உரிமைபற்றி அவர்களுக்கே தெளிவில்லை.அவர்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளுக்குள்ளும் நாசியக் கொன்சன்ரேசன் விடுதிகளில் அடைத்தும் பழிவாங்கும் பாசிச இலங்கை அரசு,சிங்கள மக்களது மனங்களைச் சிதை;து அவர்களையும் இதற்கு உடந்தையாக்கி வருகிறது.எல்லாம் ஒரு தற்செயல் நிகழ்வாக இக்கொடிய அடக்கு முறையைத் தமிழ்பேசும் மக்கள் உணருகிறார்கள்.மிக நேர்த்தியாக ஒடுக்குமுறைக்குள்ளாகும் நமது மக்கள் தமது உரிமைகளை வெறும் சலுகைகளுக்காக விட்டுவிடுவதற்கான சமூக உளவியலை ஏற்படுத்தும் நரித்தனமான அரசியலை புலி எதிப்பாளர்களும்,இந்திய விசுவாசிகளும் செய்துவரும்போது இந்தக் கேடுகெட்ட புலம்பெயர் புலிப்பினாமிகளோ தமது செல்வத்தைக் குறித்து இயங்குகிறார்கள்.இவர்களே இன்று தமது தலைமையைக் காட்டிக்கொடுத்துவிட்டு அதன் தொடர்ச்சியை இந்தியாவோடிணைந்து பகிரங்கமாகத் தொடர்கிறார்கள்.
 
இந்தத் துரோகத்தை முறியடிக்க வேண்டுமானால் நமது கோரிக்கையானது இங்ஙனம் அமைந்தே தீரணும்:
 
(அ):தமிழ்பேசும் மக்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் கௌரவமாக வாழ்வதற்கு அவர்களுக்கான சுயநிர்ணயவுரிமை வழங்கப்பட்டாகவேண்டும்.
 
(ஆ):இதன் புள்ளியிலிருந்துதாம் ஒன்றுபட்ட இலங்கை-இன ஐக்கியம்,ஒருமைப்பாடு என்பதெல்லாம் சாத்தியமாகமுடியும்.
 
(இ):இலங்கையின் இராணுவம் உடனடியாகக் குறைக்கப்பட்டு அது தனது ஆதிகத்தைவிட்டு பழைய முகாங்களுக்குள் முடங்கவேண்டும்.
 
(ஈ):தற்காலிக இடைத்தங்கல் முகாமென்ற போர்வையில் மெல்ல அழித்தொழிக்கப்படும் மக்களை உடனடியாக அவர்களது பூர்வீக மண்ணில் குடியேற அனுமதி.
 
(உ):யுத்தக் கிரிமனலான மகிந்தா குடும்பத்தை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றி விசாரிக்க வேண்டும்.
 
(ஊ):தமிழ்பேசும் மக்களிடம் பகிரங்க மன்னிப்பை இலங்கை அரசு கோர வேண்டும்.
 
(எ):இதுவரையான யுத்தக் கொடுமைக்கும்,படுகொலைகளுக்கும் ,ஒரு இனத்தைத் திட்டமிட்டு அழித்ததுக்கும் தமிழ்பேசும் மக்கள் சமுதாயத்துக்கான பாரிய நஷ்ட ஈட்டை அவர்களது பூர்வீகம் இருக்கும்வரை செலுத்து.
 
புலிகளது அழிப்புக்குப் பின்பான இன்றைய இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.
 
இவர்களையெல்லாம் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை.இதைவிட்ட குறுகிய "தீர்வுகள்"எப்பவுமே இலங்கை மக்களுக்கு எந்த விடிவையும் தராது மீளவும் பாசிசவொடுக்குமுறைக்குள் இருத்தி மெல்லச் சாகடித்து, இலங்கையை அந்நிய வேட்டைக் காடாக்கும்.இதைத்தாம் இன்றுவரையான இலங்கை அரச அமைப்பு எமக்கு உணர்த்தி நிற்கிறது.எனவே மேலுள்ள நியாயமான கோரிக்கைகளை வெல்வதற்காகப் போராட்டமென்பது சிங்களத் தொழிலாள வர்க்கத்தின் தோழமையோடு நடாத்தப்பட்டேயாகவேண்டும்.
 
இப்போராட்டம் அடிப்படை மனிதவுரிமைக்கான போராட்டம்.
 
இது,மறுக்கப்படும் தறுவாயில் மீளவும் ஆயுதம் இலங்கை ஆளும் வர்க்கத்துக்கு எதிராகத் தூக்குவதைத்தவிர வேறொரு பாதை இல்லை.இது,உலக ஆளும் வர்க்கத்திலிருந்து உள்ளுர் ஆளும் வர்க்கம்வரை போராடியே தமது உரிமைகளைப்பெறவேண்டியிருப்பதென்பதை நேபாளத்திலிருந்து பாடமாகக் கொள்ளவேண்டியும் இருக்கிறது.
 
இத்தகைய போரை நடாத்துவதற்குக் கருணாவோ அன்றி எந்த டக்ளஸ்போன்ற நாய்களோ எமக்குத் தேவையில்லை.
 
இலங்கை இனவாத அரசால் இன்னலுக்குள்ளாகும் மக்கள் தமது கரங்களை நம்பிக்கொண்டு சிங்களப் பாட்டாளிகளோடு இணைவதற்கான முன் நிபந்தனைகளையாவது நாம் உருவாக்கித் தீரணும்.
 
இதுவே,கருணா,டக்ளஸ்,பிள்ளையான் போன்ற துரொகிகளைக்கடந்து, ஆனந்தசங்கரி போன்ற ஓடுகாலிகளையும் இத் துரோக அரசியலிலிருந்து ஓடவைக்கும்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
02.07.09