07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழம் - பதுங்கு குழி - ம.க.இ.க வின் குறும்படம்

வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம்.

 

அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே.

 

மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பதாயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. இலங்கை இனவெறி ராணுவம் இதுவரை கொன்ற கணக்கிற்கு அளவில்லை, இனி கொல்லப்போவதற்கு வரம்பும் இல்லை. குண்டு வீச்சிலிருந்து தப்பித் தவறி வரும் மக்களும் கூட குடிநீரும், உணவுமின்றி பட்டினிச்சாவை எதிர் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள். அன்றாடம் அவலத்தையும், மரணத்தையும் எதிர் கொண்டு இதற்கு விடிவே இராதா என உழலும் அந்த மக்களின் துடிப்பை ஒரு சில காட்சிகளால் உயிர்த்தெழவைக்க முயல்கிறது இந்த காட்சிப் படிமம்.

 

ஈழத்தின் துடிப்பு எந்த அளவுக்கு நமது உணர்ச்சியை தட்டி எழுப்புகிறதோ அந்த அளவுக்கு நாம் சரியான அரசியல் நிலைப்பாட்டோடு போராடவேண்டும். அதை மறுப்பதற்காகவே தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் ஈழத்தை வெறும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக மாற்றயிருக்கின்றன. ஜெயவும், கருணாநிதியும் யார் ஈழத்திற்காக பிடுங்கப் போகிறார்கள் என்ற கூச்சலோடு சண்டையிடும் நேரத்தில் இந்திய அரசின் உதவியோடு ஈழத்தில் தமிழினத்தை கருவறுக்கும் வேலையை ராஜபக்ஷே அரசு ஆர்ப்பாட்டத்துடன் செய்கிறது.

 

இந்திய அரசையும், அதற்கு உதவியாய் நேரடியாகவும், மறைமுகமாகவும் பரப்புரை செய்கின்ற ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளையும் எதிர்கொண்டு சமர் புரிவதற்கு நமக்குள்ள ஒரே ஆயுதம் தேர்தல் புறக்கணிப்புதான் என்ற கடமையையும் இந்த வீடியோப்படம் நினைவுபடுத்துகிறது.

 

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். ம.க.இ.க மையக் கலைக்குழு தயாரித்திருக்கும் இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த எமது பொதுக்கூட்டங்களில் மேடை நிகழ்வாக நடத்தப்பட்டது.

 

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்