தில்லை நடராசர் கோயில் தீட்சிதருக்குச் சொந்தமானதல்ல, கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிப்ரவரி 2009 இல் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான உடனே கோயிலுக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார்.

கோயிலுக்குள் உண்டியல் நுழைந்த்து. பின்னாலேயே சு.சாமியும் நுழைந்தார். அப்புறம் உயர்நீதிமன்ற முட்டை வீச்சு, போலீசு நடத்திய கலவரம்… இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதை.

 

நந்தனை மறைத்தது நந்தி - நீதிமன்ற  தீர்ப்பினை மறிக்குது தீட்சிதன் தொந்தி !!

 

தெரியாத கதையும் இருக்கிறது. நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதும், உண்டியல் வைக்கப்பட்டதும் நடந்த்தே தவிர, நீதிமன்றத் தீர்ப்பின்படி நிர்வாக அதிகாரியிடம் கோயிலின் நிர்வாகத்தை, இதுவரை தீட்சிதர்கள் ஒப்படைக்கவில்லை. அதாவது, கோயிலின் நகை நட்டுகள், பண்ட பாத்திரங்கள், சொத்து ஆவணங்கள் முதலானவற்றை, அதாவது சாவிக்கொத்தை தீட்சிதர்கள் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை. தீட்சிதர்களின் யோக்கியதை தெரிந்துதான் “தீர்ப்பை அமல்படுத்த தீட்சிதர்கள் ஒத்துழைக்கவேண்டும்” என்று நீதிபதி பானுமதி தனது தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்.

இருந்தும் அவாள் ஒத்துழைக்கவில்லை. இவாள் (அரசாங்கம்) நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசை வைத்து நீதிமன்ற உத்தரவை அறநிலையத்துறை அமல் படுத்தியிருக்க முடியும். அல்லது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். கோர்ட் உத்தரவு வந்தவுடனே புல்டோசரை வைத்து இடிப்பதெல்லாம், தரைக்கடை வியாபாரிகள் போன்ற சாமானியர்களுக்கு கிடைக்கும் நீதி. தீட்சிதர்கள் சாமானியர்களா என்ன? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துமாறு மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எவ்வளவோ “தைரியம்” சொல்லிப்பார்த்தார்கள். நடக்கவில்லை.

தற்போது தில்லைக் கோயிலில் ஆனித்திருமஞ்சனம் என்ற திருவிழா. அதற்கு “தீட்சிதர் கட்டுப்பாட்டில் இருக்கும் தில்லைக் கோயில்” என்று கொட்டை எழுத்தில் போட்டு அழைப்பிதழ் அடித்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். அப்பறமும் அரசாங்கத்துக்கு சொரணை வரவில்லை. ஆனால், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தீட்சிதர்கள் செய்துள்ள மேல்முறையீடு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் இடைக்காலத்தடை வாங்கிவிட்டால், மறுபடியும் வழக்கை ஆண்டுக்கணக்கில் ஆறப்போடலாம் என்பது தீட்சிதர்கள் திட்டம். இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்தது இதுதான்.

இனிமேலும் இதனை அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் நேற்று (23.06.09)சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. “புனிதமான சட்டமன்றத்தின் வாசலில் மக்கள் சத்தம்

போடக்கூடாது, உள்ளே மக்கள் பிரதிநிதிகள்தான் சவுண்டு கொடுக்கலாம்” என்பதனால், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து எல்லோரையும் கைது செய்த்து போலீசு.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கோரிக்கை மிகவும் எளிமையானது. கோர்ட், வழக்கு, வாய்தாவெல்லாம் வேண்டாம். அரசு ஒரு சிறப்பு ஆணை பிறப்பித்து எல்லாக் கோயிலையும் போலவே தில்லைக் கோயிலையும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் எடுக்க முடியும். எடுக்க வேண்டும். எடுத்த மறுகணமே, நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து, தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும் தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படாத தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவேண்டும்.

இவை மூன்றும்தான் கோரிக்கைகள். சட்டமன்றம் நடக்கிறது. இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு வர இருக்கிறது. கச்சத்தீவை சிங்கள அரசிடமிருந்து மீட்கும் சாகசத்தை செய்வதற்கு ஒரு முன்னோட்டமாக, தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்குமா திமுக அரசு? பார்ப்போம்.

பின்குறிப்பு:

சென்ற ஆண்டு சிற்றம்பல மேடையில் தமிழ் பாடச்சென்ற ஆறுமுகசாமியையும் உடன் சென்ற எமது தோழர்களையும் தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரையே தாக்கிய தீட்சிதர்களின் ‘வீர’ சாகசத்தை இந்த உலகமே தொலைக்காட்சியில் பார்த்தது. தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டப் போராடியவர்கள் மீது தெற்குவாயிலில் போலீசு நடத்திய தடியடியையும் நாடு பார்த்தது. மாலை சம்பவத்துக்காக 35 தோழர்கள் மீதும் காலை சம்பவத்துக்காக 11 தீட்சிதர்கள் மீதும் வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். சிதம்பரம் கிளைச்சிறையில் வைக்கப்பட்ட தீட்சிதர்கள் தனியே சமைத்து சாப்பிட அடுப்பும் அரிசி பருப்பும் வழங்கியது சிறை நிர்வாகம். இதெல்லாம் பழைய கதை.

புதுக்கதை என்னவென்றால், மாலை தடியடி வாங்கிய தோழர்கள் மீதான வழக்கில் சுறுசுறுப்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது போலீசு. காலையில் போலீசு சூப்பரெண்டை தீட்சிதர்கள் அடித்தார்களே, அந்த வழக்கில் மட்டும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நம்ப முடிகிறதா?

அரசியல் சட்டம் என்ற ஒரு கருமாந்திரம் இருப்பதால் வேறு வழியின்றி தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்துவிட்டார்கள். நீதி என்று வரும்போது.. மனு நீதிதான்.

தமிழ் நாட்டில் தமிழர்கள் கட்டிய கோயில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்பதும், அங்கே தமிழர்களுக்கு தமிழில் வழிபாடு செய்யும் உரிமை வேண்டும என்பதும்தான் பிரச்சினை. இந்த “அடாத” கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இப்படியொரு விடாத போராட்டம்!

தொடர்புடைய பதிவுகள்

உண்டியலை எடு! தில்லை தீட்சிதர்கள் ஊர்த்வ தாண்டவம்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

 

http://www.vinavu.com/2009/06/24/thillai3/