Language Selection

புதிய ஜனநாயகம் 2009

மருத்துவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்திருப்பவருமான பினாயக் சென் 27.05.09 அன்று இரண்டாடண்டு சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையாகியிருக்கிறார். சட்டீஸ்கர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்காகப் போராடும்  மாவோயிஸ்ட்டு கட்சியினருக்கு உதவி செய்தார் என்ற பொய்குற்றச்சாட்டிற்காக இந்த இரண்டாண்டு சிறைவாசம்.

உண்மையில் அந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்காக மாநில அரசு சல்வாஜூடும் என்ற பெயரில் பழங்குடி மக்களைக் கொன்று வருவதை பினாயக் சென் சர்வதேச அளவில் அம்பலப்படுத்தியதுதான் அதற்குக் காரணம். அதனால்தான் பொடாவை ஒத்த ஒரு சட்டப்படி பினாயக் சென் கைதுசெய்யப்பட்டு இத்தனை காலம் பிணைகூட கிடைக்காமல் சிறையில் கழித்தார். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பலமனித உரிமை அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள், இடதுசாரியினர் அம்பலப்படுத்தினாலும் இப்போதுதான் உச்சநீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. அவர் மீதான பொய்க்குற்றசாட்டின் பெயரில் பதியப்பட்ட வழக்கு இன்னும் தொடர்கிறது. பினாயக் சென் கைதாகும் போது நடந்த பின்னணி விசயங்களை விளக்கி புதிய ஜனநாயகத்தில் வெளிவந்த கட்டுரையை இங்கே பதிவு செய்கிறோம்.

*****

“நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்… இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான்.

ஏனெனில், நாம் அனைவரும் மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் என அழைக்கப்படவும், மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் என்றால் யாரென்று தெரியாத அல்லது கவலைப்படாத நபர்களால் நமது கதை முடித்து வைக்கப்படுவதுமான காலம் வெகு தொலைவில் இல்லை.”

2007 பிப்ரவரி மாதம் “தெஹல்கா’ வார ஏட்டுக்கு அளித்த பேட்டியொன்றில், நந்திகிராம மக்கள் போராட்டத்தை நக்சல்பாரிகள்தான் தூண்டிவிட்டதாக மேற்கு வங்க அரசு பிலாக்கணம் பாடி வந்ததை அம்பலப்படுத்திப் பேசும் பொழுது, மேற்குறிப்பிட்ட கருத்தை எழுத்தாளர் அருந்ததிராய் குறிப்பிட்டார். 2007 மே மாதம் 14ஆம் தேதி சத்தீஸ்கரில் மனித உரிமைப் போராளி, மருத்துவர் பினாயக் சென்னை கைது செய்து சிறையிலடைத்தன் மூலமாக அம்மாநில அரசு இக்கருத்து மிகையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 2004 மற்றும் தடா, பொடாவையெல்லாம் விஞ்சக் கூடிய கருப்புச் சட்டமான “”சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் 2005” ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? அவர் மாவோயிஸ்டுகளோடு தொடர்பு உடையவர் என்பது சத்தீஸ்கர் போலீசு வைக்கும் குற்றச்சாட்டு.

அந்தப் போலி குற்றச்சாட்டின் யோக்கியதையைப் பார்க்கும் முன்னால், பினாயக் சென் யாரென்பதை முழுமையாகப் புரிந்து கொள்வது அவசியம். பினாயக் சென் சத்தீஸ்கரில் மக்களின் மதிப்பைப் பெற்ற ஒரு குழந்தை நல மருத்துவராவார். ஒரு மருத்துவர் என்ற முறையில் அவர் அம்மாநிலத்தின் ஏழை, எளிய மக்களுக்கு கணக்கற்ற சேவைகள் புரிந்துள்ளார். சத்தீஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் முற்போக்கு ஜனநாயக அமைப்பினால் வறிய மக்களுக்காக நடத்தப்படும் சங்கர் குகா நியோகி மருத்துவமனையை உருவாக்குவதிலிருந்து, அதனை தொடர்ந்து நடத்துவதிலும் உறுதுணையாக இருந்தார். சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய, பழங்குடியினர் பகுதிகளில் ஜன ஸ்வஸ்த்யா சஹ்யோக் (மக்கள் ஆரோக்கிய உதவி) எனும் குறைந்த செலவிலான, சமூக மருத்துவ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியாகப் பணிபுரிந்தார். தம்தாரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கான வாராந்திர மருத்துவமனையிலும் அவர் பணிபுரிந்து வந்தார். மேலும் அவர், மக்கள் மருத்துவம் குறித்து ஆய்வு அறிக்கைகளும், நூல்களும், பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளும் எழுதியும் வந்தார். வேலூர் கிருத்துவ மருத்துவக் கல்லூரியின் வாழ்நாள் மருத்துவ சேவைக்கான பால் ஹாரிசன் விருதையும் பெற்றுள்ளார்.

பினாயக் சென், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்) எனும் மனித உரிமை அமைப்பின் சத்தீஸ்கர் மாநில செயலாளராகவும் அவ்வமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். போலீசு கொட்டடிச் சாவுகள், போலி மோதல்கள், பட்டினிச் சாவுகள் முதலான எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மை அறியும் குழுக்களில் முன்னணியாக நின்று செயல்பட்டார். குறிப்பாக, கடந்த ஜூன் 2005 முதல் சத்தீஸ்கர் மாநில அரசும், ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளும், போலீசு மற்றும் மத்திய ரிசர்வ் படையும் இணைந்து நக்சல்பாரிகளை ஒடுக்குவது என்ற முகாந்திரத்தில் “சல்வா ஜூடும்’ (அமைதி இயக்கம்) என்ற பெயரில் தனது மாநில மக்களின் மீது நடத்தி வரும் உள்நாட்டுப் போரின் வரலாறு காணாத அரசு பயங்கரவாதத்தை, பித்தலாட்டங்களை உறுதியோடு அம்பலப்படுத்தி வந்தார். அனைத்துலக மற்றும் உள்நாட்டு ஊடகங்களில் இது பற்றி தொடர்ச்சியாக எழுதியும், பேசியும் வந்தார்.

கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் சத்தீஸ்கரில் ஆதாரபூர்வமாக 155 போலி மோதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதிகாரபூர்வ தகவல்களின்படியே 400க்கும் மேற்பட்டோர் சல்வா ஜூடுமால் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2007 மார்ச் 31ஆம் தேதியன்று சந்தோஷ்பூரில் மாவோயிஸ்டுகள் என்ற பெயரில், 12 பழங்குடியினர் “சல்வா ஜூடும்’, மற்றும் நாகா பட்டாலியனால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். பினாயக் சென் முதலான தலைவர்கள் இதனை அம்பலப்படுத்தி போராடத் துவங்கிய பின்னர், புதைக்கப்பட்ட பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் அல்ல என்பதும் அம்பலமாகியது. ஒரு சல்வா ஜூடும் உறுப்பினரது ஒப்புதல் வீடியோ ஆதாரம் கிடைத்த பின்னரும், சல்வா ஜூடும் சீருடையணிந்து கொண்டு மாவோயிஸ்டுகளே இக்கொலையை செய்திருக்கலாம் என வெட்கமின்றிச் சொன்னது போலீசு. இப்படித் தொடர்ச்சியாக தனது பயங்கரவாதம் அம்பலப்படுத்தப்படுவதை அரசு பொறுக்க முடியாததன் விளைவாகவே தற்பொழுது சென் கைது செய்யப்பட்டுள்ளார்.

பினாயக் சென் கைது செய்யப்பட்டதற்காக அரசு சொல்லும் காரணமும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள “ஆதாரங்களுக்கும்’ சத்தீஸ்கர் மாநில அரசு மற்றும் போலீசின் திமிருக்கு சிறந்த அடையாளங்களாகும். மாவோயிஸ்ட் தலைவரான நாராயண் சன்யாலை 30 முறை சிறையில் பினாயக் சென் சென்று சந்தித்தாராம். பத்திரிகையாளர் பிரஃபுல் பித்வாய் சொல்வது போல, “”இது அடிமுட்டாள்தனமான வாதம். அதிகாரிகளுடைய அனுமதி பெற்று, அவர்களது முன்னிலையில்தான், சென் சன்யாலை சந்தித்துள்ளார். ஒரு மனித உரிமை செயல்வீரர் என்ற முறையில் கைதிகளைச் சந்தித்து, அவர்களுடைய அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவது என்பது சட்டத்திற்குட்பட்ட அவரது நியாயமான கடமையே. அவர் 30 முறை சந்தித்தாரா, 100 முறை சந்தித்தாரா என்பதெல்லாம் அர்த்தமற்றவை.”

சில அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்கள், போலி மோதல்கள் குறித்த தகவல் அறிக்கைகள், செய்தித் துணுக்குகள், மனித உரிமை சித்திரவதைக்கு ஆட்பட்டோரின் கடிதங்கள் முதலானஅபாயமான’ ஆதாரங்கள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவை எந்தவொரு மனித உரிமை செயல்வீரரது வீட்டிலும் இருக்கக் கூடிய “ஆதாரங்கள்’ தான். இணையத்திலும், பத்திரிகைகளிலும் வெளிப்படையாக கிடைக்கக் கூடிய ஆதாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒருவரை கைது செய்ய வேண்டுமென்றால், ஒட்டுமொத்த உளவுத்துறை போலீசுதான் முதலில் உள்ளே போக வேண்டும். அவர்கள்தான் ஒன்று விடாமல் இத்தகைய “ஆதாரங்களை’ சேர்த்து வைத்திருக்கிறார்கள். ”

மேலும், மதன் என்ற மாவோயிஸ்ட் தலைவர், சென்னிற்கு எழுதியுள்ள கடிதத்தைத்தான் முக்கிய ஆதாரமாக போலீசு குறிப்பிடுகிறது. அக்கடிதத்தில் ராய்ப்பூர் சிறையில் கைதிகளின் மோசமான நிலை குறித்து எழுதியுள்ள மதன், அவர்களுடைய நிலையை மேம்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அக்கடிதத்தின் துவக்கத்தில் “அன்பிற்குரிய பினாயக் சென் அவர்களுக்கு’ என அவர் விளித்துள்ளார். இவ்வாறு விளிப்பது மாவோயிஸ்டுகளுக்கும், பினாயக் சென்னிற்குமான தொடர்பைக் காட்டுகிறதாம்! சிறைக் கைதிகளின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புத் தலைவருக்கு எழுதாமல், ஜெயில் சூப்பிரெண்டெண்டுக்கா எழுத முடியும்? இது மடத்தனமல்ல; வெளிப்படையான திமிர்! ஒன்று, நீ இந்த கொடுங்கோன்மை அரசை ஆதரிக்க வேண்டும்; அப்படி இல்லையென்றால், நீ தீவிரவாதிகளைத்தான் ஆதரிக்கிறாய் என்ற புஷ்ஷின் சித்தாந்தம்தான் சத்தீஸ்கர் அரசு நமக்கு புரிய வைக்க விரும்பும் செய்தி.

சென் கைதுக்கு எதிராக வட மாநிலங்களிலும், சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும் கடந்த மே மாதம் முதல் தீவிரமாகப் போராடி வருகின்றன. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பி.யூ.சி.எல்.இன் சத்தீஸ்கர் மாநில தலைவர் ராஜேந்திர சைல்ஐ வேறு ஒரு மொன்னை வழக்கை முன்வைத்து கைது செய்து சிறையிலடைத்தது போலீசு. பினாயக் சென் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் என்ற காரணத்திற்காக மருத்துவர் இலினாவையும் கைது செய்யப் போவதாக அச்சுறுத்தியது. இந்த அடக்குமுறைகளை மீறியும் மனித உரிமை அமைப்புகள் தலைமையில் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் முன்னாள் நீதிபதி ராஜேந்திர சச்சார், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், அருந்ததி ராய் முதலானோர் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி, பத்திரிக்கைகளின் மூலம் பரவலாக இச்செய்தியை வெளிக் கொணர்ந்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அருந்ததி ராய், “”மருத்துவர் சென்னிற்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் சத்தீஸ்கர் மக்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. சத்தீஸ்கர் மக்கள் எவராலும் செவிமடுக்கப்படாதவர்கள்; குரல்களற்றவர்கள்; இவையனைத்தும், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்தே துவங்குகின்றன. காங்கிரசும், பா.ஜ.க.வும் ஓரணியாக நின்று வேலைவாய்ப்பற்றவர்களை சிறப்பு போலீசு அதிகாரிகளாக்கி, ஒரு கூலிப் படையை ஏற்படுத்தியுள்ளன. இது ஒரு அபாயகரமான போக்கு. இது சமூகம் முழுவதும் ஆயுதபாணியா வதில் போய் முடியும்” என்றார்.

ஆம், சல்வா ஜூடுமின் உருவாக்கத்திலிருந்து தான் இப்போர் துவங்குகிறது. 1990இல் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக என தனி மாநிலமாக, சத்தீஸ்கர் மாநிலம் இந்தியாவின் மத்தியப் பகுதியில் உருவாக்கப்பட்டது. 1947இலிருந்தே எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாத, ஓட்டுக் கட்சிகளுக்கு “பிரயோசனமில்லாத’ பழங்குடியினர் வாழும், அரசின் கரம் தீண்டாத தண்டகாரண்யாவில் பஸ்தார், காத்சிரோலி முதலான பகுதிகளில் மாவோயிஸ்டுகள் 1993 முதலே கொரில்லாக் குழுக்களை கட்டி வருகின்றனர். 1995இல் பெரும்பான்மைப் பகுதிகளில் தமது சங்கங்களைக் கட்டி, கிராமப் பஞ்சாயத்துகளுக்கு முடிவு கொண்டு வந்தனர். 2000இல் மக்கள் விடுதலைப் படையையும் கட்டி, தண்டகாரண்யா பகுதியை கொரில்லா மண்டலமாகவும், எதிர்கால விடுதலைப் பிரதேசமாகவும் அறிவித்தனர்.

ஜூன் 2005இல் மாவோயிஸ்டுகளுக்கெதிராக பழங்குடியினர் தன்னெழுச்சியாக அணிதிரண்டு “சல்வா ஜூடும்’ படையை உருவாக்கியதாக அரசு இன்று வரை கதையளக்கிறது. மகேந்திர கர்மா எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த, எதிர்கட்சி காங்கிரசு எம்.எல்.ஏவின் தலைமையில் பா.ஜ.க. அரசும், போலீசு துறையும் இணைந்து மக்கள் இயக்கம் என்ற பெயரில் இச்சதித் திட்டத்தை தீட்டி அரங்கேற்றின. மகேந்திர கர்மா எனும் இந்த அயோக்கியன் மீது 1998லேயே பழங்குடியினரை ஏமாற்றி நில மோசடி செய்ததாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இன்று வரை அவ்வழக்கில் வேறு எவ்வித முன்னேற்றமுமில்லை.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக பலவந்தமாக பழங்குடியினரை மிரட்டி உருவாக்கப்பட்டது சல்வா ஜூடும். ஒன்று, சல்வா ஜூடுமில் சேர வேண்டும்; இல்லையென்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள்; ஊரே தீ வைத்துக் கொளுத்தப்படும்; பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுவார்கள். ஒவ்வொரு பழங்குடியினர் கிராமத்திற்கும் செல்வது, சல்வா ஜூடும் கூட்டங்களை நாகா பட்டாலியன் சூழ நடத்துவது, எவரெல்லாம் கலந்து கொள்ளவில்லையோ, எவரெல்லாம் ஏற்க மறுக்கிறார்களோ அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது, வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு வருபவர்களை கிராமங்களை விட்டு விரட்டி, தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கொண்டு அடைப்பது என ஒரு நடைமுறையாகவே நிகழ்த்தப்பட்டிருப்பதை சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மனித உரிமை அமைப்புகளின் உண்மை அறியும் குழுக்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.

இதன் மூலம் காடுகளில் உள்ள மாவோயிஸ்டுகள் சார்ந்திருக்க மக்களே இல்லாத நிலையில், வேறு வழியின்றி சரணடைய வேண்டும் அல்லது சாக வேண்டும் என்பதுதான் தனது திட்டமாக சல்வா ஜூடும் அறிவித்திருக்கிறது. இதன் விளைவாக இன்று 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தமது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இம்முறையில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் காலி செய்யப்பட்டிருக்கின்றன. 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. வயல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கில் மக்கள் ஆந்திராவிற்கு தப்பியோடியுள்ளனர். முகாம்களில் தார்பாய் விரிப்புகளில் உணவின்றி, வாழ வழியின்றி கிடக்கின்றனர். 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஹிட்லரின் நாஜி படைகள் ருஷ்ய கிராமங்களில் இரண்டாம் உலகப் போரின் பொழுது நிகழ்த்திய போர்க்குற்றங்களை விட மிகப் பயங்கரமான முறையில் இவை நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

அயான் வெல்ஷ் முதல் ஆந்திர மனித உரிமை செயல்வீரர் பாலகோபால் வரையிலான மனித உரிமை ஆர்வலர்களும், அனைத்துலக மற்றும் உள்நாட்டுப் பத்திரிக்கைகளும் குறிப்பிடுவது போல, மாவோயிஸ்டுகள் கொன்ற நபர்களின் எண்ணிக்கைதான் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சல்வா ஜூடுமின் கொலைப் பட்டியல் இதுவரை யாருக்கும் தெளிவாகத் தெரியாது.

தற்பொழுது நந்தினி சுந்தர் முதலான ஜனநாயக சக்திகள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையொட்டி, உச்சநீதி மன்றம் சத்தீஸ்கர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. பினாயக் சென்னை கைது செய்தது குறித்து உள்துறை அமைச்சகம் விளக்கம் கோரியுள்ளது. திட்டக் கமிசன், பஞ்சாயத் அமைச்சகம் முதலானவை சல்வா ஜூடுமுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளன. ஆனால், மேற்புறத்தில் இது போன்ற சில நாடகங்களை அரசு நிகழ்த்தினாலும், அதனுடைய திட்டத்தில் உறுதியாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில், பழங்குடியினரை கிராமங்களிலிருந்து அப்புறப்படுத்தி விரட்டியடிப்பது என்ற திட்டத்தின் பிரதான நோக்கம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது மாத்திரமல்ல; மாறாக முதலாளித்துவப் பத்திரிக்கையான பிசினஸ் வேர்ல்டு (ஆகஸ்ட் 2006) சொல்வது போல, தாது வளம்மிக்க சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மாநிலங்களை டாடா, எஸ்ஸார், மித்தல், வேதாந்தா (ஸ்டெர்லைட்), ஜிந்தால், பாஸ்கோ, அம்பானி முதலான முதலாளிகளுக்கு வேட்டைக் காடாக திறந்து விடுவதே பிரதான நோக்கமாகும். அமெரிக்க “”நியூயார்க் டைம்ஸ்” நாளேடு சொல்கிறபடி, தாது அகழ்வில் 1.8 பில்லியன் டாலர் முதலீட்டிற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. அதன் விதிகள் விவரங்கள் யாருக்கும் தெரியாது. கிராமப் பஞ்சாயத்துக்கள் கூட்டப்பட்டு துப்பாக்கி முனையில் பன்னாட்டுதரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு நிலக் கையகப்படுத்தல்களுக்கான, பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் “டவுன் டு எர்த்’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.

 

binayak-sen

 

சல்வா ஜூடுமின் கிராமப்புற சூறையாடல்களையும், கிராமங்களை காலி செய்வதையும், நியாயப்படுத்த, “”நோயின் மூலத்தை வெட்டியெறியாத வரை, நோய் இருக்கவே செய்யும். அம்மூலம் கிராம மக்கள்தான்” என மகேந்திர கர்மா கூறுவதாக “”நியூயார்க் டைம்ஸ்” குறிப்பிட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளை மட்டும் நோய் என கர்மா குறிப்பிடவில்லை. பழங்குடியினரின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை, தமது காடுகளையும், நிலங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்ற அவர்களை உந்தித் தள்ளும் இயல்பான நாட்டுப் பற்றையும், மக்கள் சமூகப் பற்றையும் சேர்த்துதான், பன்னாட்டு நிறுவனக் கழுகுகள் சத்தீஸ்கரை சூறையாடுவதைத் தடுக்கும் நோய் எனக் குறிப்பிடுகிறான்.

கிழக்கிந்தியக் கம்பெனியை விட ஒரு கொடூர கொள்ளைக் கூட்டத்தின் வெறியில் ஒரு மாநிலமே பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் சத்தீஸ்கர் மாநில “”துரை”தான் மகேந்திர கர்மா. போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கலிங்கா நகர், சந்தோஷ்பூர், சிங்கூர், நந்திகிராம் என பிணங்களின் மீதேறி நாடெங்கும் பரவுகிறது. ரத்தம் ஆறாக ஓடுகிறது. இனி ஒளிந்து கொள்ள இடமில்லை. நடுநிலைமை வகிக்க வாய்ப்பில்லை. மூலதனத்தின் தீராத, ஈவிரக்கமற்ற நோயின் மூலமான இந்த அரசியல் அமைப்பின் வேரை நாம் வெட்டியெறியாத வரை, இந்த இரத்த ஆறு நிற்கப் போவதில்லை.


- புதிய ஜனநாயகம், ஜூலை’ 2007