Mon02242020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கிழக்கு கிரிமினல்களின் 'உதயம்" போல் தான், வடக்கின் 'வசந்தமுமாகும்"

  • PDF

இன்று கிழக்கில் எது நடக்கின்றதோ, அதுதான் நாளை வடக்கிற்கும். இதையே சிங்கள மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் 'மாண்புமிகு" பேரினவாதியான ஜனாதிபதியும் கூறுகின்றார்.

 

கிழக்கில் கருணா – பிள்ளையான் என்ற இரு கிரிமினல்கள், அரசின் துணையுடன் ஒரு மாபியாத் தொழிலையே நடத்துகின்றனர். இதுவோ சர்வதேச கிரிமினல்களுடன், வலைப்பின்னல் கொண்டது.

 

அண்மையில் கசிந்து வெளியாகும் செய்திகளின்படி, கிழக்கு 'விடிவெள்ளிகள்" மனிதர்களை கடத்திச்சென்று உடல் உறுப்புகளை கூட சர்வதேச சந்தைக்கு சப்ளை செய்வதாக தெரிகின்றது. ஒருபுறம் கப்பத்தை அறவிடுவது மறுபக்கம் உடல் உறுப்புகளை கூறுபோட்டு விற்பது வரை அரங்கேறுகின்றது.

 

அண்மையில் கிழக்கு 'விடிவெள்ளி"கள் மட்டக்களப்;பில் கொன்ற சிறுமி தினுஷிகாவின், இரு கண்களும் சிறுநீரகமும் கூட அகற்றப்பட்டு இருந்ததாக தகவல்கள் கசிகின்றது. அதேநேரம் அந்தக் குடும்பத்திடம் 30 இலட்சம் கப்பத்தையும் இந்த கிழக்கு 'விடிவெள்ளிகள்" அறவிட முனைந்தனர்.

 

உண்மையில் இந்தக் கடத்தலும், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைக்கும் பின்னணியில், உயர் மட்டங்கள் வரை தொடர்பு இருந்துள்ளது. இந்தப் பின்னணி சர்வதேச மாபியாக் கும்பல் வரை, அதன் கரங்கள் நீண்டு இருந்ததும் வெளிப்படையாகியுள்ளது. இந்த வகையில் இந்த விடையத்தை மூடி மறைக்கவே, பொலிசார் மூலம் திட்டமிட்ட வகையில் மூவர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதான் திருகோணமலையில் கடத்திய சிறுமியின் கொலையின் பின்பும் நடந்தது. திருகோணமலையில் கைதானவர்கள், தாம் இது போல் 32 படுகொலைகளை செய்ததாக ஒப்புக்கொண்ட தகவலும் கூட வெளிவருகின்றது. இவர்கள் யார்? இவர்கள் பற்றிய செய்திகள் கூட, இன்று செய்திப் பத்திரிகைக்கு வருவதில்லை.

 

இதை யாருக்காக எதற்காக செய்தனர். இதன் மூலம் கிடைத்த பணம் எங்கே? உடல்கள் எங்கே? உடல் உறுப்புகள் எங்கே? உண்மையான குற்றவாளிகள் யார்? இப்படித்தான்  கிழக்கின் 'உதயம்;" விடிகின்றது.

 

உண்மையான குற்றவாளிகளும், இதன் சூத்திரதாரிகளும் தப்பித்துக்கொள்ள, பொலிசாரைக் கொண்டு அவர்களையே படுகொலைகளை செய்விக்கின்றனர் 'கிழக்கு விடிவெள்ளிகள்".

 

பிரதான உண்மைக் குற்றவாளிகளை பாதுகாக்கவும், குற்றத்துடன் அரசும் - இராணுவமும் சம்மந்தப்பட்டு இருப்பதை மூடிமறைக்கவே, இந்தப் படுகொலைகள். குற்றவாளிகளைப் பாதுகாக்க நடக்கும் இந்தப் படுகொலையின் போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும், உண்மையில் இவற்றில் சம்பந்தப்பட்டவரா என்பது கூட இன்று சந்தேகம் தான்.

 

கிழக்கி;ல் கடத்தல், காணாமல் போதல் என்பது, நூற்றுக்கணக்கில் நடந்து வருகின்றது. நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைகள் நடக்கின்றது. இவை அனைத்தும் கிழக்கின்; 'உதயமாகும்" அரங்கேற்றமே. இவை உலகின் முன் வெளிவராத வண்ணம், கிழக்கு 'உதயத்தின்" பெயரின் பாசிசம் தடுத்து நிறுத்துகின்றது. இதை மீறும் போது போட்டுத் தள்ளுகின்றது. சிறப்பான இவ்விரண்டு சம்பவங்களும் ஊர் உலகத்துக்கு முன்னால் அம்பலமானதால், அதன் ஆணி வேர்களை கண்டறிய முடியாத வண்ணம் போட்டுத் தள்ளினார்கள். ஆனால் இப்படி பல நூற்றுகணக்கான சம்பவங்கள் வெளிவருவதில்லை.

 

வெளிவருவதை போட்டுத்தள்ளியே கதையை முடித்து, கிழக்கு 'உதயத்தைப்" பாதுகாக்கின்றனர். கிழக்குமக்கள் இதற்கு எதிராக உள்ளனர். தொடரும் பாடசாலை பகிஸ்கரிப்புகள், கிழக்கு 'உதயத்தின்" பின் இந்த மக்கள் சந்திக்கும் வாழ்வியல் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுகின்றது. அந்த மக்கள் சந்திக்கும் நெருக்கடி, மற்றும்  அவர்கள் போராட்ட உணர்வுகளை முன்னெடுத்து வழிகாட்டிச் செல்ல இன்று இலங்கையில் யாருமில்லை என்பதே உண்மை. இதுதான் புலம்பெயர் மண்ணிலும் கூட.

 

வன்னியில் இன்று நடப்பது வெளிவுலகுக்கு தெரிய முடியாத வண்ணம், பேரினவாதம் யுத்த சூழல் ஊடாக அவற்றை அரங்கேற்றுகின்றது. வடக்கில் கிரிமினலும், மாபியாத்தனமும் நாகரீகமாக அரங்கேற்ற முனைகின்றனர். இன்று வடக்கில் நடைபெறும் கொள்ளைகள், வடக்கு 'வசந்தத்தின்" துணையுடன் நடப்பது வெளிப்படையான உண்மை.

 

இப்படி இதில் ஈடுபடுகின்ற கிரிமினல்கள், மாபியாக்கள் வாழ்கின்ற வாழ்க்கையோ, மிகவும் ஆடம்பரமானதும்  டம்பிகமானதும், உயர்தரம் கொண்டவை. இதற்கான பணத்தை கப்பம், கொள்ளை, மனிதஉடல் உறுப்பை அறுத்து விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்திலானது.  'விடிவெள்ளிகள்" முதல் அரசியல் கட்சிகள் பெயரில் இயங்கும் அரச எடுபிடிகள் அனைவரும், இப்படித்தான் பணத்தைச் சம்பாதிக்கின்றனர்.

 

கிழக்கு 'விடிவெள்ளிகள்" நடத்திய இரு குழந்தைப் படுகொலையில் பின் இருந்ததும், வவுனியாவில் பல கொள்ளைகள் மற்றும் கடத்தலில் பின் புளாட் இருந்ததும், அவர்கள் மேலான கைதின் போது அம்பலமாகியுள்ளது. இந்த கைது, குற்றத்தை கட்டுப்படுத்த நடப்பதில்லை. மகிந்தாவின் பாசிசம் தன் அரசியல் நோக்கத்தை அடைய, இதுபோன்ற குற்ற ஊக்குவிப்பும், அதைத் தொடர்ந்து கைதுகளும் உதவுகின்றது. இதை தலைமை தாங்கும் அரசியல் சூத்திரதாரிகளை மிரட்டி, மேலும் தம்மை நக்க வைக்கினர். இதன் மூலம் பாசிசத்தை சமூகங்கள் மேல் நிறுவ, இந்தக் கைதுகள் உதவுகின்றது. இவை எதுவும் விசாரணைக்கு வருவதில்லை. போட்டுத் தள்ளுதலும், கைதின் பின் அரசியல் பேரத்தின் பின் விடுதலையுமாக, குற்வாளிகளைக் கொண்டு ஒரு பாசிசம் நிறுவப்படுகின்றது. இந்த எல்லையில் மட்டும்தான் குற்றங்கள் வெளியுலகுக்கு வெளிவருகின்றது.

 

அரசின் பாசிசத்தை 'வசந்தமாகவும்" 'உதயமாகவும்" ஏற்றுகொள்ளும் குறுநில பாசிட்டுகள், இன்று எதையும் செய்யலாம். அவர்கள் இதற்காக பாதுகாக்கப்படுகின்றனர். அவர்களை (உதாரணமாக டக்கிளஸ், கருணா..) குற்றமற்றவர்களாக காட்ட, குற்றத்தையே சமூக பொருளாதார அரசியல் அடிப்படையாக பேரினவாத பாசிசம் மாற்றி வருகின்றது.

பி.இரயாகரன்
08.05.2009
          

Last Updated on Saturday, 09 May 2009 07:51