Language Selection

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் இனப் படுகொலை தொடர்பாக உச்சநீதி மன்றத்தாலும் குஜராத் உயர்நீதி மன்றத்தாலும் சமீபத்தில் அளிக்கப்பட்டுள்ள மூன்று தீர்ப்புகள் இந்து மதவெறி கும்பலுக்கு, குறிப்பாக அப்படுகொலையை நடத்திய நாயகன் மோடிக்கு எதிராக அமைந்திருப்பதோடு, இந்த இனப்படுகொலை தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திவரும் பொய்ப் பிரச்சாரங்களையும் அம்பலப்படுத்தியுள்ளன.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ் 6 பெட்டி எரிந்து போனதை, பாகிஸ்தான் ஆதரவோடு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் என ஊதிப் பெருக்கி, அவ்வழக்கை காலாவதியாகிப்போன பொடா சட்டத்தின் கீழ் நடத்தி வந்தது, குஜராத் அரசு. “இச்சம்பவத்தைத் தீவிரவாதத் தாக்குதலாகக் கருத முடியாது; எனவே, இவ்வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களை பொடா சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது” என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. கோத்ரா சம்பவம் தொடர்பான தனது பித்தலாட்டங்களை எப்படியாவது நிரூபித்து விட வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் மோடி அரசு, தனது கைக்கூலிகளைத் தூண்டிவிட்டு இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது.


கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு வண்டியின் எஸ்6 பெட்டி எரிந்துபோன வழக்கு மற்றும் அகமதாபாத்திலுள்ள நரோடா பாட்டியா, நரோடா கிராமம், குல்பர்க் சொசைட்டி ஆகிய முசுலீம் குடியிருப்புகளில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 10 வழக்குகளை விசாரிக்க ஆறு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்; இவ்வழக்கு விசாரணையை உச்சநீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணித்து, மூன்று மாதத்திற்கு ஒருமுறை விசாரணை தொடர்பான அறிக்கையை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, உச்சநீதி மன்றம்.


இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் ஏறத்தாழ 2,000 வழக்குகளைப் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி, கலவரம் நடந்து முடிந்த கையோடு கைகழுவி விட்டது, மோடி அரசு. இந்த 2,000 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதி மன்றம், இந்தக் குறிப்பிட்ட 10 வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளது.


இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி குடியிருப்பைத் தாக்கியபொழுது மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹ்ஸான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, இந்த இனப்படுகொலையில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை விசாரிக்கக் கோரி நடத்தி வந்த வழக்கில், “சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் இனப் படுகொலையில் முதலமைச்சர் நரேந்திர மோடிக்குள்ள தொடர்பை மூன்று மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தர வேண்டும்” என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஜாகியா ஜாப்ரியின் இவ்வழக்கை குஜராத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து ஏற்கெனவே தள்ளுபடி செய்து விட்டது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.


இத்தீர்ப்புகள் வரவேற்கப்படத் தக்கவைதான் என்றபோதும், உச்சநீதி மன்றம்கூட குஜராத் முசுலீம் இனப் படுகொலை தொடர்பான வழக்குகளை பத்தோடு பதினொன்றாகத்தான் நடத்தி வருகிறது என்பதையும் இங்கு அழுத்தமாகச் சொல்லித்தான் தீர வேண்டும்.


இந்த இனப்படுகொலை நடந்து முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த இனப்படுகொலையின்பொழுது உயிர் தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கான முசுலீம் குடும்பங்கள் இன்றும்கூட தாங்கள் வாழ்ந்து வந்த பகுதிகளுக்குள் கிராமங்களுக்குள் நுழைய முடியாமல் அகதிகளாக வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இந்த இனப்படுகொலை தொடர்பாகப் பதியப்பட்ட 2,000 வழக்குகளில் வெறும் 2 வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்; மீதி வழக்குகள் அனைத்தும் நீதிமன்ற விசாரணை என்ற நிலையிலேயே ஊறப்போட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தன்முனைப்போடு செயல்பட்டுக் குற்றவாளிகளைத் தண்டித்துவிடவில்லை. மோடி கும்பல் நடத்திய தாக்குதலில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு போன்ற அப்பாவி முசுலீம்களும் மனித உரிமை அமைப்புகளும் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.


இந்த இனப்படுகொலையைத் தலைமையேற்று நடத்திய நரேந்திர மோடியையும், அவரது தளபதிகளாகவும் அடியாட்களாகவும் செயல்பட்ட இந்து மதவெறி பாசிசக் குண்டர்கள் அனைவரையும், யூத இனப்படுகொலையை நடத்திய பாசிச நாஜிக் கும்பலைத் தண்டித்ததைப் போல, தனி விசாரணை மன்றம் அமைத்து, தனிச் சட்டம் இயற்றி இந்நேரம் தண்டித்திருக்க வேண்டும். முசுலீம் தீவிரவாதிகள் கடந்த நவம்பரில் மும்பய் நகர் மீது தாக்குதல் நடத்தியவுடனேயே, இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்த இந்திய அரசு, மோடி போன்ற இந்து மதவெறி தீவிரவாதிகளை எதிர்கொள்ள தனிச் சட்டம் இயற்ற மறுத்து வருகிறது. இந்த இனப்படுகொலை தொடர்பான 2,000 வழக்குகளில் வெறும் 10 வழக்குகளை மட்டும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள உச்சநீதி மன்றம், இந்தப் பத்து வழக்குகளை வெளி மாநில நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தனது தீர்ப்பில் உதறித் தள்ளி விட்டது.


குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணையைக் கண்காணித்து உச்சநீதி மன்றத்திற்கு அறிக்கை அனுப்புவது; இந்தப் பத்து வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகளுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பது; சிறப்புப் புலனாய்வுக் குழுவோடு கலந்தாலோசித்து, அரசு வழக்குரைஞர்களை நியமிப்பது ஆகிய பொறுப்புகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதால், இந்தப் பத்து வழக்குகளும் இந்து மதவெறிக் கும்பலின் அச்சுறுத்தலின்றி நடைபெறும் என நம்பச் சொல்கிறது, உச்சநீதி மன்றம்.


2,000 வழக்குகளில் இந்தப் பத்து வழக்குகளில் மட்டும் விரைவாகவும் நியாயமாகவும் நீதி கிடைத்துவிட்டால் போதும் என்று இருந்துவிட முடியாது; இரண்டாவதாக, இந்து மதவெறிக் கும்பல் சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு இந்த பத்து வழக்குகளையும் இழுத்தடிக்கும் நரித்தனத்தில் இறங்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் கிடையாது.


குஜராத் அரசில் மகளிர் நலத் துறையில் இணை அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானியும், விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலாளராக இருந்த ஜெய்தீப் படேலும்தான், நரோடா பாட்டியாவிலும், நரோடா கிராமத்திலும் நடந்த தாக்குதல்களுக்குத் தளபதிகளாகச் செயல்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கைபேசிகள் மூலம் கொடுத்த உத்தரவுகளின்படிதான் இந்து மதவெறிக் கும்பல் அந்தத் தாக்குதலை நடத்தினார்கள் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருந்தபொழுதும், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டதோடு, நரோடா பாட்டியா மற்றும் நரோடா கிராம கொலைச் சம்பவ வழக்குகளைப் போதிய சாட்சியமில்லை என்ற பொய்யைச் சொல்லிக் கைகழுவி விட்டது, மோடி அரசு.


உச்சநீதி மன்ற உத்தரவுப்படி இந்த இரண்டு வழக்குகளையும் மீண்டும் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அமைச்சர் மாயாபென்னையும், ஜெய்தீப் படேலையும் விசாரணைக்கு அழைத்தது. அவர்கள் இருவருமே மோடிக்குள்ள அதிகாரத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, விசாரணைக்குப் போகாமல் காலத்தைக் கடத்தினர். இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அவர்கள் இருவரையும் தலைமறைவாகத் திரியும் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களோ குஜராத்திலுள்ள கீழ் நீதிமன்றமொன்றில் மனுப் போட்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு தங்களைக் கைது செய்துவிடாத வண்ணம் பிணை வாங்கிக் கொண்டனர். அந்த நீதிமன்றம் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் இவர்கள் சாட்சியத்தைக் கலைத்துவிட மாட்டார்கள் என இக்கிரிமினல்களுக்குச் சான்றிதழ் அளித்தது. இதன்பின், சிறப்புப் புலனாய்வுக் குழு குஜராத் உயர்நீதி மன்றத்தை அணுகி கீழ் நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்ய வைத்து, அதன் பிறகு அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது. எனினும், கைது செய்யப்பட்ட சில நாட்களிலேயே அவ்விருவருக்கும் பிணை வழங்கி விட்டது, குஜராத் நீதிமன்றம்.


இப்படிப்பட்ட இழுத்தடிப்புகளை இந்து மதவெறிக் கும்பல் மட்டுமல்ல, உச்சநீதி மன்றம்கூட “சட்டப்படி” செய்து வருகிறது என்பதும் உண்மை.


சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வசமுள்ள இந்தப் பத்து வழக்குகளையும் குஜராத்திற்கு வெளியே விசாரிக்க வேண்டும் எனக் கோரி மனித உரிமை அமைப்புகள் 2003ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம் இந்த வழக்குகளின் மீது குஜராத் நீதிமன்றங்களில் நடந்துவந்த விசாரணைகளுக்கு இடைக்கால தடை விதித்தது. மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்த பத்து வழக்குகளை குஜராத்திலேயே விரைவு நீதிமன்றங்களை அமைத்து விசாரிக்கலாம் என இப்பொழுது தீர்ப்பளித்திருக்கிறது. இந்த “பரபரப்பான” தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்குவதற்குள் ஏறத்தாழ ஆறு ஆண்டு காலம் உருண்டோடிவிட்டது. இந்து மதவெறியன் வருண் காந்தி மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்ட வழக்கை கைசொடுக்கும் நேரத்திற்குள் தள்ளுபடி செய்துவிட்ட உச்சநீதி மன்றம், இந்தப் பஞ்சு மிட்டாய் தீர்ப்பை வழங்குவதற்கு இத்துணை காலதாமதம் ஏன் செய்தது? இப்படி இழுத்தடிப்பதில் நீதிபதிகளுக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? என்ற கேள்விகளை எழுப்பினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நம் மீது பாய்ந்து விடும்.

 
சபர்மதி விரைவுவண்டி கோத்ரா ரயில் நிலையத்தைக் கடந்து சென்ற ஒருசில நிமிடங்களிலேயே, அவ்வண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையானது. இது தொடர்பாக கோத்ராவைச் சேர்ந்த 135 முசுலீம்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களுள் 22 பேர் தலைமறைவாகிவிட 100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 100 பேரில் 16 பேருக்கு மட்டும் பிப்ரவரி 14, 2003 அன்று குஜராத் உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. இந்தத் தீர்ப்பு வந்த மறுநிமிடமே, அதுவரை சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை பாசிச பொடா சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார், மோடி. இந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எளிதாகப் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற ‘நல்லெண்ணம்’தான் இதற்குக் காரணம். 


இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த ஐந்தாண்டுகளாக முறையாக விசாரிக்கப்படாமல் உச்சநீதி மன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சபர்மதி விரைவுவண்டியின் எஸ்6 பெட்டி தீக்கிரையான வழக்கு பொடாவின் கீழ் வராது என குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்பாகவே, மைய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக் கமிட்டி 2004ஆம் ஆண்டிலேயே இப்படியான தீர்ப்பை அளித்துவிட்டது. பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் உரிமை உண்டு என 2006ஆம் ஆண்டில் உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தனை சாதகமான அம்சங்கள் இருந்தும், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிறையில் வாடி வரும் 84 முசுலீம்களுக்குப் பிணை வழங்கும் மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போகிறது, உச்சநீதி மன்றம்.


உச்சநீதி மன்றத்தின் இந்த அநீதியான மற்றும் பாரபட்சமான போக்கை வெட்கக்கேடு என விமர்சித்தார், மனித உரிமைப் போராளியும் வழக்குரைஞருமான தீஸ்தா சேதல்வாட். உச்சநீதி மன்றத்தின் முதல் “தலித்” தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன் இந்த அநீதிக்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, தீஸ்தா சேதல்வாட் உச்சநீதி மன்றத்தின் பாரபட்சமான சிவப்பு நாடாத்தனத்தை அம்பலப்படுத்தியதற்காக ஆத்திரமடைந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி 84 முசுலீம்களின் பிணை மனு விசாரணைக்கு வந்தபொழுது, “யார் இந்த தீஸ்தா சேதல்வாத்? உங்களில் யாராவது எந்த வகையிலாவது அவருடன் தொடர்புடையவர்களா? அவருடன் தொடர்புடைய யாராவது பிணை மனு தாக்கல் செய்திருந்தால், அதனை இந்த அமர்வு நீதிமன்றம் கேட்க விரும்பவில்லை” எனக் கீழ்த்தரமான முறையில் மனுதாரர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.


குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த கொடூரங்களை வெளிக் கொண்டு வந்ததிலும், பெஸ்ட் பேக்கரி மற்றும் பில்கிஸ் பானு தொடர்பான வழக்குகளில் இந்து மதவெறிக் கிரிமினல்கள் தண்டிக்கப்பட்டதிலும் தீஸ்தாவின் பங்கு அளப்பரியது எனத் தெரிந்திருந்தும், “யார் இந்த தீஸ்தா?” என உச்சநீதி மன்றம் வினவியது, அம்மன்றத்தின் அதிகாரத்திமிரைத்தான் வெட்ட வெளிச்சமாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்பதை விட, தனது அதிகாரத் திமிரையும் பாரபட்சமான, தன்னிச்சையான போக்கையும் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பதில்தான் உச்சநீதி மன்றம் குறியாக இருந்து வருகிறது.


மனுதாரர்கள் தங்களுக்குப் பிணை கிடைக்க வேண்டும் என்ற பதைபதைப்பில், உச்சநீதி மன்றத்தின் மிரட்டலுக்கு அடிபணிந்து, தீஸ்தாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதைக் கைவிடுவதாக அறிவித்தனர். எனினும், உச்சநீதி மன்ற நீதிபதிகள் அவர்களுக்குப் பிணை வழங்காமல், விசாரணையை ஒத்திவைத்து, அம்முசுலீம்களின் வாழ்க்கையோடு விளையாடிப் பார்த்து மகிழ்ந்தனர். இந்தக் குரூரத்தை யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்? தனது அரசால் கைது செய்யப்பட்டுள்ள முசுலீம்களுக்கு நீதி மட்டுமல்ல, பிணைகூடக் கிடைத்துவிடக் கூடாது என விரும்புகிறார், மோடி. மோடியைப் போலவே நீதிபதிகளும் எண்ணுகிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது?


‘‘தாமதமாக வழங்கப்படும் நீதி, நீதி மறுக்கப்படுவதற்குச் சமமானது” என்ற பொன்மொழியை உச்சரித்துக் கொண்டே, குஜராத் முசுலீம்களுக்கு ‘நீதி’ வழங்குவதை இழுத்தடிக்கும் திருப்பணியை இந்திய நீதிமன்றங்கள் சட்டப்படியே செய்து வருகின்றன. சில சமயங்களில் குஜராத் முசுலீம்களுக்குச் சாதகமாக வழங்கப்படும் தீர்ப்புகள்கூட, அவர்களுக்கு முழுமையான நியாயத்தை வழங்கிவிடுவதில்லை. பில்கிஸ் பானு வழக்கில் (பார்க்க; புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2008) பாலியல் வன்முறை தாக்குதலையும், படுபாதக கொலைகளையும் நடத்திய இந்து மதவெறி கிரிமனல்களுள் ஒருவனுக்குக்கூடத் தூக்குத் தண்டனை தரப்படவில்லை. இக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகள், அரசு மருத்துவர்களில் ஒருவருக்குக்கூட ஒருநாள் சிறை தண்டனைகூட வழங்கப்படவில்லை.


இச்சூழ்நிலையில், இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்புகளில் உள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தும் அதேசமயம், இந்த இனப்படுகொலையின் நாயகன் மோடி தண்டிக்கப்படும் வரையிலும், ஒவ்வொரு வழக்கிலும் விரைவாகவும், நியாயமாகவும் தீர்ப்பு வழங்கப்படும் வரையிலும் போராடுவது ஒன்றுதான் மதச்சார்பின்மையை நேசிக்கும் இந்திய மக்களின் முன் உள்ள ஒரே வழியாகும். 


கட்டுரையாளர்: செல்வம்

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,