01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

இனவழிப்பை செய்யும் யுத்த வடிவங்கள்

பேரினவாத பாசிட்டுகள் நடத்தும் இனவழிப்பு யுத்தத்தை, அப்பாவி பொதுமக்கள் மேல் தான் நடத்துகின்றனர். இந்த அரசியல் உண்மையைத்தான் புலிப் பாசிசம் தனக்கு சார்பாக கொண்டு, மக்களை தனது யுத்த கருவிகளாவே தன் பின்னால் குவித்து வைத்துள்ளது. இப்படி இந்த யுத்தத்தின் வெற்றி தோல்வியை, யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மக்களை கொல்லும் தம் வடிவத்தின் மூலம் கட்டமைக்கின்றனர்.

 

 

புலிகள் மக்களைக் கொல்ல உதவும் வண்ணம் தான்,  யுத்ததந்திரத்தை கட்டமைக்கின்றனர். இதன் பொருள் என்ன? பேரினவாதம் மக்களை வகைதொகை இன்றி கொல்லும், அதைக் கொண்டு நாங்கள் தப்பமுடியும் என்று அது கருதுகின்றது. 

 

இப்படி பேரினவாதம் வகை தொகையின்றி கொல்லும் என்பதன் மூலம் அந்த செயலை ஆதரிக்கும் புலி ஒருபுறம். மறுபக்கத்தில் பேரினவாதம் வகை தொகையின்றி கொல்வதை 'ஜனநாயகம்" என்று சொல்லி ஆதரிப்பவர்கள் புலியெதிர்ப்பாளராக உள்ளனர். இப்படி இரு தரப்பும், வௌ;வேறு வடிவங்களில் மக்கள் கொல்லப்படுவதை ஆதரிக்கின்றனர்.

 

புலிகள் மக்களை 'பணயக்கைதியாக" வைத்திருப்பதால் தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர் என்று கூறி, கொல்வதையும் கொல்பவனையும் ஆதரிக்கின்றனர். புலிகள் மக்கள் பேரினவாதிகளால் கொல்லப்படுவதால் தான் 'எம்முடன் நிற்பதாக கூறி", கொல்பவனுக்கு உதவி கொல்வதை ஆதரிக்கின்றனர். இரு வலதுசாரிகளும், தத்தம் அரசியல் போக்கில் மக்களைக் கொல்லும் நிகழ்ச்சி நிரலைக் கொண்டு இயங்குகின்றனர்.    

 

இப்படி இங்கு மக்களை கொல்ல உதவுபவன் ஒருபுறம், மறுபக்கத்தில் கொல்பவன் பற்றிய உண்மை மறுபுறம். இப்படி கொல்பவன் செயலை 'மீட்பு", 'மனிதாபிமான நடவடிக்கை" என்று கூறுகின்ற கயவர்களின் முகத்தையும், இப்படி பிரச்சாரம் செய்யும் மனித விரோதக் கும்பலையும், நாம் இனம் காணவேண்டியுள்ளது.

 

புலிகள் இன்று தோற்றுவரும் நிலையில் கூட, தமக்கான யுத்த எல்லைகளை கொண்ட ஒரு யுத்த முனையை வைத்துள்ளனர். இங்கு ஏன் இராணுவம் சண்டை செய்யாமல், யுத்தம் நடவாத பிரதேசத்தில் வைத்து மக்களை கொல்லுகின்றது. இதுதான் பேரினவாத  இனவழிப்பாகும்.

 

புலிகள் தம் எல்லையில் சண்டை செய்ய எல்லா நேரமும் தயாராகவே உள்ளனர். அவர்களுடன் சண்டை செய்வது என்பது தான் சரியானது. மாறாக சண்டை நடவாத இடத்தில்,  அப்பாவி மக்களுக்கு நடுவில் குண்டைப் போட்டு, அவர்களை கொல்வது இனவழிப்பாகும். ஏன் இது யுத்தக் குற்றமும் கூட.

 

இந்த மக்கள் மேல் கனரக ஆயுதங்கள் மூலம் குண்டைப் போட்டு கொல்வது இனவழிப்பாகும். புலிகளுடன் சண்டை செய்ய, எப்பொழுதும் யுத்த எல்லைகள் உள்ளது. ஆனால் அதைத் தவிர்த்து, பொதுமக்களை பேரினவாதம் படுகொலை செய்கின்றது.

 

யுத்தத்தில் கனரக ஆயுதங்கள் மூலம், கும்பல் கும்பலாக மக்களை கொல்வதன் மூலம் தான், பேரினவாதம் தன் இனவழிப்பு இலக்கை அடைய முனைகின்றது. இப்படி பெருமளவில் கொல்லப்பட்ட மக்கள், யுத்தம் நடவாத பிரதேசத்தில் வைத்து பேரினவாதிகளால் தான் கொல்லப்பட்டனர். அதுவும் கனரக ஆயுதங்கள் மூலம். அதுவும் மக்களை இப்படி கொல்லும் இந்த பேரினவாத அரசு, நாங்கள் அறிவிக்கும் பிரதேசத்துக்கு சென்றால் கொல்ல மாட்டோம் என்று அறிவித்து, பின் அங்கு வைத்து அந்த மக்களை படுகொலை செய்கின்றது.

 

உண்மையில் இங்கு எந்த யுத்தமும் நடப்பதில்லை. அதுவும் கனரக ஆயுதங்கள் மூலம், இந்த இனப் படுகொலையை அரங்கேற்றுகின்றது.

 

இந்த இனப்படுகொலை பேரினவாதிகளால் திட்டமிட்டு செய்யப்படுகின்றது. இது அம்பலமான போதுதான் 'மீட்பு', 'மனிதாபிமானம்" என்ற பெயரில், மக்களை குறித்து கபட நாடகமாடியது. அதுவரை அது கொல்வதை செய்து வந்தது. பேரினவாத குண்டுக்கு இரையாகாது, அதில் இருந்து தப்பி வந்த மக்களை, 'மனிதாபிமான மீட்பு" பெயரில் திறந்தவெளிச் சிறையில் அடைத்து வைத்து கொல்லுகின்றது.

 

உணவின்றிய மரணம் முதல் அங்கிருந்து கடத்திச்சென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கி   கொல்வது வரை அரங்கேறுகின்றது. இப்படி ஒரு இனத்துக்கு எதிரான வெற்றிகரமான இனவழிப்பு யுத்தம், புலிப் பாசிச பின்னணி இசையில் அரங்கேறுகின்றது.  

 

பி.இரயாகரன்
12.05.2009