Language Selection

புதிய ஜனநாயகம் 2009

ஆப்கானில் அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போர் பலமுனைகளிலும் தோல்வியைத் தழுவி வருகிறது. அப்போர் தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலான பிறகும், அல் காய்தா தலைவர் ஓசாமா பின்லேடனை அமெரிக்காவால் பிடிக்க முடியவில்லை. அல் காய்தா, தாலிபான் ஆகிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவால் முற்றிலுமாக அழித்தொழிக்க முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆப்கானின் அண்டை நாடான பாகிஸ்தானையும் ஆட்டங்காணச் செய்துவிடும் அளவிற்கு அவ்வமைப்புகளின் செயல்பாடுகள் வளர்ந்து வருகின்றன.

 


அமெரிக்கா, ஆப்கானில் கர்சாய் என்பவர் தலைமையில் நிறுவியுள்ள பொம்மை அரசாங்கத்தின் அதிகாரம், அந்நாட்டின் தலைநகர் காபூலைத் தாண்டினால் செல்லாக்காசுதான் எனுமளவிற்கு முடங்கிப் போய்க் கடக்கிறது. இன்னொரு புறமோ, தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற கதையாக, ஆப்கானிலும், ஆப்கான் எல்லையையொட்டியுள்ள பாகிஸ்தான் பகுதியிலும் தாலிபான் என்ற பெயரை வைத்துக்கொண்டு இயங்கி வரும் பல்வேறு இசுலாமிய தீவிரவாதக் குழுக்கள் ஆங்காங்கே குட்டி சமஸ்தானங்களை நடத்தி வருகின்றன. இந்த யுத்தப் பிரபுக்களை அழிப்பதற்காக அமெரிக்கா ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தும் வான்வழித் தாக்குதல்களிலும், தரைவழித் தாக்குதல்களிலும் அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து வருகின்றனர்.

 


தனது தேர்தல் பிரச்சாரத்தின்பொழுதே ஆப்கானில் அமெரிக்கத் துருப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனப் பேசி வந்த ஒபாமா, அதிபரானவுடனேயே துருப்புகளை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுக்கத் தொடங்கிவிட்டார். எனினும், துருப்புகளை அதிகப்படுத்துவதால் ஆப்கானில் வெற்றியை அடைந்துவிடலாம் என்ற புது அதிபரின் புதுத் திட்டத்தை ஒபாமாவின் கூட்டாளிகளே ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். அமெரிக்காவின் ஐரோப்பியக் கூட்டாளிகள் (நேடோ) தங்களின் துருப்புகளை அதிகரிக்க மறுத்து வருகின்றனர்.


இன்னொருபுறமோ, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டரும், வெளியுறவுக் கொள்கைக் கமிட்டியின் தலைவருமான ஜான் கெர்ரி, "ஆப்கானில் அமெரிக்கா தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக'' எச்சரிக்கிறார். அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மைக் முல்லன், "ஆப்கானில் சமூக நலத் திட்டங்களை எந்தளவிற்கு நாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறமோ அந்தளவிற்குத்தான் இராணுவ வெற்றி கிட்டும்'' என்கிறார். இராணுவத் தளபதியின் இந்த யோசனையைக் கேட்டு கமுக்கமாகச் சிரிக்கிறது, ரசியா. "ஆப்கானை தான் ஆக்கிரமித்திருந்தபொழுது செயல்படுத்தாத சமூக நலத் திட்டங்களா?'' என நக்கலாகக் கேட்கிறது ரசிய ஏகாதிபத்தியம்.


தோல்வியை ஒப்புக்கொண்டு ஆப்கானில் இருந்து வெளியேறுவது ஒன்றுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னுள்ள கௌரவமான வாய்ப்பு என்பது ஒவ்வொருநாளும் துலக்கமாகி வருகிறது. அப்படி வெளியேறினால், அமெரிக்க இராணுவ பராக்கிரமம் பற்றி புனையப்பட்டுள்ள பல கதைகளும் உடைபட்டுப் போகும். உலகப் பொருளாதார வீழ்ச்சியினால், அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்கானில் இருந்து வெளியேறுவது அமெரிக்காவிற்கு இன்னொரு இடியாக இருக்கும். எனவே, அமெரிக்கா ஆப்கானில் தனது "வெற்றி''யைச் சாதிப்பதற்குச் சண்டைக்காரன் காலில் விழும் உத்தியை நடைமுறைப்படுத்த தயாராகி வருகிறது.


அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுபவை எனக் கருதப்படும் பல்வேறு இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் ஆப்கானிலும் பாகிஸ்தானிலும் இயங்கி வருகின்றன. இக்குழுக்களைச் சல்லடை போட்டுச் சலித்து, அமெரிக்காவின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை, பேரம் நடத்தினால் அமெரிக்காவோடு இணங்கிப் போகக் கூடிய குழுக்கள் என இரண்டாகப் பிரித்து, அமெரிக்காவோடு இணங்கிப் போகும் குழுக்களோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, அக்குழுக்களுக்குப் பொருளுதவியும் ஆயுத உதவியும் அளித்து, அல் காய்தாவோடு மோத விடுவது; இதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேடோ துருப்புகளுக்கு ஏற்பட்டு வரும் இழப்பை ஓரளவு குறைப்பது; இக்குழுக்களின் மூலம் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வது எனத் திட்டம் போட்டு, அதனை நிறைவேற்றுவதற்கான இரகசியப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தத் தொடங்கிவிட்டது, அமெரிக்கா.


அமெரிக்கா இப்படிபட்ட பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டத்தைத்தான் ஆப்கானில் நடைமுறைப்படுத்த வேண்டும் என புஷ் ஆட்சியின்பொழுதே அமெரிக்க அரசிற்கு ஆலோசனையாக வழங்கிய ரிச்சர்ட் ஹால்ப்ரூக் என்பவர்தான், இப்பொழுது ஆப்கான் மற்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க அரசின் சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், யூகோஸ்லாவியா நாட்டைப் பல கூறுகளாக உடைத்ததில் ஹால்ப்ரூக்கின் பங்கு முக்கியமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே இச்சூழ்ச்சித் திட்டத்தை வெறும் பேச்சுக்காக அமெரிக்கா சொல்லிக் கொண்டிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.


···


ஒப்பீட்டளவில் சிறிய (இசுலாமிய) மதவெறி அமைப்புகளைத் தத்தெடுத்துக் கொள்ளும் அமெரிக்காவின் இத்திட்டத்தை ஆப்கானுக்கு முன்பாகவே பாகிஸ்தானில் பரிசோதனை செய்து பார்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் மௌலானா ஃபஸ்லுல்லா என்பவர் தலைமையில் செயல்பட்டு வரும் ஸ்வாட் தாலிபான் என்ற இசுலாமிய தீவிரவாத அமைப்பிற்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல்கள் நடந்து வந்தன. இன்னும் தெளிவாகச் சொன்னால், பாகிஸ்தான் அரசு ஸ்வாட் தாலிபான் அமைப்பை ஒழித்துக் கட்டுவது என்ற பெயரில் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மீது ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வந்தது.


ஆப்கானில் அமெரிக்காவை எதிர்த்துப் போராடி வரும் குழுக்களுக்குத் தேவையான ஆயுதங்களைக் கடத்துவது, உள்ளூர் ஆட்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து ஆப்கானுக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் ஸ்வாட் தாலிபான் செய்து வருவதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்கா, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைந்துள்ள வஜிரிஸ்தான் பகுதிகளின் மீது ஆளில்லா விமானங்களின் மூலம் தாக்குதல்களையும் நடத்தி வந்தது.


எனினும், இப்போரில் அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை. இப்போரில் மட்டும் பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த 1,800 சிப்பாய்கள் கொல்லப்பட்டதாகவும்; ஸ்வாட் தாலிபானை எதிர்த்துப் போராடுவதற்காக வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இறக்கி விடப்பட்ட நூற்றுக்கணக்கான இராணுவச் சிப்பாய்களும் காமாண்டோ போலீசு படையினரும் சொல்லிக் கொள்ளாமலேயே தங்கள் பதவியை விட்டு விலகி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மறுபுறம், ஸ்வாட் தாலிபான் அமைப்பு கடந்த ஆண்டு இறுதியிலேயே வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மாலாகந்த் பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, போட்டி அரசாங்கத்தை நடத்தத் தொடங்கியது.


இப்பகுதியில் இயங்கி வந்த வானொலி நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. ஸ்வாட் தாலிபான் அமைப்பு விடுக்கும் மதக் கட்டளைகளுக்கு எதிராக நடந்து கொண்டால், அவ்வமைப்பு ஷாரியத் சட்டப்படி வழங்கும் சாட்டையடி, தலையைத் துண்டித்து முண்டத்தை விளக்குக் கம்பங்களில் தொங்க விடுவது போன்ற கொடூரகாட்டுமிராண்டித்தனமான தண்டனைகளுக்கு அஞ்சியே திரையரங்குகள், வீடியோ பார்லர்கள், இசைக் குறுந்தகடுகளை விற்பனை செய்யும் கடைகள் தாமாகவே வியாபாரத்தை நிறுத்திக் கொண்டன; அல்லது இழுத்து மூடப்பட்டன. ஜனநாயகம் என உச்சரிப்பது கூட "ஹராம்'' என முத்திரை குத்தப்பட்டுத் தடை செய்யப்பட்டது. ஆண்கள் சவரம் செய்து கொள்வதுகூட மதத்திற்கு எதிரான குற்றமெனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதால், முடிதிருத்தும் நிலையங்கள்கூட செயல்பட முடியாத "பயங்கர'' நிலைமை தோற்றுவிக்கப்பட்டது. பெண் கல்வி தடை செய்யப்பட்டு, 200க்கும் மேற்பட்ட மகளிர் கல்வி நிலையங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.


வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைந்துள்ள ஸ்வாட் சமவெளி பாகிஸ்தானின் சுவிட்சர்லாந்து எனக் கூறப்படுகிறது. இச்சமவெளியை மையமாகக் கொண்டு நடந்து வந்த சுற்றுலா தொழில் நிலைகுலைந்து போய்விட்டதால், அம்மாகாணத்தின் பொருளாதாரமே ஆடிப் போய்க்கிடக்கிறது. இப்பொருளாதார வீழ்ச்சி, அமெரிக்கா மற்றும் பாக். இராணுவத் தாக்குதல்கள், ஸ்வாட் தாலிபானின் "எழுச்சி' ஆகிய காரணங்களால் இம்மாகாணத்தில் இருந்து ஏறத்தாழ 5 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துவிட்டனர்.


···


பஷ்டுன்கள் என்றழைக்கப்படும் பழங்குடியினத்தவர் பெரும்பான்மையாக வசித்து வரும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் 1969க்கு முன்புவரை தன்னாட்சி பெற்ற தனி சமஸ்தானமாகத்தான் இயங்கி வந்தது. பழங்குடியினச் சட்டங்கள், மரபுகள், நிர்வாக அமைப்புகளின் இடத்தை முதலாளித்துவ வடிவிலான நிர்வாக இயந்திரம் கைப்பற்றிக் கொண்ட பிறகு, அதற்கே உரித்தான ஊழல்அதிகார வர்க்க முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்து அலங்கோலங்களையும் அப்பழங்குடி மக்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.


1969க்கு முன்பு இம்மாகாணம் ஷாரியத் சட்டப்படியே இயங்கி வந்தாலும்கூட, தண்டனைகள் கொடூரமானதாகவோ காட்டுமிராண்டித்தனமானதாகவோ இருந்ததில்லை. வழக்குகள் நியாயமான முறையில் எளிமையாகவும் நியாயமாகவும் தீர்க்கப்பட்டன. இதனால், இம்மாகாணம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கழிந்த பிறகும்கூட, இம்மக்களால் பாகிஸ்தானின் மைய நீரோட்டத்தோடு கலக்க முடியாமல், அந்நியப்பட்டே நிற்கின்றனர். 1969க்கு முன்பிருந்த நிலைமைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம்கூட அம்மக்களிடம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இராணுவ சர்வாதிகார அரசின் மீதும், அந்நாட்டு மேட்டுக்குடி கும்பல் மீதும் இம்மக்களுக்கு இருந்து வரும் வெறுப்பை ஸ்வாட் தாலிபான் அறுவடை செய்து கொண்டது.


1969க்கு முன்பு இம்மாகாணத்தைச் சேர்ந்த ஒவ்வொரு கிராமமும், ஒவ்வொரு இனக்குழு சபையும், ஒவ்வொரு வீட்டைச் சேர்ந்த (ஒரு) ஆணும் சமூக நிர்வாகத்தில் பங்கு பெறும் அதிகாரம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், இப்பொழுதோ ஸ்வாட் தாலிபானின் மதவெறி சர்வாதிகாரம் அம்மக்களிம் மீது திணிக்கப்பட்டுள்ளது. சாந்த் பீபீ என்ற இளம் பெண்ணுக்கு ஸ்வாட் தாலிபான் அளித்த கசையடி தண்டனை, இவ்வமைப்பின் ஆணாதிக்கம் நிறைந்த மதவெறி பிற்போக்குத்தனத்தை ஊர் உலகமெங்கும் அம்பலப்படுத்திவிட்டது. பாகிஸ்தானிலேயே இவ்வமைப்பின் மக்கள் விரோதத் தன்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்வாட் தாலிபானோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் அரசு, பிப்ரவரி 16, 2009 அன்று அவ்வமைப்போடு ஓர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதனைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளது. இவ்வொப்பந்தத்தின்படி, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மாலாகந்த் பகுதியைச் சேர்ந்த ஏழு மாவட்டங்களில் (ஸ்வாட் சமவெளியையும் உள்ளடக்கி) ஷாரியத் நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள ஸ்வாட் தாலிபானுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடேன் மற்றும் அமெரிக்க இராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்துப் பேசியிருக்கின்றனர். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் அமைதியைக் கொண்டு வரும் நோக்கத்தில்தான் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும்; இந்த அமைதியை ஆப்கானில் இயங்கும் அல் காய்தா தீவிரவாதிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தப் @பாவதாகவும் கூறி, இந்தப் பிற்போக்கு ஒப்பந்தத்தை அமெரிக்காவும் பாகிஸ்தானும் நியாயப்படுத்தி வருகின்றன.


இசுலாமாபாத் (மார்ரியட் ஐந்து நட்சத்திர விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல்), லாகூர் (சிறீலங்கா கிரிக்கெட் அணியினர் மற்றும் போலீசு பயிற்சி நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்) என அடுத்தடுத்து பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தீவிரவாதத் தாக்குதல்கள் பாக். அரசின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன. இத்தாக்குதல்கள் லஷ்கர் இதொய்பா, ஜெய்ஷ்இமுகம்மது உள்ளிட்ட பல்வேறு இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களின் மீதான பாக்.இராணுவத்தின் கட்டுப்பாடு தளர்ந்து வருவதையும், வளர்த்த கடா மார்பில் பாயத் தயாராகி விட்டதையும் காட்டுவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகைகளே குற்றஞ்சுமத்துகின்றன.


பாகிஸ்தானை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முசுலீம் கட்சிக்கும் இடையே நடந்து வரும் அதிகாரப் போட்டிக்கான மோதல்கள்; பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மற்றும் இராணுவத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே நடந்து வரும் உரசல்கள்; பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் நாடாளுமன்றத்திற்குக் கட்டுப்பட்டு நடக்குமா என்பது குறித்து எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்கள்; பல்வேறு இசுலாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு இடையேயும், சன்னி மற்றும் மொஜாஹிர் மதக் குழுக்களுக்கு இடையேயும் நடந்து வரும் தெருச் சண்டைகள்; பாகிஸ்தான் அரசுஇராணுவம் மட்டுமின்றி, சமூகமும் இசுலாமியமயமாக்கப்பட்டிருப்பது; போண்டியாகிவிட்ட பொருளாதாரம் — இவையனைத்தும் அந்நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விட்டன.


ஒருபுறம், அமெரிக்க மேலாதிக்கம், இசுலாமிய மதத் தீவிரவாதம், இராணுவ சர்வாதிகாரம் ஆகியவற்றை எதிர்த்தும், ஜனநாயக உரிமைகளைக் கோரியும் அந்நாட்டின் வழக்குரைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நடத்தி வரும் போராட்டங்கள், போலீசு இராணுவத்தோடு மோதும் அளவிற்கு போர்க்குணத்தோடு நடந்து வந்தாலும், அப்போராட்டங்கள் முதலாளித்துவ ஜனநாயக வரம்பிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. இன்னொருபுறமோ, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் எழுந்து வரும் அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பை இசுலாமியத் தீவிரவாதக் குழுக்கள் கடத்திச் செல்ல முயலுகின்றன. இப்படிபட்ட சூழ்நிலையில் ஸ்வாட் தாலிபானோடு பாக். அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் எரிகிற கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல்தான் அமையும்.


···


பாகிஸ்தானில் எழுந்துள்ள இந்த அரசியல் குழப்பங்களையும், நிச்சயமற்ற தன்மையையும் காட்டி, அமெரிக்கா பாகிஸ்தானைக் கைகழுவி விட வேண்டும்; அமெரிக்கா நடத்தி வரும் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்குப் பதிலாகத் தன்னை இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என இந்தியா தூபம் போட்டு வருகிறது.


பாகிஸ்தானைக் கழட்டிவிட்டால், தெற்காசியாவிலும் மேற்காசியாவிலும் இதைவிடப் பெரிய தலைவலியைத் தான் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறியாத முட்டாள் அல்ல அமெரிக்கா. மேலும், பாகிஸ்தான் வசமுள்ள அணு ஆயுதங்கள் அல் காய்தா போன்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் கைகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றால், பாகிஸ்தான் இராணுவமும், ஓட்டுக்கட்சிகளும் "டபுள் கேம்'' ஆடுவதை ஓரளவிற்குச் சகித்துக் கொண்டு போக வேண்டிய நிர்பந்தமும் அமெரிக்காவிற்கு இருக்கிறது. அதனால்தான் இந்தியாவின் அறிவுரைகளுக்கு மாறாக, அமெரிக்கா இசுலாமியத் தீவிரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்காக பாகிஸ்தானுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 750 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு உதவிகள் அளிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. மேலும், ஆப்கான் பிரச்சினைக்கும் காஷ்மீர் பிரச்சினைக்கும் இடையே தொடர்பிருப்பதாகக் கருதும் ஒபாமா நிர்வாகம், காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா முன் வர வேண்டும் என்ற நிர்பந்தத்தையும் கொடுத்து வருகிறது.


ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் ரசியாவை அந்நாட்டில் இருந்து விரட்டியடிப்பதற்காக, முஜாஹிதீன் என்றழைக்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாத அமைப்புகளைக் கட்டியமைத்து வளர்த்துவிட்டதே அமெரிக்காதான். தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியபொழுது, உடனடியாக எவ்வித் தயக்கமுமின்றி தாலிபான்களின் மதவெறி ஆட்சிக்கு அங்கிகாரம் அளித்த பெருமையும் அமெரிக்காவிற்கு உண்டு. அமெரிக்காவின் இந்த அங்கீகாரத்தின் பின்னே, யுனோகோல் என்ற அமெரிக்க நிறுவனத்தின் எண்ணெய் வர்த்தக நலன்கள் ஒளிந்திருந்தன. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த பிறகுதான், அமெரிக்கா தெற்காசியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக முண்டா தட்டியது.


இப்பொழுது அல் காய்தா, தாலிபான் தீவிரவாதிகளை அழிப்பது என்ற பெயரில் "நல்ல'' இசுலாமியத் தீவிரவாத அமைப்புகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொம்பு சீவிவிடத் துடிக்கிறது, அமெரிக்கா. இது ஒருபுறம், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் சகோதரச் சண்டையையும் உள்நாட்டுக் குழப்பத்தையும் தூண்டி விடும்; இன்னொருபுறம், இசுலாமியத் தீவிரவாதம் தெற்காசியப் பகுதியில் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கான வாய்ப்புகளைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கும்.


இந்துஇந்திய தேசியத்தில் மூழ்கிப் போயுள்ள இந்திய நடுத்தர வர்க்கம் கனவு கண்டு கொண்டிருப்பதைப் போல தடா, பொடா போன்ற பாசிசச் சட்டங்களின் மூலமோ, அரசு பயங்கரவாதத்தை ஏவிவிடுவதன் மூலமோ, பாகிஸ்தான் மீது ஒரு திடீர் போரை நடத்துவதன் மூலமோ இசுலாமியத் தீவிரவாதத்தைத் தோற்கடித்து விட முடியாது.

மாறாக, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பது; அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களுக்கு அடியாளாகச் செயல்பட்டு வரும் இந்தியபாகிஸ்தானைச் சேர்ந்த ஆளும் கும்பலை எதிர்ப்பது; இசுலாமியத் தீவிரவாத அமைப்புகளை மட்டுமின்றி, அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கங்களுக்கு எடுபிடியாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பயங்கரவாத கும்பலையும் எதிர்த்துப் போராடுவது; தெற்காசியாவில் இந்தியாவின் துணை மேலாதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி எதிர்ப்பது; தெற்காசியாவைச் சேர்ந்த நாடுகளின் சுதந்திரத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பது; இப்பகுதியைச் சேர்ந்த அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையையும், உழைக்கும் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளையும் உத்தரவாதப்படுத்துவது ஆகிய கோரிக்கைகளின் அடிப்படையில் புரட்சிகரஜனநாயக சக்திகளின் தலைமையில் தெற்காசிய மக்கள் ஒருங்கிணைந்த போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே தெற்காசியப் பகுதி எதிர்கொண்டுள்ள அபாயங்களை முறியடிக்க முடியும்.


·செல்வம்