Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்றைய உலகத்தின் பொருளாதார வியூகத்தைக் குறித்து எந்த ஆய்வுமின்றிப் "பேராற்றல்"மிக்கப் பிரபாகரனால் தமிழீழம் விடுதலையாகுமெனக் கனவுகண்ட புலம்பெயர் தமிழ் மனதுக்கு, இன்னும் தமது தலைமையின்மீது அளப்பாரிய மயக்கம் இருக்கிறது.புலிகளின் தோல்விக்குச் சர்வதேசத்தின் கூட்டுக்காரணமாவதற்கு எது உடந்தையாக இருந்ததென்பதைக் கேள்விக்குட்படுத்தாமல் வெறுமனவே மேலும் இயக்கவாத அரசியல் செய்பவர்களை என்னவென்பது! 

 

இவர்களே,இப்போது இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

 

"இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும்."

 

எதற்கு இன்னொரு பிரபாகரன்?

மக்களையும் புரட்சியையும் காட்டிக்கொடுத்து எதிரியிடம் சரணடைந்து கேவலமாகப் படுகொலையாகவா?-அல்லது தனக்குப் பின்னுள்ள புலிகளது புதிய ஆளும் வர்க்கம் மக்களது செல்வத்தோடு அந்நியத் தேசங்களில் சொகுசாக வாழ்வதற்கும் அவர்களது குழந்தைகள் மேலும் அடிமைப்பட்ட தமிழ் மக்களை மேய்ப்பதற்கா இன்னொரு பிரபாகரனை அவரது அநுதாபிகள் தேடுகிறார்கள்?

 

முதலில் போராட்டத்தையும்,சமூக இயக்கத்தையும் புரட்சிகரமாகப் புரிந்துகொண்ட

வரலாற்றில் பிரபாகரனது பாத்திரம்குறித்து விவாதியுங்கள்.அதுவே உண்மைகளைக்

கண்டடையும் முதலாவது படி.இதிலிருந்து மீளத் தகவமைக்கும் மக்கள் திரள் மேலும்

 

வரலாற்றில் முன்னேறுவதற்குத் தமது தவறுகளிலிருந்து பாடங்கற்றாகவேண்டும்.

ஒரு நிறுவனத்தின் உற்பத்தித் திறன் சந்தை வாய்ப்புக் குறித்து மிக நுணுக்கமாக மதிப்பிட்ட வியூகம் அமைக்கும் அதன் வியூக வகுப்பாளர்கள் அந் நிறுவனம் தோல்வியடையும்போது மிகத்தெளிவாகத் தமது தவறுகளை மேலும் ஆய்வுக்கிட்டு அதிலிருந்து தவறுகளைக் களைந்து புதியதான தெரிவுகள்-வியூகத்தோடு அந் நிறுவனத்தை மேலும் வெற்றிக்கிட்டுச் செல்லத் தீர்மானிக்கிறார்கள்.இங்கே ஒரு சிறிய நிறுவனத்துக்கே இந்தக் கோலத்தில் செயற்படவேண்டுமெனும்பொழுது,ஒரு பெரும் இயக்கம்,பல இலட்சம் மக்களது தலைவிதியைத் தீர்மானிக்கும் போராட்டத்தைத் தோல்விக்குள் வீழ்த்தியபோது அதைக் குறித்து ஆய்வுகளைவிட்டுவிட்டு-அல்லது அதுகுறித்துப் பேசாது இன்னொரு பிரபாகரனுக்காக காத்திருப்பதன்று கருத்துக்கட்டுவது மீளவும் அதே தனிநபர் வழிபாடு,தனிநபர் சாகசத்துக்குள் நமது மக்களை வீழ்த்தும் தறிகெட்ட தறுதலைத்தனமானது.

 

தமிழ்ச் சமுதாயமே மிக மோசமான அறிவுவறட்சிக்குள் தள்ளப்பட்டுள்ளது.அதனிடம் சரியான உலகப் பார்வை கிடையாது.சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அதனால் விளங்கமுடியுதில்லை.இன்றைய புலிகளது தலைமையின் துரோக அரசியலின் தொடர்ச்சியில் சரணடைவாக அது தமிழ்பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்துத் தான் படுகொலையாகிப் போயுள்ளது.இத்தலைமையை இயக்கிய சர்வதேசப் புலி ஆளும் வர்க்கங்கள் தம்மை மேலும் பலப்படுத்துவதற்குப் பிரபாகரனது அழிவையே மறுத்தபடி நமது மக்களை மேலும் காட்டிக்கொடுப்பதற்காக உலகத்தில் பற்பல வடிவங்களில் இயங்குகிறார்கள்.இவர்கள் குறித்த சரியான புரிதலின்றி கூட்டத்தோடு கோவிந்தா போடும் கயவர்கள் இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காலத்தைப் போக்குவதற்குக் கருத்து எழுதுகிறார்கள்.காரணமே இன்றிப் புலித்தலைமை சரணடையவில்லை.அது தனது மோசடியான பேரங்களுடாகவே தமது சரணடைவுக்கு முன்வந்துள்ளது.அங்கே, அந்தப் பேரம் என்னவென்பதை ஊகிக்கமுடியாதவொரு கூட்டம்,மீளவும் பிரபாகரன் அரசியலைத் தேடியலைகிறார்கள்.இது ஆரோக்கியமானதில்லை.

 

இலங்கையை நோக்கி அசையும் ஆசிய மூலதனத்தோடு அது நட்போடு இயங்குவதற்கான ஒப்புதலுக்காகத் தமிழீழப் போராட்டம் கைவிடப்பட்டுத் தாம் ஒதுங்குவதென்ற ஒப்புதல் இங்கே பெரும்பாலும் பேசப்பட்டிருக்க முடியும்.அதுவும்,போராட்டத்தில் தலைமை வகித்த பிரபா மற்றும் தளபதிகள் இலங்கையைவிட்டு வெளியேறிக் கண்காணாத இடத்தில் காலத்தைப் போக்குவதற்கான மனமுவந்து கோரப்பட்ட கோரிக்கையை, சதியினூடாகச் செய்ய முன்வந்த தலைமையை நம்ப வைத்துக் குழுத்தறுத்தவர்கள் பிரபாகரனை இயக்கிய புதிய தமிழ் ஆளும் வர்க்கமும் இலங்கை மற்றும் அவர்களது சர்வதேசக் கூட்டுமாகும்.இதைக்குறித்து நீண்ட ஆய்வுகள் தேவையாக இருக்கிறது.

 

புலிகள் இதுவரை செய்த அரசியல் தவறுகளைக் கள்ள மௌனஞ் செய்து மறைத்தவர்கள் எல்லோரும் இன்றைய புலிகளின் தோல்வியிலிருந்து பேயடிச்சவர்கள்போல் பிதற்றுகிறார்கள்.புலிகளின் போராட்டம் தோல்வியைத் தழுவும் என்பதற்குப் புலிகளின் பாரிய அரசியல் தவறுகள் காரணமல்ல.மாறாக, அவர்களது வர்க்க ரீதியான உறவே காரணமாக அமைவது.இது,தமிழ் வலதுசாரியத்திலிருந்து தன்னைக் தற்காத்துக்கொள்ளும் போராட்டச் செல் நெறியோடும் "தேசிய" விடுதலையைச் செய்யமுடியுமெனும் கோசத்தோடும் இதுவரை மக்களை வேட்டையாடியது.இந்த வேட்டை பல தளங்களில் விரிந்தது.இதற்கு ஆதரவாக அன்றுமுதல் புலிகளின் எஜமானர்களே காரியமாற்றிப் பிரபாகரனை உசுப்பி விட்டவர்கள்.இன்று அவரைக் கொத்திக்கொன்று கூத்தாடுகிறார்கள்!

 

புலிப் பாசிசக் கோமாளிகள் செய்த "ஈழப்போராட்டம்" மக்களையும்,அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து, அவர்களை நடுத்தெருவில் விட்டதைவிட வேறென்னத்தைக் கண்டது?

 

புலிகள் சாரம்சத்தில் வலதுசாரியப் பாசிசச் சக்தி.

 

அந்நிய தேசங்களுக்கு அடியாட்படையாகத் தமிழர்களை வேட்டையாடியவொரு எதிர்ப் புரட்சிகரமான சக்தி.எனவே,அதன் பாத்திரத்தில் அது செய்ய வேண்டியதைச் செய்து,எஜமானர்களுக்கானவொரு இலங்கையைத் தகவமைத்துக்கொடுத்தபின் தனது எஜமானர்களாலேயே அழிக்கப்பட்டுவிட்டது.

 

இங்கே,நாம் மிகக் கவனமாக இனங்காணவேண்டியது ஒன்று உண்டு.

 

அது,புலிகளின் அப்பாவி அடிமட்டப் போராளிகள் அனைவரும் புலித் தலைமையின் அந்நியச் சேவைக்கு அடியாளாகச் செயற்பட்டாலும்,இலங்கையில் நிலவிய சிங்களவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தின் வாயிலாகவே அணிதிரண்டவர்கள் என்பதே.இதன் காரணத்தால், அவர்கள் தமது குடும்பத்தவர்கள்மீது சிங்களப் பாசிச அரசும்,சிங்கள ஆளும் வர்க்கமும் தொடுத்த இனவொடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தைச் செய்வதிலேயேதாம் தமது தலைமையின் அந்நியச் சேவையைச் செய்தார்கள்.எனவே,புலிகளின் அடிமட்டப் போராளிகள்தாம்

 

தற்போது எமக்குத் தேசபக்தர்களாகிறார்கள்.

 

இந்த அடிமட்டப் போராளிகள் சரணடையவில்லை!

 

இறுதிவரைத் தலைமையின் கட்டளைக்குப்பணிந்து சிங்கள இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு மரணித்தார்கள்.இவர்களது தியாகம் புலித் தலைமையிலிருந்து வேறுபட்டது.போற்றத்தக்கது-பூஜிக்கத்தக்கது.வரலாற்றில் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்குள் தமிழ்க் குழந்தைகளது வீரம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.துரோகத் தலைமைகளை நம்பித் தமது இன்னுயிரைமாய்த்த அந்தப் பாலகர்கள் எதிரியிடம் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை.உறுதியோடு போராடித் தமது வீரத்தை நிலைநாட்டினார்கள்.அவர்கள் தோற்கவில்லை.சிங்கள இராணுவம் அவர்களது தலைவரைக் கொத்திக்கொன்று கூத்தாட முடிகிறது.இது இப்பாலகர்களுக்கு இழுக்கானதல்ல.துரோகத்துக்குக் கிடைத்த பயனாகவே இது வரலாற்றில் பேசப்படவேண்டும்.இத் துரோகத்துக்கு அடிபணிந்த புலித்தலைமை தனக்குப் பின்னாலிருந்து இயக்கியத் தமிழ்ப் புதிய ஆளும் வர்க்கத்துக்குப் பணிந்து, தமது உயிரைச் சரணடைவினூடாகப் பலிகொடுத்து எமக்கு வரலாற்றில் படிப்பினைகளைத் தந்து போய்விட்டது.

 

வன்னியில் எல்லாம் முடிந்துவிட்டது.

 

இந்நிலையில்,வன்னி நிலைமையோ அப்பாவி மக்களையும்,அடிமட்டப் புலிகளையும் பலிகொடுத்த பலிப்பீடமாக மாறியுள்ளது!இதுவரை பிராபாகரன் செய்த அத்தனை வேள்விகளும் சேர்ந்து, இப்போது மக்களைச் சிங்களப் பாசிச இராணுவத்திடம் பெருந்தொகையாகப் பலிகொடுத்து அவர்களைச் சிங்களப் பாசிச இராணுவத்துக்கு அடிமைச் சேவகஞ் செய்யும் ஒரு அநாதைக் கூட்டமாக்கிவிட்டுள்ளது.ஒவ்வொரு இரவும் தமது உடலில் சிங்கள இராணுவத்தின் மேற்பார்வையிலேயேதாம் அவர்கள் உயிரைத் தொடர்ந்து தேக்கிவைக்க முடிகிறது.

சிங்கள இராணுவம் அனைத்து வளங்களையும் புலிகளிடமிருந்து பறித்துவிட்டது.இருக்கும் போராளிகளையும் ஒருத்தர்விடாது கொன்றுவிட்டது.அல்லது கொன்றதன்பின்புதாம் புலித்தலைமை துரோகச் சரணடைவுக்கு முன்வந்திருக்கிறது. இந்த நிலையில் "பிரபாகரன் சாவில்லை" அல்லது இன்னொரு பிரபாகரனது வரவுக்காகக் காத்திருப்பதெனும் வாதம்-கருத்துக் கடைந்தெடுத்த மோசடி.புதிய புலி ஆளும் வர்க்கத்தினது அரசியல் தெரிவுகளாகமட்டுமே இவற்றை நாம் பார்த்தாகவேண்டும்.இது மிகக் கெடுதியாக நம்மை அழித்துவிட்டு இப்போது தமது மோசடியான மாபியத்தனமான துரோக அரசியலைமறைக்க முனைகிறது.அதற்காக இன்னொரு பிரபாகரனை அது உருவாக்கக் கனவு காண்கிறது.இதுதாம் "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி"என்று தனக்குள் உள்ள மனிதத்தோடு பேசமுற்படும் நியாயத்தைக் கொலை செய்ய முனைகிறது.

 

இப்படியாக எவ்வளவோ நியாயத்தைத் "துரோகம்-துரோகி"என்று கொன்றவர்களது கோழைத்தனமான சரணடைவுத்துரோகம் இங்கே "வீரமரணமென்று" ஒருபகுதியாலும் இன்னொரு பகுதியால் "தலைவர் பாதுகாப்பாக உயிர்வாழ்வதுமாக"ச் சொல்கிறது.இந்த இரண்டு கருத்துகளுக்கும்-புனைவுக்கும் எதிராகக் குரல் கொடுத்து மனிதத்தைத் தேடுபவர்களை அது மீளவும் அனுமதிக்காது அவர்களை வேட்டையாட முனைகிறது.அதில் உள்ள கோஷ்டிகளை சயந்தனின் தளத்தில் இனங்காணமுடியும்.அல்லது அற்புதன் என்ற சதிகாரனிடமிருந்து இவற்றை இனங்காணமுடியும்.இவனே"எழுதி வைத்துக்கொள்ளுங்கள் புலிகள் வெற்றி பெறுவார்கள்"என்று பொயயு;ரைத்தவன்.மேற்குலகத்தில் வாழும் புதிய ஆளும் வர்க்கப் புலித் துரோகிகளுக்கு வால்பிடித்துண்ணும் இத்தகைய துரோகிகளை நாம் தோலுரித்து மக்களிடம் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

 

மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் இந்தக்கூட்டம்,புலம்பெயர் மக்களை ஒட்டச் சுரண்டுவதற்காகப் "போராட்டம் புலிகளோடு" முடியாதென்கிறார்கள்.அட நாசமாப் போவான்களே!மக்களையும் அளப்பெரிய தேசபக்த இளைஞர்களையும் உலக-இந்திய ஏகாதிபத்தியத்துக்குக் காட்டிக்கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள புலித் தலைமை தனது ஈனத்தனத்துக்கு மொட்டாக்கிட அற்புதன் வகையறாக்களை மட்டுமல்ல இன்னும் எத்தனை ஒட்டுணிகளைப் பயன்படுத்துமோ அதுவரை இந்தக் கயவர்களை அம்பலப்படுத்திப் புலிகளுக்குள் உருவாகிய துரோகப் புதிய தமிழ் ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தியாகவேண்டும்.

 

இவர்களிடமுள்ள அப்பாவி மக்களது சொத்தை வன்னியில் வதங்கும் மக்களுக்குப் பயன்படுத்தும்படி இந்தத் துரோகிகளை முற்றுகையிடணும்.இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துள்ள இந்தக் கயவர்களே இன்னொரு பிரபாகரன் வருகை என்றும்,தலைவர் பாதுகாப்பாக இருப்பதென்றும் கூற இன்னொரு பிரிவு தலைவருக்கு அஞ்சலிக்க முனைகிறது.இவர்கள் எல்லோருமே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட இங்ஙனம் பிளவுபட்டுத் தமிழ்பேசும் மக்களையும் அவர்களது குழந்தைகளையும் புலம் பெயர் மண்ணில் ஏமாற்றுகிறார்கள்.

 

இது முறியடிக்கப்பட வேண்டும்.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

31.05.20