நாடெங்கும் கல்விக்கொள்ளை பற்றி நீட்டிமுழக்கி பேசப்பட்டு வருகிறது. கல்விக்கட்டணம் என்ற பெயரில் பல லட்சங்களை மாணவர்களிடமிருந்து சுருட்டிக்கொள்கின்றன தனியார் கல்லூரிகள். நாட்டின் பெரும்பான்மையினர் ஏழைகளாக இருப்பதால் உயர்கல்வி என்பது அவர்களுக்கு எட்டாததாக இருக்கிறது.
அன்று பெரும்பான்மையினராக இருந்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஜாதியின் பெயரால் கல்வியை மறுத்தது மனுநீதி. இன்றும் பெரும்பான்மையினராக இருக்கும் உழைக்கும் வர்க்கத்திற்கு பணத்தின் பெயரால் கல்வியை மறுக்கிறது புதிய மனுநீதியான முதலாளித்துவம்.. உயர்கல்வியை தனியார் மயமாக்கியதன் பின்னணி பற்றி நுணுகினால், பொதுவுடமை கண்ணாடி போட்டுக்கொண்டு எல்லாவற்றையும் பார்க்காதீர்கள் என்று கூறும் புத்திசாலிகள், அறிவுஜீவிகள்; சாராயக்கடை நடத்தமுடியும் அரசால் கல்விநிலையங்களை நடத்தமுடியாதது ஏன்? என்பதற்கு பதில் சொல்லமுடியாமல் தந்திரமாக நழுவிக்கொள்கின்றனர்.. உயர்கல்வி கற்பது ஒன்றும் அறிவுக்கண் திறப்பதற்க்காக அல்ல. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தேவையான மூளை உழைப்பாளிகளை உருவாக்கிக்கொடுக்கும் செயல்தான். அதையும் உங்கள் செலவிலேயே கற்றுக்கொண்டுவந்து எங்களுக்கு சேவை செய்து சம்பளம் எனும் பெயரில் தூக்கிப்போடும் எலும்புத்துண்டை கவ்விக்கொண்டு சக்கையாய் வெளியேறுங்கள் என்பதற்குப்பெயர்தான் உயர்கல்வி.
அரசு தான் கல்விக்கடன் கொடுக்கின்றனவே, ஏழைகள் அதன் மூலம் பயன் பெறலாமே? ஒவ்வொரு ஆண்டும் தனியார் கல்லூரிகளின் நிரப்பப்படாத இடங்கள் கூடிக்கொண்டே போவதால் கல்வி வள்ளல்களான முன்னாள் சாராய வியாபாரிகள், அரசியல்வாதிகளின் கைத்தடிகள் போன்றோர் நலிவுறுவதால் அவர்களை காப்பதற்குத்தான் அரசு நாங்கள் கடன் தருகிறோம் அதை அவர்களிடம் கட்டிவிட்டு நீங்கள் பட்டினி கிடந்து சாகுங்கள் என்கிறது. ஹோட்டல்களில் தட்டு கழுகுபவரை கேளுங்கள் டிகிரி முடித்திருக்கிறேன் என்பார். ரயில்வேயில் கலாசி வேலைக்கு விண்ணப்பித்தோரில் அதிகம் பேர் பொறியாளர்களாம். சுலபத்தில் கடன் கிடைப்பதில்லை என்பது ஒருபுறம், கடன் கிடைத்து படித்து முடித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது மறுபுறம். ஆனால் கடன் மட்டும் நம் முதுகுகளில். இப்படி இருக்கும் இந்நிலைதான் குழந்தை தொழிலாளர்களுக்கான உற்பத்திமையமாக இருக்கிறது.
லகரங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்துக் களைப்பதைப்போல் தங்களை தாங்களே கருதிக்கொள்ளும் மனிதர்கள் முன் இந்தப்படங்களை வைக்கிறேன். உங்களுக்கு லகரங்களில் சம்பளம் தரும் அமைப்புதான் கோடிக்கணக்கான குழந்தை தொழிலாளர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை உணரும் துணிவிருக்கிறதா உங்களுக்கு?
http://senkodi.wordpress.com/2009/06/20/குழந்தை-தொழிலாளர்களின்-உ/