Language Selection

போராட்டம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நேற்று மாலை பெருநகர ரயில் வண்டியில் ஒரு திரைப்படம் பார்த்து விட்டு நானும், அம்மாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். தீடீரென ஒரு கைத்தட்டல் ஒலி.. நிமிர்ந்து பார்த்தால் ஒரு திருநங்கை கைத்தட்டியவாறு நின்று கொண்டிருந்தாள்.

பின்னர், சீட்டில் சரிந்து நின்றவாறு தனக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு முப்பத்தைந்து வயதிருக்கலாம் அல்லது வயதுக்கு மீறிய மூப்பாக இருக்கலாம். அழுக்குப் பிடித்த சேலை… அவலட்சணமான முகம்… நெற்றியில் விழும் ஒழுங்கற்ற சிகை… உண்மையைச் சொன்னால், பரிதாபமாகவும், அதே வேளை அசூயையாகவும் இருந்தது.

ரயில் கடகடத்துக் கொண்டிருந்தது. வேறெங்கோ தலை திருப்பி நின்றிருந்த அத்திருநங்கை சட்டென திரும்பினாள். கண்களில் கண்ணீர் கசிந்து கொண்டிருந்தது. ஒரு கணம் நான் அதிர்ச்சியடைந்தேன். அவள் எதை நினைத்துக் கலங்கக் கூடும்? பிச்சையெடுத்து வாழ நேர்ந்த அவலம் குறித்தா? பிறவியில் நேர்ந்த ஊனம் குறித்தா? இனி ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத குடும்பத்தினரின் நினைவு குறித்தா? அந்தக் கண்ணீரில்… ஒரு கணம் பீதியூட்டும் அவளது முகத்தில்… சுயபச்சாதாபமும், சீரழிவும் கூடி நின்றன. நான் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கினேன்.

மறுபடியும் கைத்தட்டல்… அவள் இப்பொழுது கையேந்தியவாறு முன்நகரத் தொடங்கினாள். பலரும் அவளை ஏறிட்டுப் பார்க்காமலிருக்க பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒரு ஐந்து ரூபாயை அவளது விரல்கள் பட்டு விடக் கூடாதென்ற எச்சரிக்கையோடு அவள் கையில் போட்டேன். எனது இருக்கையிலிருந்து இரு இருக்கைகள் தள்ளி, தனது குடும்பத்தினரோடு இருந்த ஒருவன் சிரித்தவாறு, தீடீரென அவளைப் போலவே கைதட்டினான். அவனது குடும்பப் பெண்கள் சிரிக்கத் தொடங்கினார்கள். திருநங்கை திரும்பிப் பார்த்தாள். நேரே அவனிடம் சென்று ஏதோ காரசாரமாக சொன்னவாறு அவனது முகத்துக்கு நேராக கைதட்டினாள். அவன் பதிலுக்கு ஏதோ ஏளனமாக சொன்னான். மயிலாப்பூர் ஸ்டேஷன் நெருங்கியது.

அவனைப் பார்த்து ஏதோ வசைபாடியவாறு வாசலை நோக்கி விரைந்தாள். சிரித்து கெக்கலி காட்டி கொண்டிருந்த அவனது முகம் இருளத் தொடங்கியது. “இதுக்கு மேல ஏதாவது பேசுன, அடிதான்!”என விரல் காட்டி எச்சரித்தான். என்னை கடந்து சென்ற திருநங்கை, வாசலருகே நின்று சற்று உரக்கவே சொன்னாள். “போடா பொட்டை!”கோபம் கொப்பளிக்க அவன் வாசலை நோக்கி விரைந்தான். நான் தலை திருப்பிப் பார்த்தேன். கண்ணிமைக்கும் பொழுதில் அவன், அத்திருநங்கையை தாக்கி ரயிலிருந்து பிளாட்பாரத்தில் தள்ளினான். விருட்டெனத் திரும்பி தனது இருக்கையை நோக்கி விரைந்தான்.

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு வன்முறை நடந்து முடிந்து விட்டிருந்தது. “ஏய், ஹலோ, இது என்ன? அவளை ஏன் அடித்தீர்கள்? உங்களால் பிச்சை போட முடியாதென்றால், சும்மா இருக்க வேண்டியதுதானே, எதற்காக கேலி செய்கிறீர்கள்?” என இருக்கையிலிருந்து எழுந்து கத்தினேன். அவன் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீ உட்கார், அவள் தண்ணியடித்திருக்கிறாள்” என்றவாறு சங்கடத்தோடு இருக்கையில் நெளியத் துவங்கினான். எனது அம்மா என்னை “உட்கார், உட்கார்” என கைகாட்டிக் கொண்டிருந்தாள். அதற்குள் உள்ளே வந்த திருநங்கை கோபத்தோடு அவனை நோக்கிக் கத்தத் துவங்கினாள். என்னிடம் தனது சிராய்த்த முழங்கையைக் காட்டி முறையிட்டாள். நான் கோபத்தில் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன். “நீ முதலில் இங்கிருந்து போம்மா, இல்லையென்றால் நீ மேலும்தான் அடிபடுவாய்!”என்றேன். அவள் அங்கிருந்து நகர்ந்தாள். நான் இருக்கையில் அமர்ந்தேன். என்னை முறைத்துப் பார்த்த அவன், ஜன்னல் பக்கம் தலையை திருப்பிக் கொண்டான்.அவனது குடும்பப் பெண்கள் இப்பொழுது சிரிக்கவில்லை.

ரயில் நிலையத்தை நெருங்கியது. அம்மா என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் எதுவுமே நடவாதது போல அமைதியாக இருந்தார்கள். அந்த அமைதியை விடவும் அவள் அசிங்கமானவளில்லை எனத் தோன்றியது.

....

பி.கு: நேற்றிலிருந்து வித்யாவின் எழுத்துக்கள் நினைவில் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

http://porattamtn.wordpress.com/