07272021செ
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது? - அமரந்தாவின் கடிதம்

இலங்கை அரசிற்கு ஆதரவாக அய். நாவின் மனித உரிமைகள் அவையில் கியூபா, நிக்கரகுவா, பொலிவியா போன்ற நாடுகள் கையெழுத்திட்டதைக் கடுமையாகச் சாடி லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத்தைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அமரந்தா ஒரு கண்டனக் கடிதத்தை கியூபா தூதரகத்திற்கும் பல்வேறு லத்தீன் அமெரிக்கத் தலைவர்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். அந்தக் கடிதம் நாகார்ஜுனனின் வலைப்பதிவிலும் ‘கீற்று’ இணையத்திலும் வெளியாகியிருக்கிறது.

 

நமது கனவு நாடுகளான இந்த நாடுகள் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டிக்காமல் இலங்கை அரசிற்குத் துணைநின்றது மிகவும் வருத்தத்திற்குரியது. குறிப்பாக நிக்கிரகுவா சண்டினிஸ்டுகள் எண்பதுகளில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு (EPRLF) நேரடியாக உதவியதும் மறைந்த உமாகாந்தன், புலிகளால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் போன்ற தோழர்கள் நிக்கிரகுவாவிற்கே சென்று பயிற்சி பெற்றதும் ஞாபகத்திற்கு வருகிறது. அதே நாடு இப்போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நிற்கும் துயரை என்னவென்பது.

இனப்படுகொலை எனச் சொன்னேன். இலங்கை அரசு செய்வது இனப்படுகொலையா இல்லையா என மயிர்பிளக்கும் விவாதங்கள் நமது அறிவுஜீவிகள் மத்தியில் நடைபெறுவதை அறிவோம். அய்.நா. அவையின் சட்டவிதிகள் அது இதுவென்று இருதரப்பினருமே ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள். இனப்படுகொலை கிளிநொச்சியிலோ முள்ளிவாய்க்காலிலோ தொடங்கியதாக நான் சொல்லத் தயாரில்லை.

எண்பதுகளின் தொடக்கதிலிருந்தே அங்குமிங்குமாக அப்பாவித் தமிழர்களும் இஸ்லாமியர்களும் படையினரால் கொல்லப்பட்டார்கள். 1986ல் முதலாவது தமிழ்க் கிராமத்தின்மீது இலங்கை அரசின் குண்டுவீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதிலிருந்து இலங்கை அரசு இனப்படுகொலையை சந்தேகத்திற்கோ விவாதத்திற்கோ இடமின்றி தனது நிகழ்ச்சி நிரலாக்கிக்கொண்டதாக நான் கருதுகிறேன். அப்பாவி மக்களென திட்டவட்டமாகத் தெரிந்த பின்பும் தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டது இனப்படுகொலையில்லாமல் வேறேன்ன?

குமுதினிப் படகு காலத்திலிருந்து இரண்டு மாதங்களிற்கு முன்பு புதுமாத்தளனிலும் பொக்கணையிலும் மருத்தவமனை மீதும் நிவாரணப் பொருட்களைப் பெற நின்றிருந்த மக்கள் மீதும் குண்டுவீசியது வரை இலங்கையரசு திட்மிட்ட இனப்படுகொலையை நடத்தியிருக்கிறது. கொலைச் செயல்கள் மட்டுமல்லாமல் விசாரணையற்று சிறையில் வைத்திருத்தல், கடத்தல்கள், வாழிடங்களிலிருந்து துரத்தியடித்தல், முகாம்களில் சிறைவைத்திருத்தல், ஒரு இனத்திற்கான பிரத்தியோகமான பொலிஸ் விதிகள் போன்றவையும் இனப்படுகொலையின் கூறுகள் அல்லது தயாரிப்புகள் என்றே நான் கருதுகிறேன்.

ஆக அமரந்தாவின் கண்டனக் கடிதத்தில் நாம் முரண்பட எதுவுமேயிருந்திருக்காது, விடுதலைப் புலிகள் குறித்த மிகத் தவறான மதிப்பீடுகள் அந்தக் கடிதத்தில் வலிந்து சொருகப்படாமல் இருந்திருந்தால்.

குறிப்பாக புலிகள் இயக்கத்தையும் இலத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களையும் ஒப்பிட்டு அவர் தனது கடிதத்தில் எழுதுவது சரியாகாது. இது நரேந்திர மோடியை தாடி வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக சே குவேராவுடன் ஒப்பிட்டுப் பேசுவதைப் போன்ற விஷமம்.

மார்க்ஸியத்திலும் உலக விடுதலை இயக்கங்கள் குறித்தும் விரிவான படிப்பும் ஈடுபாடும் கொண்ட அமரந்தா ஒரு மார்க்ஸிய விரோத இயக்கத்திற்கும் அப்பட்டமான ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளர்களிற்கும் வக்காலத்து வாங்குவதும் அவர்களை இலத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் வெட்கத்திற்குரியது.

நாம் கடந்த காலத்தில் மிகுந்த நம்பிக்கையும் பெருமதிப்பும் வைத்திருந்த தமிழகத்துச் சிந்தனையாளர்களில் பலரை விடுதலைப் புலிகள் குறித்து அவர்கள் அண்மைக் காலங்களில் வைக்கும் கருத்துகள் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருப்பதாகவே நான் கருதுகிறேன். இவர்கள் கற்ற மார்க்ஸியமும் அமைப்பியல்வாதமும் நவீன சிந்தனை முறைமைகளும் வெறும் வெளிவேடம் மட்டும்தானா என்று நாம் சந்தேகப்படுவதற்கான எல்லா நியாயங்களையும் அவர்களே உருவாக்கி வைத்தார்கள். பேராசிரியர் தமிழவன், பா. செயப்பிரகாசம் போன்றவர்களின் நீண்ட வரிசையில் அமரந்தாவும் வந்து சேர்ந்திருக்கிறார். அவர் எழுதுகிறார்:

“தமிழீழ விடுதலைப்புலிகளை மிகச்சுலபமாக பயங்கரவாதிகள் என்று எவ்வாறு முடிவு செய்ய முடிந்தது? ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா? தங்கள் நியாயமான வாழ்வுரிமைக்காக இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் தீர்வுகாண பல்லாண்டுகளாக முயன்று தோற்றுப்போனது விடுதலைப்புலிகள் இயக்கம். இறுதியாக வேறு வழியின்றி கெரில்லாப்போர் முறையைத் தேர்ந்தெடுத்த விடுதலைப்புலிகள், சமீப காலம் வரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.”

விடுதலைப் புலிகள் இயக்கம் பல்லாண்டுகள் இலங்கை அரசுடன் நேர்மையான வழியில் போராடி வேறுவழியல்லாமல் கெரில்லா போராட்டத்தைத் தேர்ந்தெடுத்தது என்ற அமரந்தாவின் கூற்றை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? நோம் சோம்ஸ்கிக்குத் தெரிந்தளவிற்குக் கூட அமரந்தாவிற்கு ஈழப் போரட்ட வரலாறு குறித்துத் தெரியாது என்றொரு பகடியோடு இதைக் கடந்துவிடலாமா? அல்லது மொழிபெயர்ப்பில் ஏதாவது தவறிருக்குமா? அமரந்தா அப்படிச் சொல்லாதவரை இப்போது வெளியாகியிருக்கும் கடிதத்தின் அடிப்படையில்தான் பேச வேண்டியிருக்கும்.

எந்தவித அரசியல் கோட்பாடு அடிப்படையிலுமில்லாமல் அரசியல் முரண்களைக் கொலைகளால் தீர்ப்பதில் நம்பிக்கை வைத்தே தொடங்கப்பட்ட ஒரு இயக்கத்திற்கு, இதிகாசப் பிரதிகளில் காணக்கிடைப்பதுபோல கருவிலேயே கருவியுடன் பிறந்த ஒரு இயக்கத்திற்கு, தொடக்கம் முதலே முரட்டுத்தனமான சர்வாதிகாரியின் இரும்புப் பிடிக்குள்ளிருந்த ஒரு இயக்கத்திற்கு “நேர்மையான வழியில் தீர்வுகாண முயன்ற” இல்லாத ஒரு பக்கத்தை கட்டமைத்து ஏன் அதை கியூபாவரை அமரந்தா கொண்டு செல்லவேண்டும். வரலாற்றுத் தெளிவீனமா? அல்லது வரலாறு திட்டமிட்டுத் திரிக்கப்பட்டுள்ளதா? இந்த வரலாற்றை திரிக்கக்கூட முடியாதே. அது பூசணிக்காயை சோற்றில் புதைக்கும் முட்டாள்தனமல்லவா! இதைப் பொறுப்பின்மை என்றுதான் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகள் பயங்கரவாத இயக்கமல்ல என்பதற்கு அமரந்தா தரும் ஒரே சான்று “ஒரு பயங்கரவாத அமைப்பினால் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லாணா இழப்புகளைத் தாங்கி இடையறாது போராட இயலுமா?” என்பதுதான்.

ஒரு இயக்கம் 25 வருடங்கள் நின்று பிடிப்பதுதான் ஒரு இயக்கத்தை அரசியல்ரீதியாக மதிப்பிடுவதற்கான அடிப்படையா? இதுவொன்றுதான் அளவுகோல் என்றால் அல் - கொய்தா, என்.ஆர்.ஏ, இன்னும்பல ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க யுத்தபிரபுக்களின் இராணுவ அமைப்புகளும் கூடத்தான் பலவருடங்களாக நின்று பிடிக்கின்றன. ஆகவே அவைகளும் விடுதலை இயக்கங்களே என்கிறாரா அமரந்தா? அதுவென்ன இருபத்து அய்ந்து வருடக் கணக்கு? ஆர்.எஸ்.எஸ் எத்தனை வருடங்களாக நின்றுபிடிக்கிறது என்பதை அறியமாட்டாரா அமரந்தா. ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு இந்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்ற சாக்குப் போக்குகள் தேவையற்றவை. புலிகள் இயக்கத்திற்குக் கூடத்தான் அதன் ஒரு காலகட்டம் வரைக்கும் இந்திய அரசினதும் மேற்கு அய்ரோப்பிய அரசுகளினதும் ஆதரவுகள் கிடைத்தன. இந்திய அமைதிப் படையினருடன் புலிகள் சண்டையிட்டபோது இலங்கை அரசாங்கமே புலிகளிற்கு ஆயுதமும் நிதியும வழங்கியதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

“விடுதலைப்புலிகள், சமீப காலம் வரை இலங்கை இராணுவத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்ததை உலகறியும்.” என்ற அமரந்தாவின் கூற்றை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. நாவல்களிலும் திரைப்படங்களிலும் மட்டுமே யுத்தத்தையும் ரத்தத்தையும் அறிந்தவர்களின் இத்தகைய சாகசத்தின் மீதான விருப்புகளையும் வீர முழக்கங்களையும் அனுதாபத்துடன் அணுகுவோம். எந்தப் பக்கத்தில் விழுந்தாலும் அது சாவுதானே என்று மனம் பதறுவதற்கும் யுத்த எதிர்ப்புக் குரலை ஒலிப்பதற்கும் ஒரு அரசியல் முதிர்ச்சியும் சகமனிதர்கள் மீதான சகிப்புத்தன்மையும் தேவையாயிருக்கிறது.

இன்னொரு புறத்தில் ஈழத்தவர்களின் இணையத்தளங்களில் பிரபலமாக உலவும் “உள்ள வரவிட்டு அடிக்கிறது” போன்ற உள்குத்துகளையும் அவர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆகவே அமரந்தாவிற்கு ஒன்று சொல்லலாம்: புலிகள் இலங்கை இராணுவத்திற்குச் சிம்மசொப்பனமாய் இருந்தார்களோ இல்லையோ இஸ்லாமிய மக்களுக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் ஈழத்தில் மட்டுமல்லமால் புகலிட தேசங்களிலும் மாற்றுக்கருத்து, சனநாயம் குறித்துப் பேசியவர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் மொழிற்சங்கத் தலைவர்களிற்கும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வீட்டில் பிள்ளைகளை வைத்திருந்த தாய்மாருக்கும் சிம்மசொப்பனமாயிருந்தார்கள்.

இதை அமரந்தா இலங்கைவாழ் எந்த இஸ்லாமியரிடமும் இடதுசாரியிடமும் இன்று தடுப்புமுகாம்களில் சிக்கித் தவிக்கும் மக்களிடமும் அமரந்தாவின் நண்பர்களான எந்த ஈழத்துச் சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்தவர்களிடமும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் தமிழகத்துச் சிந்தனையாளர்களில் பலர் இப்போது ஒன்று சொல்கிறார்கள். சென்ற வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்கில் தோழர் தாமரை மகேந்திரனும் அதைச் சொன்னாராம். இன்றைய நிலையில் பழைய கதைகளைப் பேசி என்ன பிரயோசனம் எனக் கேட்டாராம். புலிகளை விமர்சிப்பதற்கு இது நேரமல்லை என்றவர்கள் மே பதினேழிற்குப் பிறகு ‘எனக்கு மனநிலை பிளந்துவிட்டது’, ‘என்னை அழவிடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியவாறு தாங்கள் இவ்வளவு நாளும் பேசிய அடாவடிகளுக்குப் பொறுப்பேற்காமல் நைசாக நழுவியும் விடுகிறார்கள்.

சரி தோழர்களே பழையகதை வேண்டாம். விட்டுவிடுவோம். மற்றைய இயக்கங்களைப் புலிகள் அழித்ததை விட்டுவிடுவோம். அனுராதபுரத்தில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சிறார்களைப் புலிகள் கத்தியால் துண்டுபோட்டதையும் மறந்துவிடுவோம். நீங்கள் உங்கள் சக எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் புலிகளால் வதைக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் மறந்துவிடச் சொல்கிறீர்கள், சரி மறந்துவிடுகிறோம். இஸ்லாமியர்களைத் துரத்தியதும் பள்ளிவாசல்களில் தொழுகையிலிருந்தவர்களைப் படுகொலை செய்ததும் கருணாதான், அதற்கும் புலிகளுக்கும் சம்மந்தமில்லை என்கிறீர்களா, சரி தலைவிதியே என்று சகித்துக்கொள்கிறோம். அதற்குப் பிறகும் பத்து வருடங்கள் புலிகள் இயக்கத்தின் உச்சப் பொறுப்பில் கருணா எப்படியிருந்தார் என்ற கேள்வியையும் கேட்காமலேயே விட்டு விடுகிறோம். விஜயானந்தன், அண்ணாமலை போன்ற தொழிற்சங்கவாதிகளைப் புலிகள் கொன்றதைப் பற்றியும் நாங்கள் பேசாமல் விடுகிறோம். புலிகள் வலதுசாரிகள், கலாச்சார அடிப்படைவாதிகள், சாதியொழிப்பில் அக்கறையற்றவர்கள், இந்துத்துவவாதிகள், மார்க்ஸிய விரோதிகள் போன்ற அரசியல் விமர்சனங்களை நாம் வைத்தால் அதைப் பேசுவதற்கு இது தருணமல்லவே என்றீர்கள். சரி பேசவேண்டாம். உங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்க வன்னிக் குழந்தைகள் புலிகளால் கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டுக் களங்களில் பலிகொடுக்கப்ப்பட்டதையும் பேசவேண்டாமா? சரி வேண்டாம். மனிதப் பலவீனங்களைப் புரிநதுகொள்கிறோம்.

ஆனால் ஒன்றேயொன்று குறித்து நீங்கள் பேசியே ஆகவேண்டும் தோழர்களே. இதுவொன்றும் பழைய கதை அல்ல. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யுத்தம் உக்கிரமடைந்து புலிகள் கிளிநொச்சியை இழந்த பின்பு அவர்கள் முல்லைதீவிற்குப் பின்வாங்கி இரண்டு இலட்சம் மக்களைப் பணயக்கைதிகளாய் மனிதக் கேடயங்களாய் வைத்திருந்ததிற்குப் பிறகும், புலிகளிடமிருந்து தப்பிவந்த தமிழ்மக்களைப் புலிகள் சுட்டுக்கொன்றதற்குப் பிறகுமா நீங்கள் புலிகளை விடுதலைப் போராளிகள் என்கிறீர்கள்? வீரர்கள் என்கிறீர்கள்?

இதுவொன்றும் பழைய கதையில்லை. புதிய கதைதான். நந்திக் கடலில் இன்னும் இரத்தம் காயவில்லை. பதில் சொல்லுங்கள் தோழர்களே!

எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா? பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா? மக்களை இலங்கை இராணுவம்தான் கொன்றது. ஆனால் மக்களை தப்பிச் செல்லவிடாமல் இராணுவத்தின் கொலை இலக்குகளாக நிறுத்தி வைத்திருந்த புலிகளிற்கு இந்த மனிதப் பேரழிவில் பங்கில்லையா? இந்தப் பாதகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் கடைசிவரை புலிகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்துவிட்டு இன்று தனது வலைப்பதிவில் வால்ப்பாறையின் வனப்பை ரசித்து எழுதுவதும் அடுத்த நிமிடம் அழுவதும் அடுத்த நிமிடம் அருவியின் எழிலை வியப்பதும் அதற்கடுத்த நிமிடமே அய்யோ நான் அழுகிறேனே என்றும் ‘அந்நியன்’ பட அம்பி மாதிரி மாறிமாறி தமிழ்நதி பினாத்துவது அருவருப்பாயிருக்கிறது. எத்தனை அருவியில் குளித்தாலும் தமிழ்நதி போன்றவர்களின் கையில் படிந்திருக்கும் இரத்தக்கறை போகவே போகாது. ஏனெனில் இவர்கள் தெரிந்தே தவறு செய்தார்கள். அந்தத் தவறை இன்றுவரை நியாயப்படுத்துகிறார்கள். உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.

புலிகளின் இந்தத் துரோகத்தனத்தையிட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் வெளியிட்ட - வெளியிடும் அறிக்கைகளை நீங்கள் படிப்பதேயில்லையா? அவர்கள் சொன்னால் நம்பிவிட முடியுமா என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் சண்டைக்கே வந்துவிட்டார். கடைசியில் “என்னங்க தோழர் ஜெயலலிதாவையே நம்புகிறீர்களாம் ஹியூமன் ரைட்ஸ் வோச்சின் பேச்சை நம்ப மாட்டீர்களா” எனக் கேட்டு அந்த தோழரின் சுயமரியாதையைப் புண்படுத்த வேண்டியதாகப் போய்விட்டது.

குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மக்களை இலங்கை அரசபடைகளிடமிருந்து மட்டுமல்லாமல் புலிகளிடமிருந்தும் காப்பாற்றவேண்டிய தேவை இருந்தது என்பதையும் தமிழ்மக்களின் நலன்களும் புலிகளின் நலன்களும் நீண்டகாலமாகவே வெவ்வேறாகவேயிருந்தன என்பதையும் கடந்த இருபது வருடங்களாகவே துப்பாக்கி முனையில் மக்கள் புலிகளால் அடக்கி வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் தமிழ் மக்கள் அரசால் மட்டுமல்ல, புலிகளாலும் ஒடுக்கப்பட்டார்கள் எனபதையும் கணக்கில் எடுக்காமலேயே அமரந்தாவின் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

இலத்தின் அமெரிக்க நட்புறவுக் கழகத்தின் அமரந்தாவிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்:

1. தனக்குச் சோறிட்ட, தனக்குத் துணிதந்த தனது சொந்த மக்களையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஒரு இயக்கத்தை, கடைசிவரை ஒபாமாவிடமும் சார்க்கோஸியிடமும் கெஞ்சிக்கொண்டிருந்த ஒரு இயக்கத்தை, ஒரு அப்பட்டமான மார்க்ஸிய விரோத இயக்கத்தை, தனது பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே எனப் பகிரங்கமாக அறிவித்து வந்த இயக்கத்தை, கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்த ஒரு இயக்கத்தை, தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடக்கம் சகல அரசியல் இயக்கங்களையும் தடைசெய்திருந்த ஒரு இயக்கத்தை, ஏகபிரதிநிதித்துவம் என்ற பாஸிச நிலைப்பாட்டை வரித்திருந்த ஒரு இயக்கத்தை லத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேச உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்?

2. நீண்ட காலங்களாகவே விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டு சிறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட பல தமிழகத்துத் தோழர்களை அறிவோம். கருத்துரீதியாக முரண் இருப்பின்கூட எந்தப் பலனும் எதிர்பாராமல் அவர்கள் செய்த தியாகங்கள் மதிப்பிற்குரியவை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. உண்மையாகவே உங்கள் கடிதத்தில் உள்ளதுபோல நீங்கள் புலிகளை விடுதலைப் போராளிகளாகக் கருதும் பட்சத்தில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக அல்லவா இயங்கியிருக்க வேண்டும். கியூபாவரை நட்புறவு வைத்திருக்கும் நீங்கள் வெறும் முப்பது கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்த புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஏன் இயங்கவில்லை? உங்கள் திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது?

கண்டிப்பாக அது மார்க்ஸியமாக இருக்க முடியாது

http://www.shobasakthi.com/?p=422


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்