Sun04052020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!

பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!

  • PDF

சென்ற ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கிய முதலாளித்துவத்தின் நெருக்கடி என்று மறைக்கப்படும் முதலாளித்துவத்தின் அழிவுப் பாதை, தனது தடத்தை எல்லா நாடுகளிலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் மீது ஏற்றி வருகிறது.

 இதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு என வேறுபாடில்லாமல் முழு உலகமே பாதிப்படைந்து வருகிறது. போரை ஒத்த அழிவினை ஏற்படுத்தும் இந்த பொருளாதாரச் சுனாமியில், முதலாளிகளைக் காப்பாற்றுவதற்கு மட்டும் மேற்குலகின் அரசாங்கங்கள் கோடி கோடியாக மக்கள் பணத்தினை இனாமாக வழங்கின.


ஆனால், இந்தப் பிரச்சினையை ஒட்டி எல்லா நாடுகளிலும் ஏராளமானோர் வேலையிழந்தும், குறைந்த பட்ச வாழ்க்கை வசதிளைக்கூடப் பெறமுடியாமலும் தவித்து வருகின்றனர். தங்களது இலாபத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முகமாக, எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை அதிவேகமாக செய்து வரும் வேளையில் திடீரென்று வேலையிழந்து தெருவில் நிற்கும் இம்மக்களைப் பற்றி அக்கறைப்பட எந்த அரசாங்கமும் தயாராக இல்லை. இந்த அநீதியைக் கண்டு தற்போது மேலைநாடுகளில் காட்டுத்தீயாய் மக்கள் போராட்டம் பற்றி வருகின்றது.


திவாலான ஏ.ஐ.ஜி என்ற அமெரிக்க காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு அளித்த உதவிப்பணம், அந்நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு போனஸ் என்ற பெயரில் வழங்கப்பட்டதை எதிர்த்து அங்கே நடந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ஒபாமா நிர்வாகம், அந்த போனசுக்கு 90% வரி விதித்திருக்கிறது. அமெரிக்காவில் மட்டும் பல இலட்சம்பேர் வேலையிழந்தும், வீடிழந்தும் தவித்து வருகின்றனர். ஐரோப்பா போல இங்கு மக்கள் சேமநலத் திட்டங்கள், ஒதுக்கீடு எதுவுமில்லை. ஒருவர் வேலையிழந்தால் மருத்துவம், வீடு, கல்வி எதுவும் அவருக்கு கிடைக்காது.


பிரான்சில் அதிபர் சர்கோசி இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நிதித்துறை மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களைக் காப்பாற்ற பெரும் நிதி ஒதுக்கியிருக்கிறார். மேலும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும் வேலையையும் கருமமாக செய்து வருகிறார். இதன் சங்கிலித் தொடர் விளைவாக பிரான்சில் வேலையிழந்தோர் விகிதம் விரைவில் பத்து சதவீதத்தை எட்டிவிடுமென்று தெரிகிறது. குறிப்பாக, இளைஞர்கள் இந்த வேலையின்மையால் பாதிக்கப்பட்டிருப்பது ஒரு சமூகக் கொந்தளிப்பாக மாறியிருக்கிறது.


கடந்த ஜனவரி, மற்றும் மார்ச் மாதங்களில் பிரான்சில் நடந்த பொது வேலை நிறுத்தத்தில் முன்னதில் பத்து இலட்சம்பேரும், பின்னதில் முப்பது இலட்சம் பேரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிபர் சர்கோசி இந்த எதிர்ப்பியக்கத்தைப் பார்த்து தனது நாடு ஆட்சி செய்வதற்கு மிகவும் சிரமமானது எனத் திருவாய் அருளியிருக்கிறார்.


பிரான்சிலும், இங்கிலாந்திலும் வேலையிழந்த சில தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது நிறுவனத் தலைவர்களை அறையில் முடக்கி முற்றுகைப் போராட்டத்தை பல மணிநேரம் நடத்தியிருக்கின்றனர். நேட்டோ அமைப்பின் அறுபதாவது ஆண்டை ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கொண்டாடி வரும் வேளையில், மக்களோ தமது முதலாளித்துவ எதிர்ப்பைக் காட்டுவதற்கு அந்த தினத்தை பயன்படுத்தினர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.


இந்தச் சூழலில்தான் உலகப் பொருளாதாரப் பிரச்சினையைத் தணிப்பதற்கு, வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்ற ஜி20 கூட்டமைப்பின் சந்திப்பு இலண்டனில் நடந்தது. இந்த மாநாட்டில் பன்னாட்டு நிதி நிறுவனத்துக்கு நூறாயிரம் கோடி டாலர் பணம் ஒதுக்கி, வளரும் நாடுகளுக்கு கடன் கொடுக்க வளர்ந்த நாடுகள் சம்மதித்திருக்கின்றனவாம். மேலும், இனிமேல் இரகசியமான வங்கி முறையைக் கைவிட்டு வெளிப்படையான உலகமெங்கும் ஒரே விதிமுறைகளைக்கொண்ட வங்கி முறையை ஏற்படுத்தப் போகிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 
இவையெல்லாம் மக்களைக் காப்பாற்றுவதற்காக இல்லை, முதலாளிகள் அளவு கடந்து சூதாடக்கூடாது என கடிவாளம் இடுவதற்குத்தான். எனினும், சூதாட்ட மற்றும் குமிழ் பொருளாதார நிலைக்கு வந்து விட்ட முதலாளித்துவம் தனது கோரப்பிடியை மேலும் இறுக்க முடியுமே ஒழிய, அதிலிருந்து விடுபட முடியாது. இறுதியில், இந்தச் சுமை மக்களின் மேல் சுமத்தப்படும். அதற்குத்தான் ஐ.எம்.எப்.பின் முதலீட்டைக் கூட்டி, வளரும் நாடுகளைக் கடனின் பெயரால் அச்சுறுத்துவதற்கு முன்னேறிய நாடுகள் முடிவு செய்தன.


இலண்டனில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடந்த இந்த அரசாங்கங்களின் சந்திப்பை எதிர்த்து மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருக்கிறது. இந்தப் போராட்டத்தைக் கடும் போலீசு அடக்குமுறை மூலம் இங்கிலாந்து அரசு ஒடுக்கப் பார்த்தது. இதில் ஒருவர் இறந்து போக, பலர் காயமுற்று, நூறுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போராட்டக்காரர்களை ஒரே இடத்தில் பல மணிநேரம் முடக்கி, கண்ணீர் குண்டு, ரப்பர் தோட்டாக்களால் சுட்டு ஒடுக்கியும் போலீசு வெறியாட்டம் நடத்தியது. ஆனாலும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்கள் “முதலாளித்துவம் ஒழிக! சோசலிசமே மாற்று” என கம்பீரத்துடன் முழக்கமிட்டனர்.

 
கூட்டமைப்பின் சந்திப்பை வெற்றிகரமாக நடத்துவதை விட, போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு இங்கிலாந்து அரசு திணறியது. இந்த போலீசு ஒடுக்கு முறையை இலண்டன் மேயர் நியாயப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் முதலாளித்துவத்தின் நெருக்கடியை எதிர்த்து போராடினால், போலீசு இராச்சியம்தான் தீர்வு என்பதை மேற்கத்திய நாடுகள் அமல்படுத்தத் துவங்கலாம். முதலாளித்துவ பொருளாதாரம் சீர்குலைந்தால், அதன் ஜனநாயகமும் பாசிச அவதாரமெடுப்பதுதானே விதி!


ஆனாலும் அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா வரை அன்றாடம் வலுக்கும் இந்த மக்கள் போராட்டம், நிச்சயம் ஒருநாள் முதலாளித்துவத்தின் கழுத்தை நெரிப்பது உறுதி. “பிரான்டியர்” ஆங்கில வார ஏடுக்குக் கடிதம் எழுதிய ஒரு அமெரிக்க அஞ்சல்துறை ஊழியர், “ இரசியாவில் குறுகிய காலத்திலேயே அரசியல் விழப்புணர்வைப் பெற்ற தொழிலாளி வர்க்கத்தைப் போல, தற்போது அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் நெருக்கடியைப் பட்டு அனுபவித்து அரசியல் விழப்புணர்வைத் தொழிலாளி வர்க்கம் அடையத் தொடங்கியிருக்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான்! கம்யூனிசம் பல காலம் போதித்து வரும் பிரச்சினையை, தற்போது முதலாளித்துவத்தின் தயவில் தொழிலாளிகளும், பிற மக்களும் வேகமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். இந்த உணர்தல் அரசியல் சக்தியாக உருப்பெற்று, குறிப்பான இலக்குடன் போராடும் போது, நிச்சயமாக மேலை நாடுகளின் அரசாங்கங்கள் அமைதியாகக் காலம் கழிக்க முடியாது.


கட்டுரையாளர்: சுப்பு

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,

Last Updated on Thursday, 11 June 2009 06:33