Language Selection

உலகத்தின் அனைத்து நாடுகளையும் பிடித்தாட்டும் பொருளாதாரத் தேக்கத்தினை உடைக்க ஏகாதிபத்திய நாடுகளும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட சில “வளர்ந்து’’வரும் நாடுகளும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் மாநாடு ஒன்றினை நடத்தின.

 “பெரும் இருபது நாடுகள் மாநாடு” (G 20) என அழைக்கப்பட்ட இம்மாநாட்டினை முதலாளித்துவவாதிகள் வாராது வந்த மாமணி போலக் கூத்தாடி வரவேற்க, உழைக்கும் மக்கள் இம்மாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடத்தினர்.


‘‘இப்பொருளாதார மந்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளுக்குச் சலுகை அடிப்படையில் கடன்; மேற்குலக நாடுகளின் சந்தையை எவ்விதத் தடையுமின்றி ஏழை நாடுகளுக்குத் திறந்து விடுவது; சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை வேட்டையாடிக் கொண்டு வருவது; தேவைப்படும் நிதி ஆதாரங்களைச் சந்தையில் கொட்டுவது” என இம்மாநாட்டில் தீர்மானங்கள் இயற்றப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

 

இம்மாநாடு நடந்து முடிந்த பின் பங்குச் சந்தையில் “காளைகள்” புகுந்து விளையாடின. தண்ணியடித்தவன் போதையேறி “அலப்பரை” பண்ணிவிட்டுப் பின் “பிளாட்” ஆகிவிடுவது போல பங்குச் சந்தையும் ஒரு வார காலம் ஆட்டம்காட்டிவிட்டுப் பின் படுத்துவிட்டது. இதைத் தவிர, இம்மாநாடு உலகின் பொருளாதாரத் தேக்கத்தை உடைக்க வேறெந்தச் சாதனையையும் செய்யவில்லை.
இதனை வைத்துக்கொண்டு இம்மாநாடு தோல்வியடைந்துவிட்டதாக ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது. ஏகாதிபத்திய நிதியாதிக்கக் கும்பல் எதைச் சாதிக்க விரும்பியதோ, அதை இந்த மாநாட்டின் மூலம் சாதித்துக் கொண்டன என்பதுதான் உண்மை.


கூடுதலான நிதி ஆதாரங்களைச் சந்தையில் கொட்டுவது என்ற இம்மாநாட்டில் எடுத்த முடிவின்படி 1,10,000 கோடி அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 50 முதல் 55 இலட்சம் கோடி ரூபாய்) பெறுமான நிதியுதவி உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இந்த நிதியுதவியை ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் கொடுக்கப் போவதில்லை. இந்த நிதி நிறுவனங்களில் உறுப்பினர்களாக இருக்கும் ஏழை நாடுகளும் தங்களின் “தகுதி’’க்கு ஏற்ப வழங்க வேண்டும். குரங்கு ஆப்பத்தைப் பங்குபோட்டு விழுங்கிவிட்ட கதையைப் போல, இந்தக் கூடுதல் நிதி ஆதாரங்களை ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் வளைத்துப் போட்டுக் கொள்ளும் சதிதான் இந்த மாநாட்டில் நடந்துள்ளது.


உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், 1990ஆம் ஆண்டுகளில் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியாலும், தற்பொழுது ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடியாலும் சர்வதேச நாணய நிதியம் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு உயிர் வாழப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு உயிர் தண்ணீர் ஊற்றுவது போல, இந்த 55 இலட்சம் கோடி ரூபாயில் இருந்து 37,50,000 கோடி ரூபாய் (750 கோடி அமெரிக்க டாலர்) சர்வதேச நாணய நிதியத்தின் மடியில் கொட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.


அந்நிறுவனம் இந்தப் பணத்தில் 500 கோடி அமெரிக்க டாலரை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குக் கடன் வழங்கப் பயன்படுத்திக் கொள்ளுமாம். குறிப்பாக, இப்பொருளாதார நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த முன்னாள் சோசலிச நாடுகளுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுமாம். அந்நாடுகள் இக்கடனைக் கொண்டு தாங்கள் ஏற்கெனவே வாங்கிய கடனை அடைத்துக் கொள்ள வேண்டுமாம். தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரடியாகச் சொன்னால், முன்னாள் சோசலிச நாடுகளுக்குக் கடன் வழங்கிய மேற்கு ஐரோப்பிய வங்கிகளை மீட்பதுதான் இதன் பின் மறைந்துள்ள சங்கதி.


குரங்கு ஆப்பத்தைப் பங்கு போட்டுக் கொண்ட கதை இதோடு முடியவில்லை. மீதமுள்ள 250 கோடி அமெரிக்க டாலரை (12,50,000 கோடி ரூபாய்) சர்வதேச நாணய நிதியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் அனைத்தும் தங்களுக்கு அந்நிதியத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு ஏற்ப, நிதியுதவியாகப் பெற்றுக் கொள்ளும் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் சம உரிமை வழங்கப்படவில்லை. அந்நிதியத்தில் வல்லான் வகுத்ததுதான் வாய்க்கால். இக்கணக்கின்படி பார்த்தால், இந்த 37,50,000 கோடி ரூபாயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை நாடுகளுக்கு நிதியுதவியாகவோ கிடைக்கப் போவது வெறும் 3,50,000 கோடி ரூபாய்தான்.

ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் பொருளாதார சுமையை ஏழை நாடுகள் மீது நைச்சியமாக ஏற்றி வைக்கும் இந்த வஞ்சகத்தைப் பற்றி இந்தியா வாய் திறக்கவேயில்லை. மாறாக, ஏகாதிபத்திய நாடுகள் இந்த மாநாட்டிற்குத் தன்னை அழைத்ததையே பெரும் பாக்கியமாகக் கருதி வருகிறது. ஏகாதிபத்திய நாடுகள் மட்டுமே பங்கு கொண்டு வந்த ஜி 8 கூட்டணி, இப்போது ஜி 20 கூட்டணியாக மாறியிருப்பதாகவும், இது இந்தியா, பிரேசில், சீனா போன்ற “வளர்ந்து’’ வரும் நாடுகளின் பொருளாதார பலம் அதிகரித்து வருவதை ஏகாதிபத்திய நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டதைக் காட்டுவதாகவும் முதலாளித்துவ அறிஞர்கள் குதூகலிக்கின்றனர். மேலும், “வளர்ந்து” வரும் நாடுகளின் இப்பொருளாதார பலத்திற்கு ஏற்ப சர்வதேச நாணய நிதியத்தை “ஜனநாயக’’ப்படுத்தவும் ஏகாதிபத்திய நாடுகள் ஒத்துக்கொண்டிருப்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


வட்டிக் கடையை “ஜனநாயக’’ப்படுத்துவதால், ஏழைகளுக்கு என்ன பலன் கிடைத்துவிடும்? “ஆடுகளின் பாதுகாப்பை ஓநாயிடம் ஒப்படைக்கும் பித்தலாட்டம் இது” என இந்த இலண்டன் மாநாட்டு நிதியுதவித் திட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார், பொலிவியா நாட்டின் அதிபர் இவா மோரலெஸ். இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளிடம் பல இலட்சம் கோடி ரூபாய் பெறுமான அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பாகக் குவிந்து கிடக்கிறது. இந்தக் கையிருப்பை தங்களின் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில்தான், ஏகாதிபத்திய நாடுகள் இலண்டன் மாநாட்டிற்கு சில ஏழை நாடுகளை வலியப் போய் அழைத்தன.


இலண்டன் மாநாட்டிற்கு முன்பாக, அமெரிக்க டாலர் சர்வதேச செலாவணியாக இருப்பதை மாற்றக் கோரி சீனா சில ஆலோசனைகளை முன் வைத்தது. ஏகாதிபத்திய நாடுகள் இந்த ஆலோசனைகளை மாநாட்டில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் திட்டமிட்டே புறக்கணித்தன. ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஒத்தூதுவதைத் தவிர, வேறெந்த உரிமையும் ஏழை நாடுகளுக்குக் கிடையாது என்பதுதான் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்கை. இதை நன்கு புரிந்து வைத்திருப்பவர்தான் திருவாளர் மன்மோகன் சிங். இம்மாநாட்டில் சீனாவின் கோரிக்கையைப் பற்றி வாய்திறக்கவே மறுத்துவிட்டார், அவர்.


அது மட்டுமல்ல, இம்மாநாடு நடந்து கொண்டிருந்த பொழுது, ஐரோப்பாவைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் “வங்கிகளை முற்றுகையிடுவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். மன்மோகன் சிங்கோ, இந்த நெருக்கடிக்கு வங்கி அதிபர்களையோ, அதிகாரிகளையோ பொறுப்பாக்கக் கூடாது எனப் பேசி, திருடர்களுக்கு வக்காலத்து வாங்கினார்.


இப்பொருளாதார நெருக்கடியை ஆராய்ந்து தீர்வு சொல்வதற்காக ஐ.நா. மன்றத்தால் அமைக்கப்பட்ட கமிட்டி, தனது அறிக்கையில் இப்பொருளாதார நெருக்கடிக்கு ஏகாதிபத்திய நாடுகள்தான் காரணம் எனக் குற்றம் ”மத்தியிருப்பதோடு, இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஏழை நாடுகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பலன் தரக்கூடிய வகையில் சில சீர்திருத்த சலுகை நடவடிக்கைகளை எடுக்கக் கோரி ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையை அமுக்கிவிட வேண்டும்; ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த நிதியாதிக்கக் கும்பல்களின் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் இலண்டன் மாநாடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கும்பலின் இத்தீய எண்ணத்தை, இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட சில ஏழை நாடுகள் வழிமொழிந்துள்ளன என்பதுதான் கசப்பான உண்மை.


கட்டுரையாளர்: திப்பு

 

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,