10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

நேபாளச்சிவப்பு சாயம் போகாது

 நேபாளம், அண்மைக்காலங்களில் மன்னராட்சியிலிருந்து விடுபட்டு மக்களாட்சி முறைக்கு திரும்பிய நாடு.  மிக நீண்ட காலமாய் முடியாட்சியின் இன்னல்களை சகித்துக்கொண்டிருந்த மக்கள், எதிர்க்கத்துணிந்தபோது அதை பயன்படுத்திக்கொண்ட அங்குள்ள அரசியல் கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் மன்னர்களோடு சமரசம்

 செய்து கொண்டு, அதிகாரத்திற்கு வந்து சுகித்தனர். ஒரு கட்டத்தில் இந்த அரசியல் கட்சித்தலைவர்களையெல்லாம் கைது செய்து சிறையிலடைத்துவிட்டு மன்னர் ஞானேந்திரா தானே நேரடியாக பொறுப்பேற்ற போது, ஏற்கனவே முடியாட்சியை எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் மக்கள் விடுதலை ராணுவம் என்ற ராணுவ அமைப்பின் மூலமும் போராடிக்கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் மேலிருந்தும் கீழிருந்தும் போராட்டத்தை தொடர்வது என்னும் யுத்த தந்திர முறையில் அந்த அரசியல் கட்சிகளோடு இணைந்து மன்னராட்சியை நேபாளத்திலிருந்து தூக்கி எறிந்து குடியரசாக நேபாளத்தை அறிவித்தார்கள். அதன் படி மாவோயிஸ்ட் தலைவராக இருந்த புஷ்ப கமல் தஹால் என்னும் பிரசண்டா பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது அந்த பிரதமர் பதவியை விட்டு விலகியுள்ளார் பிரசண்டா. 

 

கம்யூனிசத்தை அழித்துவிட்டதாய் பொய்ப்பிரச்சாரம் செய்துவரும் அமெரிக்காவும், அதற்கு அடியாளாகத்துடிக்கும் நேபாளத்தின் அண்டை நாடான இந்தியாவும், நேபாள நிர்வாகத்தை மாவோயிஸ்டுகள் பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டன. மாதேசி தேசிய இனத்தை தூண்டிவிட்டும் மதவெறியின் மூலமும் அங்கு நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலை  சீர்குலைக்க முயன்ற போதிலும் மாவோயிஸ்டுகள் அதிக இடங்களை பெற்றனர். 

 

இதுவரையில் மன்னராட்சியை பாது காத்த ராணுவம், மன்னராட்சிக்காக போரிட்ட ராணுவம், மக்களாட்சிக்காக போராடியவர்களை கொன்றுகுவித்த ராணுவம் மக்களாட்சியை காக்கும் அமைப்பாக எப்படி விளங்க முடியும்? ஆனாலும் நேபாள ராணுவத்தை கலைக்கமுடியாத சூழலில் மாவொயிஸ்டுகள் அமைத்திருந்த ஏழு கட்சி கூட்டணியில் அனைவரும், போராளிகளான மக்கள் விடுதலை ராணுவத்தினரை நேபாள ராணுவத்துடன் இணைப்பதற்கு 2006 நவம்பரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பம் முதலே தடுத்துவந்தார் ராணுவத்தளபதி ருக்மாங்கத் கடாவல். தொடர்ந்து மூன்று குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை பதவி நீக்க உத்தரவிட்டார் பிரசண்டா.

 

௧) நேபாள ராணுவத்திற்கு மக்கள் விடுதலை ராணுவத்தினரை சேர்க்கும் முடிவை மறுத்து புதிய ஆட்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது.

 

‍௨) பிரிகேடியர் ஜெனரல்கள் எட்டும் பேருக்கு அரசு விருப்பத்திற்கு மாறாக பதவி நீட்டிப்பு வழங்கியது.

 

௩) தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மக்கள் விடுதலை ராணுவத்தினர் பங்கேற்றதை எதிர்த்து நேபாள ராணுவத்தினரை வெளியேற்றியது.

 

   

ஆனால் பிரசண்டாவின் இந்த உத்தரவை எதிர்த்து நேபாள காங்கிரசும், மாலெ கட்சியும் அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர். இதனைத்தொடர்ந்து, ஜனாதிபதி ராம் பரண் யாதவ் பிரசண்டாவின் உத்திரவை ரத்து செய்து, ராணுவத்தளபதியை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால் தமது பிரதமர் பதவியை விட்டு பிரசண்டா விலகிக்கொண்டார்.

  

      

 

    மாவோயிஸ்டு போராளிகளை ராணுவத்தில் சேர்ப்பதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்த‌  கட்சிகள் ஏன் அரசுக்கு தம் ஆதரவை விலக்கிக்கொள்ளவேண்டும்? அரசின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட ராணுவத்தளபதியின் பதவி நீக்கத்தைஜனாதிபதி ஏன் ரத்து செய்ய வேண்டும்? 

 

மாவோயிஸ்டுகள் அதிகாரம் பெறுவதை விரும்பாத இந்தியா, தேர்தல் சமயத்திலேயே மாவோயிஸ்டுகளை தோற்கடிக்க முயன்று முடியாததால் ஆட்சியை கவிழ்க்கும் முனைப்புடன் செயல்பட்டு வந்தது. காரணம் பிரசண்டா பதவிக்கு வந்ததும் நேபாளத்தில் இந்திய மேலாதிக்கத்தை திணிக்கும் ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வோம் என்று அறிவித்திருந்தார்.  அதோடு மட்டுமன்றி சீனாவுடன் புதிய ஒப்பந்த்தத்திற்கான முயற்சிகளையும் தொடங்கியிருந்தார். இதன் காரணமாகத்தான் இந்தியாவின் பக்கபலத்துடன் கடாவல் பிரதமரின் உத்தரவுகளை குப்பைக்கூடைக்கு அனுப்பிவந்தார். கோவில் பூசாரியை மாற்றியதற்கே சம்மதிக்காத இந்தியாவா தளபதியை மாற்றச்சம்மதிக்கும்?  எனவே தான் தன்னுடைய அஸ்திரங்கள் கைக்கூலிகள் மூலம் நேபாள அரசியல் குழப்பங்களை ஏற்படுத்திவருகிறது.

 

 இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவிப்பதற்கு துணை நிற்பதற்கும், நேபாளத்தில் ஆட்சியை கவிழ்க்க சதிவேலை செய்வதற்கும் ஒரே காரணம் இந்திய பிராந்திய மேலாதிக்கம் தான். இறையாண்மை என்பதெல்லாம் பிராந்திய நலனுக்கு உட்பட்டதுதான். 

 

மக்களாட்சிக்காக போரிட்ட போராளிகளை நேபாள ராணுவத்தில் சேர்த்தால் அது ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட நிகழ்ப்வாக முடிந்து விடுமா? இந்தியாவிற்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போய்விடுமா? 

 

 மெய்யாகவே மக்களாட்சியை காக்கும் ராணுவ அமைப்பு வந்தால் நேபாள மன்னர் குடும்பமும், இந்திய தரகு முதலாளிகளும் நேபளத்தில் செய்துள்ள முதலீடுகள் காக்கப்படுமா?

 மாவோயிஸ்டுகளின் மக்கள் மன்றங்கள் நீதித்துறையை கையிலெடுத்துக்கொண்டால் இந்திய மேலாதிக்கம் நீடிக்க முடியுமா?

 

இவைதான் நேபாள குழ‌ப்ப‌த்திற்கான இந்தியாவை பாதிக்கும் காரணிகள். இதற்காகத்தான் இறையாண்மையின் காவலர்கள் (இலங்கைக்கு மட்டும்) நேபாளத்தின் தீர்க்கதரிசியாய் மாறுகிறார்கள். இதை புறிந்திருப்பதால் தான் பிரசண்டா தன்னுடைய பதவி விலகல் உரையில் தெளிவாக அறிவித்திருக்கிறார், “நாட்டிற்காக தங்கள் உயிரை அற்பணித்த பல்லாயிரக்கணக்கான மக்களின் ரத்தத்தின் மேல் நின்றுகொண்டு அன்னியக்கடவுளர்களுக்கு நாம் தலைவணங்க மாட்டோம்.

          

nepal3
 நம்முடைய வரிப்பணத்தைக்கொண்டு இயங்கும் அரசு நம்முடைய விருப்பத்திற்கு மாறாக நம்முடைய இனத்தை அழிப்பதற்கு துணை போவதையும், தங்களின் விடுதலைக்காக  தங்களின் ரத்தத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்ட அரசை கவிழ்த்து குழப்பம் ஏற்படுத்துவதையும் நாட்டுப்பற்று என்ற பெயரில் நாம் சகித்திருக்கத்தான் வேண்டுமா?

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்