Language Selection

புதிய ஜனநாயகம் 2009

நாமக்கல் நகருக்கு அருகே இயங்கி வரும் வைகை எம்.பி.ஆர். அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (பி) லிமிடெட் என்ற ஆலையில் கடந்த 06.05.2009 அன்று இரவு நடந்த தீ விபத்து 17 தொழிலாளர்களின் உயிரைக் காவுவாங்கிவிட்டது.

இந்த ஆலை தவிட்டில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலையாகும். தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களுள் 9 பேர் தப்பி வர வழியில்லாமல் தீக்குள்ளேயே சிக்கி எரிந்து கரிக்கட்டையாகிப் போனார்கள். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தொழிலாளர்களுள் 8 பேர் சிகிச்சைப் பலன் அளிக்காமல் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து இறந்து போனார்கள். அநியாயமாக இறந்து போன இத்தொழிலாளர்களுள் சண்முகம் என்பவர் மட்டும்தான் நாமக்கல்லுக்கு அருகிலுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர். மீதமுள்ள அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடித் தமிழகத்திற்கு வந்த அயல் மாநிலத் தொழிலாளர்கள்.


இவ்வாலையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்த சண்முகத்திற்கு ஒன்பது வயதில் மகள் இருப்பதோடு, அவரது மனைவி வளர்மதி தற்பொழுது கருவுற்றிருக்கிறார். இறந்து போன பீகார் தொழிலாளர்கள் அனைவரும் அவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமைக்கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அத்தொழிலாளர்களுள் ஒருவரின் வயது 17தான் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது; மற்ற அனைவரும் 20 முதல் 25 வயதிற்குட்பட்ட இளம் தொழிலாளர்கள்.

தீ விபத்திற்கு என்ன காரணம்? தீ பிடித்த பின் கிடங்கிற்குள் இருந்த தொழிலாளர்களால் ஏன் தப்பித்து வெளியே வர முடியவில்லை? இக்கேள்விகளுக்கு, “கொதிகலனைக் குளிர்விக்கும் சாதனம் பழுதடைந்து சில மாதங்கள் ஆகிவிட்டது; ஆலையில் தீயணைப்புச் சாதனங்கள் போதுமளவிற்கு இல்லை; ஆபத்துக்கான அவசர வழியில் தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, அவ்வழி தடுக்கப்பட்டிருந்தது; தவிட்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இரண்டு கிடங்குகளிலும் போதிய காற்றோட்ட வசதிக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என போலீசும், தீயணைப்புத் துறை அதிகாரிகளும் காரணங்களைக் ‘கண்டுபிடித்து’ அடுக்கி வருகின்றனர்.


எளிதில் தீப்பற்றக்கூடிய தவிடைப் பயன்படுத்தும் இவ்வாலையில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, திடீரென விபத்து நடந்துவிட்டால் சேதம் அதிகமின்றித் தப்பித்துக் கொள்வதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமோ, அவை எதுவுமேயின்றி இவ்வாலை இயங்கி வந்திருப்பதைத்தான் அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்திருக்கிறார்கள். ஆலை முதலாளிகளின் இலாபவெறியும், அம்முதலாளியிடம் கையூட்டு வாங்கி வந்த அதிகாரிகளின் அலட்சியமும்தான் 17 தொழிலாளர்களின் உயிர் பறிபோனதற்குக் காரணம். எனவே, இதனை அப்பட்டமான கொலைக்குற்றமாகக் கருத இடமிருக்கிறது.


ஆனால், போலீசோ இந்தச் சாவுகளைக் கொலைக் குற்றமாகப் பதிவு செய்யவில்லை. கவனக் குறைவால் நேர்ந்துவிட்ட விபத்தாகவும், அதனால் நேர்ந்துவிட்ட மனிதச் சாவாகவும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது, போலீசு. எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி இவ்வாலை இயங்கி வந்ததை வேடிக்கை பார்த்து வந்த அதிகாரிகளுள் ஒருவரின் பெயர்கூட போலீசின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவ்வறிக்கையில் ஆலையின் முதலாளி மணியின் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அவரையும் இதுநாள் வரை கைது செய்ய முடியாமல் போலீசு தேடிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அம்முதலாளியோ, ‘தலைமறைவாக’ இருந்து கொண்டு போலீசார் தன்னைக் கைது செய்யக்கூடாது எனக் கோரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார்.


இவ்வாலையில் தவிட்டு மூட்டைகளை ஏற்றி இறக்கும் வேலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும், நாமக்கல்லுக்கு அருகிலுள்ள எம்.மேட்டுப்பட்டியிலுள்ள அகதி முகாமைச் சேர்ந்த ஈழத் தமிழர்களும் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் பெயர், முகவரி; அவர்கள் வேலை செய்யும் ‘ஷிப்டு’ விபரம்; அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உள்ளிட்ட எந்தப் பதிவும் இல்லாமல் இத்தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து வந்திருக்கிறது, நிர்வாகம். இதனால், தீயில் எரிந்து கருகிப் போன தொழிலாளர்களை அடையாளம் காணவும், இறந்து போன மற்றும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் உறவினர்களுக்குத் தகவல் கொடுக்கவும் முடியாமல் அரசாங்கம் திணறிப் போய்விட்டது.


ஊரு விட்டு ஊரு வந்து இறந்து போன பீகார் தொழிலாளர்களுக்காகத் தமிழகத்தில் யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள் என்ற மிதப்பில் ஆலை நிர்வாகம் பீகாரிலிருந்து வந்த அத்தொழிலாளர்களின் உறவினர்களிடம் வெறும் இருபதாயிரம் ரூபாயை நட்ட ஈடாகக் கொடுத்துக் கைகழுவியது. அதிகாரிகளோ இதுவே அதிகம் என்பது போல நடந்து கொண்டனர். குறிப்பாக, மோகனூர் போலீசு நிலைய ஆய்வாளர் சி.பெரியசாமி, “20 ஆயிரம் ரூபாய் போதாதா? கொடுப்பதை வாங்கிச் செல்லுங்கள்” என இறந்து போன சண்முகத்தின் மனைவி வளர்மதியிடமும், பீகார் தொழிலாளர்களின் உறவினர்களிடமும் அதிகாரத் திமிரோடு உபதேசித்துள்ளார். வாய்க்கரிசி போடுவதற்கு ஏற்பாடு செய்ததையே பெரிய மனிதாபிமான உதவியாகக் காட்டிக் கொண்ட தமிழக அர”, அதற்கு மேற்பட்டு எந்தவொரு நிவாரண உதவியும் செய்ய மறுத்து விட்டது.


இந்த ‘விபத்து’ நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான் நடந்தது. தீயில் சிக்கிக் கொண்டு மாண்டு போனவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாக இருந்திருந்தால், ஓட்டுக்கட்சிகளிடையே ஒப்பாரி வைப்பதில் பெரும் போட்டியே நடந்திருக்கும். பீகார் தொழிலாளர்களின் பிணங்களோ ஓட்டு பொறுக்குவதற்குப் பயன்படாத பிணங்களாகப் போய்விட்டதால், போலி கம்யூனிஸ்டுகள்கூட இப்பிரச்சினையைச் சீந்தாமல் விட்டுவிட்டனர்.


பல ஆண்டுகளுக்கு முன் தலைநகர் தில்லியில் உபஹார் என்ற திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு, அத்திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பலரும் தீயில் சிக்கி மாண்டு போயினர். முதலாளித்துவ பத்திரிகைகள் அனைத்தும் இவ்விபத்தை மாபெரும் ‘தேசிய’ சோகமாகச் சித்தரித்து எழுதியதோடு, அத்திரையரங்க உரிமையாளர்கள் தண்டிக்கப்படும் வரை அவ்விபத்து குறித்து தொடர்ந்து எழுதி வந்தன. ஆனால், நாமக்கல்லில் 17 தொழிலாளர்கள் தீயில் கருகி இறந்து போனதோ வெறும் மாவட்டச் செய்தியாகச் சுருக்கப்பட்டு விட்டது.

ஓட்டுக்கட்சிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் அலட்சியப்படுத்தி ஒதுக்கித்தள்ளிய இச்சாவுகளை, அதற்குப் பின்னே மறைந்துள்ள முதலாளித்துவ இலாபவெறியை நாமக்கல்லில் செயல்பட்டு வரும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று அம்பலப்படுத்தியது. இத்தீ விபத்தில் இறந்து போன தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணமாக வழங்கக் கோரியும், அந்த ஆலையின் முதலாளியை மட்டுமின்றி, பாதுகாப்பற்ற முறையில் ஆலை இயங்கி வந்ததைக் கண்டும் காணாமல் இருந்த அதிகாரிகளையும் கைது செய்யக் கோரியும் நாமக்கல்லில் 18.5.2009 அன்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைக் கமுக்கமாக அமுக்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்த மோகனூர் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் மட்டுமின்றி, இறந்து போன தொழிலாளர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக, இறந்து போன தொழிலாளி சண்முகத்தின் மனைவி வளர்மதி, தனது கணவரை ஆலை நிர்வாகம் இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி கொன்று போட்டதைக் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ரா”, சேலம் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் மாயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டதில் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழக அரசிற்கு உத்திரவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது, மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.


இது உலகமயக் காலக்கட்டம். கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி இந்தியாவிற்குள் நுழையும் வெளிநாட்டு மூலதனத்தைப் பாதுகாப்பதற்குப் புதிது புதிதாகச் சட்டங்கள் போடப்படுகின்றன. ஆனால், வேலை தேடி ஊரு விட்டு ஊரு செல்லும் தொழிலாளிக்கோ குறைந்தபட்ச பாதுகாப்புகூடக் கிடைப்பதில்லை. இந்த உலகமயத்திற்குச் சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்கள் வேலை உத்திரவாதம் பற்றிக் கேட்கக்கூடாது எனத் தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இனி, தொழிலாளர்கள் பணியிடங்களில் உயிர் உத்திரவாதம் பற்றியும் கேட்கக் கூடாது என்றுகூடச் சட்டங்கள் திருத்தப்படலாம். எனவே, தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து இந்த அபாயத்திற்கு எதிராகப் போராடாவிட்டால், தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவதை ஒழித்துக்கட்ட முடியாது.


கட்டுரையாளர்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், நாமக்கல்.

 

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,