இலங்கை அதிபயங்கரமான பாசிச சூழலுக்குள் நகர்கின்றது. அரசு எதை நினைக்கின்றதோ, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மீறுபவர்கள் அனைவரும், இந்த அரசின் பாசிசப் பயங்கரவாதத்தை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.

இதுதான் இன்று இலங்கையின் நிலை. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாகவில்லை. ஜனநாயகமோ, இதை அனுசரித்துச் செல்லுகின்றது.

 

பாசிசப் பயங்கரவாதத்துக்கு அஞ்சி, தன்னைத்தான் அதற்கு இசைவாக மாற்றிக்கொள்வது தான், உயிருடன் இருப்பதற்கான அரசியல் உத்தரவாதமாகும். அரச பாசிசத்துக்கு ஏற்ப, சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் நாட்டின் நடைமுறைகளும், சட்டங்களும்.

 

இதற்கமைய மக்கள்விரோத ஓட்டுக் குழுக்களை, தன்னுடன் இணைந்து தமிழ்மக்களை ஒடுக்கக் கோருகின்றது. புலிகளின் பாசிப் பயங்கரவாதத்தின் போது உருவான தமிழ் ஓட்டுக் குழுக்கள், தம் மக்கள் விரோத அரசியலுடன் பேரினவாத பாசிசத்துக்கே எப்போதும் துணைபுரிந்து வந்தனர். இன்று புலிகள் இல்லையென்ற நிலையில், இந்த ஒட்டுக்குழுக்களை தன்னுடன் இணை அல்லது தன்னுடன் இல்லையென்றால் சுயமாக செயல்பட முடியாது என்கின்றது அரச பாசிசம்.

 

இதைத்தான் முன்பு புலிகள் செய்தனர். இன்று அரச பாசிசப் பயங்கரவாதம், இந்த திசையில் தான் பயணிக்கின்றது. ஓட்டுக் குழுக்களாகவே, அரசின் துணையில் மக்கள் விரோத செயல்களை செய்து வந்தவர்கள் இவர்கள். இந்த வகையில் கீழ்த்தரமான இந்தப் பொறுக்கி அரசியலுக்கும், அவர்களுக்கும், எக்கேடு கெட்டாலும் நாம் கவலைப்பட போவதில்லை தான். கிரிமினல்களையும், குற்றவாளிகளையும் கொண்ட சமூக விரோதிகள் இவர்கள். இந்த வகையில் அழிய வேண்டியவர்கள், அழிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

 

ஆனால் அரச பாசிசம் இதை உள்வாங்கி, தனக்கூடாக இதை சமூக கூறாக்குவதை நாம் அங்கீகரிக்க முடியாது. அத்துடன் பாசிசப் பயங்கரவாதத்தின் ஒரு அங்கமாக, இந்த நடைமுறை  இருப்பதால் இதை நாம் கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது. ஓட்டுக் குழுக்கள் இதற்கு எதிராக, வாய் கூட திறக்கமாட்டர்கள். முதுகெலும்பற்ற ஓட்டுக் குழுக்கள் தான் இவர்கள்.

 

பாசிசம் எப்போதும் இதுபோன்று, தான் அல்லாத அனைத்தையும் தனக்குள் ஏப்பமிடத் தொடங்குகின்றது. புலி இதையே முன்பு செய்தது. இந்தவகையில் முதலில் முதுகெலும்பில்லாத ஓட்டுக் கூலிக்குழுக்களை, அரசு தனக்குள் ஒரு அங்கமாக மாற்றுகின்றது. அதன் முதற்படிதான் இன்று அரங்கேறுகின்றது.

 

புலிகள் இதைச் செய்த போது, அதை முன்னின்று செய்த கொலைகார பாசிட்டான கருணா இன்று அரசுடன் நின்று, அதை முன்னின்று செய்கின்றான். அவனைப் பொறுத்தவரையில், புலிக்கு பதில் அரசு. அதே நடைமுறை, அதே உத்தி;. இப்படி அரசின் தயவில் இயங்கிய தமிழ் ஓட்டுக்குழுக்களை, முதலில் அரசு தன் பாசிச நடைமுறைக்குள் உருட்டி மிரட்டி உள்வாங்குகின்றது. இதை மறுக்கின்ற எந்த ஓட்டுக் குழுவுக்கும், இனி தனித்துவமான  செயல்பாட்டுக்கு இலங்கையில் இடமில்லை. அதை அரச பாசிசம் அழித்துவிடும்.

 

மறுபக்கத்தில் அகதி வேஷத்தில் சரணடைந்த சந்தர்ப்பவாத புலிகள், அரச பாசிசத்துடன் கூடிக் குலவத் தொடங்கியுள்ளனர். எப்போதும் மதில் மேல் பூனையாக அரசியல் செய்த இந்த புலிக் கூட்டம், இன்று அரச பாசிசத்தை பிரச்சாரம் செய்ய கிளம்பியுள்ளது.

 

போலியான துரோகமான தமது முகத்துக்கு திரைபோட்டு, புலியுடன் ஓட்டியிருந்தது இந்தக் கும்பல். இன்று மறுபடியும் தமிழ் மக்களை மொட்டை அடிக்க, அரச பாசிசத்தின் ஊடாக வெளிவரத் தொடங்குகின்றனர். ஆயிரம் ஆயிரம் இளைஞர்களை பலிகொடுத்த இந்த சந்தர்ப்பவாத துரோக புலித் தலைவர்கள், அகதி வேஷத்தில் ஓடிவந்து துரோகமிழைத்தவர்கள் தான். இன்று அரச பாசிசத்துடன் சேர்ந்து, தமிழ் மக்களை ஓடுக்க, தமது இழிவான பச்சோந்தித்தனத்துடன் மீளக் களமிறங்குகின்றனர்.

 

தமிழ்மக்களோ அனைத்து சுதந்திரத்தையும் இழந்து, அரச பாசிசத்தின் ஒடுக்குமுறையை பழைய புலிகள் மற்றும் ஓட்டுக் குழுக்களின் ஊடாக அனுபவிக்க வேண்டிய புதிய அரசியல் சூழல்.

 

நாட்டில் தமிழனுக்கு மட்டும் இந்த நிலையில்லை. கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம், சிங்கள மக்களுக்கும் கிடையாது. பத்திரிகை சுதந்திரம் அறவே இன்று இலங்கையில் இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. அனைத்தும் அரச ஊதுகுழலாக மாற்றப்படுகின்றது.

 

தமிழ்மக்கள் மத்தியில் 'ஜனநாயகம்" பேசி அரசை ஆதரித்த கூட்டம், தன் 'ஜனநாயக" கடைகளைப் பூட்டிவிட்டது. ஜனநாயகத்தை சொல்லளவில் கூட, இன்று தமிழர்கள் மத்தியில் பேச யாரும் கிடையாது. எல்லோரும் பாசிசத்தின் விருப்பத்தையே, 'ஜனநாயகம்" என்கின்றனர். மக்களை அடிமைகளாக, நடைப் பிணங்களாகவும், வாய் பொத்தி இழிந்து இரந்து வாழ்தல் தான் மனித வாழ்க்கை என்கின்றனர். இதை தமது இலட்சியமாக கொண்ட தமிழ் அரசியல், இன்று அதையே அரசியல் விபச்சாரமாக செய்கின்றது. இதையே சிங்கள சமூகத்துக்கு தீர்வாக எடுத்துக்காட்ட, பேரினவாத அரச பாசிசமோ அதை முழு இலங்கைக்குமானதாக மாற்றி வருகின்றது. மக்களை சுரண்டியும் ஒடுக்கியும் வாழும் துரோகிகள் மட்டும் தான், இலங்கையில் வாய் திறந்து எதையும் எப்படியும் பேசமுடியும். இதைத்தான் நாட்டின் அமைதி, ஒழுங்கு என்கின்றான், பாசிட் மகிந்தா.  

 

பி.இரயாகரன்
03.06.2009