கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது, சிங்கள பாசிச அரசு ஊடகங்களை அங்கு அனுமதிக்காத போதிலும் வெளிப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியிருக்கிறோம் என இலங்கை அரசு கூறிக்கொண்டாலும், இலங்கை அதிபர் ராஜபக்சே, தளபதி பொன்சேகா ஆகியோரை போர்க்குறங்களுக்காக விசாரித்து தண்டிக்கவேண்டும் எனும் கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.
ஐநாவின் இலங்கை குறித்தான விவாதம் நடப்பதற்கு முன்பு அமெரிக்காவின் பெதஸ்டா ஜியோஸ்பேசியல் புலனாய்வு அமைப்பு இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை செயற்கைக்கோள் படங்களை திரட்டி வைத்திருப்பதாகவும், அவைகளை மறுக்க முடியாத ஆதாரங்களென்றும், இலங்கை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படப்போவது நிச்சயம் என்றெல்லாம் பலர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவ்வாறெல்லாம் நடக்கவில்லை. அமெரிக்கா அந்த ஆதாரங்களை பதுக்கிக்கொண்டது. ஒருவேளை இலங்கையில் சீனா மேலாதிக்கம் பெற்று, அமெரிக்காவிற்கு சங்கடங்கள் நேர்ந்தால் அப்போது அந்தப்படங்கள் வெளிவரக்கூடும்.
முதலில் சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நீதி மன்றத்தில் நேரடியாக இலங்கையை விசாரிக்க முடியாது. ஏனென்றால் அந்த நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பு நாடல்ல. ஐநாவில் சிறப்புத்தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து, அது ஏற்கப்பட்டால் மட்டுமே விசாரிக்கமுடியும். அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை தனது ரத்து அதிகாரத்தின் (வீட்டோ) மூலம் நீக்குவதற்கு ரஷ்யாவும் சீனாவும் தயாராக இருக்கின்றன, அதை முறியடிக்கத்தேவையான ஆதரவைத்திரட்ட இந்தியாவும் இப்போதே தயார் எனும் போது இலங்கை விசாரிக்கப்படும் தண்டிக்கப்படும் என்பதெல்லாம் கானல் நீராகக்கூட இருக்கமுடியாது.
ஈழத்தமிழர்களின் ரணம் சாதாரணமானது அல்ல, அதேநேரம் அவர்களின் வலி அவர்களின் போராட்ட உணர்வை மருந்தாக சீரணித்து விடக்கூடாது. அவர்களின் ரணங்களுக்கு வலிகளுக்கும் ஆறுதலாகவும், அவர்களின் அடுத்தகட்ட மக்கள்திரள் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் நிற்கவேண்டிய பெரும் கடமை தமிழகத்தமிழர்களுக்கு இருக்கிறது. அதை நாம் மறந்துவிடலாகாது.
http://senkodi.wordpress.com/2009/05/29/ஐ-நா-விலா-ஆத்தாங்கரையிலா/