இலங்கை வாழ் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர்வதன் மூலம் தான், அனைத்து பிரிவு மக்களும் தத்தம் உரிமைகளைப் பெறமுடியும். இது மட்டும்தான், மக்கள் தம் உரிமைகளைப் பெறவுள்ள ஒரேயொரு மாற்றுவழி. தனித்தனியாக பிரிந்து நின்றும், முரண்பட்டும் இதைப் பெறமுடியாது.

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் தம் தப்பபிப்பிராயங்களைக் களைந்து, தம் பொதுஎதிரியை எதிர்க்க கூடிய ஒரு கூட்டு அரசியல் பலத்தைப் பெறுவதே, இன்றைய அரசியல் தெரிவாக எம் முன்னுள்ளது. இந்த வகையில், எமது அனைத்து அரசியல் செயல்களை இன்று ஒருங்கிணைத்தல் அவசியமாகும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைதல், அதற்கான அரசியல் முன்முயற்சியை எடுத்தல் அவசியமானது. அதற்காக அனைத்து தடைகளையும் கடத்தல் அவசியமாகும்.

 

இந்த செயல் சிங்கள இனவாத அரசுடனல்ல. சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒன்றிணைவதாகும். பலர் இன்று கிடைப்பதைப் பெறுவது பற்றியும், சிங்கள அரசுடன் சேர்ந்து நிற்பது பற்றியும், புலியின் அழிவுடன் சேர்ந்து இதையே ஓப்பாரியாக முன் வைக்கின்றனர். இதற்கு மாறாக நாங்கள் இலங்கையில் வாழும் அனைத்து ஓடுக்கப்பட்ட மக்களுடனும் ஒன்றிணைந்து, உரிமைகளைப் பெறுவது பற்றியே இங்கு பேசுகின்றோம். இந்த அரசியற்பணி என்பது கடினமானது. இதைவிட நேர்மையானதும், சரியானதும், இலகுவானதுமான வேறு குறுக்கு வழி கிடையாது. கடந்தகால இனவாத வக்கிரம் ஏற்படுத்திய இனப் பிளவும், மனித அவலமும் தாண்டி எமது சூழல் சார்ந்து பல தடைகளையும் நாம் கடந்தாக வேண்டும்.   

  

இதைக் கோரும், உணரும் எம்முன் தடையாக இருப்பது

 

1. நாம் தமிழ் மொழியில் மட்டும் இதைப் பேசுவது

 

2. புலம்பெயர் நாட்டில் நாம் இருப்பது (மண்ணில் உள்ளவர்களுக்கு இது தடையில்லை)

 

3. கடந்தகால இனவாத பிளவுகள் ஏற்படுத்திய இடைவெளியும், அது சார்ந்த சிந்தனை ஓட்டங்களும்

 

4. எமது கருத்துக்கள், ஒரு சிறு பகுதியினருடன் மட்டும் முடங்கிக்கிடப்பது

 

இப்படி உள்ள தடைகளையும் நாம் கடந்தாக வேண்டும். இந்த எல்லையை கடக்க, சாத்தியமான எல்லா வழிகளையும் கண்டறிய வேண்டும். இது எம் அனைவரின் முன்னுள்ள முக்கியமான அரசியல் பணியாகும். 

 

தமிழ்மக்களுக்கு எதிரான பேரினவாத அரசை எதிர்க்க, இந்த அரசுக்கு எதிரான  அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும். இந்த வகையில் இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் சேர்ந்து போராடுவது என்பது, எம் முன்னுள்ள அடிப்படையான மையமான அரசியல் விடையமாகும். தமிழ்மக்களை அணிதிரட்டுவது என்பது, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடனான அரசியல் கூட்டுறவை உள்ளடக்கியதே. ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு எதிராகவல்ல. இதை எமது தேசியம் கடந்தகாலத்தில் மறுத்து வந்ததன் மூலம், எதிரியை வெல்ல வைத்தார்கள். 

 

தமிழ்பேசும் மக்கள் மேலான இனவொடுக்குமுறைகளை களைய, இலங்கையில் வாழும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெறுவதும், அந்த மக்களின் உரிமைக்காக நாமும் சேர்ந்து போராடுவதும் அவசியமாகும். இதன் மூலம் தான் ஒடுக்கப்பட்ட மக்கள், தமது விடுதலையை அடைய முடியும். 

 

கடந்தகால குறுந்தேசிய இனவாத அரசியலோ, இதை மறுத்து வந்தது. இதைக் கோரியவர்களை கொன்றழித்தது. வெறும் புலிகள் மட்டுமல்ல, அனைத்து பெரிய இனவாத அமைப்புகளும் இதையே செய்தது.

 

சிங்கள இனவாத அரசையும் அதன் அரச இயந்திரத்தையும் எதிரியாக பார்ப்பதற்கு பதில், சிங்கள மக்களையும் எதிரியாக சித்தரித்ததுடன், அவர்களை எதிரியாகவே கையாண்டனர்.  இதன் மூலம் தமிழ்மக்களை, சிங்கள மக்களுக்கு எதிரான இனவெறி உணர்வுக்குள் கொண்டு வந்தனர். அப்பாவி சிங்கள மக்களை தேசியத்தின் பெயரில் கொன்றனர். ஒடுக்கப்பட்ட தேசியம், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு எதிரானதாக மாறியது. ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை, தமிழ்தேசியத்துக்கு எதிராக நிறுத்தி, பேரினவாதத்துக்கு உதவினர். 

 

இப்படி இலங்கை அரசால் ஒடுக்கப்பட்ட மக்கள், சக இன ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க முடியாத வண்ணம், தமிழினவாதம் அவர்களை எதிரியாக்கியது.

 

சிங்கள அரசு சிங்கள மக்களை சிங்கள இனவாதிகளாக மாற்றியதை விடவும், தமிழ் குறுந்தேசியம் அவர்களை தம் பொதுஎதிரியாக மாற்றியது என்பதே, பொது உண்மையாகும்.

 

இன்று தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறையாகட்டும், இலங்கையில் எந்த சமூகப்பிரிவு மீதான ஒடுக்குமுறையாகட்டும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடுவது அவசியமானது. உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை நாம் பெறுவதும், அவர்களுக்காக நாம் போராடுவதும் அவசியமாகும். கடந்தகாலத்தில் ஆதிக்கம் வகித்த எம் தமிழ் வலதுசாரிய பாசிச அரசியல், இதை நிராகரித்து வந்துள்ளது.

 

இந்த வகையில் இன்று நாம் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்க வேண்டும். அவர்கள் தான் பரஸ்பரம் ஒடுக்குமுறையை புரிந்து, உண்மையாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எம்முடன் நிற்பார்கள். இந்த வகையில் எமது சிந்தனைகள், செயல் முறைகள் அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டு, அது சார்ந்த செயலாக இருக்க வேண்டும்.


 
இன்று, தமிழ் ஒட்டுக் குழுக்கள் பேரினவாத சிங்கள அரச பாசிசத்தை சார்ந்து நின்று கொக்கரிக்கின்றது. இதன் மூலம் தான் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று, தம் சொந்த கைக் கூலித்தனத்துக்கு ஏற்ப கூறுகின்;றனர். புலியைக் காட்டி, பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்கின்றனர். இந்த பழமொழிக்கு ஏற்ப, தம்மைப்போல் தமிழினத்தையே அரசின் பின் நக்கக் கோருகின்றனர். 

 

நாங்கள் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று, இவர்களையும் சேர்த்து  எதிர்க்க வேண்டியுள்ளது. எஞ்சிய புலித்தேசியம் சிங்களவனைக் கொல் என்றும், 'சிங்களவன்" என்று அஃதிணையிலும் இனவாதம் கக்கி, மகிந்தாவின் பாசிசத்துக்கு உதவுகின்றனர். இதற்கு மாறாக, இலங்கை அரசுக்கு எதிரான சிங்கள மக்களைச் சார்ந்து, மகிந்தாவின் பாசிசத்தை எதிர்த்து போராட்டத்தை எதிர்கொள்ளக் கோருகின்றோம். 

 

இன்று சமூகத்தின் செயல் சார்ந்த அனைத்தும், உடனடியாக ஒடுக்கப்பட்ட இலங்கை மக்களைச் சார்ந்து நின்று செயற்படுவது அவசியம். ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஐக்கியத்தை கட்டியெழுப்பவும், ஒன்றுபட்டு பரஸ்பரம் போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கான செயற்பாடே இன்று முதன்மையானதும் அவசியமானதுமாகும். ஒடுக்கப்பட்ட இன பிரிவுகளுக்கிடையேயான இன ஐக்கியத்தின் ஊடாக, ஒடுக்கப்பட்ட மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க போராடுவதே சரியான அரசியல் திசைவழியாகும்.

 

பி.இரயாகரன்

16.06.2009