பிரசந்தா மட்டுமல்ல ஜனநாயகமும் நேபாளத்தில் ராஜிநாமா செய்துவிட்டது. நேபாளத்தில் ஒரு பகுதியினரும் இந்தியாவில் ஒரு பகுதியினர் தவிர அனைவரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரசந்தா ஆட்சியில் அமர்ந்த மறு கணமே படபடப்பு தொடங்கிவிட்டது. இவர் எப்போது விலகுவார்?  என்ன செய்தால் இவர் ஆட்சி கலையும்? எப்போது மீண்டும் மன்னராட்சி வரும்? எப்போது நேபாளத்துக்கு சுபிட்சம் கிடைக்கும்? ஜனநாயகம், நாடாளுமன்றம், காபினெட், பொதுக்குழு, விவாதம் போன்ற உபத்திரவங்கள் எப்போது ஒழியும்?

இருளுக்கு மட்டுமே பழக்கமாகிவிட்ட கண்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. தலைமுறை தலைமுறையாக மன்னர்கள் ஆண்டு வந்த தேசம் அது. மன்னர் புகழ் பாடி, அவர் பின்னால் அணிவகுத்து, அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றி, அவர் ஆசிர்வதிப்பதை பெற்றுக்கொண்டு சுகமாக வாழப் பழகிக்கொண்டவர்கள். அரசியல் என்பது அரண்மனை சமாசாரம். அரண்மனை சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராவது போல் அவர் அலுவலக அறையில் இருந்து அரசியல் தயாராகும். உப்பு இல்லை, காரம் ஜாஸ்தி என்று விமரிசனம் செய்ய ஒருவருக்கும் அனுமதியில்லை.

ஆனால் இந்த வண்டி நீண்ட காலம் ஓடாது என்று ஞானேந்திராவுக்குத் தெரிந்துவிட்டது. என்னத்தையாவது செய்து ஜனநாயகத்தைக் கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நேபாள காங்கிரஸ், யு.எம்.எல் (நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கூட்டமைப்பு) போன்ற கட்சிகளின் துணையுடன் ஒப்புக்கு ஓர் அரசாங்கத்தை நியமித்தார்கள். இந்தக் கட்சிகளும் மன்னராட்சியை நாளானைக்கு மறுநாள் முடிவுக்குக் கொண்டுவருகிறோம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அதிகாரம் மட்டுமே தேவைப்பட்டது. அந்த அதிகாரத்தை மன்னரால் மட்டுமே கொடுக்கமுடியும் என்னும்போது அவரை ஏன் அகற்றவேண்டும்?

மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டம்தான் இந்நிலையை மாற்றியமைத்தது. ஞானேந்திராவையும் அவரது அடிப்பொடிகளையும் ஒருசேர தூக்கி எறிந்தனர் மாவோயிஸ்டுகள். கடந்த ஏப்ரல் மாதம் பிரசந்தாவின் அரசாங்கம் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. பிரசந்தா வெற்றி பெற்ற மறுகணமே நேபாள காங்கிரஸ், யு.எம்.எல் கட்சிகள் அலற ஆரம்பித்துவிட்டன. ஐயோ, மாவோயிஸ்டுகள் கையில் அதிகாரம் போய்விட்டால் நேபாளத்தின் கதி என்ன ஆகும்? ஆனானப்பட்ட மன்னரையே சிறையில் தள்ளியவர்கள் இன்னும் என்னவெல்லாம் செய்யமாட்டார்கள்? இவர்களை நம்பி எப்படி தேசத்தை ஒப்படைக்கமுடியும்? அலறியடித்துக்கொண்டு அவர்கள் இந்தியாவிடம்தான் தஞ்சம் கேட்டனர். எங்களுக்கு உங்களை விட்டால் வேறு நாதியில்லை. நீங்கள்தான் எப்படியாவது மாவோயிஸ்டுகளை முறியடிக்கவேண்டும். மன்னராட்சியை மீண்டும் கொண்டுவரவேண்டும். கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்றது இந்தியா. 

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அமைந்தது என்னவோ கூட்டணி ஆட்சிதான். நேபாள காங்கிரஸ் விலகிக்கொண்டது. இந்தியா துணை இருக்கும் தைரியத்தில் யு.எம்.எல் பிரசந்தாவின் ஆட்சியில் பங்கேற்றது. சில வாக்குறுதிகளை வழங்கினார் பிரசந்தா. தேர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து செயல்படுவோம். கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை அளிப்போம். இனி ஆயுதப் போராட்டத்துக்கான அவசியம் இல்லை என்னும் நிலைநில் மாவோயிஸ்ட் போராளிகள் (மக்கள் விடுதலைப் படை) நேபாள ராணுவத்தோடு இணைக்கப்படுவார்கள். மக்கள் நல சீர்திருத்தங்கள் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படும்.

தேசத்தை கட்டுமானம் செய்யும் பணிகளில் பிரசந்தா இறங்கினார். வாழ்த்துகள் பிரசந்தா என்று புன்னகை செய்தது இந்தியா. அந்த நிமிடம் தொடங்கி திரைமறைவாகவும் வெளிப்படையாகவும் எதிர்ப்புகள் பெருக ஆரம்பித்தன. பிரசந்தா வாயைத் திறந்து என்ன சொன்னாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதை அடிப்படை விதியாக கொண்டு செயல்பட ஆரம்பித்தன கட்சிகள். சின்ன சின்ன தீர்மானங்களுக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. பிரசந்தா முன்வைக்கும் தீர்வுகள் நிர்த்தாட்சண்யமாக மறுதலிக்கப்பட்டன. பின்னணியில்,தெருக்கலவரம் தொடங்கி ஆட்சிக் கவிழ்ப்பு வரை அத்தனையும் அரங்கேறின. தான் கொண்டுவர விரும்பிய எந்தவொரு மாற்றத்தையும் பிரசந்தாவால் கொண்டுவரமுடியவில்லை. முளைக்கும் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு மட்டுமே அவருக்கு நேரம் எஞ்சியிருந்தது. ஒன்று தீர்ந்தால் இன்னொன்று. அது தீர்ந்தால், மற்றொன்று. ஜனநாயகப் பாதையைத் தேர்ந்தெடுத்தது தவறோ என்று பிரசந்தா வருந்துமளவுக்கு தடங்கல்களும் கலகங்களும் பல்கிப்பெருகின.

உச்சகட்டமாக, ராணுவ தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால் பிரசந்தாவின் உத்தரவை உதாசீனம் செய்தார். காபினெட்டின் அனுதியை பெறாமல் தன்னிச்சையாக இரு தவறுகளை செய்தார் கட்வால். சில ராணுவ உயர் அதிகாரிகளின் ஓய்வுக்காலத்தை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார். புதிய வீரர்களை நேபாள ராணுவத்தில் தொடர்ச்சியாக இணைத்துக்கொள்ள ஆரம்பித்தார். 

நேபாள ராணுவத்தோடு மக்கள் விடுதலைப் படையை இணைக்கவேண்டும் என்பது பிரசந்தாவின் தீர்மானம். ராணுவத்தோடு இணைவதற்காக மக்கள் படையைச் சேர்ந்த 19000 வீரர்கள் நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அரசாங்கத்தின் ஒப்புதல் பெறாமல் வெளியில் இருந்து புதிதாக ஆள்களை தேர்ந்தெடுத்து நியமிக்கவேண்டிய அவசியம் என்ன? அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீங்கள் எப்படி நீட்டிக்கலாம்? இந்த இரு கேள்விகளுக்கும் உடனடியாக பதிலளிக்கவும் என்று பிரசந்தா ஏப்ரல் 20ம் தேதி கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பினார். தெளிவான பதில் வரவில்லை. பிரசந்தா கட்வாலை பதவிநீக்கம் செய்தார்.

ஜனநாயகத்தை அவமானப்படுத்தும் வகையில், மூன்று சம்பவங்கள் நடந்தன. கட்வாலை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்றது இந்தியா. நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் பிரசந்தாவின் உத்தரவை நிராகரித்துவிட்டு, கட்வாலை மீண்டும் பதவியில் அமர்த்தினார். கூட்டணியில் இருந்து யு.எம்.எல் வெளியேறியது. மூன்று தவறுகள். கட்வால் பதவீ நீக்கம் என்பது நேபாளின் உள்நாட்டு விவகாரம். இதில் ஏன் இந்தியா தலையிடவேண்டும்? மாவோயிஸ்டுகளை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, ராணுவத்தை அரசாங்கத்துக்கு எதிராகத் திருப்பிவிடும் பேரழிவு வேலையை ஏன் இந்தியா செய்யவேண்டும்? ராணுவத்தை நான் மதிக்கிறேன் ஆனால் அது சிவிலியன் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டே இயங்கவேண்டும் என்று பிரசந்தா சொல்வதில் என்ன தவறு? இந்தியாவிலும் இதுதானே நடைமுறை? அரசாங்க உத்தரவை மீறி ராணுவ ஜெனரல் இங்கே முடிவெடுத்தால் மன்மோகன் சிங் அரசாங்கம் சும்மா இருக்குமா?

இரண்டாவது தவறு, நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவின் குறுக்கீடு. என்னதான் நேபாள அரசியலமைப்பின்படி இவர் கமாண்டர் இன் சீஃப் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும் பிரதமரின் உத்தரவை உதாசீனம் செய்தது சரியல்ல. கட்வாலை நீக்கவேண்டும் என்பது பிரசந்தாவின் தனிப்பட்ட விருப்பமல்ல. காபினெட் அஸெம்ப்ளி எடுத்த முடிவு அது. ஆகவே, ஜனநாயகபூர்வமான முடிவு. இதை ஒரு ஜனாதிபதி எப்படி மறுக்கலாம்? ஜனாதிபதியின் முடிவை ஆதரிக்கிறோம் என்கிறது இந்தியா. ஒருவேளை இந்தியாவில் அப்படியொரு நிலைமை ஏற்பட்டால், இந்தியா அதை ஒப்புக்கொள்ளுமா?

மூன்றாவது தவறு, யு.எம்.எல் வெறியேற்றம். அதிகபட்சமாக அவர்கள் செய்திருக்கவேண்டியது பிரசந்தாவுக்கு எதிராக காபினெட்டில் வாக்களிப்பது மட்டுமே. இன்னும் மூன்று மாதங்களில் ரிடையர் ஆகப்போகிற ஒரு ஜெனரலை பதவி நீக்கம் செய்ததற்காக அரசாங்க கட்டுமானத்தை பாதிக்கும் ஒரு செயலை யு.எம்.எல் செய்திருக்கக்கூடாது. ஆனால் அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது என்பதுதான் உண்மை.

பதவியேற்றபிறகு பிரசந்தா அளித்த முதல் நேர்க்காணலில் ஒரு கேள்வி. நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேறுமா? நிச்சயமாக. நாங்கள் மக்களை அழுத்தமாக நம்புகிறோம். நாங்கள் பணியாற்றப்போவது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும். எங்கள் உறவை ஒருவராலும் சிதைக்கமுடியாது.

அரசியலைமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. அந்நிய தலையீடு (இந்திய தலையீடு என்று படிக்கவேண்டும்) பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தப் பின்னணியில்தான் பிரசந்தா ராஜிநாமா செய்திருக்கிறார். மனச்சாட்சியுடனும் மனிதத்தன்மையுடனும் எடுக்கப்பட்ட முடிவு அது.