Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால் தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

 

வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். "வல்லரசாக' வளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி நாடு விரித்த வலையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறுவதைக் கேட்பதற்குக்கூடக் கூச்சமாக இருக்கிறது.

 

இதுவொருபுறமிருக்க, "பல நேரங்களில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால், சிங்களர்களை இந்தியா நம்பக் கூடாது; தமிழீழம் அமைய விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவுவதுதான், அதற்கு நல்லது'' என்றும் இவர்கள் ஆலோசனை கூறி வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகூட இதுதான். "சுதந்திர' தமிழீழம் என்பது இந்தியாவின் அடியாளாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கும் நிலைக்குக்கூட இவர்கள் சென்றிருக்கிறார்கள்.

 

இந்தியாவோ விடுதலைப் புலிகளை நம்பாமல், சிங்களப் பேரினவாதக் கும்பலைத் தான் நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் கேட்டால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள்தான் தமிழின வெறுப்போடு தவறாக வழிகாட்டுவதாக இவர்கள் "அப்பாவித்தனமாக'க் கதைக்கிறார்கள். அப்படியென்றால், வெளியுறவுத் துறைச் செயலராக ஒரு தமிழன் இருந்திருந்தால், இந்த அவல நிலைமை ஏற்பட்டிருக்காதா? ஒரு சில அதிகாரிகளின் விருப்பு வெறுப்புதான் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கிறதா? என்ற கேள்விகள் இங்கே தவிர்க்க முடியாமல் எழுந்து விடுகின்றன.

 

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழினவாதக் குழுக்கள், "சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை மனதில் வைத்துக்கொண்டு, ஈழத் தமிழினத்தையே அழித்தொழிக்க சிங்களப் படையின் மூலம் போர் நடத்துவதாக''க் குறிப்பிடுகின்றன. "அப்படியென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோற்றுப் போய், பா.ஜ.க.வோ அல்லது மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் அளிப்பதும் வழிகாட்டுவதும் நின்று விடுமா?'' என்ற கேள்விக்கு இக்குழுக்கள் பதில் சொல்லியாக வேண்டும். அந்த நப்பாசையில்தான், தமிழினக் குழுக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.

 

இந்தியா, சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் அளிப்பதை ஆதரிக்கும் கோஷ்டியினர், "இந்தியா உதவி அளிக்காவிட்டால், அந்த இடத்தை சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகள் பிடித்துக் கொண்டுவிடும்'' என்று பீதியூட்டுகின்றனர். இதன் மூலம், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய கேள்வியை வெறும் அரசியல் தந்திரப் பிரச்சினையாகச் சுருக்கி விடுகின்றனர்.


 இந்தப் பதில்கள் அனைத்தும் அம்புஜா, டாடா, மித்தல் போன்ற இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையையும்; அம்முதலாளிகளின் நலனில் இருந்துதான் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதையும்; அம்முதலாளிகளின் நலனுக்காகத்தான் இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறது என்பதையும்; இந்த அடிப்படைகளில் இருந்துதான் இந்திய அரசு சிங்களப் பேரினவாத ராஜபட்சே அரசுக்கு இராணுவ உதவிகளை அளித்து வருகிறது என்பதையும் பார்க்க மறுக்கின்றன அல்லது மூடிமறைக்கின்றன.

 

1987க்கு முன்பு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்ததற்கும்; 1998 க்குப் பிறகு இந்தியா சிறீலங்கா அரசுடன் நெருக்கமாகி, இன்று ஈழப்போரை வழிநடத்துவதற்கும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படைகள் தான் காரணமாக அமைகின்றன. மாறாக, இந்திரா, எம்.ஜி.ஆர்., சோனியா போன்ற தனிப்பட்ட தலைவர்களின் விருப்புவெறுப்போ, தலைமைப் பண்போ காரணமாக அமைவதில்லை. 1998க்குப் பிறகு இந்தியா சிறீலங்கா அரசுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மற்றும் இராணுவ நெருக்கம் மட்டுமின்றி, 2001 க்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்; இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஈழப்போரை இந்தியா வழிநடத்தி வருவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டு கொள்ள முடியும்.

 

இலங்கையில் புகுந்த இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப்புலிகளிடம் அடிபட்டுத் திரும்பிய பிறகு, இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. இதற்குக் காரணம், இந்தியா வைவப் புலியாக மாறிவிட்டது என்பதல்ல. மாறாக, அக்காலக் கட்டத்தில் சோவியத் யூனியன் சிதைந்து உருவான அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ், இந்தியா தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல், பொருளாதார, இராணுவ மட்டங்களில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம், இந்தியா அமெரிக்காவின் ஆசியோடு தெற்காசியாவில் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளை எடுத்து வந்தது.


 இதே காலகட்டத்தில், 1998ஆம் ஆண்டு, சி.பி.எம். இன் ஆதரவுடன் நடைபெற்று வந்த ஐஜக்கிய முன்னணி ஆட்சியின் பொழுது (தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ., ஆகியவை இந்த ஜக்கிய முன்னணி ஆட்சியில் உறுப்புகளாக இருந்தன.) இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் பரஸ்பரம் தமக்குள் முதலீடு செய்வதற்கு இருந்து வந்த தடைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்த இந்த ஒப்பந்தம், 2002ஆம் ஆண்டு வாஜ்பாயி தலைமையில் நடந்து வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது.

 

இதற்கும் மேலாக, இந்தியா  சிறீலங்கா அரசுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளில் மேலும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக, "முழுமையான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தை'' உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் அப்பொழுதே தொடங்கின. இந்தப் பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக இராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டே வாஜ்பாயி ரணில் விக்கிரமசிங்கே கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

 

இதே சமயத்தில், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின், அனைத்துலக அரசியல் நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவிவிட்ட ஆக்கிரமிப்புப் போர்களை இந்தியாவும், சிறீலங்கா அரசும் ஒருசேர ஆதரித்தன. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் இந்தியாவும் சிறீலங்காவும் ஒரே அணியில் இருப்பதை அமெரிக்கா மகிழ்வோடு வரவேற்றது.


 இந்தியா, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரித்ததன் பலனாக, அமெரிக்காவுடனான அதனின் இராணுவ உறவுகள் பலப்பட ஆரம்பித்தன. கூட்டு இராணுவப் பயிற்சிகள் என்பதையும் தாண்டி, அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கான அடிப்படைகள் அக்காலக்கட்டத்தில்தான் உருவாயின. மேலும், இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக அறிவித்ததன் மூலம், அமெரிக்கா தெற்காசியாவில் தனது அடியாளாக இந்தியாவை அங்கீகரித்தது.

 

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி, அவ்வமைப்பை அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐஜரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தடை செய்ததன் மூலம், இலங்கையின் மனதையும் குளிர வைத்தது, அமெரிக்கா. நார்வே நாட்டின் மேற்பார்வையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த சமயத்திலும்கூட, விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை.
 அமெரிக்காவின் இந்த நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிறீலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, சமாதான பேச்சு வார்த்தைகளையும் போர் நிறுத்தத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளைச் செய்து வந்தார். அதேபொழுதில், இந்தியப் பிரதமர் வாஜ்பாயியும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கெயும் இணைந்து அக்டோபர் 2003 இல் வெளியிட்ட கூட்டறிக்கையில், "இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதும், இலங்கையின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு என்னும் சட்டகத்திற்குள்ளேதான் உருவாக்கப்பட வேண்டும்'' என்று கோரியதோடு, "பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து போராடும்'' என்றும் அறிவித்தனர்.

 

இலங்கையில் மகிந்த ராஜபட்சே கூட்டணியும், இந்தியாவில் காங்கிரசு கூட்டணியும் ஆட்சியைப் பிடித்த பிறகு, இந்தியா சிறீலங்கா உறவில் நெருக்கம் மேலும் அதிகமானது. இலங்கையில் ராஜபட்சே கூட்டணி நவம்பர் 2005இல் பதவியேற்றபொழுது, "சிறீலங்காவின் தேசப் பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது; சிறீலங்காவின் இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்'' என்று சிறீலங்காவிற்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ், சிறீலங்காவின் பிரதமரிடம் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமையும்; தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதி செய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என வெளிச்சம் போட்டுக் காட்டியது.

 

ஜனதா விமுக்தி பெரமுன, ஜாதிக ஹேல உருமய ஆகிய இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளும், விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்”வார்த்தைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும்'' என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் ராஜபட்சே அரசுக்கு ஆதரவளித்தன. இதுவொருபுறமிருக்க, சரிந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்துடன் அதை இணைப்பதே நல்லது என சிறீலங்காவின் ஆளும் வர்க்கங்கள் கருதின. இவை இரண்டையும் சிரமேற்கொண்டு செய்து முடித்தார், மகிந்த ராஜபட்சே.

 

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மட்டுமின்றி, இரட்டை வரியைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம், இரு தரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றோடு, விமானப் போக்குவரத்து, சிறு தொழில்கள், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டன. இப்பொருளாதார நெருக்கம் ஒருபுறமிருக்க, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தம், தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போன்ற அரசியல்ரீதியான ஒப்பந்தங்களும் இந்தியா சிறீலங்காவிற்கு இடையே கையெழுத்தாகின.

 

இந்த நெருக்கத்தின் பயனாக, சிறீலங்காவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஆறில் ஒரு பங்காக அதிகரித்தது; 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு 280 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்தது; இலங்கையில் முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 4ஆம் இடத்தைப் பிடித்தது. இந்தியா வெளிநாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கும் மொத்த உதவித் தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது.


 இந்தியப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இலங்கையில் 170 இடங்களில் எண்ணெய் இறைக்கும் பம்புகளை இயக்குவதுடன், திரிகோணமலை எண்ணெசூத் தொட்டிப் பண்ணையை பராமரித்தும் வருகிறது. எரிசக்தித் துறையில் இந்தியாவின் தேசிய அனல் மின்சாரக் கழகமும், சிறீலங்கா மின் வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளன.

 

இந்தியாவைச் சேர்ந்த தாஜ் ஓட்டல் நிறுவனம், லார்சன் அண்ட் டூப்ரோ, அம்புஜாஸ், டாடா, அசோக் லேலண்ட் ஆகியவை இலங்கையில் இயங்கும் முக்கியமான தனியார் நிறுவனங்களாகும். இலங்கையின் கைபேசி சேவையில் பாரதி ஏர்டெல் நுழைந்திருக்கிறது. மேலும், ஏசியன் பெயிண்ட்ஸ், என்.ஐ.ஐ.டி., அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், சியட் உள்ளிட்டு பல்வேறு இந்திய நிறுவனங்கள் உருக்கு, சிமெண்ட், ரப்பர், சுற்றுலா, கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி ஆகிய இலாபகரமான தொழில்களில் இலங்கையில் முதலீடு செய்துள்ளன. 1991இல் 74 இலட்சம் இலங்கை ரூபாசூ மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் இலங்கையில் நடந்து வந்தன. இது, 2000ஆம் ஆண்டில் 1,250 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 இந்தியத் தொழில் திட்டங்களாக அதிகரித்துள்ளன.

 

2001க்குப் பிறகு இந்தியத் தரகு முதலாளிகளின் ஆதிக்கம் இலங்கையில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்பொருளாதார ஆதிக்கம் குறித்து சிறீலங்கா அதிபர் தேர்தலில் ராஜபட்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவரும், ஐஜக்கிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவருமான சிறீதுங்கா ஜெயசூர்ய பின்வருமாறு கூறியிருக்கிறார்; "இலங்கையில் மோட்டார் வாகனத் தொழிலில் ஆதிக்கம் செலுத்துபவை அசோக் லேலண்ட், மாருதி, பஜாஜ் ஆகிய நிறுவனங்களாகும்; டீசல், பெட்ரோல் விநியோகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகம்; இப்போது "சிலோன் தேயிலை'' என ஏதும் இல்லை; இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலானவை டாடாவுக்குச் சொந்தம். எனவே நாம் இப்போது குடிப்பது இந்திய டாடா சிலோன் தேயிலைதான். இவை சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. இவற்றுக்குப் பின்னால் உள்ள செயல்திட்டம் பீதியூட்டக்கூடியதாகும்.''

 

2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்;தத்தை அப்பட்டமாக மீறும் வகையில் ராஜபட்சே அரசாங்கம் 2006 ஆகஸ்டு, செப்டம்பரில் நடத்திய இராணுவத் தாக்குதல்களின் மூலம் திரிகோணமலை மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது. அங்கு ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த 14 கிராமங்களைச் சுற்றி ஒரு அதி பாதுகாப்பு மண்டலத்தை சிறீலங்கா இராணுவம் உருவாக்கியது. அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்தான் 35 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்தியாவின் எரிசக்தித் துறையும், சிறீலங்கா மின்வாரியமும் இணைந்து அனல் மின் நிலையத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் டிசம்பர் 2006 இல் கையெழுத்திட்டன.

 

இலங்கை உள்ளிட்ட தெற்காசியப் பகுதியில் அமெரிக்காவும் பிற வெளிநாடுகளும், மின்னணுத் தொழில்துறை முதலியவற்றில் பெரும் முதலீடு செய்திருப்பதால், அங்கு "அமைதி' ஏற்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு ஏற்பட வேண்டும் என அமெரிக்க மற்றும் இந்திய முதலாளிகள் விரும்பினர். ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்படுவதற்கு பின்னே மறைந்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை வெளிச்சம் போட்டுக்காட்ட இந்த இரு எடுத்துக்காட்டுகள் போதுமானது.

 

இந்திய முதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளையும், பொருளாதார ஆதிக்கத்தையும் காக்கும் நோக்கத்தில்தான் இந்தியா, சிறீலங்காவிற்கு அனைத்துவிதமான இராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. "சுதந்திர' தமிழீழத்தைவிட, ஒன்றுபட்ட சிறீலங்காதான் இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டலுக்கும்; அவர்களின் புவிசார் ஆதிக்கத்திற்கும் உகந்ததாக இந்திய ஆளும் கும்பல் கருதுகிறது. இந்தியா, தனது இந்த ஆதிக்க நோக்கங்களை மூடிமறைத்துக் கொள்ளவே "சிறீலங்காவின் தேசிய ஒருமைப்பாடு'' ""புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்ப்பது'' என்று பஜனை பாடுகிறது.

 

பதுக்கல் வியாபாரிகளின் கட்சியான பா.ஜ.க.வை விட்டுவிடுங்கள். "பாட்டாளிகளின் தோழனான' சி.பி.எம். அமைத்துள்ள மூன்றாவது அணி ஆட்சியைப் பிடித்தால்கூட, ஈழப் போரில் இருந்து விலகிவிட மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைவிட, இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களையும்; தெற்காசியாவை அம்முதலாளிகளுக்காக வளைத்துப் போடுவதையும் தான் முக்கியமாகக் கருதுவார்கள். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்போம் எனக் கூறிக் கொண்டு, அத்வானியையும், ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்குவதற்குப் பதிலாக, தேர்தலைப் புறக்கணித்து, இந்தியாவின் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுப்பதுதான் தமிழக மக்களின் கடமையாகும்!


பச்சையப்பன்