Language Selection

"ஒரு ஆலமரம் விழும்போது பூமியில் அதன் அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்''. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதும் டெல்லியிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில், பலர் காங்கிரசு குண்டர்களால் கொல்லப்பட்டது குறித்துக் கேட்டபோது ராஜீவ் காந்தி திமிராகக் கூறிய பதில் தான் இது.

அந்தக் கலவரத்தின் போது காங்கிரசு குண்டர்கள், கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சீக்கியர்களைத் தேடித்தேடிக் கொன்றனர். இதுநாள் வரை கலவரத்துக்குக் காரணமான காங்கிரசு தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. 25 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களுக்கு பிறகும் சீக்கியர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அவரை வைத்துச் சீக்கியர் படுகொலைகளுக்காக மன்னிப்புக் கேட்கும் நாடகம் ஒன்றை நடத்திக் காட்டினார்களே தவிர, குற்றவாளிகளைத் தண்டிக்கவில்லை.

 


அந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டதுடன், சீக்கியர் படுகொலைகளைத் தலைமையேற்று நடத்தியதாக ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார், எச்.கே.எல் பகத் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இதில் பகத் எவ்விதத் தண்டனையுமின்றிச் செத்துப் போய்விட்டார். மீதமிருந்த சஜ்ஜன் குமார், டைட்லர் ஆகிய இருவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களை விடுவிப்பதாகச் சமீபத்தில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) அறிவித்தது. இதையடுத்து இவர்களிருவரும் காங்கிரசு சார்பாக, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக காங்கிரசு அறிவித்தது.


இவர்கள் மீதிருந்த குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. விலக்கிக் கொண்டது ஏனென சி.பி.ஐ.யைக் கட்டுப்படுத்தும் உள்துறை அமைச்சரான சிதம்பரத்திடம் சீக்கியப் பத்திரிக்கையாளரான ஜர்னைல் சிங் கேட்டார். அதற்கு ராஜீவின் அதே திமிர்த்தனத்துடன் பதிலளித்த சிதம்பரம், சி.பி.ஐ.யைத் தான் கட்டுப்படுத்தவில்லை எனக் கூறினார். இதனால் கொதிப்படைந்த அந்த சீக்கியர் தான் அணிந்திருந்த செருப்பிலொன்றை சிதம்பரத்தின் முகத்துக்கு நேராய் வீசியெறிந்தார்.


தைனிக் ஜாக்ரன் எனும் தினசரியில் பணியாற்றும் ஜர்னைல் சிங் என்ற பத்திரிக்கையாளர் தான் இவ்வாறு செய்தார். உடனே மற்ற பத்திரிக்கையாளர்களும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும், ஒரு பத்திரிக்கையாளர் இப்படிச் செய்யலாமா, அவர் பேனாவைத்தான் ஆயுதமாக ஏந்த வேண்டும், இப்படி செருப்பையல்ல என்று புலம்பத் தொடங்கிவிட்டனர். ஆனால் சம்பவத்திற்குப் பிறகு பேசிய அவர், தனது நடவடிக்கை தவறென்றாலும், தான் எழுப்பிய பிரச்சனையும் கேள்வியும் இன்னமும் விடையளிக்கப்படாமல் இருக்கிறது எனக் கூறினார்.


ஒரு நாட்டின் உள்துறை அமைச்சரின் மீதே செருப்பெடுத்து வீசிய ஜர்னைல் சிங்கின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கு நாம் முதலில் சீக்கியர் படுகொலை பற்றியும், அதற்குப் பிறகு 25 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் விசாரணை பற்றியும், அவை சீக்கிய சமுதாயத்தினரின் மனதில் ஏற்படுத்தியுள்<ள தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


···


அக்டோபர் 31, 1984; டெல்லியின் திரிலோக்புரி காலனி; அடித்தட்டு வர்க்க சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் அந்தக் காலனியின் 32வது பிளாக்கிற்குள் நுழைகிறது ஒரு கும்பல். கையில் காங்கிரசுக் கொடியுடன், கத்தி, கம்பு, மற்றும் மண்ணெண்ணெய்க் கேனுடன். "பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம்', "சீக்கியர்கள் துரோகிகள்; அவர்களைக் கொல்லுங்கள்' என முழங்கிக் கொண்டு கொலைவெறியுடன் நுழைகிறது அந்தக் கும்பல். காலனியின் நுழைவாயில் கான்கிரீட் குழாய்களைக் கொண்டு மூடப்பட்டது. அதன் பிறகு நிறுத்தி நிதானமாக உணவு இடைவேளைவிட்டு, அடுத்த 48 மணி நேரத்தில், எந்த நாகரீக மனிதனும் செய்யத் துணியாத காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை அந்தக் கும்பல் செய்தது. 350 சீக்கிய ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டனர். சீக்கிய ஆண்களின் தலைமுடியை பலாத்காரமாக வெட்டுவதில் தொடங்கி, அவர்களது கைகளையும் கால்களையும் ஒவ்வொன்றாக வெட்டினார்கள். சிலரை உயிருடன், கழுத்தில் டயரை மாட்டி, எரித்துக் கொன்றார்கள். சிறு குழந்தைகள் என்றும் பார்க்காமல் நெருப்பில் தூக்கியெறிந்தார்கள். நவம்பர் 2ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சென்ற போது, கால் பதித்து நடக்கமுடியாத அளவிற்கு அந்தப் பகுதியே இரத்தமும் சதையுமாக நிரம்பிக் கிடந்தது.


சீக்கிய பயங்கரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரில் பஞ்சாபில் பாசி இந்திரா கட்டவிழ்த்து விட்ட அர” பயங்கரவாத அடக்குமுறையாலும், சீக்கியர்கள் புனிதமாகக் கருதும் பொற்கோயில் மீது நடத்திய இராணுவத் தாக்குதலாலும் சீக்கிய மக்கள் குமுறிக் கொண்டிருந்த நிலையில், இந்திரா காந்தி, அவரது சீக்கியப் பாதுகாவலர்களாலேயே  சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று தொடங்கி, அவர் அடக்கம் செய்யப்படும் வரை மூன்று நாட்கள் டெல்லி முழுவதுமிருந்த சீக்கியர்கள் இது போலத் தாக்கப்பட்டார்கள், அவர்களது உடைமைகள் சூறையாடப்பட்டன, குருத்துவாராக்கள் கொளுத்தப்பட்டன. மூவாயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்களைப் பலி கொண்ட இந்தத் தாக்குதல்கள் அனைத்தும், அரசின் ஆதரவுடன் நடைபெற்றது. போலீசோ இதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்தது.


கலவரம் நடந்ததோ மூன்று நாட்கள் தான்; ஆனால், அது பற்றிய விசாரணையோ கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்கிறது. இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட காங்கிரசு தலைவர்களைக் காப்பாற்ற விசாரனைக் கமிசனுக்கு மேல் விசாரணைக் கமிசனாக அடுத்தடுத்து வந்த அரசுகள் அமைத்தன. மார்வா கமிசன் (நவ. 1984), மிஸ்ரா கமிசன் (மே 1985), தில்லான் கமிட்டி (நவ. 1985), கபூர் மிட்டல் கமிட்டி (பிப். 1987), ஜெயின் பானர்ஜி கமிட்டி (பிப். 1987), அகுஜா கமிட்டி (பிப். 1987), பொட்டி ருசா கமிட்டி (மார்ச் 1990), ஜெயின் அகர்வால் கமிட்டி (டிச. 1990), நருலா கமிட்டி (டிச. 1993), நானாவதி கமிட்டி (மே 2000) என இதுவரை பத்து விசாரணைக் கமிசன்கள் அமைத்தும் ஒரு குற்றவாளிகூட இதுவரை தண்டிக்கப்படவில்லை.


இந்தக் கலவரங்களுக்குத் தலைமையேற்ற சஜ்ஜன்குமார், ஜெகதீஸ் டைட்லர் போன்ற தலைவர்களுக்கெதிராக சாட்சி சொன்னவர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவதும், லஞ்சம் கொடுத்து Œõட்சிகளின் வாயை அடைப்பதும் நடந்தன. இதில் டைட்லருக்கெதிராக சாட்சியமளித்தவர்களில் முக்கியமானவர்கள் இருவர். சுரீந்தர் சிங் என்ற சீக்கிய மதத்தலைவர் ஒருவர், ஜஸ்பீர் என்பவர் மற்றொருவர். ஜஸ்பீர் ஆரம்பத்தில் டைட்லர் கலவரக் கும்பலை வழிநடத்தியதைப் பார்த்ததாகக் கூறினாலும், பின்னர் அப்படியில்லை என மறுத்துவிட்டார். தனது வாக்குமூலத்தை மறுத்ததற்கு மறுநாள் அமெரிக்காவிற்குச் சென்றவர் இன்றுவரை திரும்பவில்லை.


வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. சாட்சியைக் காணவில்லை, கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியது. ஆனால், ஜஸ்பீரோ கலிபோர்னியாவிலிருந்து, "இந்தியாவிற்குத் திரும்பினால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை' எனத் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். இதுவரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றே சி.பி.ஐ. கூறிவருகிறது.


இன்னொரு சாட்சியான சுரீந்தர் சிங் 2000ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நானாவதி கமிசன் வரைக்கும் டைட்லருக்கு எதிராக சாட்சியமளித்தவர். அவரே 2002ஆம் ஆண்டில் தனது சாட்சியத்தை மறுத்தார். அவரும் தற்போது டைட்லரின் மிரட்டலுக்கு பயந்துதான் சாட்சியத்தை மறுத்ததாகக் கூறிவருகிறார்.


சாட்சிகளைக் கலைப்பதற்குப் போதுமான அவகாசம் கொடுத்து விட்டு இப்போது டைட்லரும், சஜ்ஜன்குமாரும் நிரபராதிகள் என சி.பி.ஐ. கூறுகிறது. விசாரணை நடைபெற்ற காலத்தில் டைட்லரோ, சஜ்ஜன் குமாரோ காங்கிரசு கட்சியில் ஓரங்கட்டப்பட வில்லை. அவர்கள் எல்லா பதவிகளையும் அதிகாரங்களையும் அனுபவித்துத்தான் வந்துள்ளனர். இந்திரா குடும்பத்து விசுவாசிகளான அவர்களை இன்றளவும் பாதுகாக்கும் நோக்கத்தில்தான், பிரச்சனை ஏற்படும் எனத் தெரிந்தும், இந்தத் தேர்தலில் அவர்களுக்கு சீட்டுக் கொடுக்கப்பட்டது. சீக்கியர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்தவர்களை ஆதரிக்கும் காங்கிரசு கட்சிக்குத்தான் "இடது', வலது போலி கம்யூனிஸ்டு கட்சியினர், மதசார்பற்ற கட்சி என முற்போக்கு வேசம் கட்டி வருகின்றனர்.


விசாரணைக் கமிசன்கள், சி.பி.ஐ.யின் கழுத்தறுப்பு வேலைகளைக் கண்டுமனமுடைந்துதான் ஜர்னைல் சிங் சிதம்பரத்தின் மீது செருப்பெடுத்து வீசினார். ஆனால், கட்சிக்குத் தனது விசுவாசத்தைக் காட்டுவதற்காகவும், பதவிகளையும் அதிகாரத்தையும் பெற்றுப் பொறுக்கித் தின்பதற்காகவும், ஆயிரக்கணக்காண அப்பாவிச் சீக்கியர்களைக் கொன்று, தனது பணபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி இதுவரை தண்டனையிலிருந்து தப்பி வரும் டைட்லரைப் போன்ற கொலைகாரர்களைச் செருப்பால் அடித்தால் மட்டும் போதாது, அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்தித் தூக்கிலிட வேண்டும், அதுதான் அவர்களுக்குச் சரியான தண்டனையாக இருக்க முடியும்.


· திப்பு