09302020Wed
Last updateMon, 28 Sep 2020 8pm

பேரினவாத இனவழிப்பு யுத்தம், பெண்கள் மேல் திணித்துள்ள ஆணாதிக்க சுமை

பெண் உடல், பாலியல் உறுப்புகள் கூட, யுத்தத்தில் ஒரு கருவியாகின்றது. பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாரியது. எல்லையற்றது. ஆணாதிக்க சமூக அமைப்பில் யுத்தம், விதவைகளை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் உடல், பால் சார்ந்த உறுப்புகளை யுத்தம் மேய்கின்றது.

 

வாழ்வை நடத்த முடியாத யுத்த பொருளாதார சூழல், உடலை விற்கக் கோருகின்றது. தாயையும், குழந்தையையும் இழந்த பெண்ணின் யுத்தக் கதறல்கள், உளவியல் ரீதியில் மரணிக்கக் கோருகின்றனர். பேரினவாத பாசி;ட்டுகள் இனவழிப்பின் ஊடாக, பெண்ணை குறிவைத்து ஒரு உளவியல் யுத்தம் மூலமும் கொல்லுகின்றது. மறுபக்கத்தில் புலிகள் முதல் துரோகக் கும்பல் வரை, இந்த பெண்களை பிடுங்கித் தின்னுகின்றது. இந்த பெண்களுக்கு ஆறுதலாக இருக்க, உதவியாக இருக்க முன்வராத மலட்டுத் தேசியம், மலட்டு ஜனநாயகமும் பாசிசமாகி பெண் இனத்தையே புணருகின்றது.    

  

இன்று இனவழிப்பு உச்சத்தில், பெண்களின் அவலமோ எல்லையற்றது. பேரினவாதம் தமிழர்களின் பொதுவான வாழ்வியல் அடிப்படைத் தேவைகளையே இன்று மறுத்து நிற்கின்றது.  இதில் பெண்களின் தேவைகளையும், உணர்வுகளையும், அது தன் பேரினவாத பாசிச ஆணாதிக்க கண்ணோட்டம் ஊடாக மறுக்கின்றது. மாறாக அது பெண்ணின் உடல், பாலியல் உறுப்புகள் ஊடாகத்தான் பெண்ணை அணுகுகின்றது. இதுவே எங்கள் பெண்கள், எம் கடந்தகால பேரினவாத வரலாற்றில் சந்தித்தவையும்  கூட. 

   

இன்று சிங்கள பேரினவாத பாசிசம் நடத்தும் இனவழிப்பு யுத்தம், பொதுவாக ஆண், பெண், முதியவர், குழந்தைகள் என்று எந்த வேறுபாடுகளுமின்றி கொன்று குவிக்கின்றது. அவர்களை  காயப்படுத்துகின்றது. நிரந்தரமாகவே அவர்களை அங்கவீனராக்குகின்றது. குடும்ப உறுப்பினரை வகை தொகையின்றி கொன்று குவிக்கின்றது. சமூகத்தில் இருந்து ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்துகின்றது. மக்களின் பண்பாடுகள் கலாச்சாரங்கள் என அனைத்தையும் ஈவிரக்கமின்றி அழிக்கின்றது. ஒவ்வொரு மனிதனையும் உளவியல் ரீதியாக கொல்லுகின்றது.

 

சொந்த மண்ணை அபகரிக்கின்றது. வாழ்விடங்களை சுடுகாடாக்குகின்றது. வாழ்வை வழங்கி விளை பூமியை குண்டுகளால் விதைக்கின்றது. அன்போடு பண்போடு வளர்த்த வளர்ப்பு பிராணிகளைக் கூட சுட்டுப் பொசுக்கி தின்னுகின்றனர் அல்லது சுட்டு அழிக்கின்றது. எஞ்சியதையும், பாதுகாப்பாக புதைத்து வைத்துவிட்டு வந்த தமிழ் மக்களின் அற்ப சொத்துகளைக் கூட, சிங்கள பேரினவாதம் தேடித் திருடுகின்றது. இப்படி ஒரு பிரதேசத்தையே ஆக்கிரமித்து, பெண்ணை வன்புணர்ச்சிக்கு உள்ளாக்குவது போல் மக்களின் வாழ்விடங்களை சூறையாடி கற்பழிக்கின்றது.

 

மக்கள் தாம் புதைத்து வைத்துவிட்டு வந்த செல்வதை எண்ணுவதா? காணாமல் போன குழந்தைச் செல்வத்தை எண்ணுவதா? பலாத்காரமாக இழுத்துச் சென்ற குழந்தைச் செல்வங்களை எண்ணிப் புலம்புவதா? இப்படி எத்தனை வாழ்வுசார் துயரங்களை பாசிசம் விதைத்துச் செல்லுகின்றது.

 

எம் மக்கள் சந்தித்த, சந்திக்கின்ற அவலம், வார்த்தைக்குட்பட்டதல்ல.  இதன் மூலம் பாசிட்டுகள்  தங்கள் அதிகாரத்தை, ஒரு குடும்ப சர்வாதிகாரமாக நிறுவ முனைகின்றனர். இதற்காக பேரினவாதம் தன் இராணுவ இயந்திரத்;தை கொண்டு ஒரு இனவழிப்பை நடத்துகின்றது.

 

இப்படி நடத்திய இனவழிப்பே, அந்த மக்களை அவர்களை அந்த மண்ணில் இருந்தே ஓடவைத்தது. துரத்தி துரத்தி அவர்களை விடாது கொன்று குவித்த பேரினவாதம், அவர்களை குறிவைத்துக் கொல்லவே சூனியப் பிரதேசத்தை உருவாக்கினர். அங்கு வைத்து, நூற்றுக் கணக்கில் கொன்றவர்கள், இன்று ஆயிரக்கணக்கில் கொல்லுகின்றனர்.

 

இந்த பின்னணியில் புலிகள் தமிழ் மக்களை கொல்லக் கொடுத்து, தாம் பிழைக்க முனைகின்றனர். தாம் பிழைப்பதற்காக, சண்டை செய்ய சிறுவர் சிறுமிகளை பலாத்காரமாகவே இழுத்துச் செல்லுகின்றனர். இப்படி இரண்டு பக்கத்தாலும் மக்கள் நசிகின்றனர். மக்கள் புலிகளின் பாசிச நடைமுறைக்குள் சிக்கி, திணறுகின்றனர். ஒருபுறம் இனவழிப்பு, மறுபக்கம் மாபியாப் புலிகள்.

 

மக்கள் இதற்குள் எதிர்நீச்சல் போட்டு வாழப்பழகுகின்றனர். இது குறிப்பாக பெண்களை குறிவைத்து விடுகின்றது. வாழ்வதற்காக தம் குழந்தையை புலியிடம் இருந்து பாதுகாக்க எடுக்கும் முயற்சி, சிறுமிகளை கற்பவதியாக்குகின்றது. புலிகள் தம் குழந்தைகளை பிடித்துச் சென்று பலியிடுவதை தடுக்க, திருமணங்கள். இப்படி அவசரத் திருமணங்கள், அவசரமான கற்பங்கள் என்று, சிறுமிகள் தாயாக கற்பவதியாக வாழும் அவலநிலை. அறியாப் பருவத்தில் தாயாகி தவிக்கும் துயரங்கள்.

 

இன்று இருக்க இடமில்லை, மாற்றத் துணியில்லை. அம்மணமான நிலையில் மக்கள்;. இளம் பெண்களிடம் மறைக்க எதுவுமில்லை. வாழ்வே நாசமாகிப் போனது. அவர்கள் கையில் சிறு கைக்குழந்தைகள். வயிற்றில் மற்றொரு குழந்தை. வரண்டு போன மண்ணில், தாயின் மார்பில் பால் சுரப்பதில்லை. ஒட்டிய வயிற்றில் எதுவுமில்லை. பசியால் குழந்தைகள் வீறிட, தாயின் வயிறு காய்ந்து கிடக்கின்றது. எம்மண்ணின், மக்களின், இளம் பெண்களின் அவலமிது. மனிதத்தை துறந்த மனிதர்கள் வக்கிரம் கொலுவேற்றிருக்கும் பூமியில்,  இதை ரசித்தபடி மறுபக்கத்தில் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். மருந்தில்லை, உண்ண உணவில்லை, குழந்தைகள் மரணம். இதற்கு மேலாக குண்டு போட்டும் கொல்லுகின்றது பேரினவாதம். 

 

இந்த இனவழிப்பு யுத்தம் இயல்பாக இனவிருத்திக்கு தூண்டு கோலாக இருப்பது இயற்கையின் விதி. மக்கள் அகதியாக, உழைப்பு இன்மையால் முடங்கிப் போகும் வாழ்க்கையில், பாலியல் மட்டும் இயல்பான இறுக்கமான உறவாக மாறுகின்றது. பயம், பீதி, எதையும் செய்ய முடியாத துன்பம், இயல்பாக குடும்ப உறவை இறுக்கமாக அணைக்கின்றது.  அதற்கமைய ஆண் பெண் இடையிலான நெருக்கம், அதற்கான சூழல், ஒன்றாக மூழ்கிப்போகும் பொந்து வாழ்க்கை மற்றும் இருட்டான சூழல். இவை இனவிருத்திக்கு மேலும் தூண்டுதலாக மாறிவிடுகின்றது. இனத்தின் அழிவு, இயற்கையான இனவிருத்தியாக மாறுகின்றது. இதை நாம் பாலஸ்தீனத்திலும் காணமுடியும். இது இன்று எம் யுத்த சூழலில் உருவாகியுள்ளது.  

 

அதிகரித்தளவிலான இளம் திருமணங்கள், சமூக பண்பாட்டு கலாச்சார சிதைவிலான  அராஜகமான சூழல், ஆண் பெண் உறவை வீரியமாக்குகின்றது.

 

இதனால் பெண்கள் கற்பமாவது அதிகரிக்கின்றது. சிறுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.  பெண்ணை சுற்றி வாழ்வு மிகக் கடினமாகின்றது. அவர்கள் சுற்றுச்சூழல் எதுவுமற்று. அங்கு நிலவும் காட்டுமிராண்டிய நிலையில், பெண்களோ பரிதாபகரமாக மாறி நிற்கின்றனர்.

 

யுத்த சூனிய பிரதேசத்தில் வைத்தான பேரினவாதப் படுகொலைக்கு தப்பிய மக்களை, தம் சொந்த வீட்டுக்கு செல்ல பேரினவாதப் பாசிசம் அனுமதிக்கவில்லை. அங்கிருந்து துரத்தியவர்களை, அங்கு மீண்டும் செல்ல பேரினவாதம் அனுமதிக்கவில்லை. 'மீட்பாக" 'மனிதாபிமான" நடவடிக்கை என்று அறிவித்தவர்கள், இந்த மக்களை தம் திறந்தவெளிச் சிறைக்கு கொண்டு வந்து பலாத்காரமாக அடைத்து வைத்துள்ளனர். அகதி என்ற போர்வையில், அந்த மக்கள் மேல் பேரினவாத வெறியாட்டம்.  

 

இப்படி தம் படுகொலையில் இருந்து தப்பிய மக்களை, வலை போட்டு பிடித்து கொண்டு வந்து  திறந்தவெளியில் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். இப்படி தப்பி வரும் மக்களோ, எதுவுமற்ற அனாதைகள். மாற்று உடுப்பின்றி, அரை நிர்வாணமாகவே வருகின்றனர். இந்தச் சூழல் அந்த மக்களிடையே பழக்கமானது. அதை அவர்கள் ஆபாசக் கண்கொண்டு பார்ப்பதில்லை.

 

பேரினவாதம் இனவெறியூட்டி, இனத்தையே கொல்வதற்கென்ற கொழுத்த தினவெடுத்து நிற்கின்ற ஆணாதிக்கவாதிகள் முன், பெண்கள் சந்திக்கின்ற நெருக்கடிகள் பாலியல் ரீதியானவை. பெண்ணை உடல், பால் உறுப்பு சார்ந்து தான், பேரினவாத இராணுவம் அணுகுகின்றது. தமிழன் என்பதால் எதையும் செய்ய முடியும் என்ற, இன ஆதிக்கம், ஆண் ஆணாதிக்க நிலை. தம்மால் கொல்லமுடியாது போன பெண்களை, இப்படித்தான் அணுகுகின்றனர். 

 

பெண்கள் தாங்கள் பலியாக்கப்படுவோம் என்ற அச்சம். தாம் குடும்ப உறுப்பினரிடை இருந்து தனிமைப்படுவோம் என்ற பீதி. ஆணாதிக்க அமைப்பில் பெண்களுக்கே உரிய உடல் உபாதைகள். எந்த மாற்று உடுப்புகளும் கிடையாது. இயற்கைக் கடனை கழிக்க மறைவிடம் கிடையாது. தனிமைப்படுத்தி கொண்டு செல்லப்படும் பெண்கள். பாலியல் துன்புறுத்தல்கள், பார்வைகள். பேரினவாத இனவாத வலையில் சிக்கிய பெண்கள், சந்திக்கும் அவலங்கள் இப்படி எத்தனை, எத்தனை ஆயிரம்.

 

கணவனை இழந்த விதவைகள், குழந்தையை இழந்த தாய்மை, தாயை இழந்த குழந்தை, தம் குடும்ப உறுப்பினர் எங்கே, என்ன நடந்தது என்று தெரியாது தவிக்கும் பெண்மை, தன் குடும்ப உறுப்பினரையே தன் கண் முன்னால் இழுத்து செல்லும் கொடுமை. வரும் வழியில் குடிக்கத் தண்ணீரில்லை, உண்ண உணவில்லை. நோய்க்கு மருந்தில்லை. இதையடைய வேண்டுமாயின், உடலை விருந்து படைக்க கேட்கும் பாசிசம்;. இப்படி பேரினவாத 'மீட்பு", சிறைக்கு வரும் வழியெல்லாம் தொந்தரவு செய்கின்றது. இப்படி பெண்களுக்கு எத்தனை ஆயிரம் துன்பங்கள்.

 

திறந்தவெளி சிறையிலோ, நாயைவிட கேவலமான அடிமை வாழ்க்கை. உண்ண உணவில்லை. குடிக்க தண்ணீரில்லை. மாற்ற உடுப்பில்லை. நோய்க்கு மருந்தில்லை. முன்பு இருந்த சுதந்திரம் கூட இங்கு கிடையாது. வெளியில் யாருடனும் தொடர்பு கொள்ள முடியாது. சுதந்திரமாக உரையாட முடியாது. நாலு முட்கம்பிக்கு பின்னால்;, அனைத்து சுதந்திரத்தையும் இழந்த அடிமை வாழ்வு.

 

கைக் குழந்தைக்கு சுதந்திரமாக பால்கொடுக்க முடியாது. சுதந்திரமாக ஆண்களற்ற ஒரு சூழலில் அச்சமின்றி குளிக்க கூட முடியாது. சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழமுடியாது. இங்கு தம் குடும்ப உறுப்பினரை கட்டாயமாக பிரித்து செல்லுகின்ற அநியாயம். என்ன நடக்கின்றது? ஏது நடக்கின்றது? என்று தெரியாது கதறும் அபலைகளின் வாழ்வும் கண்ணீரும்.

 

வாழ்வின் பயங்கரம், உடலை விலை பேசக் கோருகின்றது. பேரினவாதம் தமிழ் மக்களின் உரிமையை மட்டும் மறுக்கவில்லை. பெண்ணின் தன் உடல் மீதான அனைத்து உரிமையையும் இழந்து, சலுகையை பெற்றுக்கொள்ளுமாறு இந்த பேரினவாத சிறை வாழ்க்கை பெண்ணை நிர்பந்திக்கின்றது. இதைத்தான் தமிழ் பேசும் மக்களின் 'விடிவு" என்றும், 'சமாதானம்" என்றும் பேரினவாதம் கூச்சல் போட்டு கொக்கரிக்கின்றது.

 

பி.இரயாகரன்
11.05.2009