எம்.ஜி.ஆருக்கு அடியாளாகவும், மாமாவாகவும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியாருக்கு ஏழெட்டு பொறியியல் கல்லூரிகள் உண்டு. அதிலொன்று புனித ஜோசப் பொறியியல் கல்லூரி.

இக்கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முதலாமாண்டு படிக்கும் விவேக் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர். விடுதியில் தங்கிப் படிக்கும் விவேக் கல்லூரியின் செமஸ்டர் தேர்வுக்கான கணினி செய்முறைத் தேர்வின் போது நண்பனது பாஸ்வோர்டை பயன்படுத்தி லாஃக் இன் செய்தாரென குற்றம் சாட்டப்பட்டார். இதனால் அவரை செமஸ்டர் தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்த நிர்வாகம் இது தொடர்பாக கல்லூரி இயக்குநரை சந்திக்குமாறு உத்திரவிட்டது. அதன்படி இயக்குநர் வாசலில் மூன்று முழுநாட்கள் நின்றபடியே காத்துக் கிடந்தார் விவேக். ஆயினும் இயக்குநர் இவரை வேண்டுமென்றே சந்திக்கவில்லை.

jepeyar

இதனால் இரண்டு செய்முறைத் தேர்வுகள் எழுத முடியாமல் போயிற்று. அடுத்து வரும் செமஸ்டர் தேர்வும் எழுத முடியாவிட்டால் என்ன செய்வது என அதிர்ச்சியில் உறைந்து போன விவேக் தனது விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் படிக்கும் மற்ற மாணவர்களெல்லாம் தேர்வு எழுதிவிட்டு வருவதைப் பார்த்து தனது எதிர்காலத்தை எண்ணி மனமுடைந்து போன விவேக் இளவயதில் இந்த அவலமான முடிவை மேற்கொண்டுவிட்டார்.

கல்லூரி நிர்வாகத்தின் அப்பட்டமான மிரட்டலால் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டதை கண்டு கொதித்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அதை ஒடுக்குவதற்கு கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஜூன் பத்தாம் தேதி வரை கட்டாய விடுமுறை அறிவித்துவிட்டு விடுதியிலிருந்து அனைவரையும் வெளியேற்றியுள்ளது.

தனது சாவுக்கு முந்தைய கடிதத்தில் விவேக் தனக்காக தனது பெற்றோர் அளித்துள்ள நன்கொடை பணத்தை கல்லூரி நிர்வாகம் திரும்ப அளிக்கவேண்டுமெனவும், அந்தப் பணத்தை வைத்து தனது தம்பியின் காது அறுவை சிகிச்சை நடக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடிதத்தின் மொத்த விசயங்களை ஜேப்பியாருக்கு ஆதரவாக செயல்படும் போலீசு இதுவரை வெளியிடவில்லை.

முதலில் விவேக் செய்ததாகக் கூறப்படும் தவறுக்கு ஆதாரமில்லை. மேலும் எல்லா சுயநிதிக் கல்லூரிகளிலும் செய்முறைத் தேர்வு என்பது கடனுக்காக நடத்தப்படும் சடங்குதான். முக்கியமாக ஆசிரியர்கள் தங்களது வல்லமையைக் காட்டுவதற்கு இந்த தேர்வை ஆயுதமாக பயன்படுத்துவார்கள். ஒருவேளை விவேக் தவறு செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் அதற்காக அவரை பருவத் தேர்வுகள் எழுதுவதிலிருந்து நீக்கியது நிச்சயமாக மிகக் கடினமான தண்டனைதான். அதற்காக இயக்குநரை சந்தித்து விளக்கமளிக்க வேண்டுமென்பதற்காக அவரை சில நாட்கள் சிலை போல நிற்க வைத்து ரசித்தது நிர்வாகத்தின் அடக்குமுறைத் திமிரைக் காட்டுவதாகவே உள்ளது.

இத்தகைய தண்டனைகள் பள்ளிப்பருவத்தில் நடப்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரை எல்லா சுயநிதிக்கல்லூரிகளிலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. இதில் முன்னோடி, இக்கல்லூரிகளது கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஜேப்பியார்தான். சாராய ரவுடியாக கொடிகட்டிப் பறந்த இந்த மாவீரர் தனது கல்லூரிகளின் தர்பாரை இப்படித்தான் ரவுடித்தனமாக ஆட்சி நடத்துகிறார். இங்கே மாணவர்கள் தவறு செய்தால் முக்கியமாக நிர்வாகத்திற்கு எதிராக முனகினால் கூட கடுமையான தண்டனை தரப்படும். ஜேப்பியார் குழும கல்லூரிகளை அவரது குடும்பத்தினர்தான் ஆண்டு வருகிறார்கள். எல்லோரும் ஜேப்பியாரின் அவதாரங்கள்தான்.

மேலும் தண்டனை என்ற பெயரில் விடுதியிலிருக்கும் மாணவர்களுக்கு எல்லாப் பராமரிப்பு வேலைகளும் - கழிப்பறையை சுத்தம் செய்வது உட்பட - தரப்படும். நிர்வாகத்தோடு முரண்படும் மாணவர்கள் அலுவலக வாயிலேயே தவம் கிடக்க வேண்டும். இப்படி பல இலட்சம் ரூபாயை நன்கொடையாக அழுதுவிட்டு அல்லல்படும் மாணவர்களது அடிமைகளைப் போன்ற உளவியல் நிலைமையை யாரும் புரிந்து கொள்ளலாம்.

ஜேப்பியார் குழும கல்லூரிகளிலேயே அதிக நன்கொடை பெறப்படும் கல்லூரி புனித ஜோசப் கல்லூரிதான். அதிலும் பிரிவுக்கேற்றபடி நன்கொடை மாறுபடும். இங்கு ஒரு மாணவனிடம் குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொள்ளையடிக்கப்படுகிறது. தற்கொலை செய்து கொண்ட விவேக்கின் சித்தப்பா இக்கல்லூரியில் Placement Officer ஆக பணிபுரிகிறார் என்பதால் விவேக் பத்து இலட்சம் ரூபாய் வரை நன்கொடை கொடுத்திருக்கக்கூடும்.

ஏற்கனவே ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மற்றொரு மாணவர், அவருக்கு பார்வை குறைபாடு உள்ளது என முக்கியமாக கோர்ஸ் மறுக்கப்பட்டு அதற்காக அவர் தனது நன்கொடையை திருப்பிக் கேட்டு கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இது வயிற்று வலிக்காக நடந்த தற்கொலை என நிர்வாகம் கதையளந்தது. இதுதான் ஜேப்பியாரின் தர்பார்.

ஆனால் இந்த தர்பாரில் மாணவர்களை விட அதிகமாகவும், இழிவாகவும் நடத்தப்பட்ட இக்கல்லூரிகளின் ஓட்டுநர் மற்றும் இதர தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சேர்ந்து தமது சுயமரியாதையையும், உரிமைகளையும் மீட்டெடுத்திருக்கிறார்கள். இந்தப் போராட்டம்தான் ஜேப்பியாரின் திமிரை பெருமளவுக்கு அடக்கியது. மாணவர்கள் அந்த போராட்ட வரலாற்றை தொழிலாளர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு உதவும் பொருட்டு இது தொடர்பாக புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே தேவை கருதி வெளியிடுகிறோம்.(மாணவர் விவேக்கின் தற்கொலைக்கு காரணமான ஜேப்பியாரை கைது செய்ய வேண்டுமென புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பல்வேறு கல்லூரிகளில் பிரச்சாரம் செய்து மாணவர்களை அணிதிரட்டி வருகிறது. மேற்க்கண்ட தகவல்கள் இவ்வமைப்பின் தோழர்கள் எம்மிடம் தெரிவித்தவை )

*******

சத்யபாமா பல்கலைக்கழகம்:
பாறையில் முளைத்த விதை,
ஒரு தொழிற்சங்கம் உருவான கதை!

ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், SRR, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

இப்படி ஈரேழு சாராய லோகங்களையும் கட்டிக்காத்து, அண்ட சராசரக் கல்லூரிகளையும் கட்டி முடித்து ஆட்டிப்படைக்கும் “மாவீரன்” ஜேப்பியாருக்கு “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?” என்பது போல ஒரு சோதனை! மாவீரன், மகா சன்னிதானம் என்று ஊதிப் பெருக்கப்பட்ட இந்தப் பலூனைத் தற்போது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற ஒரு ஊசியினுடைய முனை புஸ்ஸாக்கி விட்டது.

கடினமான பணிச்சூழல், எந்த உரிமையும் கிடையாது, ஜேப்பியார் கார் வருவதைப் பார்த்தவுடனே ஓடி ஒளிய வேண்டும், எதிரே வர நேரிடின் ஜேப்பியார் இறங்கி அடிப்பார். இந்த லட்சணத்தில் அப்பா என்றுதான் அவரை அழைக்க வேண்டுமாம். ஆனால் அப்பா வாயைத் திறந்தாலே ‘வாடா! போடா! என்ன மயிரு?’ என்ற வண்டமிழ்தான் வண்டை வண்டையாக வரும். இந்தக் காலத்தில் பெத்த அப்பனே இப்படிப் பேசினால், அடுத்த நொடி பாடை கட்ட வேண்டியதுதான்.

ஆனால் அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஜேப்பியாரின் சீமாட்டி கூறும் புளுக்கை வேலையையும், மரியாதைக் குறைவான வார்த்தைகளையும் வாங்கிக்கொண்டு வேலை செய்தாலும் பணி நிரந்தரமோ, ஊதிய உயர்வோ, ஈ.எஸ்.ஐ., பி.எஃப். பிடித்ததற்கான ஆதாரமாகச் சம்பள ரசீதோ கிடையாது. இதுதான் ஜேப்பியார் என்ற போக்கிரி வள்ளலின் சாம்ராஜ்யம்.

“யாரும் எதற்கும் கேள்வியே கேட்க முடியாது என்ற சூழலைத் தகர்த்து, எங்களையும் மனிதனாக மதித்துப் பேசவிடு! என்று நாங்கள் பேசத் துவங்கியதுதான் சங்கத்தின் முதல் வெற்றி” என்கிறார் பு.ஜ.தொ. ஓட்டுநர், மற்றும் டெக்னீசியன்கள் சங்கம், (சத்யபாமா பொறியியல் கல்லூரியின்) செயலாளர் வெற்றிவேல் செழியன்.

சங்கம் உருவானவுடனேயே அதுவரை ‘தட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்தான்’ என்பது போலக் குதித்த ‘மாவீரன்’ நாயகன் திரைப்படத்தில் வருவது போல வழியில் போன தொழிலாளியை நிறுத்தி “நான் நல்லவனா? கெட்டவனா?” எனப் புலம்பியிருக்கிறார். சங்கத்தில் இணைந்திருக்கும் ஓட்டுநர் ரமேஷ்  விவரமாகச் சொல்கிறார்.

“ஒருநாள் நான் ஹாஸ்டலில் நின்றிருந்தபோது காரில் வேகமாக வந்த ஜேப்பியார் என்னருகே நிறுத்தி, கண்ணாடியை இறக்கி, ரமேசு நீ சங்கத்துல இருக்கியான்னு கேட்டார். நான் சட்டென்று ஆமாம்னேன். பயப்படாமல் சொன்னதைப் பார்த்து, வந்த கோபத்தையும் அடக்கிக் கொண்டு, ஏன் சங்கத்துல இருக்க? என்றார். ஏதாவது நல்லது நடக்கும்னுதான் இருக்கேன் என்றேன். ஏன் நான் நல்லது செய்யலையா? என்று திரும்பவும் கேட்டார்.”

நான் “அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர், பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ், கேண்டீன் வசதி இதெல்லாம் வேணும்னேன்! நீ சங்கத்தை விட்டு வா எல்லாம் தர்றேன் என்றார். சங்கத்தை விட்டு வரமாட்டேன் என்று நான் உறுதியாகச் சொல்லவும் முகம் சிவந்து போய் சர்ருன்னு போயிட்டாரு! இதே முன்னவா இருந்தா ஒரு வார்த்தை பேச முடியாது. இப்ப அவுரு பேசாம போயிட்டாரு” என்று ‘மாவீரனை’ப் புரட்டிப் போட்ட கதையை விவரித்தார்.

“முன்னாடி அவரைப் பார்த்தா நாங்க ஓடி ஒளிவோம். இப்ப சங்கம் ஆரம்பிச்ச பிறகு எங்களப் பார்த்து அவுரு ரூட்ட மாத்திப் போறாரு! இது பெரிய மாற்றம். மொதல்ல இப்பதான் எங்களை மனுசனா மதிக்கிறானுங்க” என்று பெருமிதமாகச் சொல்கிறார் ஓட்டுநர் உத்திராபதி.

பாசிஸ்டுகளும், பணத்திமிர் பிடித்த முதலாளிகளும் தம்மை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்ற இறுமாப்புடன் வாழ்வது வழக்கம்தான். ஆனால் அவர்களை எளிய தொழிலாளி வர்க்கம் பிடரியில் இரண்டு தட்டுத் தட்டி விழ வைப்பது வரலாறு. பதினெட்டுப் பட்டிக்குத் தீர்ப்புச் சொல்லும் நாட்டாமைக்கு கவட்டைக்குள் நுழைந்துவிட்ட சித்தெறும்பு போட்ட போடில் வேட்டியை அவிழ்த்துப் போட்டு விட்டு ஓடிய கதைதான் “மாவீரரின்” கதையும். ஆனால் இதற்காகத் தொழிலாளி வர்க்கம் செயல்படுத்தும் உழைப்போ ஒரு காவியத்தன்மை வாய்ந்தது.

ஜனநாயகம் உள்ளிட்ட நற்பண்புகளை முதலாளிக்கு கற்றுக் கொடுக்கும் தொழிலாளிகள்

காவியம் என்றாலே கதாநாயகன், வில்லன், துரோகிகள் இருப்பது போல சங்கம் உருவான கதையிலும் இவர்கள் உண்டு. தொழிலாளர்களுக்கான பிரச்சினைகளில் முதலில் கேண்டீனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்காக முன்னின்று போராடி, சங்கத்தைத் துவக்கியதால் ஓட்டுநராகப் பணியாற்றிய வெற்றிவேல் செழியனை பணிநீக்கம் செய்து, ஒரு வகையில் முழுநேர சங்கப் பொதுச்செயலாளராகப் பதவி உயர்வு வழங்கியது, சத்யபாமா நிர்வாகம்.

“ஆசிரியர்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், கிளீனர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் ஒரே விதமாகவும், நன்றாகவும் இருந்த கேண்டீனை புது டைரக்டராக வந்த ஜேப்பியாரின் மருமகன் மரிய ஜான்சன் தொழிலாளர்களுக்குத் தனியாகப் பிரித்து, தனிக் கேண்டீனை உருவாக்கி ஆசிரியர் மாணவர் கேண்டீனின் மிச்ச மீதிகளைத் தண்ணீர் ஊற்றித் தரக்குறைவாக அங்கே தருவதைப் பலமுறை சுட்டிக்காட்டியும், ஒரு சம்பவத்தில் (விபத்தில்) ஓட்டுநர் ஒருவரை நாள் முழுக்க போலீஸ் ஸ்டேசனில் வைத்திருக்க, நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்ததையும் நான் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து போய் டைரக்டரிடமே நியாயம் கேட்கையில்…

“ஏன் கூட்டம்? பாதிக்கப்பட்டவன் தனித்தனியா வா!” என்று அதிகார தோரணையில் பேசியதுடன் “தொழிலாளி மட்டும் ஒழுங்கா!” என்றார். “நாங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்கிறோம். நீங்கள் குறைகளை நிவர்த்தி செய்து தாருங்கள்” என்று பேசிய பிறகும், எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; நிலைமையில் பெரிய முன்னேற்றமும் இல்லை. இனி சங்கமாகச் சேராமல் எந்தப் பிரச்சினையும் தீர வழியில்லை என்பதை உணர்ந்தோம்.” என்று சங்கம் அரும்பிய சூழலை விவரித்தார் வெற்றிவேல் செழியன்.

“தொடக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் முட்டாள்தனத்தைப் பார்த்து முதலாளித்துவம் எரிச்சலாகிறது; பின்பு அவர்கள் அறிவாளிகளாக மாறும்போது முதலாளித்துவம் அச்சப்படுகிறது” என்றார் காரல் மார்க்ஸ். அதேபோல விழிப்படைந்த தொழிலாளிகளைப் பார்த்து பயந்துபோன நிர்வாகம் முரட்டு நடவடிக்கைகளில் இறங்கியது. அப்போதைய நிலைமையை வெற்றிவேல் செழியன் விவரித்தார்.

“கல்லூரிகளில் சி.ஐ.டி.யு. சங்கம் இல்லை; ஜேப்பியார் கான்கிரீட் நிறுவனத்தில் இருந்த சி.ஐ.டி.யு. மூலம் சத்யபாமாவிலும் ஒரு 40 பேர் இரகசியமாக அதில் வெளியே தெரியாதபடி இருந்தனர்; என்னுடன் பத்து பேர்  பு.ஜ.தொ.மு.வில் இணைந்தோம். இதை நிர்வாகம் மோப்பம் பிடித்து ‘இதுக்கெல்லாம் யார் காரணம்? யார் லீட் பண்றது?’ என்று கேட்க, டிரான்ஸ்போர்ட் இன்ஜார்ஜ் சதீஸ் என்பவர் ஜேப்பியாரிடம் வெற்றிவேல் செழியன்தான் என்று சொல்லவும், உடனடியாக என்னை வேலைநீக்கம் செய்தது நிர்வாகம்.

தொழிலாளர் ஆணையரிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது கூட ஆணையரிடமே வேலைநீக்கத்திற்கு காரணம் சொல்லி தங்களுக்குப் பழக்கமில்லை என்று நிர்வாகத்தரப்பு தெனாவெட்டாகப் பேசியது” என்றவர், “இதைவிடக் கொடுமை சஸ்பெண்ட் ஆனவுடன் முதலில் பிற தொழிலாளிகளின் வற்புறுத்தலால் சி.ஐ.டி.யு.வில் ஒரு பொறுப்பானவரிடம் ஆலோசனை கேட்கப் போனோம்.

அவர் எடுத்த எடுப்பிலேயே “முதலில் காலேஜில் சங்கம் ஆரம்பிக்க முடியாது; உங்களுக்கு யார் கைடு பண்ணது. அதுவும் ஜேப்பியாரை எதிர்த்து ஒண்ணுமே செய்ய முடியாது; அவுரு நெனச்சா உங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டு பஸ்ஸை காண்ட்ராக்ட்ல வுட்டுருவாரு! அவரு பெரிய ஆளுய்யா! நீங்க திடுதிப்புன்னு ஏன் செஞ்சீங்க.. என்று எங்களுக்குப் பீதியூட்டி ஜேப்பியாரைப் பிரமாண்டமாக்கிப் பேசினார்.

நொந்து போன நாங்கள் பு.ஜ.தொ.மு. பொதுச் செயலாளர் சுப. தங்கராசுவைச் சந்தித்தோம். அவர் எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு நம்பிக்கையூட்டி “அவனைப் பார்க்கலாம் கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால ஜேப்பியார் ஒரு தூசி. நம்ப பக்கம் நியாயம் இருக்கு, தொழிலாளி வர்க்கம் இருக்கு,” என்றும் “ஆணையத்தில் வழக்கு போட்டு அவனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, வாதாடி, ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தாலே கன்பார்ம் செய்யணும்னு சட்டமிருக்கு, ஆனா நடைமுறையில் சட்டம் முதலாளிகளுக்கு பாத சேவை செய்யுதுன்னு” பல விவரங்களை எங்களுக்குப் புரிய வச்சார். அவரது வழிகாட்டுதலின்படி மீண்டும் சங்க வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

பு.ஜ.தொ.மு.வின் துணிச்சலான அணுகுமுறையைப் பார்த்த தொழிலாளிகளில் சி.ஐ.டி.யு.வில் இருந்த 40 பேரும் இடம்மாறி இப்போது பு.ஜ.தொ.மு.வில் 80 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். என்னைத் தவிர முன்னணியாளர்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்த பிறகும் சங்கம் வழக்கை நடத்தி வருகிறது. முன்னைவிட வெளிப்படையாகத் தொழிலாளர்கள் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,” என்று வேலை பறி போன சோகமோ, அயற்சியோ இல்லாமல் வர்க்க உணர்வுடன் தொழிலாளர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சங்க வேலையைச் செய்வதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“முன்னெல்லாம் என்ன ஏதுன்னே விவரம் சொல்லாம உம்மேல தப்பு இருக்குன்னு டூட்டி கொடுக்காம மாசக்கணக்குல கூட மரத்தடியில நிக்க வைப்பான். இப்ப சங்கம் ஆரம்பிச்சு போராடுன பிறகுதான் சஸ்பெண்ட் ஆர்டர்னு முறையா தாரான். இப்படி ஜேப்பியாரைத் திருத்தியிருக்கிறதே எங்களுக்கு ஒரு வெற்றிதான்” என்று ஆர்வமுடன் கூறுகிறார் ஓட்டுநர் பரமன்.

தொழிலாளி வர்க்கத்தின் தலையாய உரிமை அதன் சுயமரியாதையே!

காணப் பொறுக்குமோ? ‘கல்வி வள்ளல்’ ஜேப்பியாருக்கு. “ஏண்டா 45 சங்கத்துக்கு நானே தலைவன்; என்னை எதிர்த்தே சங்கமாடா” என்று வீரவசனம் பேசி யாரெல்லாம் சங்கத்தில் இருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இனி கேண்டீனில் சாப்பாடு கிடையாது, சங்கத்தில் உள்ளவன் பிள்ளைகளுக்கு ஸ்கூல் பீஸ் உதவியும் கிடையாது, சங்கத்தில் உள்ளவர்களுக்கு தண்ணீர் கூட கிடையாது என்று நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. “போடா கிடையாதுக்குப் பொறந்த கிடையாது, எங்களுக்கு சங்கம் தாண்டா சத்துணவு” என்கின்றனர் தொழிலாளிகள்.

“சோறு போட்டா போடுறான், போடாட்டி போறான். இப்ப டைரக்டரைப் பார்த்து பயமில்லை.  இப்ப நாங்க யாருக்கும் அடிமை இல்லை. எக்ஸ்ட்ரா டூட்டி பாக்கறது இல்லை. இப்ப ஊட்டிக்கு கல்விச் சுற்றுலாவுக்கு வண்டி எடுத்தப்ப கூட காசு தந்தாதான் போவோம்னோம், கொடுத்தான். முன்னாடியெல்லாம் தரமாட்டான். இப்பல்லாம் மிரட்டாமல் சலுகையைப் பேசி விலைக்கு வாங்கப் பாக்குறான். வேலையே போனாலும் சங்கத்தை விட்டுப் போறதா இல்லை…” என்று பிடிவாதமாகத் தனது சங்க உணர்வை வெளிப்படுத்துகிறார் ஓட்டுநர் ரவி.

சங்கத்தில் சேர்ந்ததால் திடீரென ஒருநாள், “உங்களுக்கெல்லாம் கேண்டீனில் உணவு கிடையாது” என மதிய நேரத்தில் நிர்வாகம் அறிவித்தவுடன், பரமன் என்ற ஓட்டுநர் உடனே தனது மோதிரத்தை அடகு வைத்து 48 தொழிலாளிகளும் பசியாற உதவியிருக்கிறார். வர்க்க உணர்வுக்குப் படியளப்பதில் பரமன் ஒரு முன் உதாரணம். ஜேப்பியாருக்கு மோதிரக் கையால் விழுந்த குட்டு இது. “சங்கத்தை விட்டுப் போனவர்கள் இப்பவும் தரக்குறைவா பேச்சு வாங்கிக்கிட்டு இருக்குறாங்க. ஆனால் எங்களை இப்ப மரியாதையா, துப்புரவு தொழிலாளிகளையும் மரியாதையா நடத்துறான்னா காரணம் சங்கம்தான். இப்பதான் லீவு எடுக்குறோம். உரிமையா இருக்குறோம்…” என்று பெருமிதப்படுகிறார் பரமன்.

சங்கத்தில் இணைந்ததால் உடனடியாக எவ்விதப் பொருளாதாரக் கோரிக்கையும் நிறைவேறாத போதும், குறைவான ஊதியத்தில் இருக்கும் கிளீனர் சார்லஸ் என்பவரோ “100 வண்டி போல இருக்கு. அத்தனைக்கும் கிளீனர் கிடையாது. சம்பளத்த விடுங்க வண்டி கழுவ தண்ணி கிடையாது. கேட்டா மழைத் தண்ணியில கழுவுங்கிறான். சாக்கடைத் தண்ணியுல நின்னு காலே புண் ஆயிடுச்சு” என்று கரும்படையாக மாறியிருக்கும் கால்களைக் காட்டியவர்,

“புண் ஆற 11 நாள் லீவு எடுத்தேன். நான் சங்கத்துல இருக்குறதால 11 நாளுக்கு சம்பளத்த புடிச்சுட்டாங்க; ஒரு தண்டனை மாதிரி. பரவாயில்லை. முன்ன எல்லாம் இன்ஜார்ஜ் நவநீதகிருஷ்ணன் பைக்கைக் கூட கழுவணும். இப்ப அடிமை வேலை இல்லை. மரியாதை இருக்கு.. நீ சங்கத்தை விட்டுவா எல்லாச் சலுகையும் தாரேன்! வண்டி ஓட்டலாம் என்று நிர்வாகம் ஆசை காட்டுது… இந்த மரியாதை இருக்குமா? சங்கத்தை விட்டுப் போக மாட்டேன்!” என்று வைராக்கியமாகப் பேசுகிறார்.

சங்கத்தில் உள்ள ஓட்டுநர் சங்கரனோ வர்க்க உணர்வற்ற தொழிலாளிகளுக்கும் உணர்த்தும்படி முன்னேறி விவாதிக்கிறார். “என்ன ஒருத்தன் கேட்டான், நீ யூனியன்ல இருந்து என்ன சாதிச்சே”ன்னு? நான் கேட்டேன் “நீ இல்லாம என்னாத்த சாதிச்சே?” அவன் சொன்னான், “எங்களுக்கு சோறு உண்டு, நிர்வாகம் காசு தருது”ன்னான். அதுக்கு நான் “உனக்கு மரியாதை உண்டா? போடா நாங்க யூனியன் அமைச்சு போராடியதாலேதான் உன்னைத் தன்பக்கம் இழுக்க நிர்வாகம் காசு தருது; அது கூட உனக்கு நாங்க வாங்கிக் கொடுத்த காசுடா”ன்னு சொன்னேன். மூஞ்சத் திருப்பிக்கிட்டு பேச முடியாமல் போயிட்டான்” என்றார்.

மெக்கானிக் விநாயகம், ஜேப்பியார் ஸ்டீல் ஜெயக்குமார் இப்படிப் பலரும் தங்களது இழப்புகளைவிட சங்கத்தால் தாங்கள் அடைந்திருக்கும் மரியாதையான வாழ்க்கையை முன்னிறுத்திப் பேசுகின்றனர். தொழிற்சங்கம் என்பது வெறும் கூலி உயர்வு, போனஸ் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கானது மட்டுமின்றி, அதனுடன் முக்கியமாக ஒரு தொழிலாளி தன்னை ஒரு மனிதனாக உணர்வதும், வர்க்கமாக இணைவதும், அரசியல் சக்தியாகத் தன்னை உயர்த்திக் கொள்வதுமான விடுதலைப் பாதையை நோக்கியது என்பதைத் தங்களது அனுபவமாக நம்முன் வாழ்ந்து காட்டுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்ட ஜேப்பியாரோ, நான் ‘மாவீரன்டா’ என்று பஞ்ச் டயலாக் பேசினாலும், தனிமையில் தொழிலாளர்களைச் சந்தித்தால், “என்னை டென்சனாக்கிட்டீங்களே… என் காலேஜீக்கு எதிராவே கூட்டம் போட்டு என்னைத் திட்டிட்டீங்களே… BP ஏறிடுச்சே” என்று பொருமுவதுடன்… கோரிக்கையை முன்வைக்கும் தொழிலாளியிடம் பேசிக் கொண்டே “அப்புறம், சொல்லுங்க சார்!” என்று நக்கலடிப்பதோடு, மேசையில் உள்ள மணியை ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘டிங், டிங்’ என்று அடித்து தெலுங்குப் பட வில்லன் பாணியில் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

போராடிய தொழிலாளர்கள் தமது வியர்வையால் ஜேப்பியாரின் வாயையும் கழுவிச் சுத்தப்படுத்தி இருக்கிறார்கள். வாடா! போடா! என்ற ஜேப்பியாரின் வாயை வாங்க சார்! எனுமளவுக்கு சுத்தப்படுத்தியிருப்பது, துப்புரவுத் தொழிலாளர்களின் முதல் வெற்றி. வேறு வழியில்லாமல் இப்போது ஜேப்பியார் “பேசாமல் சங்கத்துல இல்லைன்னு எழுதிக் கொடுத்துட்டு வா! எல்லாச் சலுகையும் தாரேன்! வாங்க சார்!” என்று புடவைக் கடைகாரர் லெவலுக்கு இரைஞ்சினாலும், தொழிலாளர்களோ, “சம்பள இரசீது கொடு, வருடம் ஒரு போனஸ் கொடு, அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் கொடு, ஓட்டுநர்களுக்கு மழை வெயிலில் ஒதுங்க இடம் கொடு, வண்டி கழுவ, குடிக்கத் தண்ணீர் கொடு, கேண்டீன் வசதி கொடு.. என்ற அடிப்படையான கோரிக்கைகளை முன் வைத்து சங்கத்தை முன்னேற்றிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மாவீரனின் மதில் கோட்டைக்கு எதிரிலேயே ஒரு தேநீர்க்கடைக்காரரின் உதவியால் அவரது கடை மாடியில் சங்க அலுவலகத்தை அமைத்து தங்களது வர்க்கக் கோட்டையைக் கட்டி உள்ளனர்.

அமைப்பு இல்லாமல் தொழிலாளிகளுக்கு எதுவுமில்லை

சங்க வேலைகள், போராட்டக் களங்கள் இந்த அனுபவக் களத்தில் தொழிலாளர்கள் ஓட்டுக் கட்சிகளைப் பற்றியும், தொழிலாளர் ஆணையம் போன்ற அதிகார வர்க்க அமைப்புகளின் முதலாளியச் சார்பைப் பற்றியும், அரசியல் அமைப்பு பற்றியும் தெளிவான புரிதலைப் பெற்றிருக்கிறார்கள்.

“எல்லாம் திருட்டுப் பசங்க, போலீஸ் கம்ப்யூட்டர் பயிற்சிக்கு இங்க இடம், சாப்பாடு, சகல வசதியும் தாராங்க. பிறகு போலீஸ் ஜேப்பியாரோட தவறைக் கேட்குமா? நமக்கு ஒரு பத்து ரூபாய் தரமாட்டான். நலிந்த கலைஞர்களுக்கு உதவி, டிரஸ்ட்ன்னு விஜயகாந்தைக் கூட்டி வந்து லட்சக்கணக்குல செலவு பண்ணி விழா நடத்துறான். விஜயகாந்தும் ஜேப்பியார் கால்ல வுழுவுறான். ஆசி வாங்குறான். எல்லாம் ஒரு கணக்குதான்! இந்த

தா. பாண்டியன், நல்லக்கண்ணு கூட வந்து தனியா ஜேப்பியாரைப் பாத்துட்டுப் போனாங்க! பிறகு 2 நாள் கழித்து சி.பி.ஐ. ஆபீசுக்கு 25 கம்ப்யூட்டர் பாக்சு போச்சு. நானே வண்டியில போயி இறக்குனேன். எல்லாம் பிராடு!” என்று சகலத்தையும் அம்பலப்படுத்துகிறார் ஓட்டுநர் ஜாகீர் உசேன்.

சங்கத்தின் கூர்மையை உணர்ந்த ஜேப்பியாரும் அதனால்தான் “சங்கத்தைக் கலை” என்கிறார். அதன் பலனை உணர்ந்த தொழிலாளிகளோ “சங்கத்தை நுழை” என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கில் செலவு செய்து த்ரிஷாவையும், நமீதாவையும் கல்லூரிக்குக் கூட்டி வந்து குத்தாட்டம் போட முடிகிறது; வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஜேப்பியாரால் குடிநீர் கூடத் தரமுடியாதாம். பாரதிராஜாவையும் கமலஹாசனையும் ஓட்டிவந்து பல லட்சம் செலவு செய்து டாக்டர் பட்டம் தரமுடிகிறது;

பல ஆண்டுகள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் வழங்க முடியாதாம். வசூல்ராஜா சினிமாவினுடைய படப்பிடிப்புக்கு இந்தக் கல்லூரி ‘வசூல்ராஜா’ இடம், வசதி செய்து தருவாராம்; உழைக்கும் தொழிலாளர்களுக்கு மழைக்கு ஒதுங்கக் கூட இடம் தர முடியாதாம்.. இந்த உலக அநியாயத்தை உலக நாயகன் தட்டிக் கேட்பாரா?

உண்மையான உலக நாயகர்களான தொழிலாளர்கள் கேட்டதற்கு ஜேப்பியார், “என் பணத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு கூட தருவேன்; உங்களுக்குத் தரமாட்டேன்” என்றாராம். அது சரி! கமலஹாசன், பாரதிராஜா ‘லெவலுக்கு’ தொழிலாளர்கள் இல்லைதான். மானம், மரியாதையோடு வாழத் தெரிகிறதே! அதனால்தான் ஜேப்பியாரை எதிர்த்து இப்படி ஒரு மனிதக் குரலா? என்று மகிழ்ந்த அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் “துப்புரவுத் தொழிலாளத் தோழர்களே உங்களுக்கு உள்ள சூடு, சொரணை எங்களுக்கு இல்லை… நாங்கள் இன்னமும் அடிமைகள்… நீங்கதான் எங்களையும் காப்பாத்தணும்” என்று மறைமுகமாகப் பார்த்து ஆதரித்துப் பேசியுள்ளார்.

மாணவர்களும் ஓட்டுநர்களின் பு.ஜ.தொ.மு. சங்கத்துக்கு நிதி உள்ளிட்ட ஆதரவு தந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். போன்ற பிற கல்லூரி நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், பு.ஜ.தொ.மு. சங்கத்தில் இணைவதற்காகத் தருணம் பார்த்து காத்திருக்கின்றனர்.

கால்களை உதைத்து, கைகளை அசைத்து, கண்களைப் பிசைந்து பாதுகாப்பாக உரிய நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களை உரிய இடத்தில், உரிய நேரத்தில் சேர்க்கும் பு.ஜ.தொ.மு. ஓட்டுநர்கள், வண்டியை மட்டுமல்ல, வர்க்க நெளிவு சுளிவுகளோடு இலக்கையும் நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இனி ஒதுங்கி வழிவிட்டுச் சிணுங்குவதைத் தவிர ‘மாவீரனுக்கு’ வேறு வழியில்லை!

-  புதிய கலாச்சாரம், ஜூலை’ 2008