இனி என்ன? "இன்னொரு பிரபகாரன் அவதரிக்கும் வரை நாம் அமைதி காத்து நிதானமாகச் செயற்பட வேண்டும்.ஒற்றுமையே பலம்.அறிவார்ந்த செயற்பாடும், அரசியற் தெளிவும் , மன உறுதியுமே எம்மை வாழ்விக்கும்."
ஈழப்போராட்டத்தின் ஆரம்பமே பாசிசத்தின் தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாகவே இருந்திருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் எமது சமூகத்தின் பின்புலம் நாம் ஒன்று முதலாளித்துவ ஜனநாயகம் பெறப்பட்டு வளர்ச்சியடைந்த தேசத்தில் இருந்து போராடவில்லை. (அப்படி போராடியிருந்தாலும் இவ்வளவு வேகமாக வளர்ந்திருக்க முடியாது.) எமது சமூகத்தின் பொருளாதார அடிப்படையில் இருந்துதான் சிந்தனைகளும் பிறக்கின்றன.
போராட்ட ஆரம்ப கர்த்தாக்களான இளைஞர்களில் சிலர் இன, மத, சாதி, பிரதேச வேறுபாடுகளை போக்கச் சிந்தித்தார்கள். இதே போல தோழர் சண்முகதாசனின் தலைமையினால போராட்டம் தமிழ் சமூகத்தை ஒரு தேசிய இனம் என்ற அடையாளத்துக்கு வித்திட்டதையும் மறுக்க முடியாது. ஆனால் அவர்களின் போராட்டத்திற்கு எதிராக நின்றார்களோ அவர்களே தமிழ் தேசியத்தின் தலைமையைக் கொண்டவர்களாக இருந்தனர். இவர்களின் இயல்பான வர்க்க நிலையிருக்க இவர்கள் வலிந்தெடுத்த கோசம் தான் தமிழீழம். இதன் வளர்ச்சிப் போக்கில் தம்மையும் தமது வர்க்க நலனைப் பேணவும் ஆயுதம் உதவியது.
இது அதிகாரத்தைப் பாதுகாக்கும் நிலையில் எல்லோரையும் சந்தேகம் கொள்கின்றது. இதற்கு உள்ளமைப்பில் இருந்தவர்கள் தப்பிக்க முடியவில்லை. நாம் எமது குடுப்பத்தில் உள்ள அங்கத்தவர் அல்லது பக்கத்து வீட்டார் ஆகியோருடன் ஏற்படும் சச்சரவுகளை எவ்வாறு எதிர்க் கொள்கின்றோம்;. ஓன்று அவர்களை வார்த்தையால் சித்திரவதை செய்வது மற்றயைது உடல்ரீதியான தாக்குதல். இவை இரண்டும் எம்மிடம் உள்ளவையே. இவ்வாறான சமூகத்தில் இருந்து வந்தவர்களால் எவ்வாறு வித்தியாசமாக நடந்து கொள்ள முடியும்?
...போராட்டத்தை உழைக்கும் மக்களுக்கான ஜனநாயகப் பண்புகளை வளர்த்தெடுப்பது அவசியம். இதற்கு வெளியே இருக்கின்ற உதிரிகள் தமது புலமையை, வளத்தைப் பயன்படுத்துவது இன்றைய காலத்தில் அவசியமானதாகும். நாம் அமைப்பாக இல்லை என்பது உண்மையே, ஆனால் நாம் தலைவர்களாக முடியாது. தலைமைகள் போராடி வாழும் மக்களிடத்தில் இருந்துதான் வரவேண்டும், அமைப்புக்களும் அவர்களிடத்தில் தான் வரவேண்டும்.
ஆனால் உருவாகவேண்டிய ஒரு அமைப்பிற்காக உழைக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமையாகும்.
இது கூடச் செய்ய வேண்டாம் என சொல்வது எவ்வகையில் நியாயம் கொள்கின்றது எனில் நீங்கள் வாயை மூடுங்கள் மக்கள் ஏமாளிகாக இருக்கட்டும் அவர்கள் மீது சவாரி செய்வோம் என்பது போலவே எண்ணத் தோன்றுகின்றது.
இன்று போராட்டத்தின் பாதையை தெரிவு செய்வதில் பல முனைகள் இருக்கின்றன. முன்னர் ஜே.வி.பியின் பிரதான எதிரியாக இருந்த இந்தியா இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது. அதேபோல கருணா தலைமையினால புலிகள் ஒரு போராட்டப்பாதையை தெரிவு செய்திருக்கின்றார்கள். இவர்கள் முதலில் இயங்குவதற்கான சுதந்திரம் என்பது அங்கீகரிக்க வேண்டும்.
காலத்துக்கு காலம் எதிரிகளை மாற்றிக் கொள்ளும் அரசியல் இருக்கும் வரைக்கும் பல்வேறுபட்ட சக்திகள் இருப்பது தவிர்க்க முடியாதே.
... ஈழப்போராட்டத்தில் அன்னிய சக்திகள் எமது புதல்வர்களை கொல்லும் போது நாம் கொல்லப்படும் புதல்வர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது எமது கடமை. ஆனால் அன்று தேசியம் பேசுகின்ற மாந்தர்கள் எல்லாம் சிறு சட்டங்களுக்குப் பயந்து ஒழிவர். இதுவே அவர்களின் வர்க்க நிலை.
இதேவேளை புலிகளை எதிர்ப்பதற்காய் எதிரிகளுடன் கூடிக்குலாவும் அரசியல், புலிகளுடன் ஒன்றித்து போகும் அரசியல் உழைக்கும் மக்களின் சக்திகள் வளர்வதைத் தடுத்து விட்டன. இதில் முன்னேறிய பிரிவினர் அவர்களின் சுயவர்க்கத் தேவையின் நிமித்தம் ஒவ்வொருமுகாமாக ஒதுங்கிக் கொண்டனர். இவை இலங்கையில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். இந்த இடத்தி;ல் வர்க்க நலன் கொண்ட சக்திகளின் விடாப்பிடியான கருத்துக்கள் மக்கள் மத்தியில் விதைக்கப்படுவது, இதன் மூலம் அவர்களின் போராட்ட உணர்வை வளர்த்தெடுப்பது, பாதை காட்டுவது அவசியமாகும்.
மற்றையது இணையத்தில் இணைப்புக்கள் பற்றி பார்க்கின்ற போது கருத்துக்களை மூடிமறைக்கும் நிலைதான் எல்லாப் பக்கத்திலும் இருக்கின்றது. மக்கள் எல்லாச் வகை கருத்துக்களை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த வகையில்-அதேபோல முற்போக்கான சிந்தனை கொண்ட தளங்களை அறிமுகப்படுத்தாது விடுவது. மக்களை குதிரையோட முனைபவர்களின் செயற்பாடு என்பதற்கு மேல் எதுவும் இல்லை.
ராஜீவ் கொலைபற்றி அனேக தரங்ககள் பேசப்பட்டிருக்கின்றன. இதில் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவி;வ்பதில் காட்டும் அக்கறை அக்கொலைக்குப் பின்னால் இருக்கின்ற சர்வதேச வலைத்தொடரை முழுமையாக எவரும் பார்க்கத் தவறி விட்டுள்ளார்கள். ஓரு ராஜீவ் கொலை செய்யப்பட்டால் என்ன ஆயிரம் உழைக்கும் மக்களுக்கு எதிரான ராஜீவ்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஒழிப்பதில் தான் ஒரு போராட்டத்தின் வலிமை தங்கியிருக்கின்றது. தனிமனிதர்களை அழிப்பதில் ஒரு போராட்டம் வெற்றி காண்பதில்லை.
இன்றைக்குத் தேவையானது புதிய ஜனநாயகப் புரட்சிக்கான ஒரு போராட்டத் தலைமை. இதுவே இலங்கையில் வாழுகின்ற மக்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணத்தை அவர்களுக்கு வழங்கும். வழங்குவன் ஊடாக உலகமயமாதலின் ஆக்கிரமிப்பில் இருந்து எமது மக்களை பாதுகாக்க முடியும். இதன் மூலமே ஒவ்வொரு இனங்களின் உண்மையான தேசிய அடையாளங்களை பாதுகாக்க முடியும். இதற்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாது தொடரும்....
யார் அறிவாளிகள் என்பது ஒரு கேள்விகுள்ளாக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இது வர்க்க சமுதாயத்தால் தீர்மானிக்கப்படுகின்றது. ஒரு சமூகத்தில் உள்ள அறிவானது இன்னொரு சமூகத்திற்க பொருந்தாதவையாக இருக்கின்றது. ஏன் இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஈடாக ஒரு சமூகம் தன்னை வளர்த்துக் கொள்ளாது விடின் மற்றைய சமூகத்துடன் போட்டி போட முடியாது. இவைகள் மூலதனத்தின் பெருக்கத்தின்பால் அவசியமாகின்றது. இதே வேளை தொழிலாளி கூட தனது அறிவிப் பெருக்கத்தின் மூலமே தனது உழைப்பை விற்பதற்கு இலகுவாகவும் இருக்கின்றது.
மார்க்சீயம் என்பது உழைக்கும் மக்களின் தத்துவம் இவற்றை வளர்த்தெடுக்க முடியும். ஆனால் இதில் மாற்றம் கொள்ளாது. இது சுரண்டுபவனைப் பற்றியும் சுரண்டப்படுபவனைப் பற்றியும் விரிவாக ஆராந்துள்ளது. இதில் இருந்து முழுச்சமூக அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கின்றது. ஆனால் ரொட்கிசம் என்பது ஒரு தத்துவம் அல்ல அது ஒரு கோட்பாடு மாத்திரம் தான்.
இது இலங்கையில் பயன்படுத்த முடியுமா? முடியாதா? என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட வில்லை.
இது கோட்பாடு ரஸ்யாவின் பயன்படுத்த முயற்சிக்கப்பட்டது.
இவை தோல்விக்கு உள்ளாக்கப்பட்டது.
இதனை மறுப்பதற்கும் சக்திகள் இருக்கின்றன. (ஆனால் ரொட்சியம் என்பது சித்தாந்தம் என்ன நிலைக்கு கொண்டுவரும் பட்சத்தில் தோல்வியைத் தழுவக் கூடியது. இவைகள் எமது தேசத்திற்கு பயன்படுத்த முடியுமா இது அதன் விசுவாசிகளுக்கு) இலங்கையில் பயன்படுத்தக் கூடிய புதிய கோட்பாடுகளை உருவாக்குவதன் மூலமே பற்பல இசங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். இதில் புதியவர்கள் எவரும் குழப்பத் தேவையில்லை.
புதியவர்களுக்கான ஆரம்ப நிலை என்பது மார்க்சின் சொந்த படைப்புக்களில் இருந்து தொடங்குவதன் மூலமே புதிய நிலைக்கு வர இலகுவாக அமையும். இவற்றிற்கு பல புத்தகங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கூலி, உழைப்பு, லாபம்
மூலதனத்தின் தோற்றம்
கூலியுழைப்பும் மூலதனமும்
மார்க்சீயத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்(
லுத்விக் ஃபாயர்பாகும் மூலச்சிறப்புள்ள ஜேர்மன் தத்துவஞானத்தின் முடிவும் (ஏங்கெல்ஸ்)
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (ஏங்கெல்ஸ்)
மாக்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)
சோவியத் ஆட்சியதிகாரம் என்பது என்ன?
இவற்றை வாசித்து அறிவதன் மூலம் மார்க்சீயத்தை திட்ட நினைப்பவர்கள், வரட்டுத் தத்துவம் எனக் கூறுவோர், இலங்கையில் நடப்பது என்ன என்பதை புரிந்து கொள்ள இது நிச்சயமாக உதவும். இதில் இருந்து நாம் பேசுவது வெறும் புலியெதிப்பு வாதம் இல்லை என நீங்களே புரிந்து கொள்வீர்கள்.