ஜனநாயகவேஷம் போட்டு குலைக்கும் கூட்டம், இனக்களையெடுப்பை புலிக் களையெடுப்பாக சித்தரிக்கின்றது. நாட்டில் அமைதி மற்றும் யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்கின்றது. இப்படி மகிந்தாவின் பாசிசத்துக்கு முன்னால், விளக்கு பிடித்துச் செல்லுகின்றனர். கேட்பாட்டு ரீதியாக, நடைமுறை ரீதியாக, இதை அவர்கள் செய்யத் தயாராகவே உள்ளனர். இவர்கள் வேறு யாருமில்லை, தமக்கு மட்டும் "ஜனநாயகம்" பேசும், "ஜனநாயக" மூதேவிகள்.  

புலிப் பாசிசம் இதே போன்றே 30 வருடமாக தமிழ் மக்கள் மத்தியில் களையெடுப்பை நடத்திய போது, நாங்கள் அதற்கு எதிராகப் போராடினோம். அரசு இன்று அதே போன்ற களையெடுப்பையே நடத்துகின்றது. அன்று எந்த அடிப்படையில் எதிர்த்தோமோ, அதே அடிப்படையில் இன்றும் நாம் மட்டும் எதிர்க்கிறோம். அன்று தேசியத்தின் பெயரில் புலிகள் இதைச் செய்தனர். இன்று "ஜனநாயக"த்தின் பெயரில் அரசு இதைச் செய்கின்றது. இப்படி பாசிசத்தின் இரு வேறு முகங்கள். அதே போல் "தேசியம், ஜனநாயகம்" என்று, பாசிசம் முன்னெடுக்கும் களையெடுப்பை, மனிதவிடுதலையாக காட்டி கொஞ்சும் பச்சோந்திகள் கூட்டம்.  

 

யுத்தமற்ற சூழல் நிலவ, இந்தக் களையெடுப்பு அவசியம் என்ற தர்க்கத்தை முன்வைத்து, இன்று "ஜனநாயகம்" பேசும் மூன்றாம்தரப் பேர்வழிகள் நியாயப்படுத்துகின்றனர். இப்படி அரசு சார்பாக இயங்கும் வானொலிகள், தொலைக்காட்சிகள், இந்த தர்க்கத்தை நியாயப்படுத்தி உசுப்பேற்றுகின்றனர். புலியெதிர்ப்பு பக்தகோடிகள் வேப்பிலையை கட்டிக்கொண்டு, அரோகரா போடுகின்றனர்.

 

களையெடுப்பவன் யார்? பேரினவாத அரச பாசிட்டுக்கள். களையெடுக்கப்படுவது யார்? உன் குழந்தையா! உன் தம்பி தங்கச்சியா! இல்லை. உனக்கென்ன கவலை. அதைப் பெற்று வளர்த்து அன்பு செலுத்திய சுற்றத்தாரின், அதைச் சுற்றியுள்ள மக்களின் கவலைகள், துன்பங்கள். அதை நியாயப்படுத்த நீ யார்? மக்களை நேசிக்கும் ஒரு மனிதனா? அதற்கென்று ஒரு அரசியலை நீ வைத்திருக்கின்றாயா? இல்லை. மகிந்தாவின் பாசிசத்தை நியாயப்படுத்தும் எடுபிடி. ஆக மிஞ்சினால் உனக்கு மட்டும் நீ ஜனநாயகம் பேசும், மூன்றாம் தரப் புறம்போக்குகள்.  

 

மக்கள் பற்றி அக்கறையற்ற, அவர்களின் விடிவிற்கான எந்த மாற்று அரசியலுமற்ற, மகிந்தாவின் பாசிசத்துக்கு குடைபிடிக்கும் உனக்கு அந்த மக்கள் பற்றி என்னதான் கவலை. இதுவோ மக்களின் கவலை. அவர்களின் துன்பம். நீயோ மகிந்தாவின் பாசிசத்துக்கு துதிபாடி. இந்த பாசிச வக்கிரத்தை நியாயப்படுத்துவதையே, "ஜனநாயகமாக" காட்டி சோரம் போனவன் தான் நீ. இதற்கு வெளியில் எந்த நேர்மையும், உன்னிடம் கிடையாது.

 

எதன் பெயரிலும் களையெடுப்பைச் செய்யும் உரிமை, இந்த சிங்கள பேரினவாத பாசிச அரசுக்கு கிடையாது. ஏனென்றால் நீ ஒரு இனவாதி. நீ ஒரு பாசிட். நீ மக்களைக் கூட்;டம் கூட்டமாக கொன்ற, குற்றவாளிக் கும்பல். இப்படி நீ நடத்தும் களையெடுப்பு, ஒரு இனத்துக்கு எதிரானது. போராடும் மனித ஆற்றலுக்கு எதிரானது. மனிதத்தன்மைக்கு எதிரானது.

 

(தமிழ் பேசும்) மக்களின் உரிமைகளை நீ அங்கீகரித்து இருந்தால், அதை நீ தமிழ் மக்களுக்கு வழங்கியிருந்தால், இவர்கள் உனக்கு எதிராக போராடச் சென்று இருக்க மாட்டார்கள். புலி என்ற பாசிச இயக்கமே, இதை மீறி உருவாகியிருக்க முடியாது. அப்படி உருவாகியிருந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருக்கவும் மாட்டார்கள். இங்கு நீ தான் பிரதான குற்றவாளி. இதில் மட்டுமல்ல, குற்றங்கள் இழைத்ததிலும் கூட நீதான் பிரதான குற்றவாளி. குற்றங்களின் அளவில், பண்பில், வடிவத்தில் என்று, எல்லாத்தளத்திலும்; பிரதானமான குற்றவாளி நீதான். இப்படிப்பட்ட நீ எப்படி களையெடுப்பை செய்யமுடியும். இந்த சமூக அமைப்பில், முதலில் உன்னைக் களையெடுக்க வேண்டியுள்ளது.    

    

இந்த நிலையில் இனவாதிகள் நடத்தும் களையெடுப்புக்கு மறுபக்கத்தில், தமிழ் மக்களின் உரிமைகளை நீ மறுத்து வருகின்றாய். அதைக் குழிதோண்டிப் புதைக்கும் பேரினவாத பாசிச வக்கிரத்தையே, நீ மக்களின் மேல் ஏவுகின்றாய்.

 

இந்த இனக் களையடுப்பு மூலம், என்னதான் நடக்கின்றது.

 

1. சிலர் உயிருடன் இல்லாதொழிக்கப்படுகின்றனர்.

 

2. சிலரை ஒரு தலைப்பட்சமான பேரினவாத நீதிமன்றத்தில் நிறுத்தி, நிரந்தரமாக சிறையில் தள்ளுகின்றான்.

 

3. பெரும்பான்மையானவர்களுக்கு போராடும் மனித ஆற்றலையும், போராடும் உணர்வையும் நலமடிக்கின்றான்.

 

இதைத்தான் இந்த பாசிச அரசு செய்கின்றது. புலிப் பாசிச பயங்கரவாதம் விதைத்த குறுகிய மனித சிந்தனை வட்டத்தை அறிவியல் பூர்வமாக விரிவுபடுத்தவில்லை. மாறாக சிங்களப் பேரினவாத பாசிசத்தின் குறுகிய வக்கிரத்தால், இவர்கள் நலமடிக்கப்படுகின்றனர். இப்படி இனத்தின் உயிர்த்துடிப்புள்ள மனிதக் கூறுகள் சிதைக்கப்படுகின்றது. இதைத்தான்  மனித விடுதலை என்றும், ஜனநாயகம் என்றும், மனித முகத்தில் பாசிசம் அறைந்து விடுகின்றது.

 

பி.இரயாகரன்
29.06.2009