அண்டை நாடான நேபாளத்தில் இடைக்கால அரசின் பிரதமரான தோழர் பிரசண்டா கடந்த மே 4ஆம் தேதியன்று பதவி விலகியதையடுத்து, அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.
மன்னராட்சி ஒழிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான பாதையில் அந்நாடு அமைதியாகப் பயணித்துக் கொண்டிருப்பதாக நிலவும் கருத்தைத் தகர்த்து, அந்நாடு மீண்டும் அரசியல் போராட்டங்களால் குலுங்குகிறது. இந்தியாவின் மேலாதிக்கச் சதிகளுக்கும் இந்தியக் கைக்கூலி அரசியல் சக்திகளுக்கும் எதிராக, “அந்நிய எஜமானர்களிடம் சரணடையாதே! நாட்டு விரோத சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கைக்கூலி இராணுவத் தளபதியைப் பதவி நீக்கம் செய்! சதிகார அதிபர் ஒழிக!” என்ற முழக்கங்களுடன் வீதியெங்கும் மக்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்களாலும் சாலை மறியல் போராட்டங்களாலும் அந்நாடு அதிர்கிறது.
நேபாள மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக மாவோயிஸ்டுகள் பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நடத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக, 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக்கு எதிராக மாபெரும் எழுச்சியில் மக்கள் இறங்கினர். “மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்; அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்தி புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அதனடிப்படையில் நேபாள ஜனநாயகக் குடியரசு நிறுவப்பட வேண்டும்” என்ற மாவோயிஸ்டுகளின் கோரிக்கையை இம்மக்கள் எழுச்சி எதிரொலித்தது.
இதைத் தொடர்ந்து அன்றைய நாடாளுமன்றத்தின் ஏழு அரசியல் கட்சிகள், விரைவில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடத்த உறுதியளித்து மாவோயிஸ்டுகளுடன் இணைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதைத் தொடர்ந்து ஐ.நா. மன்றத்தின் மூலம் இந்தியாவின் மேற்பார்வையில் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. மாவோயிஸ்டுகள் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் பங்கேற்று, இதர கட்சிகளைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்று புதிய இடைக்கால அரசை கடந்த ஆண்டு ஏப்ரலில் நிறுவினர்.
2006ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒப்பந்தப்படி, மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலைப்படை (கஃஅ) எவ்விதத் தாக்குதலிலும் ஈடுபடாமல் ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பாசறையில் இருக்க வேண்டும்; ஏறத்தாழ 23,000 பேர் கொண்ட இச்செம்படை, படிப்படியாக நேபாள இராணுவத்தில் இணைக்கப்பட்டு, புதிய நேபாள குடியரசுப் படையாக மாற்றியமைக்கப்படவும் வேண்டும். ஏற்கெனவே மன்னராட்சியின் கீழிருந்த ராயல் நேபாள் ஆர்மி என்றழைக்கப்படும் படையும் செம்படையும் இணைந்த புதிய படையே புதிய நேபாளக் குடியரசின் தேசிய இராணுவப் படையாகத் திகழும். மக்கள் எழுச்சி ஓங்கியிருந்த நிலையில், அன்று நாடாளுமன்றத்தின் ஏழு அரசியல் கட்சிகளின் கூட்டணியும் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன.
இந்த ஒப்பந்தப்படி மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலைப் படை ஐ.நா. மன்ற மேற்பார்வையில் பாசறைகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தப்படி, மக்கள் விடுதலைப்படை நேபாள இராணுவத்துடன் இணைப்பது மட்டும் இன்னும் நிறைவேறவில்லை. இதற்குப் பெருந்தடையாக இருப்பவர், தற்போதைய இடைக்கால அரசின் பொறுப்பிலுள்ள முன்னாள் மன்னராட்சிப் படையின் தலைமைத் தளபதியான ருங்மாங்கத் கடுவால்.
மக்கள் விடுதலைப் படையினரின் ஒரு பிரிவை இராணுவத்தில் இணைக்குமாறு மாவோயிஸ்டுகளின் தலைமையிலான இடைக்கால அரசு உத்தரவிட்ட போதிலும், இன்றுவரை அவர் அதை நிறைவேற்றவில்லை. போர்க் கலையில் முறைப்படி தேர்ச்சி பெற்றுள்ள மக்கள் விடுதலைப் படையின் 4000 கொரில்லாப் போராளிகளை மட்டும் இராணுவத்தில் இணைக்குமாறும், எஞ்சியோரை துணை இராணுவபோலீசு படைகளில் இணைக்குமாறும் நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா கடந்த ஆண்டில் நடந்த ஐ.நா. மன்றக் கூட்டத்திலேயே வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் ஐ.நா. மன்றம் சமாதான ஒப்பந்தப்படி குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட மேற்கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தலைமைத் தளபதி ருங்மாங்கத் கடுவால், 2800 பேரை புதிதாக இராணுவப் படையில் தன்னிச்சையாகச் சேர்த்தார். அமைச்சரவையின் உத்தரவோ ஒப்புதலோ இல்லாமல் இப்படி இராணுவத்துக்கு ஆளெடுத்துச் சேர்த்துக் கொள்வது சட்டப்படி குற்றம் என்று சுட்டிக் காட்டி, மாவோயிஸ்டுகளின் இடைக்கால அரசு விளக்கம் கோரியது. அதற்கு தலைமைத் தளபதி இன்றுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதுதவிர, இவ்வாண்டின் தொடக்கத்தில் பணி ஓய்வு பெறும் பிரிகேடியர் ஜெனரல் பதவி வகித்த 8 இராணுவ அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக பணி நீட்டிப்பைச் செய்தார். இவ்வாறு செய்வது சட்டவிரோதமானது என்று மாவோயிஸ்டுகள் பிறப்பித்த உத்தரவை அவர் உதாசீனம் செய்துள்ளார். மேலும், நேபாளத்திலுள்ள இதர நாடுகளின் இராணுவ தூதரகங்களுக்கு, மாவோயிஸ்டுகள் தமது இராணுவ பலத்தைக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை நிறுவ சதிகளில் ஈடுபட்டு வருவதாக அவதூறு செய்து பீதியூட்டி இத்தளபதி இரகசிய கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
நேபாள இராணுவத் தளபதி, மாவோயிஸ்டுகளின் அரசுக்குக் கட்டுப்பட்டவரா? அல்லது அரசுக்கு மேலானவரா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் உள்ளதா; அல்லது இராணுவத் தளபதிக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது இரட்டை அதிகாரம் நீடிக்க வேண்டும் என்று மக்கள் தீர்ப்பளித்துள்ளார்களா? இந்தக் கேள்விகளை நாட்டின் முன்வைத்த மாவோயிஸ்டுகளின் இடைக்கால அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குக் கட்டுப்பட மறுத்துச் சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் தலைமைத் தளபதி ருங்மாங்கத் கடுவாலை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
···
ராயல் நேபாள் ஆர்மி என்றழைக்கப்பட்ட மன்னராட்சிப் படையின் தலைமைத் தளபதியான ருங்மாங்கத் கடுவால், முன்னாள் மன்னர் மகேந்திராவின் (மக்கள் எழுச்சியில் தூக்கியெறியப்பட்ட மன்னர் ஞானேந்திராவின் தந்தை) வளர்ப்பு மகன். இந்தியாவின் நேஷனல் டிபன்ஸ் அகாடமி, இந்தியன் மிலிடெரி அகாடமி ஆகியவற்றில் போர்க்கலை பயிற்சி பெற்றவர். இந்தியாவின் நம்பகமான விசுவாசி. மன்னராட்சியின் விசுவாசமான அடியாள். “ஆரவாரக் கூச்சல்மிக்க ஜனநாயகத்தைவிட அறிவார்ந்த மன்னராட்சி முறையே மேலானது” என்று 2002இல் மன்னர் ஞானேந்திரா, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கலைத்த போது, அதை நியாயப்படுத்தி வாதிட்டவர். மன்னராட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களையும், 2006இல் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சியையும் கொடூரமாக ஒடுக்கிய போர்க் குற்றவாளி, மன்னராட்சி வீழ்த்தப்பட்ட பிறகு நிறுவப்பட்ட ரேமஜ்கி கமிசன், இவர் மீதும் இவர் தலையிலான இராணுவப் படையின் மீதும் போர்க் குற்றங்கள் அட்டூழியங்களுக்கு எதிராக விசாரணையும் நடத்தி வருகிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியாட்சிக்குக் கட்டுப்பட மறுத்து, குடியாட்சிக்கு மேலான அதிகாரமாகத் தன்னைக் கருதிக் கொண்டு சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் ருங்மாங்கத் கடுவால் செயல்படுவதற்குக் காரணமே, இந்தியாவின் ஆதரவுதான். இந்தியா திரைமறைவில் இருந்து கொண்டு கொடுக்கும் தைரியத்தில்தான் அவர் இப்படி ஆட்டம் போடுகிறார்.
பிரதமர் பிரசண்டா, தலைமைத் தளபதி சட்டவிரோதமாகச் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியபோது, அவ்வாறு செய்யக்கூடாது என்று இந்தியா, நேபாள மாவோயிஸ்டு அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. மறுபுறம், மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தி முடக்கும் நோக்கத்துடன் நேபாளத்துக்கான இந்தியத் தூதர் நேபாள அரசியல் கட்சிகளிடம் திரைமறைவு பேரங்களை நடத்தி வந்தார். இவற்றின் வெளிப்பாடாக, தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள இடைக்கால அரசின் அதிபரான ராம்பரன் யாதவ் ரத்து செய்து, தலைமைத் தளபதி தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு உத்தரவிட்டார். இதன் மூலம் நேபாளத்தில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை அவர் அரங்கேற்றி, இடைக்கால அரசுக்கும் அரசியல் நிர்ணய சபையின் செயல்பாடுகளுக்கும் பெரும் முட்டுக் கட்டை போட்டுள்ளார்.
இடைக்கால அரசில் மாவோயிஸ்டுகளுக்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சி என்ற முறையில் யு.எம்.எல். எனப்படும் போலி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ராம்பரன் யாதவ் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சட்டப்படி, பிரதமரின் உத்தரவை ரத்து செய்யும் அதிகாரம் அதிபருக்குக் கிடையாது. நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. பிரதமரின் உத்தரவின் மீது அதிபருக்கு உடன்பாடு இல்லாதபட்சத்தில் தனது மாற்றுக் கருத்தைக் குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி உத்தரவிடும் அதிகாரம் மட்டுமே அவருக்கு உள்ளது. இருப்பினும், சட்டவிரோதமான வழியில் அவர் பிரதமரின் உத்தரவை ரத்து செய்து, தலைமைத் தளபதியைப் பதவியில் நீடிக்க உத்தரவிட்டுள்ளார். தலைமைத் தளபதியைப் பதவி நீக்கம் செய்து பிரதமர் பிரசண்டா உத்தரவிட்ட உடனேயே, நேபாள நாடாளுமன்றக் கட்சிகள் பிரசண்டாவுக்கு எதிராக தலைநகர் காத்மண்டுவில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொடங்கின.
சதிவேலைகள் வேகமான நடந்தன. மக்கள் எழுச்சியில் தூக்கியெறியப்பட்ட முன்னாள் மன்னன் ஞானேந்திரா, டெல்லிக்கு பறந்து வந்து சோனியாவைச் சந்தித்தார். திரைமறைவில் ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு அரங்கேறிக் கொண்டிருந்தது. இடைக்கால அரசின் நாடாளுமன்றப் பிற்போக்குக் கட்சிகள் நேபாள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் ஆசியுடனும் ஆதரவுடனும் ஆட்சிக் கவிழ்ப்புக்கான சதியில் ஈடுபடுவதைக் கண்ட மாவோயிஸ்டுகள், தமது அமைச்சரவை பதவி விலகுவதாக அறிவித்தனர். இருப்பினும் நாடாளுமன்றத்தில் தமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும், அரசியல் நிர்ணய சபையின் பணிகளுக்குத் தடையாக இருக்காது என்றும் இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களையும் ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளையும் நாட்டு மக்களுக்குப் பகிரங்கமாக தோழர் பிரசண்டா அறிவித்தார். நேபாளத்தின் மக்களாட்சியை கருவிலேயே கொல்வதற்கு இந்தியா சதி செய்கிறது என்று மாவோயிஸ்டுகள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
மாவோயிஸ்டுகளுக்கும் மக்களாட்சிக்கும் எதிராக இந்தியா நீண்ட காலமாகவே சதிகளில் ஈடுபட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டில் மன்னராட்சிக் கொடுங்கோன்மைக்கு எதிராக நடந்த மக்கள் பேரெழுச்சியின் பலன்களை அம்மக்கள் அனுபவிக்க விடாமல் தடுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் மும்முரமாக இருந்தன. மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, அமெரிக்கா வெளிப்படையாகவே மன்னராட்சியை ஆதரித்து நின்று ஆயுத உதவிகளைச் செய்தது. மன்னராட்சியுடன் கூடி நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் “இரட்டைத் தூண்” கொள்கையுடன் இந்தியா மன்னராட்சியை முட்டுக் கொடுத்து ஆதரித்தது. உலகின் ஒரே இந்து நாடு என்று கூறிக் கொண்டு இந்து வெறி ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதப் பரிவாரங்கள் மன்னராட்சியை ஆதரித்து நின்றன. மாவோயிஸ்டுகளைப் பயங்கரவாதக் கும்பலாகக் காட்டி மன்னராட்சியுடன் சீனா கூடிக் குலாவியது.
நேபாள ஓட்டுக் கட்சிகள் இப்பிற்போக்குச் சக்திகளுடன் சமரசமாக நடந்து கொண்டு மன்னராட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தைச் சீர்குலைக்க முயற்சித்தன. இவையனைத்தையும் எதிர்கொண்டு முறியடித்து, மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கி நேபாளத்தின் தீர்மானகரமான அரசியல் சக்தியாக மாவோயிஸ்டுகள் உயர்ந்து நின்றனர். அதன்பிறகு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலின்போது அதைச் சீர்குலைக்க நேபாளத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள மாதேசி பிரிவினருக்கு இரகசிய ஆயுத உதவிகள் செய்து இந்தியா தாக்குதல்களை நடத்தியது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் தலைமையில் இடைக்கால அரசு நிறுவப்பட்ட பின்னரும், பசுபதிநாதர் கோயில் தலைமைப் பூசாரி நியமனம் உள்ளிட்டு இந்தியாவின் சீர்குலைவு சதி வேலைகள் குறையவில்லை.
“பாசறைகளில் இருத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலைப் படையை நேபாள இராணுவத்தில் இணைப்பதன் மூலம், இராணுவத்தைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தி, தமது ஏகபோக சர்வாதிகாரத்தை நிலைநாட்ட மாவோயிஸ்டுகள் முயற்சிக்கிறார்கள். நேபாளத்தைத் தளமாகக் கொண்டு இந்திய மாவோயிஸ்டுகளுக்கு ஆயுதப் பயிற்சியும் உதவியும் செய்து இந்தியாவின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க சதி செய்கிறார்கள். சீனாவுடன் கூட்டுச் சேர்ந்து இந்தியாவை முற்றுகையிட்டுச் சிதைக்கத் துடிக்கிறார்கள்” என்று ‘தேசிய’ பத்திரிகைகள் வாயிலாக இந்திய அரசு அவதூறு செய்து பீதியூட்டி வருகிறது. இந்துவெறி பா.ஜ.க.வினர் இந்தக் கருத்துக்களை தமது பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதி வருகின்றனர்.
இவையெல்லாம் இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகள் என்பதை தோழர் பிரசண்டா “இந்து” நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியே மெய்ப்பித்துக் காட்டுகிறது. மாவோயிஸ்டு போராளிகள் நேபாள இராணுவத்தில் இணைக்கப்பட்டாலும், சட்டப்படி அந்த இராணுவம் குடியாட்சிக்கும் நாடாளுமன்றத்துக்கும் கட்டுப்பட்டுத்தான் செயல்படுமே தவிர, ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட முடியாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
···
சீன முதலாளித்துவ அரசு நேற்றுவரை நேபாள மன்னராட்சியுடன் கூடிக் குலாவி மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகளாகச் சித்தரித்து வந்தது. இந்திய மேலாதிக்கத்தை அங்கீகரித்து வந்த அன்றைய நேபாள மன்னராட்சி, சீனாவுடனும் ஒப்பந்தம் போட்டுள்ளது. இன்று மாவோயிஸ்டுகள் தலைமையில் ஆட்சி அமைந்த பின்னர், இந்த ஆட்சியையும் அங்கீகரித்து சீன அரசு நட்புற ஒப்பந்தம் போடுகிறது. அன்றைய மன்னராட்சி, சீனாவுடன் ஒப்பந்தம் போட்டது பிரச்சினை இல்லை; மாவோயிஸ்டு அரசு ஒப்பந்தம் போடுவதுதான் அபாயம் என்கிறது இந்தியா. இந்த ஒப்பந்தம், நாட்டுக்கும் மக்களுக்கும் நன்கு தெரிந்த வர்த்தகநட்புறவு ஒப்பந்தம்தானே தவிர, அதிலே இரகசியங்களோ, திரைமறைவுச் சதிகளோ எதுவுமில்லை.
ஆசிய கண்டத்தில் வளர்ந்து வரும் வல்லரசாக உருப்பெற்றுள்ள சீன முதலாளித்துவ அரசு, தனது சந்தைக்காக தெற்கு தென்கிழக்காசிய நாடுகளின் பிற்போக்கு பாசிச ஆட்சிகளை வெட்கமின்றி ஆதரித்து நிற்கிறது. குறிப்பாக, ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரச் சரிவுக்குப் பின்னர், தெற்காசிய சந்தையைக் கைப்பற்ற இந்தியாவுடன் அது மூர்க்கமான போட்டாபோட்டியில் இறங்கியுள்ளது.
ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க அதிநவீன ஆயுதங்களை சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே அரசுக்கு சீனா வழங்கியுள்ள போதிலும், அதை அங்கீகரிக்கும் இந்தியா, நேபாள மாவோயிஸ்டு அரசு அண்டை நாடான சீனாவுடன் நட்புறவு ஒப்பந்தம் போடுவதை அபாயமாகச் சித்தரிக்கிறது. இலங்கை அரசைப் போல இந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு, சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆயுதங்களை வாங்கிக் குவித்து ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்தால் பிரச்சினை இல்லை; அதற்கு மாறாக இந்திய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து சுயேட்சையாக சீனாவுடன் நேபாள அரசு ஒப்பந்தம் போட்டால், அது இந்தியாவுக்கு ஆபத்து என்பதுதான் இந்திய மேலாதிக்கவாதிகளின் அறிவிக்கப் படாத கொள்கை.
அணுஆயுத பலமும், பெரும் இராணுவ பலமும் கொண்ட இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயுள்ள சிறிய நாடுதான் நேபாளம். எனினும் நேபாள மாவோயிஸ்டுகள் இந்திய மேலாதிக்கத்தையோ அல்லது சீன மேலாதிக்கத்தையோ ஏற்றுக் கொண்டு நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தத் தயாராக இல்லை. எனவேதான், இந்தியாவின் மேலாதிக்கத்தைத் திணிக்கும் ஏற்கெனவே உள்ள இந்திய நேபாள ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, புதிய ஒப்பந்தத்தை நேபாளத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்றும் மாவோயிஸ்டுகள் கோருகிறார்கள்.
தனது மேலாதிக்க நோக்கங்கள் ஈடேறாமல் தொடர்ந்து அம்பலப்படுவதால் கீழ்த்தரமான சதிகளில் இறங்கிய இந்திய அரசு, தலைமைத் தளபதி விவகாரத்தை வைத்து ஓர் ஆட்சிக் கவிழ்ப்பை நேபாளத்தில் அரங்கேற்றியிருக்கிறது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சி உச்சத்தில் இருந்தபோது, மாவோயிஸ்டுகளுடன் ஓடோடி வந்து கூட்டணி கட்டிக் கொண்ட நேபாள அரசியல் கட்சிகள் இன்று பதவி சுகத்துக்காக இந்திய மேலாதிக்கச் சதிகளுக்குத் துணை நின்று துரோகமிழைக்கின்றன. மாவோயிஸ்டுகள் பதவி விலகிய பிறகு, கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்கக் கூட அக்கட்சிகளுக்கு அருகதையில்லை. ஏறத்தாழ இரண்டு வாரங்களாக இக்கட்சிகளுக்கிடையே பதவிக்கான நாய்ச்சண்டைகள் நடந்து, நீண்ட இழுபறி சமரசங்களுக்குப் பிறகுதான் யு.எம்.எல் என்ற போலி கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு தலைவரான மாதவ குமார் நேபாள் பிரதமராக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய துரோகங்களும் சதிகளும் மாவோயிஸ்டுகள் எதிர்பாராததல்ல. இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று தெரிந்துதான் அவர்கள் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலில் பங்கேற்று, அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார்கள். ஒருபுறம், மேலிருந்து அதிகாரம் செலுத்துவது என்ற செயலுத்தியைப் பின்பற்றிய அதேசமயம், கீழிருந்து அரசியல் போராட்டங்களைக் கட்டியமைக்கும் நடைமுறையையும் அவர்கள் மேற்கொண்டார்கள். இதனால்தான் மேலிருந்து அதிகாரம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் குறுகிவிட்ட நிலையில், கீழிருந்து மக்களைத் திரட்டி வெகுவிரைவாக அரசியல் போராட்டங்களை அவர்களால் கட்டியமைக்க முடிகிறது.
இந்தியாவின் மேலாதிக்கம், ஈழத் தமிழர்களின் மீதான சிங்கள இனவெறி பாசிசப் போரில் மட்டுமின்றி, வடக்கிலுள்ள அண்டை நாடான நேபாளத்திலும் விரிவடையத் துடிக்கிறது. கிழக்கே வங்கதேசம் தொடங்கி, மேற்கே ஆப்கானிஸ்தான் வரை அதன் மேலாதிக்கக் கொடுங்கரங்கள் நீள்கின்றன. அன்றைய ஜாரிஸ்டு ரஷ்யா எவ்வாறு உலகின் பிற்போக்கின் கோட்டையாக இருந்து, புரட்சிகர ஜனநாயக சக்திகளை ஒடுக்கியதோ, அதைப் போலவே இன்றைய இந்தியா திகழ்கிறது. அன்றைய ஜார் ஆட்சியை, தோழர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகளும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் எவ்வாறு புரட்சியில் இறங்கி வீழ்த்தினார்களோ, அதைப் போலவே இந்திய மேலாதிக்கத்தை வீழ்த்த கம்யூனிசப் புரட்சியாளர்களும் புரட்சிகர ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரண்டெழுந்து போராடுவதைத் தவிர இனி வேறு வழியில்லை.
கட்டுரையாளர்: பாலன்
புதிய ஜனநாயகம், ஜூன்'2009,