Language Selection

இன்றுவரை மக்களுக்காகவே ஏதோ நடந்து வந்தது போல், புதிதாக இந்தக் கேள்வி. பலருக்கு நம்பிக்கையூட்டிய புலிகள், இன்று இல்லாத வெற்றிடம் தான் பலருக்கு. இதுவே கேள்வியாகி நிற்கின்றது. மக்கள் அன்றும் சரி இன்றும் சரி, தமக்கு இவர்களால் எந்த விடிவும் கிடையாது என்பதை, தம் வாழ்வு சார்ந்து புரிந்தே வைத்திருந்தனர்.

 

தமிழ்மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். எம் மண்ணில் சுயாதீனமான எந்த செயல்தளமும் மக்களுக்காக கிடையாது. பெரும்பாலாவைகளை புலிகள் அழித்தனர். எஞ்சியதை அரசு அழித்துள்ளது. மக்களின் ஓப்பாரிக்கு வெளியில், அவர்களுக்கு வாழ்வில்லை. இது எதார்த்தம்.

 

இன்று அண்டை அயலவரின் சுகதுக்கத்தைக் கூட விசாரித்தால், அச்சமூட்டும் வண்ணம் கண்காணிப்பும்,  தண்டிக்கப்படும் அவலநிலையும். இன்று தமிழப்; பாசிசத்தின் இடத்தில், அரச பாசிசம் குடிகொண்டுள்ளது. இன்று கூலிக்குழுக்களுக்கு வெளியில், தமிழ் அரசியலுக்கு இடமில்லை. அங்கு எந்த சுதந்திரமுமில்லை.

 

புலம்பெயர்ந்த சமூகத்தில் பேராட்டத்தை சொல்லி வாழ்ந்த கூட்டம், தலைவரின் பெயரால் தன்னை தக்கவைக்க முனைகின்றது. பழைய அதிகாரம் மூலம், தமிழ் மக்களை சுருட்டி வாழ எண்ணுகின்றது. புலியெதிர்ப்புத் தளத்தில், அரச உளவாளிகள் புழுத்து வருகின்றனர். மறுதளத்தில் அரசியல் நீக்கம் செய்த நடுநிலை வேஷத்துடன், மறுபடியம் கும்மியடிக்க பலர் புதிய வழிகளைத் தேடுகின்றனர்.

 

யுத்த உளவியலும், புலித் தலைமையின் படுகொலை சார்ந்த உளவியலும், பலரை திகிலடையவைத்துள்ளது. செய்வதறியாது திணற வைத்துள்ளது. கண்மூடித்தனமான  உணர்ச்சியின் எல்லையில் பலர். அடுத்து என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றனர். வேகமான மாற்றங்கள் பற்றி, குட்டிபூர்சுவா மனநிலையில்; சிலர் மிதக்கின்றனர்.

 

வேறு சிலர் இனி என்ன 'உங்கடை' புலிப்பாசிசம் முடிந்துவிட்டதே, நீங்கள் இனி என்ன செய்யப் போகின்றீர்கள் என்று தம் பாசிச சிந்தனை செயல்முறையில் நின்று சீண்டுகின்றனர். தாங்கள் ஏன் தோற்றோம் என்று, குறைந்தபட்சம் நேர்மையாக இதைத் திரும்பிப் பார்க்கக்கூட அவர்கள் தயாராகவில்லை. தாம் அல்லாத புறநிலைக் காரணங்களை காட்ட முனைகின்றனர் (தனிக்கட்டுரையாக அதைப் பார்ப்போம்)

 

வேறு சிலர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்வது என்கின்றனர். அதற்கு உதவுவதே உடனடிக் கடமை என்கின்றனர். பேரினவாத வதைமுகாமில் சித்திரவதை செய்யப்;படும் உயிர்கள் பற்றி, திடீர் கரிசனை கொள்கின்றனர். இப்படி எம்மைச் சுற்றி பற்பல முகங்கள்.

 

என்ன செய்ய வேண்டும்?

 

மக்களுக்காக நாங்கள் கடந்தகாலத்தில் எதைச் செய்து வந்தோமோ, அதையே தொடர வேண்டும்;. நாங்கள் புலி மற்றும் அரச பாசிசத்தை எதிர்த்து நடத்திய போராட்டம், இன்று அரச பாசிசமாக மட்டும் மாறிவருகின்றது. சில சூழலிலும், நிலைமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கவனத்தில் எடுத்து, இதற்குள் போராடவேண்டியுள்ளது. இதற்கு வெளியில் எந்த அதிசயமும் நடவாது. அதற்கு மக்கள் தயாராகவில்லை.

 

என்ன செய்யவேண்டும்? மக்களுக்கான அரசியலை முன்னிறுத்தி, நாம் தனித்து நடத்திய போராட்டம்தான், உங்கள் முன் முன்னுதாரணமாக உள்ளது.  இன்று குறைந்தபட்சம் இதைத் தவிர மாற்றாக வேறு ஒன்றுமில்லை என்பதை, பலரைக் கொள்கையளவில் ஏற்க வைத்துள்ளது. நாங்கள் சொன்னதே உண்மை, அதுவே சரியான பாதை என்பதை, அவர்களுக்கு அவர்களின் அனுபவம் கற்றுத் தந்துள்ளது.

 

நாங்கள் இந்தப் போராட்டத்தை தனித்து நடத்தியபோது, பைத்தியம், லூசு, மனநோயாளி என்று பலர் எம்மைத் தூற்றினர். இதையெல்லாம் மீறி நாம் சரியாக இருந்ததையும், சொன்னதையும், நடந்து முடிந்துவிட்ட இனத்தின் அழிவு அனுபவமாக சொல்லி நிற்கின்றது. இதற்கு ஒரு பெரும் விலையை, ஒரு இனம் கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. எம் உண்மையை பைத்தியங்களின் புலம்பலாக காட்டி, ஒரு இனத்தையே அழித்தனர். அவர்கள் அனுபவம், எங்கள் உண்மையாக இருப்பது பலருக்கு இன்று உறைக்கின்றது.

 

இந்தக் கணத்திலும் நாங்கள் எங்கள் மக்களுக்கான போராட்டத்தை நிறுத்தவில்லை. எம் மக்களுக்கான போராட்டத்தையும், நடத்தவேண்டிய அரசியல் பணியையும் தனித்தே தொடருகின்றோம். இந்த மாற்றம் எம்மை அதிரவைக்கவில்லை. புலிகளின் அழிவு, நாம் முன்பே கூறியதொன்று.

 

எம் அரசியல் போராட்டத்தில், இந்த நிகழ்வு ஒரு குறுக்கீடு மட்டும்தான். இன்று புலிகள் இல்லை என்பதானது, சமூகத்தின் முன் இருந்த மாயைத் திரை கழன்று வீழ்ந்துள்ளதற்கு ஒப்பாகும்.

 

புலிகள் என்ற மாயை இல்லாத புதிய சூழல்

 

புலிகள் மாயை தகர்ந்து வருகின்றது. எம்முன் இருந்த சுவர் இல்லை. ஆனால் எல்லையற்ற பரந்த பாலைவானமே உண்டு. பாலைவனத்தில் இருந்த புல்  பூண்டுகளைக் கூட, இவர்கள் யாரும் விட்டுவைக்கவில்லை. பாலைவனத்தைக் கடத்தல் என்பது, மிக இலகுவானதல்ல. வரண்டு போன வெளியில், நாம் பயணத்தை தொடக்க வேண்டியுள்ளது. இதை நாம் எதிர்கொண்டு சந்திப்பதைத்தவிர, வேறு எந்த வழியும் எம்முன் கிடையாது.

 

இந்த நிலையில் எம்மக்களின் உரிமைகளை வென்று எடுத்தல் என்பது, பல அரசியல் பணிகளை ஒருங்கிணைக்கும் வண்ணம் அமைந்தவை. அந்த வகையில்

 

1. வர்க்கக் கண்ணோட்டத்திலான சிந்தனைமுறையையும், போராட்டமுறையையும் எம் சொந்த மண்ணில் உருவாக்குவது அவசியம்.

 

2. புலம்பெயர் நாட்டில் வர்க்கக் கண்ணோட்டத்திலான சிந்தனைமுறையையும், போராட்ட முறையையும் உருவாக்குவது அவசியம். இங்குள்ள வர்க்க அமைப்புகளுடன் இணைந்த போராட்டம் அவசியமானது.

 

3. கருத்தியல் தளங்களில் வர்க்கச்சிந்தனைமுறை ஊடாக, சமூகத்தை பார்க்கும் கருத்து அடிப்படையை உருவாக்குதல். அதாவது அறிவுத்தளத்தை மக்கள் நேசிக்கும் வர்க்க அடிப்படையாக மாற்றுதல், வெல்லுதல்.

 

4. ஒடுக்கப்பட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம் மலையக முன்னேறிய சமூகப் பிரிவுக்கு இடையில், சமூகஒடுக்குமுறையைப் பற்றிய பொது அரசியல் உடன்பாட்டை கொள்கையளவில் முதலில் ஏற்படுத்தல்;. பொதுக் கலந்துரையாடல்களை, விவாதங்களை  உருவாக்குதல். இணக்கமான சமூகசெயல்பாட்டை உருவாக்குதல்.

 

5. சர்வதேச ரீதியாக, ஒடுக்கப்பட்ட சமூக முன்னோடிகளுடன் உறவுகளை உருவாக்குதல்.

 

6. உலகம் முதல் இலங்கை வரை, மக்களைச் சார்ந்து நிற்கும் செயலை ஆதரித்து, ஊக்கப்படுத்தி அதை செயற்படுத்தல்.

 

இந்த அடிப்படையில் மட்டும் தான் முன்முயற்சி உள்ளதும், மக்களுக்குமான குறைந்தபட்சமான சமூகக் கடமையை செய்வதற்குரிய அரசியல் அடித்தளத்தையிட முடியும். நாம் பாலைவனத்தில் எந்த ஆதாரமுமின்றி பயணத்தைத் தொடங்குகின்றோம்;. இது தவிர,   வேறுவழிகளில் எதையும் உருவாக்க முடியாது. பொறுமையாக இதை செய்வதைத் தவிர, வேறு குறுக்கு வழி எதுவும் கிடையாது. இன்று பலரும் உணரும் இந்த உண்மைக்காக, நாங்கள் 25, 30 வருடங்கள் தனித்து போராட வேண்டியிருந்தது. இதுதான் இன்றும், எம்முன்னுள்ள ஓரே பாதை.

 

இதற்கு மாற்றாக எதையும் புதிதாக பிரதியீடு செய்யவில்லை. ஆகவே போராட்டம் தொடருகின்றது. மனித இனம் இருக்கும் வரை, போராட்டம் தொடரும்.

 

பி.இரயாகரன்
31.05.2009