Language Selection

புதிய ஜனநாயகம் 2009

கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிகிறது, பாரதீய ஜனதா கட்சி. தேர்தல் என்றாலே கருப்புப் பணத் திருவிழா என்பது ஊரறிந்த உண்மை. கட்சிக்குள் "சீட்'' வாங்குவதில் தொடங்கி, தேர்தலில் வென்று, ஆட்சியைப் பிடித்து, ஆட்சி கவிழ்ந்து விடாமல் காப்பது முடிய ஓட்டுக்கட்சி அரசியலில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவது ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அப்படிபட்ட புழுத்து நாறும்

 ஓட்டுச்சீட்டு அரசியலில் புரண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க., "தாம் ஆட்சிக்கு வந்தால், சுவிஸ் நாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை நூறு நாட்களுக்குள் தோண்டியெடுத்துக் கொண்டு வந்துவிடுவோம்'' எனத் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

 


காங்கிரசுக் கட்சியோ இக்கருப்புப் பண வேட்டை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. "பா.ஜ.க., கருப்புப் பணம் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக''க் குற்றஞ்சுமத்தி வரும் அக்கட்சி, கருப்புப் பணம் பற்றிய உண்மை விவரங்களை வெளியிட மறுக்கிறது. வலது கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ்தாஸ் குப்தா, "இக்கருப்புப் பணம் பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் தான் எழுதிய கடிதத்தை அவர்கள் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்துவிட்டதாக''ப் புலம்பி வருகிறார்.


சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நோண்டினால், ராஜீவ் காந்தி குடும்பம் போஃபர்ஸ் ஊழலில் கொள்ளையடித்த பணம் சுவிஸ் வங்கியில் பதுங்கிக் கிடக்கும் மர்மமும் அம்பலமாகிவிடுமே என்ற அச்சம்கூட காங்கிரசின் மௌனத்திற்குக் காரணமாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, முதலாளிகள் மீது விதிக்கப்படும் வரிகள் அதிகமாக இருப்பதனால்தான், இந்தியாவில் கருப்புப் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாகக் கூறிவரும் கோஷ்டியைச் சேர்ந்தவர் மன்மோகன் சிங்; கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு முன் முதலாளிகளின் மீது விதிக்கப்படும் வரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் மன்மோகன் சிங். எனவே, கருப்புப் பணத்தை ஒழிக்குமாறு மன்மோகன் சிங்கிடம் வேண்டுவது, கள்ளச் சாராயத்தை ஒழிக்குமாறு போலீசிடம் கோருவதற்கு ஒப்பானதாகும்.


இந்தியாவைச் சேர்ந்த முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோர் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்களின் கருத்தறிய தில்லியிலும் குஜராத் மாநிலத்திலும் மாதிரி தேர்தல்களை நடத்தியிருக்கிறது, பா.ஜ.க. இப்பிரச்சினை தொடர்பாக அக்கட்சி அமைத்துள்ள நிபுணர்கள் குழு, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வருவது தொடர்பாக சில "உருப்படியான' யோசனைகளை வழங்கியிருப்பதாக "இந்து'' நாளேடு பாராட்டியிருக்கிறது. முசுலீம்களை வேட்டையாடுவதில் வல்லவரான நரேந்திர மோடி, இப்பொழுது இக்கருப்புப் பணத்தை வேட்டையாடக் கிளம்பிவிட்டதாக பொதுக்கூட்டங்களில் மார்தட்டி வருகிறார். இப்படியாக பா.ஜ.க., தனது தேச பக்தியை நிரூபிக்க தீவிரவாத எதிர்ப்பு என்பதோடு, கருப்புப் பண எதிர்ப்பையும் சேர்த்துக் கொண்டுள்ளது.


இக்கருப்புப் பணப் பிரச்சினை தொடர்பாக பா.ஜ.க.வால் நடத்தப்பட்ட மாதிரித் தேர்தல்களில், "வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை எந்தக் கட்சி இந்தியாவிற்குத் திரும்ப எடுத்து வரும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாம். "தனது பிறப்பு தொடங்கியே பதுக்கல் வியாபாரிகள் மற்றும் லேவாதேவிக்காரர்களின் கட்சியாக அறியப்பட்டு வரும் பா.ஜ.க.விற்கு கருப்புப் பணத்தை வேட்டையாடும் தகுதியுண்டா?'' என்று இந்தக் கேள்வியைக் கொஞ்சம் இப்படி மாற்றிக் கேட்டிருந்தால், அத்தேர்தலில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு வாக்களிப்பது எளிதாக இருந்திருக்கும்.


ஃபோர்டு பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2002ஆம் ஆண்டு தொடங்கி 2006ஆம் ஆண்டுக்குள் 6,92,328 கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1,36,466 கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் இந்தியாவிலிருந்து வெளியேறியிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியிலிருந்த காலத்தில், அதாவது, 2002, 2003 மற்றும் 2004 ஆகிய மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தோராயமாக நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் வெளியேறியிருக்கிறது. அப்பொழுதே இக்கருப்புப் பணக் கடத்தலைத் தடுக்காமல் பா.ஜ.க. மௌனமாக இருந்தது ஏன்? அப்பொழுது இக்கருப்புப் பணக் கடத்தலைக் கண்டு கொள்ளாமல்விட்ட பா.ஜ.க. கும்பல், இப்பொழுது ஆட்சிக்கு வந்த நூறு நாட்களுக்குள் கருப்புப் பண முதலைகளைக் கையும்களவுமாகப் பிடித்து விடுவார்கள் என்பதை எப்படி நம்ப முடியும்?


பா.ஜ.க.விற்கு மிகவும் நெருக்கமான ராமஜென்ம பூமி டிரஸ்டின் தலைவர் களுள் ஒருவனும், தி.மு.க. தலைவர் கரு ணாநிதியின் தலையை வெட்டச் சொன்னவனுமான ராம்விலாஸ் வேதாந்தி, ஹவாலா கிரிமினல் பேர்வழி என்பதையும்; கமிஷன் வாங்கிக் கொண்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுப்பதற்காகவே அவன் "மாத்ரி சேவா டிரஸ்ட்'' என்ற பெயரில் ஒரு நிழல் உலக நிறுவனத்தை நடத்தி வருவதையும் ஐ.பி.என் தொலைக்காட்சி நிறுவனம் இரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து அம்பலப்படுத்தியது. இப்படிபட்ட கருப்புப் பண கிரிமினல் பேர்வழியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்த கட்சிதான் பா.ஜ.க.


பா.ஜ.க.வின் சகோதர அமைப்புகளான ராமஜென்ம பூமி நிவாஸ் மற்றும் விசுவ இந்து பரிசத் ஆகிய இரண்டு அமைப்புகளும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுப்பதற்காகவே போலியான பத்து டிரஸ்டுகளை நடத்தி வருவதாகவும்; அவ்வமைப்புகளுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல வழிகளில் பணம் வருவதாகவும்; அவ்வமைப்புகளிடம் மட்டும் கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணம் 10,000 முதல் 15,000 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும் வருமான வரித் துறையின் முன்னாள் ஆணையர் விசுவ பந்து குப்தா குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.


இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம், ஹவாலா கிரிமினல் பேர்வழிகளான ஜெயின் சகோதரர்களிடமிருந்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள்கூட பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்பலமாகி, அவரின் யோக்கியதை சந்தி சிரித்தது. உச்சநீதி மன்றம் அக்குற்றச்சாட்டில் இருந்து அத்வானியை விடுதலை செய்து விட்டதே என அவரது ஆதரவாளர்கள் சுட்டிக் காட்டலாம். அந்த வழக்கில் இருந்து அத்வானி மட்டுமா விடுதலை செய்யப்பட்டார்? ஜெயின் சகோதரர்களிடமிருந்து இலஞ்சம் வாங்கிக் கொண்டு அவர்களின் கிரிமினல் நடவடிக்கைகளுக்குத் துணையாக இருந்த அத்துணை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். ஜெயின் டைரி வழக்கு எனப் பெயர் பெற்ற அவ்வழக்கும் அரசியல் காரணங்களுக்காகக் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.


பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது, மொரிஷியஸ் தீவுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், அந்நிறுவனங்களின் இலாபத்தின் மீது இந்தியாவில் வரி விதிக்கப்படாது என்ற சலுகை அளிக்கப்பட்டது. இச்சலுகை அந்நிய நாடுகளில் குவிந்துள்ள கருப்புப் பணம் இந்தியப் பங்குச் சந்தையில் நுழையவும் வெளியேறவும் ஏராளமான வாய்ப்புகளைத் திறந்துவிடும் என விமர்சிக்கப்பட்டு, இச்சலுகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டது. அப்பொழுது நிதியமைச்சராக இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த யஷ்வந்த் சின்கா இச்சலுகையை ரத்து செய்ய மறுத்து, கருப்புப் பணம் வெள்ளையாக மாற உதவினார்.


அந்நிய நாடுகளில் வசிக்கும் இந்தியரோ, வெளிநாட்டவரோ தமது முக அடையாளத்தையோ அல்லது முகவரியையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு வசதியாக "பி.என்.'' என்றொரு வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது. அந்நிய நாடுகளில் குவிந்துள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் மட்டுமல்ல, தீவிரவாத அமைப்புகள்கூட இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்பதால் இந்த "பி.என்.'' வசதியை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் கூடப் பரிந்துரை செய்த பின்னும், காங்கிரசு கூட்டணி அரசு இதனை ரத்து செய்ய மறுக்கிறது.


இந்தியப் பங்குச் சந்தையில் தீவிரவாத அமைப்புகள் புகுந்துவிட்டதாகப் பீதி கிளப்பி வரும் பா.ஜ.க., இந்த பி.என். வசதியை கருப்புப் பண பேர்வழிகள் பயன்படுத்துவது பற்றி இப்பொழுதுகூட வாய் திறக்க மறுக்கிறது. இந்தியப் பங்குச் சந்தையில் கருப்புப் பணம் புகுந்து விளையாடுவதைத் தடுத்துவிட்டால், இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சி புஸ்வாணமாகிவிடும் என்பது பா.ஜ.க.விற்குத் தெரியாத தேவ இரகசியமல்ல.


ஆட்சியைப் பிடித்த நூறு நாட்களுக்குள் அந்நிய நாடுகளில் பதுங்கிக் கடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நோண்டியெடுக்கப் போவதாகச் சபதம் போட்டு வரும் பா.ஜ.க., அக்கருப்புப் பண பேர்வழிகளைச் சட்டப்படித் தண்டிப்போம் எனக் கூற மறுப்பதேன்? சுவிட்சர்லாந்திலும், வேறு சில நாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் பற்றி சண்டமாருதம் செய்யும் பா.ஜ.க., உள்நாட்டில் புகுந்து விளையாடும் கருப்புப் பணத்தைப் பற்றி வாய் திறக்காத மர்மம் என்னவென்றும் தெரியவில்லை. உள்நாட்டு கருப்புப் பண பேர்வழிகளைக் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிக்க, தேர்தலைவிட நல்ல தருணம் வேறு ஏதாவது உண்டா என்ன?
தேர்தல்கள் முடிந்த பிறகு தொங்குநிலை நாடாளுமன்றம்தான் உருவாகப் போகிறது. அந்த நேரத்தில் பா.ஜ.க. விற்கு எம்.பி.க்களை விலை பேசுவதற்கு கருப்புப் பண முதலைகளின் தயவு தேவை. செய்நன்றிக் கடனை மறந்துவிட்டு இக்கருப்புப் பண கிரிமினல் கும்பலை பா.ஜ.க. தண்டித்துவிடும் என்பதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாது.


அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை, கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவதன் மூலம் தூக்கி நிறுத்த ஏகாதிபத்திய நாடுகள் முயன்று வருகின்றன. அந்த அடிப்படையில்தான் "ஜி20'' நாடுகள் கருப்புப் பணத்திற்கு எதிராக வாயைத் திறந்துள்ளன. கருப்புப் பணத்திற்கு எதிராக பா.ஜ.க. கிளர்ந்து எழுந்துள்ளதன் பின்னேயுள்ள மர்மம் இதுதான்.


அந்நிய நாடுகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியாவுக்குச் சொந்தமான பணத்தை நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்வதோ, அக்கருப்புப் பண பேர்வழிகளைத் தண்டிப்பதோ பா.ஜ.க.வின் நோக்கமல்ல. மாறாக, கருப்புப் பண பேர்வழிகள் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்வதற்கு ஒரு பொது மன்னிப்புத் திட்டம் வழங்குவதுதான் அக்கட்சியின் நோக்கம். அத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு நாட்டிற்குள் பணப்புழக்கத்தை ஏற்படுத்த முயலுவதுதான் அக்கட்சியின் நோக்கம். கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதையும் தாண்டி, கருப்புப் பணம் இல்லையென்றால் முதலாளித்துவப் பொருளாதாரம் இயங்க முடியாது என்ற கேவலமான நிலைமை உருவாகிவிட்டதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.


பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்து, அதன் பிறகு சுவிஸ் வங்கிகளில் பதுங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை நோண்டுவது கிடக்கட்டும்; தனது கட்சியைச் சேர்ந்த அல்லது தனது கட்சியை ஆதரிக்கும் பண முதலைகளுள் யார் யார் சுவிஸ் வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர் என்ற பட்டியலை பா.ஜ.க.முதலில் வெளியிடட்டும். இப்பட்டியலை வெளியிட ஆட்சியைப் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை; நூறு நாள் அவகாசமும் தேவையில்லை என்பது பா.ஜ.க.விற்கே தெரியும்.


· ரஹீம்