ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த 1977, வெடித்த 1983 காலகட்டத்தைவிட மிகவும் மோசமான நிலையில், ஈடு செய்ய முடியாத இழப்புகளுடன் தமிழ்மக்கள் இன்று (கை)விடப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற சொகுசுகளுக்காக தமிழ்மக்களை விற்ற தமிழர்விடுதலைக்கூட்டணி, இந்தியாவுக்குச் சோரம் போன ரெலோ தலைமை, தொடர்ந்த ஈ.பி.ஆர்.எல் எவ் தலைமை, ஈ.என்.டி.எல்.எவ் தலைமை, இலங்கை அரசுக்கு சோரம் போன புளொட் தலைமை, ஈ.பி.டி.பி தலைமை, ரி.எம்.வி.பி தலைமை, புலிகளைச் சரணடைந்த ஈரோஸ் தலைமை, யாரோ ஒரு தரப்பினரிடம் சரணடைய முயற்சித்த/ சரணடைந்த புலித் தலைமை….. என்று தமிழ்மக்களின் இன்றைய அவலத்துக்கு அனைத்துத் தலைமைகளும் காரணமாயின. இதில் புலிகள் மீது மட்டும் குற்றத்தைச் சுமத்திவிட்டு மற்றையவர்கள் தப்பிவிட முடியாது.
ஆனால், விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஏமாற்றப்படுவது தெரியாமல், இந்தத் தலைமகளை நம்பி தமது சொந்த சுகங்களைத் தூக்கி எறிந்து போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்கள் தியாகமும், வீரமும், சமூகப் பொறுப்பும் கொண்ட போராளிகளே. ரெலோ தொடங்கி புலிகள் வரை எல்லா இயக்கங்களிலும் இருந்த இவர்களின் அர்ப்பணிப்புக்கும், பங்களிப்புக்கும் முன்னால் தொடர்ந்து எழுத்தோடு நிறுத்திவிட்டுத் தூங்கிவிடும் நான் என்னைத் வெறும் தூசாக உணர்ந்து கூசிக் குறுகுகிறேன். இதுவரை மரணமடைந்த போராளிகள் தவிர, சிறையில் வதைபடுகின்ற போராளிகள், அங்கவீனர்களாகிப் போன போராளிகள், சராசரி வாழ்வை இழந்து நடைபிணமாய் திரியும் போராளிகள், மனச்சிதைவடைந்துள்ள போராளிகள் என்று…. இவர்களைச் சந்திக்கும்போதும், கேள்விப்படும்போதும், பார்க்கும்போதும் குற்றவுணர்வு என்னைக் கொத்திக் குதறுகிறது. என் மீதே எனக்குக் கோபம் வருகிறது.
போராளிகளினதும், பொதுமக்களினதும் அழிவிலும்/ இழப்பிலும் வாழ்ந்து கொண்டிருக்கும்/ வாழ்ந்துவிட்டுப் போய்விட்ட தலைமைகள் மீதும் கோபம் வருகிறது.
இது குறித்த எந்த பொறுப்பும் ஏற்க மறுப்பது மட்டுமல்லாமல், போராளிகளையும், மக்களையும் கறிக்கு கருவேப்பிலை போல பாவித்துவிட்டு, தலைமையை சத்யசாயிபாபாவாக்கி, வெறும் கையில் தங்கச்சங்கிலி வரும் என்று வித்தை காட்டிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த சாவுவியாபாரிகள் மீது கோபம் வருகிறது.
30 வருடங்களுக்கு மேலாக அனுபவித்த துன்பங்களுக்கும், இழப்புகளுக்கும் இன்று கிடைத்திருக்கும் பதில் என்ன? இன்னும் கொடுமையான துன்பங்களும், இழப்புகளுமே. இவற்றுக்கு அடிப்படைக் காரணமான / இயக்கங்களின் தோற்றத்துக்கு வழிவகுத்த / தமிழ்மக்களிடம் ஆயுதத்தைத் திணித்த சிங்கள இனவாத அரசோ ஒரு இனத்தைச் சின்னாபின்னமாக்கி சிதறடித்த தனது வெற்றியை தேசியத் திருநாளாகக் கொண்டாடுகிறது.
இந்த வெற்றிக்குக் கைகொடுத்தவர்கள் யார்? ஐ.நா.வா? உலக வங்கியா? இந்தியாவும், சீனாவும், பாகிஸ்தானுமா? நோர்வேயும், அமெரிக்காவுமா? அல்லது சிறீலங்கா முப்படைகளின் பலமா?
இந்தப் புறக்காரணிகளைவிட முதன்மையானது ஆயுதப் போராட்டத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பும், சோரம் போதலும். விடுதலைப் போராட்டத்திற்கான களம் இருந்தது. மக்களின் உணர்வு இருந்தது. பங்களிப்பு இருந்தது. போராளிகளின் அர்ப்பணிப்பு/தியாகம் இருந்தது. இவை யாவும் ஆயுதப் போராட்டத்தின் தலைமைகளின் சுயநலத்துக்குப் பயன்படுத்தப்பட்டு, விடுதலைப் போராட்டம் சீரழிக்கப்பட்டு கடைசியில் புலிகளின் இராணுவப் போராட்டமாகச் சுருங்கி இன்று தமிழ்மக்களை சிங்களப் படைகளின் சப்பாத்துகளின் கீழ் மிதிபடவும், மின்சாரம் பாயும் முட்கம்பி வேலிக்குள் அடைபடவும், ஒரு வேளை சோற்றுக்கு எதிரிகளிடம் கையேந்தவும் வைத்திருக்கிறது.
தமது முகாம்களுக்குள்ளேயே தமது போராளிகளுக்கு புளொட் சமாதி கட்டியது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்து போராளிகளையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்டையாடியது. இதையேதான் மற்றைய ஆயுதக்குழுக்களும் செய்தன.
சிறீலங்கா அரசின் இராணுவ வெற்றியின் பின் இன்று அடுத்த நகர்வுக்குப் போகமுடியாமல் ஒரு சூனிய வெளியில் தள்ளப்பட்டமையில் அனைத்து ஆயுதக்குழுக்களுடன் புலித் தலைமையின் பங்கு மிக முக்கியமானது. தனது இருப்பு குறித்த அச்சம், அதிகாரப் பகிர்வுக்குத் தயாரின்மை, மக்களை நம்பாமை, தனிநபர் வழிபாடு, அரசியல் நீக்கம் போன்ற பிரபாகர/புலிச் சிந்தனை விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக இருந்தது. சிறீலங்கா அரசு அழித்த விடுதலைப் போராளிகளைவிட புலிகள் அழித்த போராளிகள் எண்ணிக்கையில் அதிகம். திட்டமிட்டும், நுட்பமாகவும் புலிகளுக்கு அப்பால் விடுதலையை நேசித்த சுதந்திர உணர்வாளர்கள், மக்களுடன் நின்று வேலை செய்த போராளிகள் புலித்தலைமையால் அழிக்கப்பட்டார்கள். புதியதோர் உலகம் கோவிந்தன், யாழ் பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் என்று உதாரணங்கள் தொடர்கின்றன. அரசியலுக்கு முன்னுரிமை கொடுத்த ஆயுதம் தரித்த இயக்கங்கள் கருவோடு அழிக்கப்பட்டன. ஆயுதப்போராட்டம்/இயக்கம் இவற்றுக்கு அடுத்த நிலையில் சிந்தித்தவர்களைக் கூட புலித்தலைமை விட்டுவைக்கவில்லை. கவிதை எழுதியோர், மேதினம் ஒழுங்கு செய்தோர் என்று எல்லோரையும் போட்டுத் தள்ளிவிட்டு, இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைகளின்பின் புலிகள் இப்படிக் கூறினர். “பீரிஸ் போன்ற படித்த கெட்டிக்காரர்களை சிங்களவர்கள் பேச்சுவார்த்தைக்கு கூட்டி வருகிறார்கள். எங்களிடம் இந்த இடம் வெற்றிடமாக உள்ளது”
புலிக்கு வெளியில் மட்டுமல்ல, புலிகளுக்கு உள்ளேயும் பிரபாகரன் தவிர்ந்த இன்னொரு தலைமைக்கு இடமிருக்கவில்லை. இதற்காக தம்மை நம்பி வந்தவர்களைப் பலிகொடுக்கவும் தலைமை தயங்கவில்லை.
சாதாரண வெகுசன செயற்பாடுகளைக் கூட மறுத்து அனைத்தையும் புலிக்கொடியின் கீழ் கொண்டுவந்த புலிச்சித்தாந்தத்தின் அரசியல் நீக்க செயற்பாடு இன்று அவர்களது அழிவுடன் தமிழ்மக்களுக்கு விட்டுச் சென்றது ஒரு அரசியல் சூனியத்தையும், சிங்கள இனவாத அரசின் தமிழ் சேவகர்கள் டக்ளஸ், கருணா, சங்கரி, த.தே.கூ போன்றவர்களையும்தான்.
தமது புலிச்சித்தாந்தம் ஏற்படுத்தும் எதிர்நிலைகள், தமது அழிவுக்கே வழிவகுப்பதை புலித்தலைமை சிறிதளவேனும் உணர்ந்துகொள்ள முடியாதபடி அவர்களைத் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டிருந்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்சாவு வியாபாரிகள். ஈழத்தில சுயசிந்தனை, கருத்துப் பகிர்வுகள் ஆயுதங்கொண்டு அடக்கப்பட்டபோது, புலத்தில் இருந்து இவை முன்னெடுக்கப்பட்டன. ஆனால் புலிச்சித்தாந்தத்தின் புலம்பெயர் பிரதிநிதிகள் புலத்திலும் வன்முறை மூலம் அடக்க முயன்றனர். முடியாதபோது விமர்சிப்பவர்களை துரோகியாக்கி தனிமைப்படுத்தினர். அரசின் கூலிகளாக்கினர். தமக்கிருந்த ஆட்பலம், பணபலத்தைப் பயன்படுத்தி சர்வதேச ரீதியில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் பதில் முழு வளத்தையும் பயன்படுத்தி புலிச்சித்தாந்தத்தை கட்டிக்காத்து புலிகளையும், போராட்டத்தையும் முட்டுச் சந்திக்கு கொண்டுவந்தனர்.
புத்திசீவிகள் மட்டத்தில் கூட நாங்கள் தப்பி வந்துவிட்டோம், அவர்கள் அங்கே உயிரைக் கொடுத்துப் போராடுகிறார்கள், ஆகவே வாயை மூடிக்கொண்டு பேசாமலிருப்போம் என்ற கருத்தே இருந்தது. தமது “அறிவை”ப் பயன்படுத்தி இவர்களும் புலிகளின் சித்தாந்தத்தை விமர்சித்தவர்களை தனிமைப்படுத்தியும், எழுத்துப் புரட்சியாளர்கள் என்று கேலிசெய்தும் வந்தனர்.
தலைமையின் “கொள்கை”யாலும், புலம் பெயர் சாவு வியாபாரிகளாலும் இன்று புலிகள் நயவஞ்சமாகக் காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். தலைமையுடன் சேர்ந்து அவர்களை கடைசிவரை நம்பிப் போராடிய போராளிகள் கொல்லப்பட்டனர். மக்கள் திறந்த வெளியில் கைதிகளாக்கப்பட்டுள்ளனர்.
ஈழத்தில் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டாலும், புலிகளையும் போராட்டத்தையும் இந்த நிலைமைக்குக் கொண்டு வந்ததில் பெரும்பங்காற்றிய புலம்பெயர்ந்த புலிச்சித்தாந்தம் இன்னும் பலமாகதான் இருக்கிறது. தாங்கள் கடவுளாக்கிய தலைவர் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டு, தனது குடும்பத்துடன் சித்திரவதை செய்யப்பட்டு, மிருகத்தனமாக கொல்லப்பட்டதை எந்த உணர்ச்சியுமின்றி இதிகாகாசம் எழுதி மறைத்துக் கொண்டிருக்கும்/ கறுப்பு வெள்ளையாக புலி-துரோகி என்று இன்னமும் கன்னை பிரித்துக்கொண்டிருக்கின்ற புலி ஆதரவாளர்களிடம் இந்த சித்தாந்தம் இன்னும் அதே வீரியத்துடன் இருக்கிறது.
தாம் கைப்பற்றிய சிங்களப் படைகளின் உடல்களை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்த அல்லது இராணுவத்திடம் கையளித்த புலிகள் இன்று சரணடைந்த நிலையில் அதே சிங்களப்படைகளால் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்படும்போதும், அவர்களது குடும்பங்கள் சின்னப் பிள்ளைகளுடன் கொல்லப்படும்போதும், இறந்த உடல்கள் கூட சிங்கள இனவெறியில் அவமானப்படுத்தப்படும்போதும், பெண் போராளிகளின் உடல்கள் நிர்வாணப்படுத்தப்படும்போதும் போரில் இது சாதாரணம் என்றும், அழிவது புலிகள்தானே என்றும் தமது மிருகத்தனத்தைக் காட்டும் புலி எதிர்ப்பாளர்களிடம் இந்தப் புலிச்சித்தந்தம் ஓங்கி நிற்கிறது.
20000க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு சில நாட்களில் கொன்றுகுவிக்கப்பட்டபோதும், சரணடைந்த போராளிகள் கொல்லப்பட்ட யுத்த மீறல்களின்போதும், புலிகளின் குடும்பத்தினர், குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் புலிகளின் பயங்கரவாதம் ஓங்கும் போதெல்லாம் ஓடியோடி குரல் கொடுக்கும் சனனாயகவாதிகள்/ மனிதாபிமானவாதிகள் காணாமல் போனதும் அல்லது கண்டும்காணாமலிருந்ததும் இவர்களிடமும் இருக்கும் இதே புலிச்சித்தந்தம் அல்லாமல் வேறென்ன.
இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனைய சிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு எதிராகவே துப்பாக்கி தூக்கவும், இறுதியில் இன்று அழிந்து போகவும் காரணம் எங்களிடம் இருக்கின்ற “புலிச்” சித்தாந்தமும்தான். இதிலிருந்து முறித்துக்கொள்ளாதவரை, இந்தச் சித்தாந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காதவரை இப்போதிருக்கின்ற சூனியத்தைக் கடப்பதும், அடுத்த நகர்வுக்கும் போவதும் பற்றிப் பேசுவது……….