06242022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ??

ஒருவழியாக ஐ.பி.எல் போட்டிகள் முடிந்திருக்கின்றன. அடுத்து ட்வென்டி-20 உலகக் கோப்பைப் போட்டி நேரத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றாலும் 2011 இல் நடைபெற இருக்கும் (50 ஓவர்) உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிதான் அனைவரின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.

 அந்தப் போட்டி இக்கட்டுரைத் தலைப்பில் உள்ள சாத்தியங்களுடன் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதால் எதிர்காலத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அறிவியல் புனைகதை போல கணிக்க முடியுமென்பதாலும் இந்த எதிர்காலக் கட்டுரையை நிகழ்காலத்தில் வெளியிடுகிறோம்.

2011

இந்தியா, பாக்கிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பற்றி நீங்கள் அறிந்ததே. அந்தப் போட்டி நடத்துவது குறித்து தற்போது மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறது. இதைத் தாண்டி இந்தப் போட்டியை எப்படியாவது இந்தியத் துணைக் கண்டத்தில் நடத்துவதற்கு ஐ.சி.சி முனைந்திருக்கிறது. அதற்கு முன் அந்த அரசியல் பிரச்சினையை பார்க்கலாம்.

2009ஆம் ஆண்டில் பாக்கிஸ்தானில் நடந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் குறித்து உங்களுக்கு நினைவிருக்கலாம். கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அந்த சம்பவத்திற்குப் பிறகு இலங்கை அணி தொடரை ரத்து செய்துவிட்டு உடன் தாயகம் திரும்பியது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளும் நடைபெற இருந்தது. ஏப்ரல்,மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருந்த நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சிரமம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. எனவே எப்படியாவது போட்டியை நடத்த வேண்டும் என முனைந்த ஐ.பி.எல் நிர்வாகம் இந்தியாவை தவிர்த்து விட்டு தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது.

தேர்தலையும் மீறி இந்தப் போட்டிகள் பெரும் வரவேற்பை பெற்றது. ஜக்கி வாசுதேவ் முதலான பிரபலமான சாமியார்களும், நடிகர்-நடிகைகளும், முதலாளிகளும், அரசியல்வாதிகளும் தென்னாப்பிரிக்கா சென்று போட்டிகளை ரசித்தனர். இதே காலத்தில் இலங்கையில் ஈழத்தமிழின மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை விட ஐ.பி.எல் போட்டி அதிக நேரத்தை சானல்களில் எடுத்துக் கொண்டது.

பாக்கிஸ்தானில் பயங்கரவாதிகள் கிரிக்கெட் வீரர்களைத் தாக்கியதால் அங்கு சென்று விளையாட எந்த நாடும் தயாரக இல்லை. எனவே உலகக்கோப்பை போட்டியை அங்கு நடத்துவது குறித்த கேள்வி அப்போதே எழுந்தது. இறுதியில் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடக்குமென ஐ.சி.சி முடிவு செய்திருந்தது. இதனால் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருமானத்தை இழக்குமென்றாலும் அதனால் இதற்கு மாற்று ஏதும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தாக்குவோம் என அல்கைதாவின் செய்தித் தொடர்பாளர் பின்லேடன் ஒப்புதலுடன் தெரிவித்திருக்கும் செய்தியை அல்ஜசிரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இதனால் உலகக் கோப்பை போட்டி நடக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

ஏற்கனவே 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற இருந்த டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆஸ்திரேலியா அணி பங்கேற்கவில்லை. இதை இந்திய டென்னிஸ் பேரவை கண்டித்திருந்தாலும் உலக டென்னிஸ் பேரவை ஆஸ்திரேலியா அணிக்கு ஐந்து இலட்ச ரூபாய் அபராதம் மட்டும் விதித்து விட்டு பிரச்சினையை முடித்துக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக இப்போது அல்கைதா வெளிப்படையாக அறிவித்திருக்கும் மிரட்டலால் இந்தியாவில் எந்த நாடும் விளையாட்டு போட்டிகளுக்கு வர இயலாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதை ஆராய்ந்து தீர்ப்பதற்கு மும்பையில் இந்திய துணைக்கண்ட கிரிக்கெட் சங்க வாரியங்களும், ஐ.சி.சியும் அவசரமாக சந்தித்து பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் இந்திய ஐ.பி.எல் அணிகளை விலைக்கு வாங்கியிருக்கும் விஐய் மல்லையா, ஷாருக்கான் முதலான முதலாளிகளும், போட்டியின் ஒளிபரப்பும் உரிமையை பெற்றிருக்கும் சோனி நிறுவனம், மிகுந்த தொகையை ஸ்பான்சர் கட்டணமாக அளித்திருக்கும் பெப்சி, கோக் முதலான நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் டெஸ்ட் போட்டி ஆடும் நாடுகளின் கிரிக்கெட் சங்க வாரியப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த அவசரக் கூட்டத்தில் பல்வேறு யோசனைகள் விவாதிக்கப்பட்டன. இவற்றை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் பல்வேறு பத்திரிகைகளில் வந்த செய்திகளை இங்கு தொகுத்து தருகிறோம்.

அல்கைதா மிரட்டல் வந்தவுடனே இந்திய வாரியம் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரத்தை அணுகி இதைத் தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு அவரிடமிருந்து திருப்தியான பதில் வரவில்லையாம். மேலும் ஆஸ்திரேலேயா, இங்கிலாந்து வாரியங்கள் அல்கைதா மிரட்டல் இருக்கும் பட்சத்தில் தமது வீரர்களின் உயிரைப் பணயம் வைக்க முடியாது என உறுதியாக நின்றன. இதனால் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளை வங்கதேசம், இலங்கையில் நடத்தலாமா என்று யோசித்ததில் இந்தியாவையே தாக்கப்போவதாக மிரட்டியிருக்கும் அல்கைதாவுக்கு வங்கதேசத்தில் நுழைய என்ன தடை என்றும், இலங்கையில் புலிகளின் கொரில்லாத் தாக்குதல் ஆங்காங்கே நடைபெறுவதலும் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டது.

மேலும் போட்டிகள் அதிகம் இந்தியாவில் நடந்தால்தான் தமக்கு வருமானமிருக்கும் என்பதை ஸ்பான்சர் நிறுவனங்களும், ஐ.சி.சியும் உணர்ந்தேயுள்ளன. இதன் பொருட்டே வெளிநாடுகளில் போட்டியை நடத்தும் யோசனையும் தயக்கமின்றி முதலிலேயே நிராகரிக்கப்பட்டது. எனில் உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கு என்ன செய்வது என்று பரிசீலித்ததில் 2009ஆம் ஆண்டு பலதடைகள் வந்தபோதும் ஐ.பி.எல் போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய சாதனையாளர் லலித் மோடியிடமே இந்தப் பிரச்சினையை தீர்க்குமாறும் அதற்கு அவருக்கு எல்லாவிதமான உரிமைகளையும், தேவையான பணத்தையும் வழங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மோடியும் இந்த சவாலை ஏற்றுக் கொண்டார். இதன் கால இலக்காக ஒரு மாதம் அவருக்கு வழங்கப்பட்டது.

முதலில் லலித் மோடி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற தனியார் பாதுகாப்பு மற்றும் துப்பறியும் நிறுவனங்களின் தலைமைப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இதன் பொருட்டு பல நாடுகளுக்கும் அவர் சென்று வந்தார். இதில் பலரும் குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள் கூறிய விடயம் என்னவென்றால் அல்கைதாவின் தாக்குதலை தடுப்பது மிகவும் சிரமம் என்பதாகும். இதில் பலர் சி.ஐ.ஏவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஆலோசனைப்படி நேரடியாக அல்கைதாவையே சந்தித்து ஆதரவு பெறலாம் என்பதே இந்த பிரச்சினைக்கான இறுதி தீர்வாக முன்வைக்கப்பட்டது. இதில் லலித்மோடிக்கு ஆரம்பத்தில் சற்று அதிர்ச்சி ஏற்பட்டாலும் போகப்போக இதுதான் யதார்த்தம் என்பதை அவர் புரிந்து கொண்டார்.

ஆனால் அல்கைதாவுக்கு எதிராக அமெரிக்கா தீவிரமான போரில் இருக்கும் இந்த சூழ்நிலையில் இதை எப்படி சாத்தியமாக்க முடியும் என்பதை அவர் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சில அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தார். இதன்படி இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா முக்கியமாகவும், இந்தியா, பாக்கிஸ்தான் நாடுகள் இரண்டாம் பட்சமாகவும் சம்மதம் தெரிவிக்க வேண்டுமாம். இதை நிறைவேற்றுவதற்காக மோடி போட்ட திட்டப்படி அமெரிக்க அரசிடம் சம்மதம் வாங்குவதை பெப்சி நிறுவனமும், பாக்கிஸ்தான் அதிபர் ஜர்தாரியிடம் அனுமதி பெறுவதற்கு பாக் கிரிக்கெட் வாரியமும், இந்திய அரசிடம் அனுமதி பெற இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராகவும், வேளான் அமைச்சராகவும் இருக்கும் சரத்பவார் முயற்சி செய்ய வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இத்திட்டப்படி பெப்சிநிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி அதிபர் ஒபாமாவை சந்தித்து இந்தப் போட்டியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி விட்டு அல்கைதா ஆதரவு பெற அனுமதிக்குமாறு கோரினார். இந்தப்போட்டியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், அதனால் எத்தனை அமெரிக்கர்கள் பலனடைவர் போன்ற புள்ளி விவரங்களைக் கேட்டுகொண்டு ஒபாமா சிலநாட்கள் ஆலோசனைக்குப் பிறகு இதை ஏற்றுக்கொண்டார் என தெரிகிறது. இதன்படி போட்டி நடைபெறும் காலத்தில் அமெரிக்கா அல்கைதா மீதான போரின் வீச்சை பெருமளவு குறைப்பதாகவும் ஒப்பதல் அளித்திருக்கிறது.

அமெரிக்காவே ஒத்துக்கொண்டபடியால் பாக்கிஸ்தானும், இந்தியாவும் சம்மதம் தருவதில் பிரச்சினை இருக்கவில்லை. பாக் அதிபர் போட்டி நடைபெறும் காலத்தில் எல்லைப்புற மாகாணாங்களில் தாலிபானுடன் நடக்கும் போரை அமெரிக்க ஒப்புதலுடன் நிறுத்தி வைப்பதாக உறுதியளித்தார். இந்தியாவின் காங்கிரசு அரசு இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், இதை வைத்து பா.ஜ.க, இடதுசாரிகள் தம்மை பலவீனமான அரசாக பிரச்சாரம் செய்வார்கள் என்பதால் சிறு தயக்கம் இருந்தது. இதற்கு மோடி பா.ஜ.க தலைவர் அத்வானியிடம் பேசி இதை அரசியலாக்கமாட்டோம் என உறுதிமொழியை பெற்று பிரதமருக்கு தெரியப்படுத்தினார். அதேபோல இந்த போட்டி கல்கத்தாவிலும், திருவனந்தபுரத்திலும் நடைபெறுவதால் சி.பி.எம் கட்சி இதை எதிர்க்க கூடாது என்று கோரியதற்கு அதன்பொதுச் செயலாளர் காரத், ” கிரிக்கெட் போட்டிக்கு தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மக்கள் எங்களை வில்லனாகப் பார்ப்பார்கள் ” என இரட்டை சம்மதம் அளித்ததாகவும் தெரிகிறது.

இப்படி எல்லா அரசாங்கங்களிலும் சம்மதம் வாங்கிய மோடி சி.ஐ.ஏ மற்றும் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனங்களின் உதவியுடன் பாக்கின் எல்லைப்புற மாகாணத்தில் இருக்கும் அல்கைதாவினரைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியதாகவும் தெரிகிறது. ஆரம்பத்தில் அவர்கள் அடம்பிடித்தாலும் பின்னர் அவர்கள் ஒரு பெருந்தொகை கேட்டதாகவும் அதை நேரில் பேசலாமென மோடி தெரிவித்தாகவும் செய்திகள் வருகின்றன. இறுதியில் சென்ற மாதத்தின் ஏதோ ஒருநாள் அவர் அவசரமாக தனி விமானத்தில் பாக் சென்று அங்கிருந்து ஐ.எஸ்.ஐ உதவியுடன் எல்லைப்புற மாகாணத்தில் ஏதோ ஒரு இடத்தில் பின்லேடனை சந்தித்தாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பாதுகாப்பு காரணமாக பின்லேடனை சந்திக்க முடியவில்லை எனவும் அதற்குப்பதிலாக அவரது தூதுவர் ஒருவரை சந்தித்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

பின்லேடன் உடன் நடந்ததாகக் கூறப்படும் அந்த சந்திப்பில் பேசப்பட்ட விசயங்களை பார்க்கலாம். அவருக்கு கிரிக்கெட் போட்டி என்றால் என்ன என்பதே தெரியவில்லையாம். கால்பந்து விளையாட்டை மட்டும் ஓரளவு ரசிக்கும் பின்லேடனுக்கு கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்த பல வீடியோக்களை போட்டுக்காட்டி மோடி விளக்கினராம். ஆனாலும் வெள்ளையர்கள்தான் இந்த போட்டியை கண்டுபிடித்தனர் என்ற வரலாறு பின்லேடனுக்கு தெரியுமென்பதால் இந்த கிறித்தவ விளையாட்டு இசுலாத்திற்கு விரோதமானது என அவர் உடும்புப் பிடியாக மறுத்தாராம்.

அதன்பிறகு உலகக் கோப்பை போட்டிக்கு எவ்வளவு வருமானங்கள் வருகிறது என்பதை மோடி விளக்கி அதில் ஒரு தொகையை அல்கைதாவுக்கு அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தாராம். இதை ஏற்றுக் கொண்ட பின்லேடன் ஆரம்பத்தில் மிகப்பெரிய தொகை ஒன்று கேட்டதாகவும் இறுதியில் மோடி நிர்ணயித்த 5000 கோடி என்பதை ஏற்றுக்கொண்டாராம். இதன்படி இந்தியாவில் போட்டி நடத்துவதற்கு இனி தடையில்லை. கூடுதலாக மோடி இந்தப் போட்டியை பாக்கிலும் நடத்தலாமா என்று கோரியதற்கு பின்லேடன் பாக் ஒரு இசுலாமிய நாடு என்பதால் மறுத்துவிட்டாராம். நல்லவேளையாக அவருக்கு வங்கதேசமும் ஒரு இசுலாமிய நாடு என்பது நினைவுக்கு வரவில்லை.

பின்லேடனின் உதவியாளர் ஒருவர் எல்லாப்போட்டிகளும் நடக்கும் மைதானத்தில் அல்கைதா ஆசி பெற்ற உலகக் கோப்பை போட்டி என விளம்பரம் செய்ய விரும்பியதாகவும் அதில் உள்ள சிரமங்களை மோடி விளக்கியபிறகு அதை வற்புறுத்தவில்லையாம். அல்கைதாவுக்கு அளிக்கப்படும் பணம் அமெரிக்க டாலராக ஏதோ ஒரு நாட்டு வங்கியின் கணக்கில் இந்நேரம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. இப்படி வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து காரியத்தை சாதித்த மோடிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு குவிகிறது.

கிரிக்கெட் போட்டிக்காக சர்வதேச அரசியல் கூட சற்று வளைந்து கொடுக்கும் என்பது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இந்தப்போட்டியில் பல ஆயிரம் கோடி ரூபாயை வருமானமாகப் பெறப்போகும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் இந்த அதிரடி நடவடிக்கையின் சூத்திரதாரிகள். மோடியுடன் ஒரு இந்திய நிறுவனம் மற்றும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதிகளும் சென்று பின்லேடனை சந்தித்தாக கூறுகிறார்கள். ஒரு விளையாட்டுப் போட்டிக்காக பன்னாட்டு நிறுவனங்கள் நினைத்தால் பயங்கரவாதிகளுடனான போரையே நிறுத்த முடியும் என்பதை பல அப்பாவிகளால் புரிந்து கொள்ளமுடியவில்லை. இதே பின்லாடன் அமெரிக்காவின் உதவியால் சோவியத் ரசியா ஆக்கிரமித்திருந்த ஆப்கானில் போரிட்டு போராளியானார் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. மேலும் அமெரிக்கா ஆரம்பித்திருக்கும் இந்த பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்பதே அமெரிக்காவின் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ள பயன்படும் ஒரு முகாந்திரம் என்பதும் அவர்களுக்கு தெரியாது.

இந்த செய்திகள் பல்வேறு வெளிநாடு மற்றும் இந்திய பத்திரிகைகளில் வந்தாலும் இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லையென மறுத்திருக்கிறார்கள். ஆனால் அல்கைதா மிரட்டலை மீறி இந்தியாவில் போட்டி எப்படி நடத்தப் போகிறீர்கள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து முதலான நாடுகளின் வீரர்கள் இந்தியா வருவதற்கு எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்விகளுக்கு இவர்களிடம் விடையில்லை. அதற்கு எல்லோரிடமும் ஒத்திசைவாக வெளிப்படுவது ஒரு மர்மச் சிரிப்புதான்.

2011: அல்கைதா ஆதரவுடன் உலக்கோப்பை கிரிக்கெட் ??

 

 

 

 

 

 

 

http://www.vinavu.com/2009/06/03/2011-cricket-world-cup-by-al-qaeda/


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்