12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகள் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து தொடரும் ஆதிக்கவாதக் காய்ச்சல் - புகலி

இக் கட்டுரையின் ஆங்கில மூலம் DBS. JAYARAJ இன் வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டது.

 

  தமிழாக்கம்: புகலி

 

  விடுதலைப்புலிகளை இலங்கையின் ஆயுதப்படைகள் இராணுவரீதியாக வெற்றி கொண்டதன் பின்னர் தொடருகின்ற வெற்றிவிழாக் கொண்டாட்டங்களின் எழுச்சியின் அபாயம் குறித்து ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் பான் கி-மூன் எச்சரித்திருக்கிறார்.

 


  பயங்கரவாதம் என்று எதனை மக்கள் கிரகித்துக்கொண்டு அதனைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ, அச் செயல்கள் நிறைவு பெற்றதனால் அடைந்த நிம்மதியின் வெளிப்பாடாக, “பயங்கரவாதத்தின் முடிவு” என்பதனை அவர்கள் கொண்டாடக் கூடும்.

 

  அதேவேளையில், ராஜபக்ஸ அரசு இந்த வெற்றியினூடாக அதன் அரசியல் பயணத்தில் பெரிய விளைவுகளைப் பெற்றுக் கொள்கிறது. எனவே தன்னை இன்னும் பிரபலப்படுத்துவதற்காக வெற்றியின் உற்சாகம் தரும் மெல்லிய புறத்தோற்றத்தை சடுதியாகப் போர்த்திக் கொள்கிறது.

 

  அதேசமயம் பெரும்பான்மை சமூகத்தில் இருக்கும் ஆதிக்கவாத, நவ-பாசிச சக்திகளும் தங்களுடைய வாய்ப்புக்களைத் தங்க வைத்துக்கொள்வதற்காகவும் தலைமையின் மறைக்கப்பட்ட துர் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவதற்காகவும் தேசபக்தி என்ற வண்டியில் ஏறிக்கொள்கிறார்கள்.

 

  இன்னும், பெரும்பான்மை சமூகத்தினரின் நியாயமான பலர், மேல்மட்டங்களில் உள்ள பலர் அறிந்தோ அறியாமலோ இந்த அலையில் அகப்பட்டுள்ளார்கள்.

 

  இன்றைய இந்த வெற்றிக் களிப்புக் காட்சிகள், நாங்கள் ஏற்கனவே பார்த்த காட்சிகளை நினைவுபடுத்துவதாக அமைகின்றன. அதாவது, 1999-2000 ஆண்டுகளில் விடுதலைப்புலிகளின் “ஓயாத அலைகள்” நடவடிக்கைகள் ஏற்படுத்திய வெற்றிகளை புலம்பெயர் தமிழர்கள் எப்படிக் கொண்டாடினார்களோ அந்தக் காட்சிகளை நினைவூட்டுகின்றன.

 

  தற்போது இருண்டு போயிருக்கின்ற மேகங்களின் நடுவே மின்னற் கீற்றாகத் தெரிவது, தற்போதைய வெற்றிக்களிப்பின் அலைகளுக்குள் இழுத்துச் செல்லப்படுவதைத் திட்டவட்டமாக நிராகரித்துக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தினரில் சிலர்தான். இவர்களில் சிலர் இலங்கை மக்களுக்கு முன்னால் பாரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன என்று உணர்கிறார்கள். அத்துடன் இந்தக் கொச்சையான வெற்றிக் கொண்டாட்டங்கள் எதிர்காலத்தில் இன்னும் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும் என்றும் உணருகிறார்கள்.

 

  இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் உபாலி கூரே. இவர் நன்கு அறியப்பட்ட தொழிற்சங்கவாதியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமாவார். இலங்கை வர்த்தக சங்கத்தின் முன்னாள் உறுப்பினர். லங்கா சமசாஜக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வெளியேறியவர். உபாலி கூரே ஒரு சட்டத்தரணி. தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். இவர் இலண்டன் பல்கலைக்கழகமொன்றில் சட்ட விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். அத்துடன் ஜனநாயத்திற்கும் நீதிக்குமான மையத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

 

  இவருடைய பெறாமகன் ஒருவரும் இந்த வெற்றிக் களியாட்டத்தில் சிக்குண்டவர். அவருடைய வீறாப்பான, வெற்றிக் களிப்பான அபிப்பிராயங்கள் இவருடைய FACEBOOK இல் இருந்ததைக் கண்ணுற்ற உபாலி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் இப்படிக் குறிப்பிடுகின்றார்: “ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டுப் போயிருக்கிறாய் என்பது கண்கூடாகத் தெரிகிறது” என்று. மேலும் இந்தப் பொருத்தமற்ற வெற்றிக் களிப்பு கொண்டு வரப்போகும் அபாயங்களைக் குறிப்பிட்டும் அக் கடிதத்தை உபாலி எழுதி இருந்தார்.

 

  உபாலியின் கடிதத்தின் சாராம்சத்தை அவருடைய பெறாமகன் புரிந்துகொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துப் பதிலளித்ததோடு மட்டும் நிற்காமல் தன்னுடைய நண்பர்களுக்கும் இக் கடிதத்தைத் தெரியப்படுத்தி இருக்கிறார். சில நண்பர்களுடைய அபிப்பிராயத்தைத் தன்னால் மாற்ற முடிந்திருப்பது குறித்து மீண்டும் உபாலிக்கு அவர் நன்றி தெரிவிக்கின்றார்.

 

  இந்தக் கடிதங்களை எனக்கு ஒரு நண்பர் அனுப்பி இருந்தார். இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் உபாலி கூரேயினால் சுட்டிக் காட்டப்பட்ட விடயங்கள் முக்கியமானதெனக் கருதியதால் அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.

 

  இங்கு உபாலியினது கடிதம் முழுமையாகவும் அவருடைய பெறாமகனின் பதிலின் ஒரு பகுதியும் பிரசுரிக்கிறேன். அவருடைய பெறாமகன் அடையாளம் காட்டப்படவில்லை.

 

  இது ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டும் என்றும் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் நம்புகிறேன்.

 

 DBS. JAYARAJ


  -----------


  உபாலி கூரேயின் கடிதம்


  அன்புள்ள பெரிய மருமகனுக்கு

 

  உன்னுடைய பெயரை இங்கு தவிர்த்திருக்கிறேன். ஏனெனில் இந்தக் கடிதத்தின் நோக்கம் உன்னைத் தொல்லைப்படுத்துவதோ அன்றி உன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்ல. உன்னுடைய FACEBOOK இல் வெளியாகியிருந்த வீறாப்பும் வெற்றிக் களிப்பும் கொண்ட அபிப்பிராயங்கள் எனது கவனத்தை ஈர்த்தன. அவற்றை மீளவும் நான் இங்கு சொல்ல எண்ணவில்லை. ஆனால், விடுதலைப்புலிகள் மீதான இராணுவரீதியான வெற்றியைத் தொடருகின்ற ஆதிக்கவாதக் காய்ச்சலினால் நீயும் பீடிக்கப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் நடந்த நிகழ்வுகள்பற்றி, உன்னைப் போன்ற கல்வியும் அறிவும் கொண்ட ஒரு இளைஞனிடம் இருந்து இதைவிட ஒரு விமர்சனப் பாங்கான பகுப்பாய்வை நான் எதிர்பார்த்திருந்திருக்கவேண்டும்.

 

  முதலாவதாக உன்னுடைய வீறாப்பும் வெற்றிக் களிப்பும் யதார்த்தத்தைச் சரியாகப் பிரதிபலிக்கவில்லை. “இலங்கை இராணுவம்தான் உலகின் மிக உயர்ந்த இராணுவம்” என்பது போன்ற உரிமைகோரல்கள் ஐயத்துக்கிடமின்றித் தவறானவை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இறுதிச் சில மாதங்களாக நடந்த இராணுவ நடவடிக்கைகளில் 6000க்கும் அதிகமான இராணுவச் சிப்பாய்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அதற்கும் அதிகமானவர்கள் மோசமாகக் காயம்பட்டிருக்கிறார்கள். நாங்கள் இதனை, இந்திய அமைதிப்படை இரண்டு வருடங்கள் தரித்திருந்தபோது கொண்டு வந்த இழப்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகமானது. அந்த நேரத்தில், ஜேவிபியினாலும் இன்னும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலராலும் தூண்டப்பட்டு, அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவினால் இந்திய அமைதிப்படை வெளியேற்றப்பட்டது. விடுதலைப்புலிகளின் தலைமையைச் சுற்றி வளைத்தார்கள். விடுதலைப்புலிகளை வெற்றிகொள்ளும் இறுதிப்பேரத்தினை அண்மித்திருந்தார்கள். அந்த நேரத்தில்கூட இந்திய அமைதிப்படை ஆயிரத்துக்கும் சிறிதளவு அதிகமான சிப்பாய்களையே இழந்திருந்தது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அரங்கேறுகின்ற யுத்த நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இலங்கை பாதுகாப்புப்படைகளின் இழப்பு மிகவும் அதிகமானது என்பது தெளிவு. விடுதலைப்புலிகளை வெற்றிகொள்வதில் ஆயுதப்படைகள் ஆற்றிய பங்கை நிச்சயமாக இந்த எண்ணிக்கை எந்த விதத்திலும் குறைத்துவிடாது. தற்போதைக்கு இந்த இனப்பிரச்சினை ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டதென்றதன் அடிப்படையில் அநேகமான மக்கள் நிம்மதியடைந்திருகக்கூடும். இது அனுமதிக்கப்பட முடியாதது. எப்படி இருப்பினும் இந்த ஆயுதம் தாங்கிய யுத்தத்தின் விளைவை ஒருபோது மதிப்பிடும்கால் இது வெளிப்படும். இன்னும் சொல்லப்போனால், இந்த வெற்றிக் களிப்பானது, இந்த யுத்தம் ஏற்படுத்திய எண்ணற்ற உயிர்களின், உடைமைகளின் சேதங்களையும் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிரிழப்பையும் ஏற்றுக் கொள்ளத் தவறுகின்றது.

 

  இரண்டாவதாக, உங்களுடைய வெற்றிக் களிப்பு, தமிழ்மக்களில் ஒரு பகுதியினரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு வித்திட்ட ஆழமான பிரச்சினைகளை எண்ணிப் பார்க்கத் தவறுகிறது. 1977இன் தமிழருக்கெதிரான இனக் கலவரம், 1983இன் மிகவும் பெறுமதி வாய்ந்த யாழ் பொது நுhல்நிலைய எரிப்பு, இவைகளைச் சரித்திரத்தில் இருந்து இது அழித்துவிட்டது. 1983இல் அரசினால் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்தின்போது நாடு பூராவிலும் இருந்த தமிழர்கள்மீது பரந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.   அப்போது பல தமிழ் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனார்கள். பலர் கிரமமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவைகள் எல்லாம் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டவை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்றால், எங்களுக்கு இன்று தேவையானது வெற்றி குறித்த பெருந்தன்மையே அல்லாமல் வெற்றிக் களிப்பல்ல. நாங்கள் அவர்களோடு உடன்பாடு கொள்ளவேண்டிய தேவை இல்லாவிடினும் அவர்களை நோக்கி நாங்கள் நட்புக்கரம் நீட்டவேண்டும். நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கவேண்டுமேயன்றி இனிமேலும் சண்டைக்குப் போகக்கூடாது. அவர்களுடைய குறைகளை நாங்கள் கேட்கவேண்டும். அவர்களுடைய கோரிக்கைகளை அடைவதற்கு நாங்கள் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும். இன்னும் உங்கள் வெற்றிக் களிப்பு எங்களுடைய கலாச்சாரத்திற்கு அந்நியமானது. உதாரணத்திற்கு, துட்டகைமுனு, எல்லாளனை வெற்றி கொண்டபின், எல்லாளனுடைய சமாதிக்குச் சென்றபோது எல்லாளனுக்கு மரியாதை செலுத்துமுகமாக ஒவ்வொரு குதிரைவீரனும் அந்தச் சமாதிக்கு மண்டியிட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். இந்த உயர்நிலையின் வழிநின்றுதான் நாங்கள் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகவேண்டும்.

 

  மூன்றாவதாக, இன்று விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதால், வேறு ஆயுதக் கிளர்ச்சிகள் எதிர்காலத்தில் நடைபெறமாட்டாது என்று நாங்கள் வெகுசாதாரணமாக நம்பக்கூடாது. எந்த ஒரு மக்கள் குழுமத்தினதும் உரிமைகளை நீங்கள் நசுக்கவோ பறிக்கவோ முடியாது. தங்களுக்கு சமமான உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை என்று மக்கள் உணர்ந்து கொண்டிருக்கும்வரை அங்கு ஆயுதக் கிளர்ச்சிகளைத் தோற்றுவிப்பவர்கள் எப்போதும் இருப்பார்கள். இலங்கை, தமிழ்நாடு, தென்னாபிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கின்ற கணிசமான தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாக இருப்பதாகவே உணர்கிறார்கள். இங்கு சொல்பவற்றில் சில மிகைப்படுத்தல்கள் இருப்பினும்கூட, முக்கியமான விடயம் என்னவென்றால், பெரிய காசுக்காரர்கள் கொண்ட ஒரு கூட்டம் எல்லா இடங்களிலும் இருக்கின்றது. இவர்கள் தங்கள் கெளரவத்தையும் உரிமைகளையும் பெறுவதற்கு வேறு ஆயுதக் குழுக்களுக்கு நிதி வழங்க ஆயத்தமாக இருக்கக்கூடும். நீங்கள் ஆயுதப் படையினால் ஒரு சிறுபான்மை இனத்தை அடக்கி வைத்திருக்க முடியாது. இதனை நீங்கள் பாலஸ்தீனப் போராட்டத்தின் வரலாற்றில் இருந்து பார்க்க முடியும். மேலான ஆயுத பலம், துப்பாக்கிப் பலம், மேற்கு நாடுகளின் ஆதரவு எல்லாம் இவர்களிற்கு எதிராக வன்மையாக இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வருடமும் தங்கள் நியாயத்தைப் பெறுவதற்கு மேலும் மேலும் பாலஸ்தீன இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுக்க முன்வருகிறார்கள். சுத்தமான ஆயுதம் தாங்கிய போரினால், இஸ்ரேல் ஒருபோதும் பாதுகாப்பான எல்லைகளையோ அமைதியையோ காணமுடியாது. எந்த மட்டத்திலும் எங்களால் இனி ஒரு பெரிய அழிவு யுத்தததைச் சந்திக்கமுடியாது. எனவே எங்களிற்குத் தேவையானது தமிழர்களைப் புரிந்து கொள்வதற்கான ஒரு எத்தனம். சகல சமூகங்களிற்கும் நேர்மையான சமமான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்படல்.

 

உங்கள் வெற்றிக் களிப்பு, எங்களிற்கு முன்னால் இருக்கின்ற பிரமாண்டமான கடமையின் முக்கியத்துவத்தை மதிக்கவில்லை.

 

  நீ உன்னுடைய FACEBOOK இல் அனுப்பியிருந்த தகவல்களின் தன்மை குறித்து நான் கவலைப்பட்டேன். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாடுமுழுவதும் பரவிய ஆதிக்கவாத   ஸ்டீரியாவிற்கு ஆட்படாமல் இருக்கக்கூடிய தைரியமான ஒருவன் என்று உன்னை நான் நினைத்திருந்தேன். உன்னுடைய நேர்மையான விழுமியங்களை நீ பாதுகாக்க வேண்டும் என்றால், சிலவேளைகளில் எதிர்நீச்சல் போடுவது முக்கியமானது. உன்னுடைய பார்வைகளை நீ மறுபரிசீலனை செய்வாய் என்றும் உணர்ச்சிவசப்படாத ஒரு நிலைப்பாட்டை எடுப்பாய் என்றும் நினைக்கிறேன்.

 

  முடிவாக, வெற்றியிலும் தோல்வியிலும் பாரபட்சமற்ற சித்தம் பேணுவது எங்கள் கலாச்சாரத்தின் சாரம். இலாபத்திலும் நஷ்டத்திலும், செல்வத்திலும் வறுமையிலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் துக்கத்திலும், பாரபட்சமற்ற சித்தமுள்ளவராக இருக்கவேண்டும் என்று எங்களுடைய கலாச்சாரமும் பண்பாடும் எங்களுக்குக் கற்பிக்கின்றது.

 

  அன்புடன்

 

  பெரிய அங்கிள்

  உபாலி கூரே

  -----------------


  பெறா மகனின் கடிதம்


  என் அன்புக்குரிய பெரிய அங்கிள்,

 

  உங்களுடைய இந்தக் கட்டுரையை என்னுடைய FACEBOOK இலும், சில இலங்கையரின் FACEBOOK இலும் பிரசுரித்தேன். என்னுடைய நண்பர்களில் 20 பேருக்கும் அதிகமானவர்களன் யுத்தம் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை இதற்குப் பின் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய கட்டுரை மூலமாக அவர்களுடைய அபிப்பிராயங்ளை மாற்ற முடிந்தததையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இதைக் கட்டாயம் ஒரு பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

 

  தயவுசெய்து இதுபற்றி யோசியுங்கள்.  இந்தக் கட்டுரையை நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததற்காக நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 


  பிரியமுடன்

  XXXXXX

  (பெறாமகனின் பெயரை உபாலி கூரே வெளியிட விரும்பவில்லை)

 

http://puhali.com/index/view?aid=244

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்