இவர்கள் செய்த ஒரேயொரு குற்றம் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுத்தது. அரசின் குண்டுகள் அகதியாக்கப்பட்ட தமிழர்களின்மீது பொழிந்தபோது வைத்திய நிபுணர்கள் துரைராஜா வரதராஜா, தங்கமுத்து சத்தியமூர்த்தி மற்றும் வி. சண்முகராஜா ஆகியோர் தங்களிடம் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து முடிந்தவரை வைத்திய உதவிகளைச் செய்து இறுதிவரை அவர்களுடன் நின்றிருந்தார்கள்.

பத்திரிகையாளர்களோ சர்வதேசக் கண்காணிப்புகளோ அற்ற நிலையில், யாரும் புகமுடியாத ஒரு இடத்தில் நடந்த துயரத்தின் இறுதிச் சாட்சிகளாக இவர்கள் இருந்தனர். இவ்வாண்டு ஜனவரி மாத இறுதி தொடக்கம் மே மாத இறுதிவரை நடந்த, பிரிவினைவாத இயக்கமான விடுதலைப்புலிகளுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் அந்த யாரும் புகமுடியா இடத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் மரணித்திருந்தார்கள்.

 

இலங்கை சுகாதார அமைச்சின் கீழ் அந்த நெருக்கடிச் சூழலில் அவர்கள் பணிபுரிந்ததற்கான பரிசாக சிறைவாசம் கிடைத்திருக்கிறது. இராணுவத்தின் இறுதித் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த வடகிழக்குக் கரையோரப் பகுதியில் இருந்து இவர்கள் 15.05.2009 அன்று வெளியேறி வந்ததும் கொழும்பைத் தலைமையகமாகக் கொண்ட இரகசியப் பொலிசாரினால்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் அவமானத்திற்குரிய செயலாகும். 

 

2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த இரகசியப் பொலிசாரின் விசாரணையின்போது சித்திரவதை என்பது கிரமமாக நடைபெறும் விடயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டுமே அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டு அவர்கள் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரான வி. சண்முகராஜாவுக்கு மார்பில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். “ஒரு நாள் இந்த அரசின்மீது விசாரணை நடைபெறுமாயின் இவர்கள்தான் முக்கிய சாட்சிகளாய் இருப்பார்கள். இதற்காகத்தான் இவர்களைக் கொல்வதற்கு முயன்றார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறியபொழுது மிகவும் விரக்தியடைந்திருந்தார்கள்.” இப்படி சர்வதேசரீதியான பொறுப்பாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

 

இவர் இந்த வைத்திய நிபுணர்களுடன் தொடர்பில் இருந்தவர். இவர் தன்னை அடையாளம் காட்ட மறுக்கின்றார். அடையாளம் காணப்படுமிடத்து தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விடலாம் என்று பயந்துபோய் இருக்கிறார் இவர். “இவர்கள்தான் வீரர்கள். இவர்கள்பற்றித்தான் படங்கள் எடுக்கப்படவேண்டும்” என்று அவர் மேலும் சொல்கிறார்.  இந்த யுத்தத்தின்போது சற்றலைற் தொலைபேசிகளுடன் தொடுக்கப்பட்டிருந்த கணனிகளின் ஊடாக மின்னஞ்சல்களை அனுப்பினார்கள். தாக்கப்படுகின்ற பகுதிகளைத் தவிர்க்குமுகமாக அதற்கேற்றபடி இந்த பொக்கிஷம் போன்ற தங்கள் வைத்தியசாலையை ஆங்காங்கு இடம்பெயர்த்தார்கள். அங்கிருந்து சில ஆவணங்களை மட்டும் பெற முடிந்தது. மிகவும் சுருக்கமான,  தெளிவற்ற, மருந்துச் சீட்டுகள் போன்ற குறிப்புகள்.

 

உதாரணமாக: 

29.04.2009

 அன்புள்ள ஐயா, அம்மா, இன்று பிற்பகல் 4:00 மணியளவில் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மிகமோசமாகத் தாக்கப்பட்டது. வைத்தியசாலையினுள் இருந்த நோயாளிகள் மரணித்தார்கள். 9 பேர் இறந்துவிட்டார்கள். 15 பேர் காயப்பட்டிருக்கிறார்கள். இன்று காலை 11:00 மணியளவில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரி ஒருவர்  வருகை தந்திருந்தார். 

 

இப்படிக்கு

டாக்டர் ரி. சத்தியமூர்த்தி

  

(சுகாதார சேவை, பிராந்தியத் தலைவர்)

 

இந்தக் கடிதம் ஐக்கியநாடுகள் சபையின் உத்தியோகத்தர்களில் குறிப்பிட்ட சிலருக்கு - இலங்கையில் உள்ள பொறுப்பாளர்கள், உயர்மட்ட அதிகாரிகள், புலம்பெயர்நாடுகளில் உள்ள சில அங்கத்தவர்கள் - அனுப்பப்பட்டிருந்தது. ஒவ்வொரு செய்தியுடனும் இணைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் போட்டோக்கள் அங்குள்ள மோசமான நிலைமைகளைக் காட்டின. இப் படங்கள் அங்குள்ள வைத்திய நிபுணர்களாலோ அல்லது அங்கு பணிபுரியும் ஐநா சபை ஊழியர்களாலோ எடுக்கப்பட்டவை. இந்தப் படங்களில் கடற்கரையோரமாக சிதைந்த உடல்கள், திறந்த காயங்கள், அழுது கொண்டிருக்கும் பெண்கள், திகிலுடன் இருக்கும் சிறுவர்கள் என்று இருந்தன. இவையெல்லாம், தப்பியோட முடியாதவாறு விடுதலைப்புலிகளால் சீலைக் கூடாரங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின்மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்திக் குண்டுகளை இராணுவம் வீசியதால் ஏற்பட்டதன் விளைவுகள். இராணுவத்தால் இதைத்தான் செய்ய முடிந்தது. 

 

“வைத்திய நிபுணர்கள் அரசியல்ரீதியான கேள்விகளைத் தவிர்த்தார்கள். அவர்கள் வெறுமனே தங்கள் கடமைகளைச் செய்தார்கள்” என்று இந்தப் பொறுப்பாளர் மேலும் தெரிவித்தார். இந்த வைத்திய நிபுணர்கள் எந்தவித உணர்ச்சிகளையும் மிக அரிதாகவே வெளிப்படுத்தினார்கள். ஒரு நாள் தொலைபேசியில் தங்கமுத்து சத்தியமூர்த்தி அழாக்குறையாகப் பேசினார். துடைப்பகுதிக்குக் கீழ் இரண்டு கால்களும் சிதறி இருந்த ஒரு பெண் அதிலிருந்து பாய்ந்த இரத்தத்தை ஒரு சட்டியில் ஏந்திக் கொண்டிருந்தார். அவரது இறுதி மூச்சு நெருங்கிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் காணவிடாது அவளுடைய பேரச் சிறுமியை மற்றவர்கள் தடுத்தனர். அச்சிறுமி அந்தப் பெண்ணைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். அவளைக் காப்பாற்றுவதற்கு அங்குள்ள வைத்தியர்களிடம் போதிய வைத்திய வசதிகள் இல்லை. மாதக் கணக்காக இல்லை. அவர்களால் எதுவும் செய்ய முடியாது. என்னிடம் சத்தியமூர்த்தி சொல்கிறார்: “யுத்தம் வருமென்று எனக்கு எப்போதுமெ தெரிந்திருந்தது. ஆனால் அது குண்டுகளின் விரிப்பில் போய் முடியும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை.”

 

“பல தடவைகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் காயப்பட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காகக் கரை ஒதுங்கியபோது, அங்கு பணிபுரிந்த வைத்தியர்கள் தங்களுடைய நகரும் வைத்தியசாலையின் GPS தொடர்புகளை செஞ்சிலுவைச் சங்கத்தாரிடம் கொடுத்தார்கள். தாங்கள் நிலைகொண்டிருக்கும் இடங்களை இராணுவத்திற்குத் தெரியப்படுத்தும் வகையில் அவற்றைக் கொடுத்தார்கள். இந்தச் செய்தி அனுப்பிய சில மணித்தியாலங்களில் இராணுவம் அந்த இடத்தைச் சரியாகக் குறிவைத்துத் தாக்கியது” என்று இந்த மூலம் அறிவிக்கிறது. 

 

இறுதி நாட்களில் மின்னஞ்சல்களின் தொனி மாறுகின்றது.

“மே 13ம் திகதி.

 

கனரக ஆயுதங்களின் தாக்குதல்கள் காலை 5:30 மணிக்குத் தொடங்கின. வைத்தியசாலைக்கு  காயமடைந்த நிறையப் பொதுமக்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு எந்தவிதக் கவனிப்பும் இல்லை. ஏனென்றால் வைத்தியசாலை சாவை எதிர்கொள்ளும் குண்டுவீச்சுகளுக்கு மத்தியில் இருக்கின்றது.(...) ஆயிரக்கணக்கானவர்கள் அன்றாடம் வைத்திய உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். (....) அவ்வளவு காயப்பட்டவர்கள் மரணித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வைத்தியசாலையினுள் நோயாளர்களுக்கு மத்தியில் பிரேதங்கள் கிடக்கின்றன. வைத்தியசாலையினுள் நோயாளர்கள் அழுவதைப் பார்க்கவும் கேட்கவும் கூடியதாக இருக்கிறது. எல்லாப் பக்கத்தாலும் சுடப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இராணுவம் 500 மீற்றர் தூரத்தில் இருக்கிறது; அவர்களைச் சுற்றி முழுவதும் பிரேதங்கள்”

 

இந்த டாக்டர்களைக் கைதுசெய்து ஒரு வருடம் வரை எந்த விசாரணையும் இன்றி சிறை வைக்க அவசரகால நிபந்தனைகளும் தீவிரவாத தடுப்புச் சட்டமும் அனுசரணையாக உள்ளன. இந்த டாக்டர்கள்மீது எந்தப் புகாரும் செய்யப்படவில்லை. ஆனால் செய்திகளில், இவர்கள் ஊடகங்களிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகளைத் தெரிவித்தார்கள் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.

 

“அரசு இவர்களை வெளியே விடப்போவதில்லை. ஏனெனில் இவர்கள்  இராணுவம் புரிந்த போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒரு நாள் சாட்சி சொல்லக்கூடும் என்ற அடிப்படையில்” என்று மனித உரிமைகள் காப்பாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கிறார். ஏனைய பலரைப் போல  இந்த டாக்டர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடும் என்று இவரும் அஞ்சுகின்றார்.

 

இவர்களுடைய குடும்பங்கள் அரசோடு சேர்ந்து நிற்கின்ற தமிழ் ஆயுதக் குழுக்களால் பயமுறுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய வீடுகள் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கின்றன. இவர்களின் குடும்பத்தவர்களை தெருக்களில் பின்தொடர்கிறார்கள். அவர்கள் தொழில்புரியும் இடங்களின் விபரங்கள் பெறப்படுகின்றன. “இந்தக் குழுக்களுடன் நீங்கள் எதிர்த்துப் பேசினால் உங்கள் பெண்பிள்ளையுடைய உடல் சில தினங்களில் ஏதாவதொரு குளமொன்றில் போடப்பட்டிருக்கும்” இப்படி இந்தப் பொறுப்பாளர் மேலும் கூறுகிறார்.

 

அரசு சாரா உதவிநிறுவனங்களும் பல உயர்மட்டத்திலான அமைப்புகளும் இந்த வைத்திய அதிகாரிகளை விடுதலை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள். அவர்களை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாட்டில் குடியேற வைப்பதற்கு எண்ணுகிறார்கள்.

 

இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் மனிதாபிமான அடிப்படையில் பணிபுரிந்த 60 ஊழியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பிரசித்தமான பத்திரிகையாளர்கள் அல்லது மனித உரிமைகளிற்காகக் குரல் கொடுத்தவர்கள் என்று பட்டப்பகலில் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்படுகிறார்கள். இப்படிக் கொண்டு செல்லப்பட்டவர்களில் சிலர் எப்போதுமே மீண்டதில்லை. இப்படியான ஒரு சூழலில் அங்கு தங்களது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பவர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். அங்குள்ள பிரபல பத்திரிகைகளின் தலையங்கங்களைப் பாரத்தால் இது புரியும். உதாரணத்திற்கு, தி ஐலண்ட் அல்லது டெய்லி நியூ; போன்ற பத்திரிகைகளைப் பார்த்தால்,

 

- மனித உரிமைகளுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற போர்வையில் தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள்

- விடுதலைப்புலிகளிடம் வேதனம் பெறும் பத்திரிகையாளர்கள் குற்றவாளிகள் (இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா)

 

- அரசு சாரா நிறுவனங்களின் நிபுணர் விடுதலைப்புலிகளுக்கு உதவினார்.

 

ஒரு ஐநா சபை பணியாளர் தெரிவிக்கின்றார்: “இங்குள்ள நிலைமைகள் பேர்மானியை விடவும் மோசமாக இருக்கின்றன” ஐநா சபை பணியகத்தின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இந்த அரசு தன்னுடைய பங்குக்கு புஷ்ஷின் தாரக மந்திரத்தை எடுத்துக் கொண்டது. “ நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள் அல்லது எங்களுக்கு எதிராக இருக்கிறீர்கள்” அவர்களுடைய வெற்றியின் பின்னர் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. இது ஒரு இராணுவ ஆட்சி. இது மிகமோசமான அழிவை நோக்கிச் செல்லும்” இப்படி மனித உரிமைகள் காப்பாளர் ஒருவர் சொல்கிறார். 

 

இந்த வீரம் மிகுந்த வைத்திய அதிகாரிகள் தற்போது சிறையில் இருக்கிறார்கள் என்று ஐநா தெரிவிக்கின்றது. ஆனால் இவர்கள் ஒரு நாள் சாட்சிக் கூண்டில் நிற்கும்போது இவர்களைச் சிறையில் அடைத்தவர்கள் குற்றவாளிக் கூண்டில் இருப்பார்கள்.

 

நன்றி: journal Le Monde  - 29.05.2009

Philippe Bolopion

மொழி பெயர்ப்பு: புகலி

http://www.puhali.com/index/view?aid=239&catid=0