Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஏப்ரல் 11 ஆம் தேதி தாய்லாந்தின் பாட்டயா எனும் சுற்றுலா விடுதி நகரில் “ஏசியான்” எனும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் நடக்க இருந்த சந்திப்பு, போராட்டக்காரர்களின் கலவரத்தால் ஒத்திப் போடப்பட்டது.

 இதில் பங்கேற்க சென்றிருந்த இந்தியாவின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் கமல்நாத்தும் மற்ற பிற நாட்டுத் தலைவர்களும் பாதுகாப்பாக தாய்லாந்து தலைநகர் பாங்காங் திரும்பினர். பல்வேறு உலகத் தலைவர்கள் சந்திக்கும் கூட்டங்களில் உலகமயத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் தமது எதிர்ப்பை காட்டுவது வழக்கம்தான்; அதுவும், ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்று ஏற்றிருந்தார்கள். ஆனால், இங்கே ஒரு கூட்டமே ரத்து செய்யப்படும் அளவுக்கு நடந்ததை பல நாடுகளால் ஜீரணிகக்க முடியவில்லை. அப்படி தாய்லாந்தில் என்னதான் பிரச்சினை?


இதுவரை பதினாறுக்கும் மேற்பட்ட இராணுவப் புரட்சிகள் நடந்திருக்கும் தாய்லாந்தில் இன்னும் மன்னர் பரம்பரையினர் அங்கீகாரத்தோடு வாழ்கின்றனர். ஏழ்மையும், செல்வமும் கூரிய முரண்பாடுடன் பிரிந்திருக்கும் நாட்டில், ஏழைகளுக்கு எந்தக் காலத்திலும் பெயரளவு ஜனநாயகம்கூடக் கிடைத்ததில்லை.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் தாக்சின் என்பவரது தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி செய்தது. தாக்சினும் கூட அந்நாட்டில் பிரபலமான தொழில்துறை முதலாளி என்றாலும், இவரது ஆட்சிக்காலத்தில் ஓரளவுக்கு ஜனநாயகமும், சுதந்திரமும் இருந்தது. ஒப்பீட்டளவில் ஊடகங்களுக்கும் கூட சுதந்திரம் இருந்தது. மேலும் ஏழைகளுக்கு ஆறுதல் தரும் அளவில் பல சமூகநலத் திட்டங்களும் இவர் காலத்தில் அமலுக்கு வந்தன. நமது நாட்டில் இருக்கும் கவர்ச்சித் திட்டங்கள் போலத்தான் இவை என்றாலும், அந்நாட்டு மக்களுக்கோ அவையே ஏக்கப் பெருமூச்சாக இருந்தன. இதைத்தவிர, தாக்சின் ஆட்சியில் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் மலாய் முசுலீம் சிறுபான்மையினர் மீது போதை கடத்தலுக்கெதிரான போர் என்ற பெயரில் ஏறக்குறைய 3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறையெல்லாம் பிரச்சினை என்று பார்க்காத எதிர்க்கட்சிகள், தாக்சின் அரசு செய்த ஏழைகளுக்கான சேமநலத்திட்டங்களை மட்டும் கடுமையாக எதிர்த்தன.


இந்நிலையில்தான், 2006ஆம் ஆண்டில் இவரது ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு இராணுவம் ஆட்சிக்கு வந்தது. இதற்கு முன் 2005ஆம் ஆண்டிலிருந்தே ஜனநாயகத்திற்கான மக்கள் கூட்டமைப்பு எனும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி தாக்சின் அரசின் ஊழலை எதிர்ப்பதாகப் போராடி வந்தன. ஆனால் இவர்கள், தாக்சின் தென்னாட்டில் நடத்திய மனித உரிமை மீறலைப் பற்றி வாய்திறக்கவில்லை. இதன் விளைவாக தாக்சின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு உத்திரவிட்டார். இதையும் எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.


ஏனெனில், தாக்சினின் மக்கள் நலத்திட்டங்களின் பயனால் மக்கள் அவரை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்பதால் இந்த எதிர்ப்பு. மேலும், ஏழைகளுக்கு ஜனநாயகத்தின் அருமை தெரியாதென்றும், அவர்கள் தாக்சினால் விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாகவும் இந்த மேன்மக்கள் திமிருடன் பேசிவந்தனர். இந்த மக்கள் விரோத கருத்துக்கு பல அறிவாளிகளும், தன்னார்வக் குழுக்களும் ஆதரவாக இருந்தனர். இந்நிலையில் தாய்லாந்தின் மன்னரை வைத்து தாக்சினின் அரசை நீக்குவதற்கு இவர்கள் செய்த முயற்சிக்கு மன்னர் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். இவ்வளவிற்கும் தாக்சினின் ஆட்சியில் மன்னருக்கும் நாட்டுபற்று கொண்டோருக்கும் — அதாவது, மேட்டுக்குடியினருக்கும் மதிப்பில்லை என்பதே இந்தக்கட்சிகளின் பிரச்சாரம். இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும், பணக்காரர்கள், மேல்தட்டு நடுத்தர வர்க்கம், நடுத்தரவர்கக்ம் ஆகியோரையே பிரதிநிதித்துவம் செய்யும் போது, தாக்சின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவம் செய்தார். இப்படி தாய்லாந்து, வர்க்கப் பகைமையின் முரண்பாட்டில் கனல் போல குமைந்து கொண்டிருந்தது.


மன்னர் மறுத்துவிட்டபடியால், அந்த எதிர்க்கட்சிகள் இராணுவத்துக்கு சைகை காட்ட தாக்சின் அரசு கவிழ்க்கப்பட்டு, இராணுவம் ஆட்சியைப் பிடித்தது. இப்படி மேட்டுகுடியின் ஆசையை இராணுவம் நிறைவேற்றியது. பதவிக்கு வந்த இராணுவம் முதலில் செய்த காரியம், இதுவரை தாய்லாந்து கண்டவற்றில் சிறந்ததாயிருந்த அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கி, அவர்களுக்கு அதாவது, பணக்காரர்களுக்குச் சாதகமான சட்டம் கொண்டுவந்ததுதான். இதற்கு மக்கள் ஒப்புதல் வேண்டுமென்பதால், அதற்கும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் இராணுவத்தின் துப்பாக்கி முனையில், மேட்டுக்குடியினரையும் இராணுவத்தையும் ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளின் ஆதரவில், ஊடக முதலாளிகளின் ஒட்டு மொத்த ஆதரவில் நடைபெற்றாலும், சிறு பெருபான்மைதான் இராணுவத்தின் புதிய சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக கிடைத்தது.


இந்தப் புதிய சட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால், தாய்லாந்து மத்திய காலத்திற்கு திரும்புகிறதா என்று கூடத் தோன்றும். இதன்படி செனட்டின் பாதி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்குப் பதில் இராணுவத்தால் நியமிக்கப்படுவார்களாம். இப்படி அரசியல் கட்சிகளின் செயல்பாட்டிற்கு மறைமுகமாகத் தடை விதிக்கப்பட்டது. மற்றபடி முதலாளிகளும், பணக்காரர்களும் தங்களை தாங்களே செனட்டிலும் நீதிமன்றத்திலும் நியமித்துக் கொள்வதற்கு இந்தப் புதிய சட்டம் வழிவகை செய்தது. மற்றபடி, நாட்டின் வரவுசெலவுத்திட்டத்தில் இராணுவத்திற்கான பங்கு பெருமளவு அதிகரிக்கப்பட்டது. இது அப்படியே இராணுவத்தின் அதிகார வர்க்கத்திற்கு செல்லும் என்பதை விளக்கத் தேவையில்லை. முக்கியமாக இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டம், இராணும் ஆட்சி கவிழ்ப்பு நடத்தினால், அதை எதிர்ப்பதற்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையை ரத்து செய்ததுடன், இனிமேல் இராணுவம் நடத்தவிருக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கும் சட்டபூர்வ உரிமையை வழங்கியது.


அதாவது, நாட்டின் அரசியல் சரியில்லை என எப்போதெல்லாம் இராணுவம் கருதுகிறதோ, அப்போதெல்லாம் ஆட்சிக் கவிழ்ப்புகள் செய்யலாம். அதற்குச் சட்டப்படியே உரிமை உண்டு. மேலும் புதிய சட்டத்திற்கு ஒத்ததாக நீதிமன்றங்களும் மாற்றப்பட்டன. அல்லது நீதிமன்றங்கள் எப்போதும் இப்படி மேட்டுக்குடி, அதிகார வர்க்கம், இராணுவம் முதலியவற்றிற்குத்தான் அடிபணியும். இராணுவம் 2006இல் ஆட்சியைப் பிடித்ததும் தாக்சினின் ஆட்சியை நீதிமன்ற உதவியுடன் கலைத்து விட்டு மறுதேர்தலுக்கு உத்தரவிட்டது. அந்த தேர்தலிலும் தாக்சினின் “தாய் ராக் தாய்” கட்சி வென்றது. உடனே இராணுவம் நீதிமன்றத்தின் உதவியுடன் ஆட்சியை மீண்டும் கலைத்தது என்பதிலிருந்து நீதிமன்றங்களின் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். ஆனால், தாக்சினின் ஆட்சியை எதிர்த்து இராணுவத்திற்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவான எதிர்க்கட்சிகள் நடத்திய கலவரம், 2008 டிசம்பரில் பன்னாட்டு விமான நிலையங்களை இரண்டுநாள் கைப்பற்றி முடக்கியது போன்றவையெல்லாம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை.


2006 ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் இந்த எதிர்க்கட்சியினர் ஆயுதம் தாங்கிய குழுக்களை அமைத்துக் கொண்டு நாடெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் வளரும் எதிர்ப்புணர்வை மிரட்டுவதற்கும் இந்தக் குழுக்களை ராணுவமும் அனுமதித்தது. இப்போது இருக்கும் தாய்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சரும் இப்படிப்பட்ட வன்முறைக் கும்பலிலிருந்து வந்தவர்தான்.
கடைசியாக, 2008ஆம் ஆண்டு இறுதியில் இராணுவம் தாக்சின் கட்சியில் இருக்கும் பிழைப்புவாதத் தலைவர்களை ஊழலின் மூலம் விலைக்கு வாங்கி, எதிர்க்கட்சிகளை குறிப்பாக ஜனநாயகக் கட்சியை ஆதரிக்குமாறு ஏற்பாடு செய்தது. இப்படித்தான் ஆக்ஸ்போர்டில் கல்வி கற்ற அபிசிட் இப்போது தாய்லாந்தின் பிரதமராக இருக்கிறார். இவரது காலத்தில் தாக்சினின் ஆட்சியிலிருந்த சமூக நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. இத்தனைக்கும் தாக்சினின் “தாய் ராக் தாய்” கட்சியினர் சோசலிசக் கொள்கை கொண்டவர்களெல்லாம் இல்லை. தாராளமயத்தையும், உலகமயத்தையும் தீவிரமாக அமல்படுத்திக்கொண்டே, உள்ளூரில் சில இலவசத் திட்டங்களை அள்ளி வழங்கியதைக்கூட எதிர்க்கட்சிகள் ஏற்கத் தயாரில்லை.


இப்போது தாய்லாந்தில் முழு சர்வாதிகாரம் நிலவுகிறதென்றால் மிகையில்லை. அரசையும், இராணுவத்தையும் ஒருவர் குறைகூறினால் தேசத்துரோகி எனவும், மன்னரை அவமதித்தார் எனவும் தண்டிக்கப்படுவார். பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டே இயங்குகின்றன. அப்படி தணிக்கைக்கு அவசியமே இல்லாமல் இவைகளெல்லாம் இராணுவத்திற்கு ஆதரவாக செயல்படுவது வேறு கதை. இணையத்தில் அரசுக்கெதிராக வாசகர் கருத்து தெரிவிப்பவர்கள்கூட அவர்களது கணினி ஐ.பி எண்ணை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு, எந்த வழக்குமில்லாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்றால், மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.


மன்னருக்கும், இராணுவத்திற்கும் மேட்டுக்குடியினருக்கும் ஆதரவான கட்சிகளின் தொண்டர்கள் மஞ்சள் சட்டை அணிந்து கொண்டு இந்த பாசிசத்தை ஏவி வருகின்றனர். இதை எதிர்த்து தாக்சினின் கட்சிக்கு ஆதரவான சிவப்பு சட்டை அணிந்த தொண்டர் படை போராடி வருகிறது. உண்மையில் இங்கே கட்சி நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தாக்சின், வெளிநாடு சென்று அங்கிருந்து தனது கட்சியினரிடம் பேசி வருகிறார். ஆனால், இந்த சிவப்பு தொண்டர் படை, தாக்சினின் வரம்புகளை மீறி உண்மையான ஜனநாயகத்திற்கான போராட்டத்தை வீச்சாக நடத்தி வருகிறது.


இப்படித்தான் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான பகைமை தாய்லாந்தில் ஒரு பாரிய வர்க்கப் போராட்டத்தை பரப்பி வருகிறது. உலகமயத்தின் காலத்தில் உள்ளூரில் பெயரளவு ஜனநாயகம் கூடத் தேவையில்லாமல், அதுவும் உலகமயம் வற்புறுத்தும் ஏழைகளுக்கான சேமநலத்திட்டங்களைக் கூட சகிக்க முடியாமல் தாய்லாந்தில் இராணுவம், பணக்காரர்கள், நீதிமன்றங்கள், ஊடகங்கள் கூட்டு சேர்ந்து கொண்டு பெரும்பான்மை மக்களின் மேல் பெரும் அடக்குமுறையை ஏவி வருகின்றன. இதற்கு அறிவாளிகளும், தன்னார்வக் குழுக்களும் கூட ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் செல்வந்தர்களின் வலிமையையும், ஏழைகளுக்கெதிரானவர்கள்தான் இவர்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் “ஏசியான்” கூட்டமைப்பின் சந்திப்பை முடக்கிய அந்த கலகக்காரர்கள் வேறு யாருமல்ல, இந்த சிவப்பு படையினர்தான். பல நாட்டு மந்திரிகளை வெளியேற்றி, உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளை பணயக்கைதிகளாகப் பிடித்து போர்க்குணமிக்க முறையில் அந்த போராட்டம் நடைபெற்றது. இதை வைத்து அரண்டு போன இராணுவ கைக்கூலி அரசாங்கம், நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்து துருப்புக்களின் ஆயுத வலிமையைக்கொண்டு அடக்குமுறையை ஏவி வருகிறது. ஆனால், அந்த செஞ்சட்டைப் படை அடிபணிவதாக இல்லை. இதில் தோற்றால் நாம் நிரந்தர அடிமைகளாக நிலைபெறுவோம் என்பதை புரிந்து கொண்ட தாய்லாந்து நாட்டின் ஏழைகள் அதாவது, பெரும்பான்மை மக்கள், செஞ்சட்டை போராட்டத்தில் நாள்தோறும் அணிதிரண்டவாறு போராடுகிறார்கள். ஒரு சிலரை சுட்டுக் கொன்று போராட்டத்தை முடக்க நினைத்த இராணுவம், பெரும் திரளான மக்கள் வருவதைக் கண்டு மிரண்டு போயிருக்கிறது.


விரைவில் இந்த பாசிச அதிகாரவர்க்கம் தண்டிக்கப்பட்டு தாய்லாந்தில் புதிய மக்களாட்சி நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. உரிமைகளை இழந்து மந்தைகளைப் போல இவ்வளவுநாள் நடந்து கொண்டதை அறிந்துள்ள மக்கள், இந்த முறை தோற்றால் எழுவதற்கு வெகுநாள் பிடிக்கும் என்பதையும் புரிந்து கொண்டு போராடுகிறார்கள். விரைவில் மஞ்சள் சட்டைப் படையை புறமுதுகு காணச்செய்து, செஞ்சட்டைப் படை வெல்லும். அதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.


கட்டுரையாளர்: பச்சையப்பன்

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,