Language Selection

புதிய ஜனநாயகம் 2009

உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடு; அக்காட்டின் நடுவே திடீரென ''டும், டும்'' என முரசொலிக்க, எங்கும் எதிரொலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் வில்அம்பு, கோடரி, அரிவாள், தடிகளுடன் பழங்குடியின மக்கள் பெருங்கூச்சலிட்டுக் கொண்டு அணிதிரள்கிறார்கள். ''கொலைகாரர்கள் வந்துவிட்டார்களா?

 சி.பி.எம். குண்டர்கள் எங்கே?'' என்று பதற்றத்தோடு நாற்புறமும் அவர்கள் தேடுகிறார்கள். முரசொலி கேட்டதும் திரண்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சி, அவர்கள் பின்வாங்கி ஓடி விட்டார்கள் என்று தெரிந்த பிறகு, அம்மக்கள் திரும்பிச் செல்கிறார்கள்.

 


"கடந்த நவம்பரிலிருந்து இப்படியொரு முன்னெச்சரிக்கை ஏற்பாட்டை நாங்கள் செய்துள்ளோம். உயரமான மரங்களில் ஏறி, எங்களில் ஒருவர் கண்காணிப்பார். சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அரசு அதிகாரிகளோ இப்பகுதிக்குள் நுழைந்தால், உடனே அவர் முரசொலிப்பார். உடனே நாங்கள் அணிதிரண்டு அவர்களை முற்றுகையிடுவோம்'' என்கிறார் சுபாஷ் மஹடோ என்ற பழங்குடியின விவசாயி.


போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்தின் லால்கார் வட்டாரத்தில் உள்ள சந்தால் பழங்குடியின மக்கள் கடந்த ஆறு மாதங்களாக போலீசு அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சந்தால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமாக உள்ள இப்பகுதியிலுள்ள காடுகளை அழித்து 5000 ஏக்கர் பரப்பளவில் ஜிண்டால் எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம் எஃகு ஆலை நிறுவத் தீர்மானித்துள்ளது. ''மாநிலத்தின் தொழில் வளர்ச்சி'' என்ற பெயரில் இப்பகுதியில் ஜிண்டால் நிறுவனத்தின் சூறையாடலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ போலி கம்யூனிச ஆட்சி ஏற்பாடுகளைச் செய்து வந்தது.


இதற்கெதிராக சந்தால் பழங்குடியின மக்களைப் போராட்டத்துக்கு அணி திரட்டி வந்த மாவோயிஸ்டுகள், கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்தி விட்டுத் திரும்பிய மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மைய அரசின் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் வாகனங்கள் மீது கண்ணி வெடித் தாக்குதல் நடத்தி எச்சரித்தனர். இத்தாக்குதலில் வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டதைத் தவிர வேறு எவருக்கும் பாதிப்பில்லை. இருப்பினும், நக்சல்பாரி பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை என்ற பெயரில் மே.வங்க போலீசு, பயங்கரவாத அடக்குமுறையை சந்தால் பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விட்டது. விடிய விடிய 3 நாட்களுக்கு மே.வங்க போலீசு நடத்திய இப்பயங்கரவாத வெறியாட்டத்தால் மித்னாபூர் மாவட்டமே பீதியில் உறைந்து போனது.


அடக்குமுறையால் துவண்டு போன மக்களை நம்பிக்கையூட்டி அணிதிரட்டிய மாவோயிஸ்டுகள், 600க்கும் மேற்பட்ட கிராமத் தலைவர்களைக் கூட்டி ''போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர். அக்கமிட்டியின் வழிகாட்டுதலின்படி, நவம்பர் 67 தேதிகளில் சந்தால் பழங்குடியின மக்கள் வில்அம்பு, கோடரி, அரிவாளுடன் 5000 பேருக்கு மேல் திரண்டு லால்கார் போலீசு நிலையத்தைச் சூறையாடி, அவர்களை அடித்து விரட்டினர். அடுத்த இரு நாட்களில் சந்தால் பழங்குடியினர் நிறைந்த மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் எழுச்சிமிகு பேரணிகள் நடந்து, போலீசும் அரசு அதிகாரிகளும் மக்களால் துரத்தியடிக்கப்பட்டனர். இம்மூன்று மாவட்டங்களிலும் அரசு நிர்வாகம் முற்றாகச் செயலிழந்து, பழங்குடியின மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் விடுதலைப் பிரதேசங்களாக மாறின. (பார்க்க: புதிய ஜனநாயகம், டிசம்பர் 2008).


கடந்த 6 மாதங்களாக இப்பகுதிக்குள் போலீசு நுழைய முடியவில்லை. அரசு அலுவலகங்களும் செயல்படவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முற்றாக ரத்து செய்ய வேண்டும்; பழங்குடியின மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கிய போலீசு அதிகாரிகள் மக்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; போலீசின் தாக்குதலில் படுகாயமடைந்தோருக்கு உரிய நிவாரணத் தொகை அளிப்பதோடு, பழங்குடியினர் மீதான பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்; புறக்கணிக்கப்பட்ட இம்மாவட்டங்களில் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் சந்தால் பழங்குடியின மக்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்.


இப்போராட்டத்தை திசைதிருப்பி ஒடுக்கும் நோக்கத்தோடு, நந்திகிராமத்தில் நடத்திய தாக்குதலைப் போல திடீர் தாக்குதலை சி.பி.எம். குண்டர்கள் கடந்த பிப்ரவரி 2ம் தேதி நடத்தினர். 50க்கும் மேற்பட்ட சி.பி.எம். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இரு போராட்ட செயல்வீரர்கள் அடுத்த இரு நாட்களில் மாண்டு போயினர். அதைத் தொடர்ந்து சி.பி.எம் கட்சியின் உள்ளூர் தலைவர்கள் அனைவரும் இப்பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்டுள்ளனர். மீண்டும் சி.பி.எம். குண்டர்கள் திரளாக வந்து தாக்கியபோது, பழங்குடியினர் எதிர்த்தாக்குதல் நடத்தி விரட்டினர். இம்மோதலில் படுகாயமடைந்த சி.பி.எம். கட்சியின் உள்ளூர் தலைவரான நந்தலால் பால் என்பவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மாண்டு போனார். இப்படி அடுத்தடுத்து சி.பி.எம். குண்டர்கள் தாக்குதல் நடத்துவதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பதற்காகவே பழங்குடியின மக்கள் முரசறிவிக்கும் ஏற்பாட்டைச் செய்துள்ளனர்.


இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, இத்தொகுதியில் போட்டியிடும் ஓட்டுக் கட்சிகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்து முடித்து விட்டன. இருப்பினும் எந்த ஓட்டுக் கட்சியும் இப்பகுதியில் பிரச்சாரம் செய்து ஓட்டுப் பொறுக்க வரவில்லை. அரசு எந்திரம் முற்றாகச் செயலிழந்து விட்ட இப்பகுதியில் தேர்தலை எப்படி நடத்துவது, ஜனநாயகத்தை எப்படி நிலைநாட்டுவது என்று புரியாமல் அதிகார வர்க்கம் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.


ஏனெனில், பழங்குடியின மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய போலீசு அதிகாரிகள் பகிரங்கமாக மக்கள் முன் தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்காதவரை, இப்பகுதிக்குள் போலீசார் நுழைய பழங்குடியின மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; போலீசாரின் துணையில்லாமல் தேர்தலை நடத்த அதிகாரிகளாலும் இயலாது; இப்பகுதியில் தேர்தலை நடத்தாவிட்டால், நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு அவமானம் ஏற்படும்; பின்னர், லால்கார் வழியில் நாட்டின் பலதரப்பட்ட மக்களும் போராடத் தொடங்கிவிட்டால், நாட்டின் ஒட்டுமொத்த அரசியலமைப்பு முறைக்கே ஆபத்தாகி விடும் என்று அதிகார வர்க்கம் அஞ்சியது. மறுபுறம், பழங்குடியின மக்களின் போராட்டத்தை ஒடுக்கி, போலீசைக் குவித்து தேர்தலை நடத்தினால் அது மனித உரிமை ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகி, நாடெங்கும் போலி கம்யூனிச ஆட்சி கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்.


இதனால், தமக்கு அவப்பெயர் ஏற்படாதிருக்கும் சூழ்ச்சியோடு ''லால்கார் பகுதியில் தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிசன் முடிவு செய்யும்; அம்முடிவின்படி மாநில அரசு செயல்படும்'' என்று போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் அறிவித்தனர். தேர்தலை நடத்த போலீசைக் குவித்து அடக்குமுறையை ஏவினால், இதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், தேர்தல் கமிசன்தான் இதற்கு உத்தரவிட்டது என்றும் கூறி தப்பித்துக் கொள்ளும் ஏற்பாடுதான் இது. ஆனால், தேர்தல் கமிசனோ, சட்டம்ஒழுங்கைக் கையாள வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும், தேர்தலை நடத்துவது மட்டும்தான் தமது வேலை என்றும் கூறிவிட்டது.


இருப்பினும், லால்கார் கொந்தளிப்பான பகுதியாக இருப்பதால், சுமுகமாகத் தேர்தலை நடத்த தேர்தல் கமிசன்தான் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உபதேசித்த போலி கம்யூனிச ஆட்சியாளர்கள் மறுபுறம், நந்திகிராம வழியில் சி.பி.எம். குண்டர் படையைக் கொண்டு லால்கார் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தவும், அதைத் தொடர்ந்து போலீசார் உள்ளே நுழைந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடவும் சதிச் செயல்களில் இறங்கினர். இதன்படியே ஏப்ரல் 2ஆம் தேதியன்று 50க்கும் மேற்பட்ட சி.பி.எம் குண்டர்கள் பழங்குடியின மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்த இரு நாட்களில் வெவ்வேறு இடங்களில் சி.பி.எம் குண்டர்கள் தாக்குதல் நடத்தக் கிளம்பி, பழங்குடியின மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.


சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.


''தேர்தலைக் காரணம் காட்டி மாநில போலீசு எமது பகுதிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்; நாங்கள் தேர்தலையோ ஓட்டுப் பதிவையோ எதிர்க்கவில்லை; தேர்தல் அதிகாரிகளுக்கு நாங்களே முழு பாதுகாப்பு அளிக்கிறோம்; மனித உரிமை இயக்கத்தினரும் அறிவுத்துறையினரும் பார்வையாளர்களாக இருந்து இத்தேர்தலை நடத்த நாங்கள் அழைக்கிறோம்'' என்று லால்கார் பழங்குடியினப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து மாநிலத் தேர்தல் தலைமை அதிகாரி போராட்டக் கமிட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.


இதற்கிடையே, ஏப்ரல் 6ஆம் தேதியன்று நந்திகிராம பாணியில் 200 சி.பி.எம். குண்டர்கள் துப்பாக்கியுடன் நள்ளிரவில் வந்து, லால்கார் மக்கள் மீது திடீர்த் தாக்குதலை நடத்தினர். சி.பி.எம். குண்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் படுகாயமடைந்தனர். முன்னெச்சரிக்கையுடன் இருந்த பழங்குடியின மக்கள், எதிர்த்தாக்குதல் நடத்தி இக்குண்டர்களை விரட்டியடித்தனர். பின்னர், ஏப்ரல் 12ஆம் தேதியன்று மீண்டும் 30 குண்டர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியபோது, பழங்குடியின மக்கள் அவர்களை விரட்டியடித்தனர். அதேநாளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வந்த சல்போனி வட்டார வளர்ச்சி அதிகாரி, பழங்குடியின மக்களால் ''கெரோ'' செய்யப்பட்டு துரத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து கிராமங்கள் தோறும் சோதனைச் சாவடிகள் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டு, சி.பி.எம். குண்டர்களோ, போலீசோ, அதிகாரிகளோ நுழைய முடியாதபடி பழங்குடியின மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதையும் மீறி கொடிய ஆயுதங்களுடன் தாக்க வந்த சி.பி.எம். குண்டர்கள் 7 பேரைச் சிறைபிடித்த பழங்குடியின மக்கள், அடுத்தநாளில் அவர்களை எச்சரித்து விடுவித்தனர்.


மறுபுறம், போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் 600க்கும் மேற்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் கூடி, தேர்தல் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவைத் தேர்வு செய்தனர். இக்கமிட்டியின் தலைவரான சத்ரதார் மஹடோ தலைமையிலான குழு, தேர்தல் அதிகாரிகளுடன் 2 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இத்தொகுதியில் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 30ஆம் தேதியன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் பாதுகாப்பில் தேர்தல் நடத்துவது என்றும், வாக்குப்பதிவு முடிந்ததும் இப்படை திரும்பி விடும் என்றும், மாநிலப் போலீசு உள்ளே வரவோ, நிரந்தரமாகத் தங்கவோ செய்யாது என்றும் இப்பேச்சு வார்த்தைகளில் முடிவாகியுள்ளது. இதை மீறி மாநிலப் போலீசோ, சி.பி.எம். குண்டர்களோ இப்பகுதிக்குள் நுழைய முற்பட்டால் லால்கார் மக்கள் ஆயுதமேந்திப் போராடுவார்கள் என்று சத்ரதார் மஹடோ அறிவித்துள்ளார். தமது கோரிக்கைகளை வலியுறுத்தியும், சி.பி.எம். குண்டர்களை எச்சரித்தும் பழங்குடியின மக்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு ஏப்ரல் 19ஆம் தேதியன்று ஜார்கிராம் நகரில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் நடத்தியுள்ளனர்.


சந்தால் பழங்குடியின மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் அம்பலப்பட்டுப் போயுள்ள சி.பி.எம். கட்சி அரண்டு போய் நிற்கிறது. ''லால்கார் பகுதியிலுள்ள 44 வாக்குச் சாவடிகளில் எங்களுக்கு ஒரு ஓட்டுகூட விழாவிட்டாலும், எங்கள் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்திட முடியாது'' என்று ஆத்திரத்தில் வெறியைக் கக்குகிறார், சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான பிமன்போஸ். ஆனால் சி.பி.எம். கட்சியின் சூழ்ச்சிகள் சதிகள் தாக்குதல்களை முறியடித்து மித்னாபூர் மாவட்டம் மட்டுமின்றி, சந்தால் பழங்குடியினர் நிறைந்துள்ள புருலியா, பங்குரா மாவட்டங்களிலும் போராட்டம் பற்றிப் படர்கிறது. பழங்குடியின மக்களின் நீதியான இப்போராட்டத்தை வேறு வழியின்றி எதிர்க்கட்சிகள் ஆதரிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளன. 44 வாக்குச்சவடிகளுக்குப் பதில் 4 வாக்குச்சவடிகள் மட்டும் நிறுவி தேர்தலை நடத்திக் கொள்ளுமாறு @பாராட்டக் கமிட்டி முன்வைத்த @காரிக்கையை தேர்தல் அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.


ஏப்ரல் 30ஆம் தேதி லால்கார் பகுதியில் பெயரளவிலான தேர்தல் நடந்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தூக்கிப் பிடித்து நிலைநாட்டி விட்டதாக ஆட்சியாளர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், இந்நாடாளுமன்ற ஜனநாயக அரசியலமைப்பு முறையின் யோக்கியதையைத் திரைகிழித்துக் காட்டி, அதிகாரவர்க்க போலீசு அடக்குமுறைக்கு எதிரான சந்தால் பழங்குடியின மக்களின் போராட்டம் ஓயப் போவதில்லை. மே.வங்க கொலைகார போலீசும் அதிகார வர்க்கமும் சி.பி.எம். குண்டர்களும் இனி இப்பகுதியில் காலூன்றவும் வாய்ப்பில்லை.


போலீசின் அரசு பயங்கரவாத அடக்குமுறைக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராடி வந்துள்ள போதிலும், அவை விரைவிலேயே அடக்கியொடுக்கப்பட்டு நீர்த்துப் போய்விடுகின்றன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையேற்று வழிநடத்துவதாலேயே லால்கார் மக்களின் போராட்டம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. புரட்சிகர தலைமை இருந்தால் மட்டுமே, எந்தவொரு மக்கள் போராட்டத்தையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும்; அரசை அடிபணிய வைக்க முடியும்; மக்களை புரட்சிப் பாதையில் வழிநடத்த முடியும் என்ற அரிய படிப்பினைகளை உணர்த்தியுள்ள லால்கார் பழங்குடியின மக்கள், அடுத்தகட்டப் போராட்டத்துக்கு அணிதிரண்டு வருகிறார்கள்.


· மனோகரன்