புலத்துப் புலிகள் பினாமிகளுக்கு லாடம் கட்டி ஓட்டும், ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் கூத்து

உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் வாக்களிக்கக் கோரும் புலத்துப் புலியிசம், தமிழ் மக்களுக்கே எதிரானது. ஐரோப்பிய மக்களுக்கு எதிரானது. உழைக்கும் மக்களை பிரித்தாளும் ஏகாதிபத்திய நலனுக்கு சார்பானது. இதுதான் புலத்து வலதுசாரிய புலியிசமாகும்.

தமிழன் ஒருவன் வென்றால், தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பான். இந்த அடி முட்டாள் தனத்தை கொண்டு தமிழனை ஏமாற்றி தின்னும் கூட்டம் இருக்கும் வரை, இது போன்ற மக்கள்விரோதக் கூத்துகளும் தொடர்ந்து அரங்கேறும். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் குரல் ஒலித்தால், தமிழனுக்கு விடிவு வந்துவிடுமா!? ஐ.நாவில் குரல் கொடுத்த தமிழன் என்று, எத்தனை கதைகளை, எம் அவலமான இன வரலாறு கண்டிருக்கின்றது. இப்படி பலர் பிழைக்க, ஒரு இனம் ஏமாற்றப்பட்டது. மக்கள் தாமே தமக்கானதை தீர்மானிக்க முடியாத வண்ணம், ஏமாற்றுவது தான் இதில் உள்ள அரசியல் உள்ளடக்கம். 

 

இதற்கமைய புலிப் பினாமிகளை ஐரோப்பிய தேர்தலில் நிறுத்தி, அழகு பார்க்கும் புலத்துப் புலிகள். ஏதோ தமிழ் மக்களுக்காக அந்த தனிமனிதர்கள் உழைப்பார்கள் என்று கூறி, பிரிட்டன் மற்றும் பிரான்சின் தேர்தல் கூத்தில் களமிறங்கி கதைகள் பல சொல்லுகின்றனர்.

 

கடந்த தமிழன் வரலாற்றில் தமிழனை அழித்த கூட்டம், பாடை காட்டிக்கொண்டு மீண்டும் தமிழன் என்று வாக்குகேட்டு ஒப்பாரி வைக்கின்றது. இந்த புலத்து புலிப் பினாமிகள், மக்களுக்காக உழைக்கும் நேர்மை என்பது அறவே கிடையாது. யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில், தமது சந்தர்ப்பவாத நிலையெடுத்து புலிக்கு பின் நின்றதால், இந்த வேட்பாளர் தகுதியை புலத்துப் புலிகள் இவர்களுக்கு கொடுத்தனர். புலிகளின் மனிதவிரோத செயலுக்கு துணையாக நின்றதுதான், இவர்களின் அரசியல் தகுதி. இதற்குள் நேர்மையாக மக்களுக்காக நிற்றல் என்பது, இவர்களின் தகுதிக்குரிய சிறப்புமல்ல, தெரிவுமல்ல. 

 

இவர்கள் என்றும் தமிழ் மக்களுக்காக நேர்மையாக உண்மையாக குரல் கொடுத்து போராடியிருக்கவில்லை. அதுதான் இவர்களின் தகுதி. புலிகளின் மக்கள்விரோத செயலை மூடிமறைத்து அதற்காக குலைத்ததால், புலத்துப் புலிகள் வழங்கிய பிச்சைதான் இந்த வேட்பாளர் தகுதி.   

 

மக்களின் உண்மையான மனித அவலத்தை முழுமையாக சொல்ல மறுத்தவர்கள், சொல்ல மறந்தவர்கள இவர்கள். இதனால் தமிழனுக்கு எதிரான தமிழ் வேட்பாளராகியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள், எப்படி உண்மையாக நேர்மையாக தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பவர்கள் ஆவார்கள்;. புலியைக் கடந்து, அதை விமர்சித்து மக்களுக்காக குரல்கொடுக்க முடியாத அரசியல் அங்கவீனமானவர்கள். கடந்த காலத்தில் சந்தர்ப்பவாத நிலையெடுத்தவர்கள். நாளையும் அதைத்தான் செய்வார்கள். புலத்துப் புலிப் பினாமியாக இருந்த இருக்கின்ற தகுதி, தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் அடிப்படையைக் கொண்டது.

 

புலத்துப் புலிப் பினாமியும், ஏகாதிபத்திய நக்குண்ணித்தனமும் 

 

புலிகள் தமிழ் மக்களை நம்பியது என்றும் கிடையாது. ஏகாதிபத்திய அரச தலைவர்களையும்;, அவர்களின் ஏஜண்டுகளையும் நம்பியவர்கள். அவர்களிடம் வேண்டுகோள் என்று புலத்து போராட்டத்தையே, ஏகாதிபத்திய நலனுடன் என்றும் இணைத்தவர்கள்.

 

இதனால் இந்த ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான மக்கள், புலத்து புலிகள் நடத்தி போராட்டங்களில் கலந்துகொள்ள முன்வரவேயில்லை. உதிரியான பிழைப்புவாத பிரமுகர்கள், இவர்களிடம் வாங்கித் தின்ற நன்றிக்காக வந்து போனார்கள்.

 

இந்த நிலையில் அப்படி தின்ற ஐரோப்பிய மக்கள்விரோத உதிரிகளை உள்ளடக்கிய கோஸ்டியும் சேர்ந்து, புலிப் பினாமி வேட்பாளர்கள் மூலம் தமிழனுக்கு புதிய விடிவைக் காட்டுகின்றனர்.

 

ஐரோப்பாவில் உழைத்து வாழும் தமிழனைப் போல், கோடிகோடியாக உழைத்து வாழும்  மக்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒன்றிணைந்து போராட மறுக்கும் புலத்து வலதுசாரிய புலியிசம், தன் பிழைப்புக்கு ஏற்ப இந்த தேர்தல் கூத்தில் இறங்கியுள்ளது. இப்படி ஐரோப்பிய உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிய குறுகிய தமிழ் சி;ந்தனையுடன், தேர்தலில் நிற்கின்றது. உழைக்கும் மக்களின் உரிமைக்காக போராடும் அந்த மக்களுக்கு எதிராக, இந்த தேர்தலில் தமது வலதுசாரிய குறுகிய கண்ணோட்டத்தில் போட்டியிடுகின்றனர். இப்படி ஐரோப்பிய உழைக்கும் மக்களுடன் சேர்ந்து நிற்க முடியாத இந்தக் கூட்டம், உண்மையான தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முடியாது. பிரமுகர்களும், பினாமிகளும், நக்கித்தின்னும் நிலைக்கு, தமிழ் அடையாள கோசம் பயன்படுகின்றது.

 

இலங்கையில் யுத்தத்தின் முடிவை அடுத்து, பெருமெடுப்பில் தமிழர்கள் நாடு கடத்தப்படும் சூழல் உருவாகி வருகின்றது. இன்று இது போன்ற நாடு கடத்தலுக்கு எதிராக ஐரோப்பிய உழைக்கும் மக்கள் தான் போராடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நிற்காத, நிற்க முடியாத, அவர்களுக்கு எதிரான வலதுசாரிய புலத்து புலிச் சிந்தனை அவர்களை தமிழர்களுக்கு எதிராக காட்டுகின்றது. இது மக்களின் எதார்த்த வாழ்வியல்; நெருக்கடிகளுக்கு எதிரானது. உழைத்து வாழும் தமிழனை, உழைத்து வாழும் ஐரோப்பியனுக்கு எதிராக தேர்தலில் நிற்கவும், வாக்களிக்கவும் கோரும் புலத்துப் புலியிசம் தமிழ் மக்களுக்கே எதிரானது. 

 

இவர்கள் மண்ணின் அவலத்தைக் காட்டி, அதைப் பிழையாக வழிநடத்தி இனத்தையே அழித்தவர்கள். தமது வலதுசாரிய வக்கிரத்தைத் தாண்டி, உழைக்கும் மக்களுக்காக சிந்திப்பதும், செயற்படுவதும் கிடையாது. இன்று ஐரோப்பிய பாராளுமன்றச் சீட்டைக் காட்டுகின்றனர். 

        

ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் இயங்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில், புலத்துப் புலிப் பினாமிய வலதுசாரிகள் இதை எதிர்த்து போராடப் போகின்றார்கள். இல்லை வலதுசாரிய ஏகாதிபத்திய உலக ஓழுங்கின் அச்சில் உருளும் இந்த புலத்து வலது புலியிசம், தான் ஒரு தமிழன் என்பதால் உலக ஒழுங்கை மாற்றிவிடுவார்களா!? இல்லை, இதற்கு எதிரானவற்றை ஒடுக்குவது, இந்த வலதுசாரி அரசியல் வரையறை. இதைத்தான் மண்ணில் புலிகள் செய்தனர். இதன் மூலம் ஒரு இனத்தையே அழித்தனர்.

 

சும்மா தமிழன் தமிழன் என்று கூறிக்கொண்டு, தமிழ்மக்களை ஏமாற்றி இதைச் செய்யத்தான் தமிழ் அடையாள தேர்தல் கூத்து உதவுகின்றது. தமிழ் மக்களுக்கு இதனால் நன்மை எதுவும் கிடைக்கப் போவதில்லை, தீமைகள் தான் கிடைக்கும். புலிப் போராட்டம் போல்தான், இதுவும் தமிழ் மக்களுக்கு எதிரானது. இவர்கள் மேலும் மேலும் ஒரு இனத்தின் அழிவுக்கு வித்திடுவதைத் தவிர, இவர்கள் எந்த ஒரு துரும்பையும் மக்களுக்காக பெற்றுத் தரப்போவதில்லை.

 

பி.;இரயாகரன்
02.06.2009