10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகளின் போராட்டத் தோல்வியும்… வால் பிடிகளின் கொண்டாட்டமும்…

இன்று பல புலி ஆதரவாளர்கள் மத்தியில் பிரபாகரனின் மரணம் பல மாறுபட்ட ஊகங்களையும் கருத்துக்களையும் ஏற்படுத்தியுள்ளது. தலைவர் இருக்கிறாரா... இல்லையா... என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் தலைவன், தேசியத்தலைவன் என்று வாய் ஓயாமல் கத்தியவர்கள்… தலைவன் காலத்திலே தமிழீழம் கிடைத்து விடும் என்ற ஆழமான எதிர்பார்ப்பினை தங்களோடு வளர்த்துக் கொண்டவர்கள் இன்று மனதாலே பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் உள்ளார்கள். இவர்கள் விசுவாசிகள். அமைப்பு மீதும், தலைவர் மேலும் உண்மையான விசுவாசம் கொண்டவர்கள். இப்படியொரு சந்தர்ப்பத்தில் இந்த உண்மை விசுவாசிகள் உடைந்து போவது தவிர்க்க முடியாதது. வேறு சிலரோ இன்று எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக உள்ளார்கள். தலைவர் சாகமாட்டார் அவரை யாராலும் சாவடிக்க முடியாதென்ற மிதமிஞ்சிய கற்பனையிலும், எதிர்பார்ப்பிலும் காலத்தை கழிக்கிறார்கள்.

 

இன்னும் சிலர் கிடைத்த வரைக்கும் இலாபம், தலை போனால் என்ன... வால் போனால் என்ன… எஞ்சியுள்ளதை எப்படி தன்ரை கணக்குக்கு மாத்தாலாம் என்ற கற்பனையில் கணக்கு விட்டுக் கொண்டு திரியுதுகள்.

 

சூரியப்புதல்வன்.. அவதாரபுருன்.. இன்னொரு கரிகாலன், கட்டப்பொம்மன், பண்டாரவன்னியன்… என்றெல்லாம் 25..30.. வருடங்களாகச் சொல்லி மார்தட்டி பெருமைப்பட்டுக் கொண்ட தலைவன்… கடைசி ஒரு தமிழன் இருக்கும் வரை போராடுவோம் என்ற தலைவன்… பல இராணுவ வெற்றிகளுக்கு திட்டம் தீட்டிய தலைவன்… தமிழீழம் தான் எமது தாகம் என்ற தலைவன்… சித்திரைவதைப்பட்டு, மண்டை பிழந்து, உடல் முழுக்க சேற்றுமண் அப்ப விழுந்து கிடக்கிறான். தமிழ் மண்ணிலே சிங்கள இனவெறி அரசாலும், இந்திய ஆக்கிரமிப்புக்காரனாலும் விழுத்தப்பட்டுக் கிடக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த யாருமே இல்லாது போயிற்று. தேசியத்தலைவனுக்கு இறுதியில் தேசப்பற்றாளன் என்ற பட்டம் கூட இல்லாமல் போயிற்று.

 

பிரபாகரன் என் தலைவனும் இல்லை, பிரபாகரனின் அரசியலை ஏற்றுக் கொண்டவனுமில்லை. பிரபாகரனதும் புலிகளினதும் பாசிசத் தவறுகளை விவாதித்து என்னுடைய புலி நண்பர்களோடு முரண்பட்டுக் கொள்பவன். இருந்தும் ஒரு உயிர் சித்திரவதை செய்யப்பட்டு சாவடிக்கப் பட்டதைப் பார்க்கும் போது கண்களின் ஓரத்திலே கண்ணீர் வராமலிருக்கவில்லை.

 

உயிரை நேசிப்பவன்… மனிதத்தை மக்களை நேசிப்பவன்… மாறுதலை விரும்புபவன்…


பழி உணர்வு இல்லாதவன்…எதிரியாய் இருந்தாலும் எந்த உயிரையும் வதைக்கவும் மாட்டான், அதைப்பார்த்து சந்தோப்படவும் மாட்டான்.

 

தமிழ்அரங்கத்தில் பிரபாகரனின் கொலை பற்றி படங்களோடு வெளிவந்த கட்டுரையினை நான் பார்த்தவுடனேயே பல புலி நண்பர்களுக்கு சொல்லிப் பார்க்க வைத்தேன். ஒரு சிலர் இது தலைவர் தான், தலைவர் செத்துத்தான் போயிற்றார் என்றார்கள்… சிலர் தலைவரின் கண் மாதிரி இல்லை, நாடியிலை அது இல்லை… கன்னத்திலை இது இல்லை… தலைவர் சாகவில்லை என்று வாதித்தார்கள். இவர்கள் கொஞ்சம் கூட மாறுவதாயில்லை, அதே சிந்தனை…அதே அறிவு...

 

தலையாட்டி.. தலையாட்டி.. பழக்கப்பட்ட இந்தக் கூட்டங்களை மாற்றவே முடியாது. நேற்றுவரைக்கும் பிரபாகரன், இன்று கே.பி நாளைக்கு யாரோ...?

 

புலிகளின் பாசிசத்தன்மை இறுதிவரை மாறாமல் போனதிற்கும், புலிகளின் இன்றைய அழிவிற்கும் வெளிநாட்டில் வசிக்கும் இந்த மந்தைக் கூட்டங்களுக்கும் முக்கியபங்குண்டு. தமிழ்நெற்றையும், தமிழ்வின் புதினத்தையும் தவிர வேறு எதையும் படிப்பதில்லை, எந்த மாற்றுக் கருத்தையும் கேட்பதுமில்லை. புலிகளின் கருத்தைத்தவிர எந்த மாற்றுக் கருத்தையும் சரியென்று ஏற்று கொண்டதில்லை. சுயஅறிவு, சுயசிந்தனை எதுவுமே இல்லை.

 

இயக்கம் விடாது, தலைவர் பெரிய திட்டமொன்று வைத்துள்ளார் என்றவர்களும்… இந்தியா வரும், அமெரிக்காவரும் என்றவர்களும்... ஜெயலலிதா, வைக்கோ, நெடுமாறன் போன்றவர்கள் தூக்கிப் பிரட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் தானே இவர்கள். புலித்தலைவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இந்த எதிர்பார்ப்பினாலேயே இன்று தங்கள் அழிவிற்கு தாங்களே காரணமாகிப் போனார்கள்.

 

"பூகோள அமைப்பையும் புறநில உண்மைகளையும் மிகவும் துல்லியமாக கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக எடை போட்டு, எதிர்வினைகளை மதிப்பீடு செய்து இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களை செயல்படுத்துகின்றோம்." (மாவீரர் உரை 2007)

 

தலைவரின் இந்த கருத்தும் யுத்தத்தின் இறுதி நாட்களில் அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடும் முற்றிலும் முரணானதது. உலகநாடுகளை நம்பியே ஆயுதத்தை மௌணிக்க செய்கிறோம் என்று சொல்லியே சரணடைந்து கொண்டார்கள். இதுவே புலித்தலைவர்களின் இறுதி முடிவிற்கு காரணமாயிற்று. புலிகளிடம் தெளிவான அரசியல் சிந்தனையோ, போராட்ட நிலைப்பாடுகளோ இல்லை என்பது இங்கு தெளிவாகிறது.

 

புலிகளின் அதே கொள்கை அடிப்படையில் தான் இன்று உலகநாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படுகிறது. புலம்பெயர் புலிகளின் வாதப்படி அமெரிக்காவும், கனடாவும், பிரித்தானியாவும் தமிழ் மக்களது பிரச்சனையினை தீர்ப்பதாயிருந்தால் கடந்த 30வருடத்தில் புலிகள் ஏற்படுத்திய இழப்புக்களும் மக்கள் அழிவும் எதற்காக...?

 

விமல்வீரவன்ஸவினால் வன்னியிலை இவருக்கு சொந்தங்கள் இருக்குதோ, அதனாலோ போரை நிறுத்தும் படி கேட்கிறார் என்று கிண்டல் அடிக்கப்பட்டவரும், மகிந்த அரசினால் கடும் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டவருமான பிரித்தானிய வெளிவிகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் புலியை அழித்தொழித்தமைக்கு சிறிலங்கா அரசிற்சிற்கு வாழ்த்துத் தெரிவித்து கைகுலுக்கி அன்பைப் பகிர்ந்து கொண்டதோடு பொருளாதார உதவிகளையும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

 

இந்த முதலாளிவ போக்கையும், இன்றைய உலகமாறுதலையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தால் புலிகள் தங்கள் அழிவைத் தவிர்த்திருக்கலாம். இப்படியொரு சரணடைவுக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது. இறுதிவரைக்கும் நண்பர்களையும் எதிரிகளையும் புலிகளால் இனம் கண்டு கொள்ள முடியாமல் போயிற்று. புலிகளின் இந்த நிலைப்பாட்டை தெளிவாகப் புரிந்து கொண்ட இலங்கை இனவெறி அரசும், உலக நாடுகளும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

 

சரணடைந்த போர்கைதிகளைக் கூட இன்று கொடூரமாக கொலை செய்து வெற்றியை கொண்டாடுகின்றான் இனவெறியன் மகிந்தா. குற்றங்கள் விசாரனைக்குட்படுத்தப் பட வேண்டியவை, தண்டிக்கப்பட வேண்டியவை தான். அது நீதிமன்றத்திலோ, மக்கள்மன்றத்திலோ நடைமுறைபடுத்தி இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் தண்டனை வழங்க இனவெறியன் மகிந்தாவுக்கோ, மகிந்தாவின் வால் பிடிகளுக்கோ அல்லது சிங்களக் கூலிப்பட்டாள நாய்களுக்கோ அதிகாரமில்லை. பிரபாகரன் கொலைகாரன், பாசிஸ்டு என்றால் புலிஒழிப்பு என்று சொல்லிக் கொண்டு ஐம்பதாயிரம் மக்களைக் கொன்று குவித்து... அகதிகள் முகாம் என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்தும் இவர்கள் தியாகிகளா...?

 

இது பயங்கரவாதம் இல்லையா...?

 

இதைத்தான் மக்கள் நேயம்… மகிந்தநேயம்… மகிந்தசிந்தனை… என இன்று மகிந்த புகழ்பாடி மகிந்தாவின் வால் பிடித்து கால் நக்கிப் பிழைக்கிற கூட்டங்கள் பக்கம் பக்கமாக எழுதி வருகின்றன. எழுபதுகளில் அரசியலுக்கு வந்த மகிந்தாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் சிறுபான்;மை இனமக்களில் பற்றுக் கொண்டவர்கள் என்றும் நண்பன் ஜெயராஜ் பெனான்டோபிள்ளை (முன்னாள் அமைச்சர்) உடன் காரைநகர் கடற்கரைக்கு செல்வதென்றால் மகிந்தாவிற்கு மிகவும் பிடிக்குமென்றும் கூறி, மகிந்தா காரைநகரில் கள்ளுக்குடிக்கப் போவதை சில வால் பிடிகள் மகிந்தா சிறுபான்மை இனத்தில் கொண்ட நேயமாகக் காட்டி கருத்து வெளியிடிருக்குதுகள். மகிந்தாவும் மகிந்தாவின் அரசும் எந்த சிறுபான்மை மக்களின் பிரச்சனையை தீர்த்துவிட்டது. மாறாக எந்த சிறுகட்சிகளும் தேவையில்லை எல்லாரையும் தன்னோடு வந்து தன்ரை வாலைப் பிடிக்கச் சொல்லியுள்ளது. மகிந்தாவின் இந்த சர்வாதிகார போக்கை சிலதுகள் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டு திரியுதுகள்.

 

தன் மனிதக் கொலையை மறைப்பதற்காக எத்தனை எதிர்க் கருத்தாளர்கள்… எழுத்தாளர்கள்… ஊடகவியலாளர்கள்… கடத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள்.

 

லசந்த விக்ரமதுங்கா கொல்லப்பட்டார்… உதயன் ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டார். இப்படி எத்தனை பேர்...?

 

இதுவெல்லாம் எப்படி இந்த வால்பிடி கூட்டங்களுக்கு விளங்காமல் போயிற்று…? காரணம் அதுகளோடு இருப்பது இனவாத அரசிற்கு வால்பிடிக்கும் வெறும் புலியெதிர்ப்பு அரசியல் மட்டும்தான்.

 

இன்று பரவலாய் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சோர்வையும், விரக்தியையும் காரணமாக்கி கொண்டு இப்படியான பிற்போக்கு சக்திகள் இந்த மக்களையும், பாதிக்கப்பட்ட போராளிகளையும் உள்வாங்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள்கள் உண்டு. புலி ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி மாற்றத்தை விரும்பும் சாதாரண பொதுமகனா இருந்தாலும் சரி இனியாவது உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தமிழீழ கோரிக்கையை இனியாவது கைவிடுங்கள். அப்பாவி சிங்கள மக்களை எதிரியாகப் பார்காக்தீர்கள். மக்கள் விடுதலையை விரும்பும் முற்போக்கு சக்திளை இனங் கண்டு  அது சிங்களவர்களா, தமிழர்களா, வேறுயாராயிருந்தாலும் அவர்களோடு இணைந்து கொண்டு அவர்கையை பலப்படுத்துங்கள்.

 

அடக்கு முறையற்ற… பொருளாதார வர்க்க… சாதி இனபோதமற்ற ஓர் சமூகத்தை கட்டியொழுப்ப வேண்டிய கடமை எங்கள் எல்லோருக்கும் உண்டு. இதைக் கருத்தில் கொண்டு செயற்பட்டால் நிச்சயம் பயனுண்டு.

 

தேவன்

09.06.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்