Language Selection

பி.இரயாகரன் -2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலித்தலைமை சரணடைந்த ஒரு நிலையில் தான் கொல்லப்பட்டுள்ளது. அதை இலங்கை அரசு செய்துள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை அரசு மட்டும் சம்பந்தப்படவில்லை. மூன்றாம் தரப்புகள், வெளிநாட்டு புலித் தலைமையும் கூட சம்பந்தப்பட்டுள்ளது. இதை இவர்கள் மூடிமறைக்கின்றனர். ஏன் மூடிமறைக்கின்றனர் என்றால், இவர்கள் இந்தப் படுகொலை சதிக்கு உடந்தையாக இருந்;துள்ளனர் என்பதால் தான். இப்படி தமிழ் மக்களை ஏமாற்ற முனைகின்றனர்.

புலித் தலைமை சரணடைந்ததும், அவர்கள் கொல்லப்பட்டதும் உண்மை. புலித்தலைமை தன்னை பாதுகாத்துக்கொள்ள, இறுதியாக அது தேர்ந்தெடுத்தது சரணடைவை. அதற்கு அமையவே, இதில் மூன்றாம் தரப்பும் சம்பந்தப்பட்டது உண்மை. இந்தப் பின்னணியில் தான், இந்தப் படுகொலை அரங்கேறியது.

இவை அனைத்தும் நடந்திருந்தும், ஏன், எதற்காக இதை மக்களுக்கு தெரியாத வண்ணம் அனைவரும் திட்டமிட்டே மூடிமறைக்கின்றனர்? அங்கு என்ன நடந்தது? அவை எப்படி நடந்தது? இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? ஏன் இதை மக்களுக்கு மூடி மறைக்கின்றனர்?

மக்களை மந்தையாக மேய்க்கும் கூட்டம், தம் சொந்த துரோகத்தை முழுமையாக மூடிமறைக்க முனைகின்றது. இன்று எதுவும் நடவாத மாதிரி, அதைக் காட்ட முனைகின்றது.

இந்தச் சதியில் மூன்று தரப்பு சம்பந்தப்பட்டுள்ளது.

1. இலங்கை அரசு

2. புலிகள்.

  1. யுத்த களத்தில் இருந்த தலைமை. இது இன்று உயிருடன் இல்லை.

  2. இந்த சரணடைவுச் சதியில் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு புலித்தலைமை. அதுவோ இன்று இதை மூடிமறைக்கின்றது.

3. மூன்றாம் தரப்புகள். இது ராஜதந்திர மொழியில் பேசுகின்றது. வெளிநாட்டு புலித்தலைமையுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபடுகின்றது.

இந்தச் சதியில் தாம் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்றால், இந்த உண்மையை தமிழ் மக்களுக்கு சொல்லக் கூடியவர்கள் வெளிநாட்டு புலித் தலைமை மட்டும் தான். களத்தில் புலித்தலைமையுடன் தொடர்பில் இருந்து, இதை அரங்கேற்றியது வெளிநாட்டு புலிகள் தான். அவர்கள் படுகொலைச் சதியில் சம்பந்தப்பட்டதால், அதை முழுமையாக மூடிமறைக்க முனைகின்றனர். இவர்கள் அறிய, இவர்களின் முயற்சியுடன் கூடிய இந்த சதியை அரங்கேற்றிய மூன்றாம் தரப்பு யார்? அவர்கள் என்ன வாக்குறுதியின் அடிப்படையில் சரணடைய வைத்ததன் மூலம், இந்தப் படுகொலையை அரங்கேற்றினர்? இதை மக்களுக்கு சொல்லாது ஏன் மூடிமறைகின்றனர்?

அது மட்டுமல்ல, யார் இந்த படுகொலைக்கு உதவினரோ, யார் மூன்றாம் தரப்பாக நின்று இதைச் செய்தனரோ, அவர்கள் பின் இன்று மக்களையும் நிற்கவைக்கின்றனர். இதைச் செய்யும் வெளிநாட்டு புலித்தலைமையின் வர்க்க மற்றும் கூட்டாளிகளின் அரசியல் பின்புலத்தை, நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது.

இதற்கு எப்படி யுத்த முனையில் இருந்த புலித் தலைவர்கள் உடன்பட்டார்கள்? அவர்கள் சொந்த தற்கொலையை விரும்பினார்களா? ஏன் அவர்கள் போராடி மடிவதை தேர்ந்தெடுக்க முடியவில்லை?

புலித்தலைமை மக்களை ஒடுக்கும் வர்க்க அடிப்படையைக் கொண்டது. அது மக்களை ஒடுக்கி, தம் வர்க்க அதிகாரத்தை எப்போதும் தக்கவைத்தே வந்தது. சமூகத்தில் இருந்து எழும் எதிர்ப்பை, தாம் போராடுவதாக காட்டிய புலித் தேசியத்தினால் மட்டும் மூடிமறைக்க முடியவில்லை. அது பாசிச மாபியா வழியில், தன் அதிகாரத்தை தக்கவைக்க அச்சமூட்டும் வடிவில் மக்கள் மேல் அது தன்னை நிறுவிக்கொண்டது.

இப்படி மக்களில் இருந்து அன்னியமாகிப் போன புலிகள், பேரினவாத இராணுவத்துடனான யுத்தத்தில் தம்மை தக்கவைக்க முடியவில்லை. இதனால் தொடர்ச்சியாக அழிந்தும் சிதைந்தும் வந்தார்கள். இராணுவ தாக்குதல்களால் புலிக்கு முன்னால் தப்பி ஒடிக் கொண்டிருந்த மக்களை, தாம் தப்பிப் பிழைக்க புலிகள் தம் பணயக் கைதிகளாக்கிக் கொண்டனர்.

இப்படி புலிகள் தம்மை பாதுகாக்க, மக்களையே பணயக் கைதிகளாக்கினர். புலித்தலைமையோ தன்னை பாதுகாக்க, வலுக்கட்டாயமாக யுத்தத்தில் ஈடுபடும்படி பலரை யுத்தமுனையில் வலுக்கட்டாயமாகத் திணித்தனர். இப்படி சுயநலம் பிடித்த புலித் தலைமை தன்னை பாதுகாத்துக் கொள்ள மக்களையும், யுத்தம் செய்ய விரும்பாதவர்களையும் பயன்படுத்தியது. இதனால் பல ஆயிரம் பேர், புலித் தலைமைக்காக மரணத்தை சந்தித்தனர். இதன் மூலம் புலித்தலைமை தன்னை தக்கவைத்து வந்தது.

இந்த நிலையில் யுத்தம் அவர்களின் தொண்டைக் குழிவரை வந்துவிட்டது. அவர்களுக்கு தாம் தப்பி பிழைக்க அவர்கள் முன் இருந்தது, துரோகத்துடன் கூடிய சரணடைவு ஒன்று மட்டும்தான். இந்தச் சரணடைவு எப்படி என்ற அரசியல் பேரத்தில், அவர்கள் இரகசியமாக ஈடுபடத்தொடங்கினர். வெளிநாடுகளில் நடந்த போராட்டங்கள், புலித்தலைமையை காப்பாற்றுவதற்கான கோசங்களுடன், அவர்களின் தலைவர்கள் இரகசியமான சதிப் பேரங்களில் ஈடுபட்டனர்.

அவர்கள் போராடி மடியத் தயாராக இருக்கவில்லை. தற்கொலை செய்யவும் தயாராக இருக்கவில்லை. தம் உயிரைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருந்தனர். இதைத்தான் அவர்களை படுகொலை செய்ய விரும்பிய அனைத்துத் தரப்பும், நன்கு திட்டமிட்டு பயன்படுத்திக்கொண்டது. அவர்களை ஏமாற்றிச் சரணடைய வைத்ததன் மூலம், இலகுவாக பலியிட்டுக்கொண்டது.

நாம் இந்த துரோகத்துக்கு பதில் போராடி மடியுங்கள் என்ற கோசத்தை இந்த பிரச்சனையின் ஆரம்பம் முதலே வைத்தபோது, புலித் தலைமையால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. மக்கள் விரோதமான அந்த வர்க்கத் தலைமையால், மக்களுக்காக நேர்மையாக போராடி மடிவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அரசியலாகவே இருந்தது. மக்களுக்காக போராடுவது மட்டும்தான், இதை அரசியல் ரீதியாக தானே தேர்ந்தெடுக்கும். இது பணயமாக வைத்திருந்த மக்களை விடுவித்து, அவர்களுக்காக மடியும். இந்த வகையில் புலி தன்னை, மக்களுக்காக தியாகம் செய்ய முன்வரவில்லை. மக்களை அழித்து, அது தன்னை பாதுகாக்கவே முனைந்தது. நாங்கள் போராடி மடி என்று கூறிய போது, எதுவும் செய்ய முடியாத அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அதை செய்வார்கள் என்றே மதிப்பிட்டோம். உடன்பாடற்ற எந்த சரணடைவும் துரோகமாகி, அவர்களின் அரசியல் அடித்தளத்தையே இல்லாததாக்கிவிடும் என்ற கருதியதால், அரசிடம் அவர்கள் நேரடியாக சரணடைய மாட்டார்கள் என்பதால், மக்களுக்காக மக்களை விடுவித்தபடி போராடி மடி என்று கோரினோம்.

புலித்தலைமை தன்னை மக்களுக்காக தியாகம் செய்ய முனையவில்லை. மக்களைப் பணயப் பொருளாக வைத்துக்கொண்டு அது பேரம் பேசியது. இதைத்தான் மூன்றாம் தரப்பு, பயன்படுத்தியது.

இதற்கு புலியின் வெளிநாட்டுத் தலைமை துணைபோனது. இபப்டி சரணடைந்த பின்னான இந்த படுகொலைச் சம்பவம், வெளிநாட்டு புலித் தலைமையின் பக்கத் துணையின்றி நடக்கவில்லை. இதற்கு துணையாக நின்றதால் இந்தப் படுகொலையை மூடிமறைக்கின்றனர். இதை அம்பலப்படுத்தி போராடவில்லை, மாறாக மூடிமறைக்கின்றனர். இப்படி அவர்கள் தம் தலைவர்களை படுகொலை செய்ய, மூன்றாம் தரப்புக்கு துணையாகவே இருந்துள்ளனர்.

இவர்களின் வர்க்கக் கண்ணோட்டம், ஏகாதிபத்திய சார்பு கொண்டது. இதற்கு இசைவாக, இவர்கள் அனைத்துப் போராட்டத்தையும் வெளிநாடுகளில் நடத்தினர், நடத்துகின்றனர். இதனால் தான் மேற்குமக்கள் கூட, இதில் பங்கு கொள்ள முன்வரவில்லை. அதேநேரம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்க உதிரிகள்தான், இதன் பிரமுகர்களாக வழிகாட்டிகளாக இருந்துள்ளனர், இருக்கின்றனர்.

இவர்களின் பிரதிநிதியாக மூன்றாம் தரப்பாக தலையிட்ட கும்பலும், வெளிநாட்டு புலித்தலைமையும் சேர்ந்து, களத்தில் போராடிய புலித்தலைமையை அவர்கள் விரும்பிய சரணடைவுக்கு பதில் தாம் விரும்பிய ஒரு சரணடைவு ஊடாக அவர்களை படுகொலை செய்தனர். இப்படி அவர்களை இலங்கை அரசு சித்திரவதை செய்து கொல்லக் கொடுத்தனர். இவை அனைத்தும் வெளிநாட்டு புலித்தலைமையின் துணையுடன் நடந்தது. அந்த துரோகத்தை, அந்த சதியை இன்று அவர்கள் மூடிமறைக்கின்றனர்.

இந்த பின்னணியில் அவர்கள் சரணடைவு கூட, நேரடியாக மூன்றாம் தரப்பின் முன்னிலையில் நம்பும்படியாக நடந்துள்ளது. இதற்கு ஏற்ப, அவர்களை முழுமையாக நம்பவைக்க சில வெளிப்படையான நடவடிக்கைகள் அமைந்திருந்தன.

அமெ. பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் திமேத்தி ஜே கீட்டிங், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரை சந்தித்த பின், 15.05.2009 இல் வெளியிட்ட அறிக்கை இந்த சதி நாடகத்தின் வெளிப்படையான ஒரு அங்கமாகும்.

அந்த அறிக்கை இலங்கை அரசுடனான கூட்டுச் சதியை நாசுக்காக வெளிப்படுத்துகின்றது.  'இலங்கையில் போர்ப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அமெரிக்கக் கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் உள்ளது." என்று அவர் 15.05.2009 அறிவிக்கின்றார். அத்துடன் 'போர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான வழிகளை கண்டறிய அமெரிக்க குழு இலங்கை சென்றது. எவ்வகையில் உதவி செய்ய முடியும் என்ற அறிக்கையையும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வழியாக வெளியுறவுத்துறைக்கு வழங்கியுள்ளது.

அதில் போர் பகுதியில் தமிழர்களுக்கு அமெரிக்க கடற்படை வழியாக உதவுவதற்கான பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளோம்." என்கின்றது. இப்படி அந்த அறிக்கை, இந்த படுகொலை நடக்க முன் வெளிவருகின்றது. புலியை மீட்பது போன்று, அமெரிக்க கடற்படை தரையிறங்கியதா!? தெரியாது. ஆனால் மூன்றாம் தரப்பு அங்கு நிச்சயமாக பிரசன்னமாகி இருந்துள்ளது.

எரிக் சொல்கைம் இந்த நாடகத்தின் மற்றொரு சதிகாரன். 17.05.2009 பல தரம் (வெளிநாட்டு - உள்நாட்டு) புலியுடன் தான் தொடர்பில் இருந்தாக கூறியுள்ளார். இப்படி மோசடி செய்து கொல்ல உதவிய பின், நடந்ததையே 'இது மிகவும் கோரமானது" என்கின்றார். இதேபோல் கடைசி நிமிடங்களில் ஐ.நாவைச் சேர்ந்த நம்பியாரும் (வெளிநாட்டு - உள்நாட்டு) தொடர்பில் இருந்துள்ளார். இலையெல்லாம் இவர்கள் கூறியவைகள் தான். இந்தச் சதியின் சில வெளிப்பாடுகள். மீண்டும் நம்பியார் ஏன் இலங்கை சென்றார்!? எல்லாம் இதற்காகத்தான். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் அடிக்கடி இலங்கை சென்றது இதற்காகத்தான். இந்த 16-17.05.2009 சதிக்கு சமாந்தரமாகவே, பத்மநாதன் அறிக்கைகள் வெளிவந்துள்ளது.

இத்தகைய சதிப் பின்னணியில் அமெரிக்கா அறிவித்த மக்கள் 'மீட்பு" என்பது, புலிகளின் சரணடைவு மூலமாக படுகொலைச் சதியுடன் பின்னிப் பிணைந்ததாகவே இருந்துள்ளது. அவர்கள் உயிரை இந்த மண்ணில் இருந்தும் அனுப்புவதாக இருந்துள்ளது. இந்தியாவின் துணையுடன், இலங்கை அரசின் ப+ரண அங்கிகாரத்துடன் இது அரங்கேறியது. இக்காலத்தில் புலிக்கு 'பொது மன்னிப்பு இலங்கை வழங்க வேண்டும்" என்ற அமெரிக்காவின் கோரிக்கை, புலிகளை நம்பவைத்து கழுத்தறுக்கும் பொதுச் சதிடன் கூடிய ஒன்றாக இருந்துள்ளது. மக்கள் 'மீட்பு" என்பது, புலிச் சரணடைவுடன், புலியினை முடிவாக்கும் சதியின் அடிப்படையில் இருந்துள்ளது.

மக்களை என்றும் நம்பிப் போராடாத புலி, மூன்றாம் தரப்பின் சதியை தம் மீட்பாக நம்பியது. இதன் பின் வலிந்து சென்றே தன்னை பலியிட்டது. இந்த பலி நாடகத்தில், புலி பயண ஏற்பாடுகளை செய்தது. அது தனது மரணம் என்று அறியாது, பயணப் பொதிகளைக் கூட தயார் செய்தது. எஞ்சியதை அழித்தது. தான் வெளியேறியவுடன், தானாக அவை அழியும் ஏற்பாட்டை செய்தது. இதைத்தான் இலங்கை அரச ஊடகங்கள், புலிகளின் இறுதி அழிப்பாக காட்டியது. அந்தக் காட்சியின் பின்புலத்தில் எந்தச் சண்டையும் இருக்கவில்லை. அதற்கு முன்னமே புலியின் கதை முடிந்திருந்தது. இன்று அரசு 6000 மேற்பட்ட புலிகள் தம்மிடம் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ள தகவல், புலிகள் தாம் மூன்றாம் தரப்பின் ஊடாக தப்பிச்செல்ல முன் அனைவரையும் சரணடைய வைத்தனர் என்பதற்கு வலுச் சேர்க்கின்றது.

அதே நேரம் மூன்றாம் தரப்பின் துணையுடன் தப்பிச்செல்லும் போது, பெருந்தொகைப் பணம் முதல் சகல முக்கிய ஆவணங்களையும் எடுத்துச்செல்ல தயார் செய்தது. அவை அனைத்தும் அரசின் கையில் இன்று சிக்கியுள்ளது. குறிப்பாக வெளிநாட்டுத் தமிழரின் பணம், மற்றும் தமது அதிகாரம் சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் அரசிடம் தாரை வார்த்துள்ளனர். அதைத் தயாரித்த புலிகள், அரசின் சித்திரவதைக் கூடங்களில் இன்று சிக்கியுள்ளனர். புலம்பெயர் புலிகளின் செயற்பாடுகள் முதல் இரகசியமான அனைத்தையும், அரசிடம் புலிகள் கொடுத்துள்ளனர். எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் இவர்களின் சட்டவிரோதமான பல விடையங்கள் அம்பலமாவதும், கைதுகளும் (புலிப் பயிற்சி பெற்ற இரகசிய உறுப்பினர்கள்) நடக்கும் வாய்ப்புகளை, தம் சரணடைவுத் துரோகம் மூலம் புலிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இவை அனைத்தையும் வெளிநாட்டு புலித்தலைமை தன் துரோகத்தின் மூலம் செய்து முடித்துள்ளது. அதை இன்று மூடிமறைத்து பாதுகாக்க முனைகின்றது. தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் அரசியலில் ஈடுபடுகின்றது. மக்களை மந்தையாக்கி பயன்படுத்தும் அதேநேரம், உண்மைகளை மக்களுக்கு தெரியாத வண்ணம் தொடர் சதிகளில் ஈடுபடுகின்றது. தன் மேற்கு நாட்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து, பொய்களிலும் புனைவுகளிலும் தன்னை தக்கவைக்க முனைகின்றது. இந்த துரோகத்தையும் இன்று, மக்கள் முன் அம்பலப்படுத்தி போராட வேண்டியுள்ளது.

பின் குறிப்பு : இங்கு மூன்றாம் தரப்பின் சதியும், புலியின் துரோகமும், இவர்கள் என்றும் கருத்தில் எடுக்காத இறுதி மனிதப் பேரழிவைத் தடுத்தது. பல ஆயிரம் போராளிகளின் உயிர் இழப்பை தடுத்துள்ளது.

 

பி.இரயாகரன்
24.05.2009