காலக்கெடு பல விதிக்கப்பட்டது. நாட்கள் பல குறிக்கப்பட்டது. சில மணி நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டது. இருந்தும் பேரினவாத இனவழிப்பு யுத்தம், இன்னமும் முடிவுக்கு வரவில்லை. காரணம் என்ன!? 

 

அரசின் 'மீட்பா!?" அரசின் 'மனிதாபிமானமா!?" இல்லை. இவை எல்லாம் அரசின், அரசியல் நோக்கமாக இருப்பதில்லை. இனவழிப்பே பாசிட்டுகளின் அரசியல். 'மீட்பு", 'மனிதாபிமானம்"  என்பன இனவழிப்புத் திட்டத்தின் முன், தவிர்க்க முடியாத வண்ணம் வந்த புதிய விடையங்கள். அப்படியாயின்  காரணம் என்ன!?   

 

புலிகள் பலமா!? இல்லை, அதுவுமில்லை. புலிகளின் பலத்தின் முன், அவர்களின் யுத்த தந்திரத்தின் முன், அவர்கள் என்றோ அழிக்கப்பட்டு இருப்பார்கள். அப்படியாயின் எது!?

 

உண்மையில் இந்த இனவழிப்பை தான் விரும்பியவாறு செய்யமுடியாது தடுப்பது, சர்வதேச முரண்பாடுகள்தான். இனவழிப்பின் ஊடாகத்தான், புலியை அழிக்க அரசு விரும்பியது. பாரிய இனப்படுகொலைகள் மூலம், இதைச் செய்யவே விரும்பியது.

 

இதைத் தடுத்தது, நிலவும் சர்வதேச முரண்பாடுகள் தான். இந்த முரண்பாட்டைக் கொண்டுதான், இனவழிப்பை செய்ய விரும்பியது, இந்த பாசிச அரசு. ஆனால் அதுவே எதிர்மறையில் செயலாற்றுகின்றது. இலங்கையில் தம் செல்வாக்கை உருவாக்கவும், தக்க வைக்கவும் பல நாடுகள் முனைகின்றது. இது இந்த யுத்தத்தின் போக்கில், தலையிடுகின்றது, தன் செல்வாக்கைச் செலுத்துகின்றது. இப்படி உலகாதிக்கத்தைச் செய்ய விரும்பும் நாடுகளின் முரண்பாடுகள், ஒரு பக்கம் இனவழிப்புக்கு உதவ, மறுபக்கத்தில் அது உருவாக்கும் மனித அவலத்தைக் காட்டி மற்றைய நாடுகள் தலையிடுகின்றது. இப்படி இதற்குள் பல நாடுகளின் முரண்பாடுகளும், மோதல்களும், யுத்தத்தின் போக்கில் தலையிடுகின்றது. இதனால் இந்த யுத்தத்தின் முடிவை, இழுபறியான ஒரு சூழலுக்குள் கொண்டு வந்துள்ளது.

 

மக்களை புலிகள் தாம் தப்பிப் பிழைக்க பணயமாக்கியதன் மூலம், இது புலிகளுக்கு மட்டுமல்ல சர்வதேச முரண்பட்ட சக்திகளுக்கும் உதவுகின்றது. தொடரும் மனித அவலம், புலிகள் முதல் பல்வேறு நாடுகளுக்கும் உதவுகின்றது. இப்படி இனவழிப்பும், மனித அவலமும், பல்வேறு சுரண்டும் முரண்பட்ட பிரிவுகளின் நலனுக்கே உதவுகின்றது.

 

பேரினவாதம் விரும்பிய இனவழிப்பு இன்று இழுபறியாவது, மக்களை காப்பாற்றுவதற்காகவல்ல. யுத்தம் முடியாமல் தாமதிக்கும் காலம் என்பது, சர்வதேச முரண்பாட்டால் தற்செயலாக மேலெழுந்துள்ளது. உண்மையில் பல பத்தாயிரம் தமிழ்மக்களை கொன்று, யுத்தத்தை முடிக்கவே அரசு விரும்பியது. அதற்கமையத்தான் அரசு திட்டமிட்டு செயற்பட்டது. இதற்கமைய

 

1. அங்கு உயிருடன் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை, பல பத்தாயிரமாக குறைத்து உலகுக்குக் காட்டியது. இதன் மூலம், அவர்களின் புள்ளிவிபரத்தில் இல்லாத எண்ணிக்கையான மக்களை, ஒரு பாரிய இனவழிப்பு மூலம் கொல்லத் திட்டமிட்டிருந்தது.

 

2. இதற்கமைய அனைத்து சர்வதேச அமைப்புகள், ஊடகங்களை வெளியேற்றி, பாரிய இனப்படுகொலைக்குரிய இராணுவ சூனியத்தை உருவாக்கியது.

 

3. எந்த அகதியையும் ஏற்கத் தயாரற்ற வகையில், பல பத்து மாதமாக மக்கள் மேல் ஒரு யுத்தத்தை தொடர்ச்சியாக நடத்தியது. இதன் மூலம் அவர்களை கொன்று போடவே எண்ணினர். இதனடிப்படையில் மக்களை ஏற்கத் தயாரற்ற நிலையில், அரச இயந்திரம் இருந்தது. மாறாக அவர்களை கொன்று குவித்து அழிக்கவே தயார் செய்திருந்தது. 

 

இப்படி பாரிய இனப்படுகொலைகள் மூலம், யுத்தத்தை உடன் முடிவுக்கு கொண்டு வரவே எண்ணியிருந்தது. இதற்கமைய அங்கு வாழ்ந்த மக்களை, இலட்சங்களில் குறைத்துக் காட்டியது.

 

உலகாதிக்க நாடுகளின் முரண்பாடும், யுத்தத்தில் தலையீட்டாலும், இனவழிப்பின் காலத்தை பின்தள்ளியது. இதனால் இனவழிப்புக்கான செறிவான தாக்குதலில் அண்ணளவாக 10000 பேரையே கொல்ல முடிந்தது. பல பத்தாயிரம் உயிர்கள், இதனால் தப்பிப்பிழைக்க முடிந்தது. இறுதித் தாக்குதல் தொடங்கியுள்ளது. இது எத்தனை ஆயிரம் என்பது, இனித்தான் தெரியவரும். 

 

அண்ணளவாக கடந்த 5 மாதத்தில் 10000 பேரை மட்டுமே கொல்ல முடிந்தது. புலிகள் மக்களை இட்டு அக்கறையற்ற நிலையில், மனிதப்படுகொலைக்கு உதவுதன் மூலம் அரசியல் செய்ய விரும்பியது. இராணுவம் அதை பல பத்தாயிரமாக படுகொலை செய்த யுத்தத்தை முடிக்க விரும்பியது.

 

புலிகள் தாம் தப்பிப் பிழைக்க மக்களின் படுகொலைக்கு உதவியதுடன், அதை சர்வதேச அளவில் நவீனமாக பிரச்சாரம் செய்தது. இந்தப் பிரச்சாரம் சர்வதேச அளவில் தனிமைப்பட்டு போனது. புலம்பெயர் தமிழர்களின் கண்மூடித்தனமான செயலின் பின், மனித அவலங்கள் மீதான உணர்வாக அது பிரதிபலித்தது.

 

மொத்தத்தில் சர்வதேச சமூகங்களிடம் அன்னியமாகிப்போன இந்த மனித அவலம், சர்வதேச முரண்பாட்டுக்கு பயன்படுகின்றது. அவர்கள் தங்கள் நலனை அடைய, இந்த மனித அவலத்தை கையில் எடுத்துள்ளது. இதனால் தான் இனவழிப்பை வெளிப்படையாக செய்யும் காலக்கெடுகள் பல கடந்து சென்றது.

 

இது திறந்தவெளிச் சிறை அகதிகள் என்ற, புதிய நாசிச வழிமுறையை தோற்றுவித்தது. பேரினவாத அரசு சுதந்திரமாக இனவழிப்பு மூலம் படுகொலை செய்ய முடியாது போனதால் சர்வதேச முரண்பாடும் அது சார்ந்த சூழலும், இதனால் ஏற்பட்ட கால நீட்சியும், இன களையெடுப்புக்கு  ஏற்ப திறந்தவெளி நாசிய சிறைச்சாலையை உருவாக்கியுள்ளது.

 

இப்படித்தான் இந்த யுத்தம் இன்னமும், இன்றும் நீடிக்கின்றது. 10000 படுகொலையுடன் தடுமாறுகின்றது. பல பத்தாயிரம் படுகொலைகள், நாடுகளிடையேயான சர்வதேச முரண்பாட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரச புள்ளிவிபரங்கள் பட்டியலில், பல பத்தாயிரம் மக்கள் உயிருடன் மீளப் பதிவாகியுள்ளனர்.

 

இப்படி பேரினவாதம் தான் விரும்பியவாறு, விரும்பிய நேரத்தில், இனவழிப்பை முழுமையாக செய்யமுடியாது போயுள்ளது. இதனால் பல பத்தாயிரம் மக்கள், தம் உயிரை காப்பாற்ற முடிந்துள்ளது. இனவழிப்பு மூலம் நாளை இன்னமும் எத்தனை ஆயிரம் மரணங்கள் என்பது, எம்முன் தவிர்க்க முடியாத ஒரு செய்தியாகவே நிச்சயமாக இருக்கும்.  

 

பி.இரயாகரன்
15.05.2009