Language Selection

புதிய ஜனநாயகம் 2009

தாழ்த்தப்பட்டோரை ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் எனும் அரசியலை முன்வைத்து, "பார்ப்பனர்கள், வைசியர்கள், ராஜபுத்திரர்களை செருப்பால் அடிப்போம்'' என்ற புகழ்பெற்ற முழக்கத்தின் மூலம் தனது அடித்தளத்தை உ.பி.யில் உருவாக்கி இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி. தற்பொழுது இம்மூன்று சக்திகளுடன் சமரசமாகியதன்

மூலமும், பார்ப்பனர்களுக்குப் பதவிகளைக் கொடுத்ததன் மூலமும் அக்கட்சி உ.பி.யில் 2007இல் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. தமிழ்நாட்டில் தலித்தியம் பேசிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், தாழ்த்தப்பட்டோரின் வாக்கு வங்கியை வைத்துப் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாத அரசியல் வித்தகர்களும் இப்பரிசோதனைக்காக மாயாவதியைப் போற்றிப் புகழ்ந்தார்கள். திருமாவளவன் கூட, "இந்திய நாடெங்கும் இந்த வெற்றியின் தாக்கம் தீயாய்ப் பற்றிப் பரவும்'' என மதிப்பிட்டிருந்தார்.

 

 


தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாட்டிலும் அதே உத்தியுடன் களமிறங்கியுள்ளது. அதிகார வர்க்கப் பார்ப்பனர்களையும் , சாதிவெறியர்களையும், கிரிமினல்களையும் சேர்த்துக் கொண்டு மாயாவதி தனது கட்சியைத் தமிழ்நாட்டில் வளர்க்க களம் இறங்கியிருக்கிறார். இந்தியா முழுவதும் இக்கட்சி பெருமளவில் பார்ப்பனர்களையே வேட்பாளர்களாய் நிறுத்தியிருப்பதோடு, அச்சாதியில் இருக்கும் ஏழைகளின் நலனுக்காகப் பாடுபடப்போவதாகக் கூறுகிறது. தமிழகத்திலும் ஓய்வு பெற்ற மூன்று பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். சமூகநீதி @பசி வந்த "பகுஜன்' சமாஜ் கட்சி, தற்போது "சர்வஜன'மான பிறகு பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்சாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க @வண்டும் எனக் கூறி வருகிறது. இதை உ.பி.யில் நடைமுறைப்படுத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்து விட்டார், மாயாவதி.


பெருமளவில் பார்ப்பனர்கள் கட்சியில் சேர்க்கப்பட்டதால், அவர்கள் மனம் கோணாமல் இருக்க உ.பி.யில் தங்கள் கட்சி சுவரொட்டிகளில் இருந்து பெரியார் படத்தை நீக்கியது, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழ்நாட்டிலோ பெரியாரைக் காட்டி ஓட் டுப் பொறுக்குகிறது. "புதியகோடங்கி'' யில் முனிமா எனும் புனைபெயரில் பெரியார் மீது சேற்றை வாரி இறைத்து, அவரைத் தலித் விரோதி என அவதூறு செய்து வந்த சிவகாமி ஐ.ஏ.எஸ். இப்போது இக்கட்சியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர். தாழ்த்தப்பட்டோரின் எதிரியாக பெரியாரைச் சித்தரித்த இந்த இலக்கியவாதி, "தாழ்த்தப்பட்டோர் சுத்தபத்தமாக் கோவிலுக்கு வாங்கோ'என இழிவுபடுத்திய சங்கராச்சாரியை, தனது கட்சியைச் சேர்ந்த செல்வப்பெருந்தகை சந்தித்து ஆசி வாங்கியதைப் பற்றி என்ன நினைப்பார்? இதுவரை அவர்களை "பார்ப்பான்' என அழைத்து வந்த இதே தலித்திய எழுத்தாளருக்கு இப்போது அவர்கள் "பிராமணர்' ஆகிவிட்டபடியால், சங்கராச்சாரி தங்களை அழைத்துப் பேசியதை பெருமையாகக் கூட நினைத்திருக்கலாம்.


மாயாவதியின் கட்சி பார்ப்பனியத்துடன் சமரசமாகச் செல்வதன் காரணத்தை அறிய நாம் மண்டையைக் குடைய வேண்டியதில்லை. சிவகாமி அம்மையாரே "அதிகாரமில்லை எனில் வாழ்வில்லை. அதை வெகுஜன அதிகாரமாக்க வேண்டும்' என்று எளிதில் விளக்கிவிட்டார். தலித் இலக்கியத்தை தலித்துதான் எழுத வேண்டும் என்று இந்த "இலக்கியவாதி' சொல்லிக்கொண்டிருந்தபோது தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்காக அம்மக்களை மட்டும் திரட்டும் குழுக்கள் தோன்றின. இப்படித் தோன்றிய குழுக்கள் ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் நுழைந்த போது, தனித்து நின்றால் பெரும்பான்மையைப் பெற முடியாது எனும் யதார்த்தம், அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர்களுடனும், முசுலிம்களுடனும் கூட்டணி கட்ட வைத்தது. அதிலிருந்து தனிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்றிடவும் ஒரே பாய்ச்சலில் முன்னேறவும் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டது. செல்வி மாயாவதியோ, "உயர் சாதி மக்களையும் சேர்க்காமல் மத்தியில் நாம் ஆட்சி அமைக்க முடியாது. உயர்சாதி மக்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும் முன்னேற்ற வேண்டும்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், மாயாவதி.


"வெகுஜன அதிகாரம்' என இவர்கள் கூறுவது அவர்கள் கட்சியில் புதிதாகச் சேர்ந்துள்ள பேராசிரியர் தீரனின் வன்னிய சாதிவெறியையும், சங்கராச்சாரியின் பார்ப்பனியத்தையும் உள்ளடக்கியதே. ஒரே சமயத்தில் பார்ப்பனியத்துடனும் பெரியாருடனும் அம்பேத்கருடனும் கூட்டுவைத்துக்கொண்டு இந்தக் கேடுகெட்ட சந்தர்ப்பவாதத்துக்கு "வெகுஜன அதிகாரம்' என நாமகரணம் சூட்டி இருக்கிறார்கள்.


இந்த ஒட்டுரக அரசியலை குருமூர்த்தி, சோ போன்றவர்களும் விரும்புகிறார்கள். பார்ப்பனர்களில் கணிசமானோர் வரவேற்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பிற்காகத்தான் தென்சென்னை, கோவை, மயிலாடுதுறை தொகுதிகளுக்குப் பார்ப்பன வேட்பாளர்களை பகுஜன் Œமாஜ் கட்சி நிறுத்தி உள்ளது.


"இந்த 40 ஆண்டுகளில் மக்கள் எந்தெந்த வகையில் ஏமாற்றப்பட்டு மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது முக்கியம். இதை முன்னிலைப்படுத்தித் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி, ஏனைய பிரிவினரையும் ஒருங்கிணைக்க வேண்டும்; திராவிடக் கட்சிகள் மீதான அதிருப்தியை உணரும்படிச் செய்யவேண்டும்'' என்று கூறும் பகுஜன் சமாஜ் கட்சியின் சிவகாமி குறிப்பிடும் விளிம்புநிலை மக்களாகப் பார்ப்பனர்களும் இருக்கின்றனர்.


திருச்செந்தூர் அக்ரஹாரத்தில், "நாங்கள் சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. பிராமணாளைக் காப்பாத்துங்கோ'' என்றார்களாம். ஏழைப் பார்ப்பனர்களுக்காக கசிந்துருகும் சிவகாமியின் கட்சி நிறுத்தி இருக்கும் 3 பார்ப்பன வேட்பாளர்களும் ஏழைகளா? மயிலாடுதுறை சப்தரிஷி அய்.ஏ.எஸ்., என்ன உண்டக்கட்டிப் பார்ப்பானா? திருச்செந்தூர் போன்ற வரும்படி மிக்கக் கோவில்களை நம்பி இருக்கும் பார்ப்பனர்களை ஏழைகள் என்று சொல்வதே கடைந்தெடுத்த பொய் அல்லவா?


···


இவ்வாறு பார்ப்பனர்களை மட்டும் வைத்துக் கட்சி நடத்த முடியுமா? ஏனைய சாதிச் சங்கங்கள் வேண்டாமா? கிரிமினல் தாதாக்கள் வேண்டாமா? அதற்கும் ஆள் பிடித்துள்ளனர் இவர்கள்.


எண்பதுகளில் வன்னியர் சங்கம் எனும் சாதிவெறி அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரான பேராசிரியர் தீரன் இப்போது பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியத் தலைவர். வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி, எம்.எல்.ஏ. பதவி வரை அனுபவித்த தீரன், தனக்கும் ராமதாசுவுக்கும் இடையில் உருவான பதவிச் சண்டையால் பா.ம.க.விலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன் வெளியேறினார். கருணாநிதியின் இதயத்தில் மட்டும் இடம்பிடித்துப் பதவி ஏதும் பெற வழி இல்லாததால், சென்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கும் ஒரு சுற்றுப் போய்விட்டு, தற்போது இக்கட்சிக்கு வந்துள்ளார். ராமதாசை விட்டு விலகியதும் "ராமதாசு வன்னியர்களுக்கு செய்த துரோகங்கள்'' என்றொரு பிரச்சார நூல் வெளியிட்டு, வன்னிய சொந்தங்களின் ஆதரவினைப் பெற முயன்ற வன்னிய சாதி வெறியர் தீரன், பகுஜன் கட்சியில் இணைந்திருப்பது சாதியில்லாத சமுதாயம் படைக்கவா?


தீரனின் பின்னணி இப்படி என்றால், பத்தாண்டுகளில் 4 கட்சிகள், பல கட்டைப் பஞ்சாயத்துக்கள் எனப் புகழோடு இருக்கும் திடீர் பணக்கார கிரிமினல் பேர்வழியான செல்வப் பெருந்தகை, தமிழ்நாட்டின் பகுஜன் கட்சி பொறுப்பாளர். 90களில் சென்னை யிலுள்ள சட்டமன்ற விடுதியில் எடுபிடியாக வேலை செய்து வந்த இந்நபர், ஆட்களைப் பிடித்து ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தார். ஆனால், திடீரென கோடிகளுக்கு அதிபதி ஆனார். அப்போது அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பை வைத்திருந்த பூவை.மூர்த்தியின் கட்டைப் பஞ்சாயத்துக்களைக் கவனித்துக்கொண்டே வங்கியில் வேலை செய்த செல்வம் (அப்போதைய பெயர்) அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ஆனார்.


ஸ்பிக் முத்தையாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த பாண்டியன் எனும் தணிக்கையாளர், நலிவடைந்திருந்த முத்தையாவின் நிறுவனம் ஒன்றை ஏற்று நடத்திப் பணக்காரர் ஆனவர். அந்நிறுவனத்தைத் தனக்கே சொந்தமாக்கிட பாண்டியன் முனைந்ததால் முத்தையாவிடம் இருந்தும், விவாகரத்து செய்து பாண்டியன் விரட்டியிருந்த அவருடைய முன்னாள் மனைவியிடமிருந்தும் கொலை மிரட்டல் வந்ததால் பாதுகாப்புக்காக தாதாக்களை அணுகினார். செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டு அதற்கு ஈடாகக் கல்குவாரிகளைப் பெற்றார். இந்நிலையில் 1995இல் பாண்டியன் அவருடைய வீட்டிலேயே கொல்லப்பட்டார்.

செல்வத்துக்கும் பூவை மூர்த்திக்கும் கொள்ளையடித்த சொத்துக்களைப் பங்கு பிரிப்பதில் பூசல் வந்ததும் செல்வம் புதிய தமிழகத்தில் இணைந்து பொதுச்செயலாளர் ஆனார். பாண்டியன் கொலை


வழக்கின் புலன்விசாரணை செல்வத்தை நோக்கி நகரவும் அப்போதைய சென்னை போலீசு கமிஷனர் காளிமுத்து மூலம், செல்வம் வழக்கை ஆறப்போட வைத்தார். 2001இல் புது அதிகாரிகள் பொறுப்பேற்றதும் வழக்கு தூசி தட்டப்பட்டது. செல்வத்தைத் தேடிய சிறப்புப்படை அவர் தங்கி இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி வளைத்தது. போலீசிடமிருந்து தப்ப மாடியிலிருந்து குதித்து கால் ஒடிந்து பிடிபட்டார்.


அன்னாரின் கிரிமினல் குற்றம் அப்போதுதான் தெரிந்தது போல கிருஷ்ணசாமி, செல்வத்தைக் கட்சியை விட்டு நீக்கினார். அடுத்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்குத் தாவிய செல்வம், அங்கே எம்.எல்.ஏ. பதவி வரை உயர்ந்தார். தற்போது தேசியக் கட்சியின் பணமழையில் நனைய பகுஜன் கட்சிக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அன்று செல்வப்பெருந்தகையைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுத்தவரும், அவரால் "அங்கிள்' எனச் செல்லமாக அழைக்கப்பட்டவருமான போபாலீ” கமிஷனர் காளிமுத்துவும் தற்போது ஓய்வு பெற்று, இதே கட்சியில் இணைந்திருக்கிறார்.


பகுஜன் கட்சியின் தாதா கூட்டணி செல்வப் பெருந்தகையோடு முடியவில்லை, தென் மாவட்டங்களில் 80களிலிருந்தே கூலி வாங்கிக்கொண்டு கொலை செய்வதில் தேர்ச்சிபெற்ற ஜான்பாண்டியனும் தற்போது பகுஜன் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். இவர் தனது கிரிமினல் நடவடிக்கைகளுக்காகத் தண்டனை அடையாமல் தப்பித்துக் கொள்ள தலித் அரசியலைக் கவசமாகப் பயன்படுத்தி வந்தார். எல்லா கிரிமினல் அரசியல்வாதிகளும் கல்வி வள்ளல்களாக மாறியபோது அண்ணனும் மருந்தியல் கல்லூரி கட்டி வள்ளலாகவும் மாறி இருந்தார். கூலிக்காக செய்த குற்றம் ஒன்று நிரூபிக்கப்பட்டு அன்னார் இப்போது ஆயுள்கைதியாக உள்ளதால், அண்ணனின் மனைவி ஜெசிந்தா தற்போது பகுஜன் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இவ்வாறு கூலிப்படை கிரிமினல்கள், சாதிவெறியர்கள், திடீர்ப்பணக்கார அரசியல் ரவுடிகள் இவர்களுடன் பார்ப்பனர்களும், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் அதிகாரிகளும் சேர்ந்து அமைத்திருக்கும் இந்த சர்வஜன பொறுக்கிக் கும்பல், பாடையில் வைக்க வேண்டிய பார்ப்பனியத்துக்கு மறு உயிர் தந்து நாட்டை மீண்டும் படுகுழிக்குள் தள்ளும் நோக்கத்துடன் களத்துக்கு வந்துள்ளது.


இந்தக் கும்பலை அம்பலப்படுத்தி முறியடிப்பதில்தான் கோடானுகோடி ஒடுக்கப்பட்டோரின் விடுதலை அடங்கியுள்ளது.


· கதிர்