12092022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈழப் போரில் உண்மைகளைப் பேசுவோம்..! - ஆழியூரான்.

‘மழைவிட்டும் தூவானம் விடாத’ குண்டுச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு மரத்தடியின் மண் தரையில் ரத்தம் ஒழுக, கன்ன கதுப்பின் சதை பிய்ந்து தொங்க அடிபட்டுக் கிடக்கிறது மக்கள் கூட்டம். ஒரு சிறுமி குண்டானில் இருக்கும் சோற்றை ஒரு கையால் அள்ளிச் சாப்பிட்டப்படி எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாள். அருகில்

 அம்மாவின் மடியில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தை, தாயின் கரங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சோறுண்ணும் சிறுமியிடம் சென்று, அவள் கை அருகே வாயை திறந்தபடி நிற்கிறது. அந்த சிறுமி, குழந்தை நிற்பதைக் கவனிக்கவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி சோற்றைத் திண்கிறாள். திடீரென கீழேப் பார்க்கும்போது அந்தக் குழந்தை ஒரு கவளம் சோற்றுக்காக வாய் திறந்து நிற்கிறது. பதறிப்போய் கையில் அள்ளிய சோற்றை குழந்தையின் வாயில் ஊட்டுகிறாள். அப்போது சிறுமியின் விரல்கள் நடுங்குகின்றன. முகம் கலங்கிப் போயிருக்கிறது.

கப்பிக்கற்களும், சரளைக்கற்களும் குத்தும் தரையில் ரத்தம் ஒழுக, உறுப்புகள் சிதைய படுத்துக் கிடக்கின்றனர் மக்கள். ஒரு பெண்ணின் இடதுகால் தொடையில் குண்டுவிழுந்து சதைகள் பிய்ந்து கால் அறுந்து தொங்குகிறது. கேட்க, பார்க்க ஆளில்லை. மருத்துவம், நர்ஸ், மாத்திரை, மயக்க மருந்து எதுவும் இல்லை. அடிபடாமல் இருக்கும் மற்றவர்கள் மருத்துவர்களாய் மாற, ஆளுக்கு ஒரு காலைப் பிடித்துக்கொண்டு அடிபட்ட காலின் தொடைப்பகுதியை ஒரு இரும்புக் கத்தியால் கரகரவென அறுக்கின்றனர். துண்டான கால், குப்பை அள்ளும் வண்டியில் போடப்படுகிறது. வெட்டிய காலின் தொடைப்பகுதியில் சுற்றுவதற்கு துணியில்லாமல் தவிக்க, பெண்களின் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின் துணிதான் கிடைக்கிறது. அதையே சுற்றி கிடத்தப்படுகிறார்.

‘‘அண்ணை... இதைக் கட்டிவிடுங்கோ அண்ணை’’ என ஒரு கையில் வெள்ளை நாடாத்துணியை ஏந்திக்கொண்டு இன்னொரு கையில் பிய்ந்து தொங்கும் ரத்தச்சதைகளுடன் திரிந்துகொண்டிருக்கிறாள் ஒரு பெண். அந்தப் பக்கம் வெடித்துக் கதறும் தாயின் மடியில் ஒரு குழந்தை செத்துக்கிடக்க, குழந்தையின் ரத்தம் தெறித்த அவளது முலையில் பால் குடிக்கிறது அதனினும் சிறிய பிஞ்சுக்குழந்தை. தெருவெங்கும் பிணங்கள். செத்தப் பிணங்களை நிம்மதியுடன் பார்த்துக் கடக்கின்றன நடைபிணங்கள். சதைப்பிண்டமாய் தெருவோரம் ஒதுங்கிக்கிடக்கும் உடலை நாய் ஒன்று முகர்ந்துப் பார்த்து ஒதுங்கிச் செல்கிறது. ஏழெட்டு வயது சிறுவனின் உடம்பெங்கும் கட்டுக்கள். அவன் கைகளில் கட்டப்பட்ட சலைன் பாட்டிலை அவனைவிட சிறியவன் கையில் பிடித்தபடி காயமுற்றுப் படுத்திருக்கும் சனங்களின் ஊடே புகுந்து நடந்து செல்கிறான். ஆர்மி கொடுக்கும் ஒரு குவளை டீயை வாங்க கொட்டாங்குச்சியை கையில் பிடித்தபடி வரிசையில் நிற்கிறார்கள் முதியவர்களும், குழந்தைகளும். உணவென்று சொல்லத்தக்க ஒன்றை சாப்பிட்டு நாட்கள் பல ஆகிவிட்டன என்பதை எலும்புகள் துருத்தி நிற்கும் அவர்களின் தேகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

‘‘இதுக்கெல்லாம் நாம என்ன செய்யப்போறோம்?’’

‘‘இதுக்கு மேல என்ன செய்ய முடியும்? எல்லாரும் வாங்க டீ சாப்பிடப்போவோம்.?’’

த்த்த்தூ..!
----------------------------------------------------------

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் நடூர் என்ற ஊர் உண்டு. அந்த ஊரின் வெளிப்பகுதியில் அடர்காடுகள் இருக்கின்றன. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அந்தக் காடுகளுக்குள் விடுதலைப் புலிகள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு அவை சாகச நாட்கள். புலிகளுக்கு சாப்பாடு செய்துகொடுப்பதை மிகப்பெரிய கடமையாகவும், கௌரவமாகவும் நினைத்தார்கள். புலிகள் காட்டுக்குள்ளிருந்து வெளியேறியப் பின்னரும் கூட அதுபற்றிய கதைகள் சில காலத்துக்கு உலவின. அதெல்லாம் இப்போது மசமசப்பாக நினைவிலிருக்கிறது.

இன்று புலிகள் தங்கள் போராட்டத்தின் மிக இக்கட்டான ஒரு நிலையை வந்தடைந்திருக்கிறார்கள். தமிழீழம் என புலிகள் பிரகடனப்படுத்திக்கொண்டது 75,32,467 சதுர மைல் நிலப்பரப்பு. சமாதானக் காலத்துக்கு முந்தைய காலங்களில் இதில் முக்கால்வாசி நிலப்பரப்பை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்துவிட்டனர். ஆனால் இன்று 5 சதுர மைல் நிலப்பரப்புக்குள் சுருக்கப்பட்டு இறுதிச்சமர் நிகழ்த்திக்கொண்டிருக்கின்றனர்.

திட்டமிட்ட இன சுத்தீகரிப்பை மேற்கொண்ட சிங்கள இனவாத அரசுக்கு எதிரான தமிழர்களின் அமைதிப் போராட்டங்கள் அனைத்தும் ஒதுக்கப்பட்டு நசுக்கப்பட்ட நிலையில், ஆயுதப் போராட்டம் என்பது வரலாறு கையளித்த ஒன்று. தமிழர்கள் ஆயுதம் எடுத்ததற்கான அத்தனை அரசியல் நியாயங்களும் இருக்கின்றன. தவிரவும் தன்னை ஒடுக்குபவனின் முன்னால் மண்டியிட்டு நின்று மனுகொடுக்கிற ‘காந்திய’ கருமாந்திரத்தை விட்டொழித்து ‘அடித்தால், அடிப்பேன்’ என்ற எதிர்குரலில் அடிப்படை அறம் இருக்கிறது. ஆனால் ஆயுதங்களுக்குள் தோட்டாக்கள் மட்டுமே நிரப்பப்பட்டதுதான் பிரச்னை.

ஒரு இன விடுதலைப் போரை வென்றெடுப்பதற்கான சித்தாந்த காரணிகளை புலிகள் பரிசீலிக்கவே இல்லை. உலகமெங்கும் முன்பும், இப்போதும் எத்தனையோ இனவிடுதலைப் போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை அனைத்துக்கும் ஒரு அரசியல் சித்தாந்தம் இருந்தது/ இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டார்கள். ஆனால் ஈழத்தில் சிங்களன் Vs தமிழன் என்ற இன உணர்வுத் தவிர வேறு எதுவும் கிடையாது. ‘பத்து தடவை பாடை வராது, பதுங்கி கிடக்கும் புலியே தமிழா, செத்து மடிவது ஒருமுறைதான், சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா’ என புலிப்படையில் சேர்ந்து செத்துப்போவதற்கான அறைகூவல் மட்டுமே விடுக்கப்பட்டது. போராட்டங்களை மக்கள் மயப்படுத்தாமல் ‘விலகி நில், உனக்காக நான் சுடுகிறேன்’ என்ற கதாநாயக மனோபாவம் கட்டி எழுப்பப்பட்டது. 

மக்கள் போராட்டங்களும், நாடு அடையும் போராட்டங்களும் இடதுசாரி தத்துவங்களின் அடிப்படையிலேயே பெரும்பகுதி வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால் புலிகள் சாதி, வர்க்க, கலாச்சார அடிப்படைவாதத்தை தீவிரமாக ஆதரிக்கும் வலதுசாரி அரசியலை முன்னெடுத்தார்கள். உலகின் மற்ற இன விடுதலைப் போராட்டங்கள்பற்றியும், உலகமயமாக்கல், தனியார்மயமாக்கள் உள்ளிட்ட நடப்பு முதலாளித்துவக் கொள்கைகள்பற்றியும் புலிகள் இறுதியான கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. வெளியிடவும் இல்லை. உலகின் எந்த இடதுசாரி குழுக்களுடனும் அவர்களுக்குத் தொடர்பில்லை. நேபாள மாவோயிஸ்டுகள், ஆந்திர மக்கள் யுத்தக்குழு, பாலஸ்தீன பி.எல்.ஓ. என அனைவருடனும் புலிகள் தங்களை விலக்கம் செய்துகொண்டனர். புலிகளின் தமிழ்நாட்டு பங்காளிகளாக இன்றுவரை வைகோ, நெடுமாறன் வகையறாக்கள்தான் இருக்கிறார்களேத் தவிர குறைந்தபட்சம் மய்ய நீரோட்ட கம்யூனிஸ்டுகள் கூட இல்லை. இப்படி கருத்தியல் அடிப்படை இல்லாததாதான் கால் நூற்றாண்டுகால ஆயுதப் போராட்டம் இப்போது இந்திய தேசிய பார்ப்பானிய சக்திகளிடம் சரணடைந்திருக்கிறது. கார்பொரேட் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்னும் பார்ப்பானிடம் பா.நடேசன் கோரிக்கை வைக்கிறார், ஜெயலலிதா என்னும் இந்து பாசிஸ்ட்டுக்கு புலிகள் நன்றி சொல்கின்றனர்.

தவிரவும் புலத்தில் தமிழ் பேசும் இதர வகையினரை போராட்டத்தின் ஆதரவு சக்திகளாக மாற்றாமல் எதிரிகளாக மாற்றிக்கொண்டார்கள். தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் அவர்களின் வாழிடத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டனர். மலையகத் தமிழர்களின் கோரிக்கைக் குரல்கள் புலிகளால் கண்டுகொள்ளப்படவே இல்லை. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் ‘விபசாரிகள்’ முத்திரைக் குத்தப்பட்டு மின் கம்பங்களில் பிணமாக தொங்கும் காட்சிகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இன்னொரு பக்கம் அமைப்புக்குள் ஜனநாயகத் தன்மையே இல்லாத நிலைமை. எதிர் கருத்துள்ளவர்களை கொலை செய்யும் ஜனநாயக நீக்கம் செய்யப்பட்ட பாசிச அமைப்பாக உருவெடுத்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக மனித உயிர்களை துப்பாக்கிக் குண்டுகள்போல நினைத்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றுவது பாசிசத்தின் உச்சம். தேசியத் தலைவருடன் சமமாக அமர்ந்து ஒருவேளை உணவருந்தினால் ஒருவன் சாவதற்கான தகுதி பெற்றுவிடுவானா..? நாளை காலை கொலை செய்யப்படப்போகும் ஒருவனுடன் அமர்ந்து உணவருந்தும் ஒவ்வொரு முறையும் தேசியத் தலைவரின் மனம் எதைப்பற்றி நினைக்கும்? இந்த ‘கரும்புலி’களை பெற்றெடுத்த அம்மாவைப்பற்றி, அவரின் அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, மனைவி, பிள்ளைகள்பற்றியா..? அல்லது அடுத்தநாள் நடத்தப்போகும் தாக்குதலில் எதிரிக்கு ஏற்படப்போகும் இழப்புகளைப்பற்றியா..? மாவீரர்கள் என பட்டம் கொடுக்கப்பட்டு கல்லறைகளுக்குள் அடைக்கப்பட்ட அத்தனை பேருக்கும் சராசரி வாழ்வுக்கான கனவுகள் இருந்திருக்கும்தானே..? ஆனாலும் எதன்பொருட்டு அவற்றை உதறி, போராட வந்தார்கள்? தாயக விடுதலைக்காகத்தானே..? ஆனால் விடுதலைப் புலிகளைக் கண்டு அச்சப்பட்டு ஒதுங்கிய தமிழ் மக்களும் அதே தமிழர் தாயகத்தில்தாலே இருந்தார்கள்.? சொந்த மக்களை அச்சத்துக்குள் தள்ளி, பிறகு இந்தப் போராட்டம் யாருக்காக? சூன்யத்தை ஆளவா தமிழீழம்?

இன்னொரு பக்கம் கருத்தியல் ரீதியான ஆதரவு சக்திகளை உருவாக்காமல் தனிநபர் வழிபாட்டுக் முறையை எங்கெங்கும் ஊக்குவித்தார்கள். எங்கும் பிரபாகரன், எதிலும் பிரபாகரன். தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் தலைவர்களை மேடையில் வைத்துக்கொண்டு அவர்களின் அல்லக்கைகள் மணிக்கணக்கில் புகழ்ந்து பேசுவார்கள். தலைவர்களும் மெய் சிலிர்த்துக் கேட்பார்கள். அதுபோல எல்லாவற்றிலும் பிரபாகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். பிரபாகரன்பற்றியும், விடுதலைப்புலிகளின் பலம் பற்றியும் அளவுக்கு அதிகமான கட்டுக்கதைகள் உலவவிடப்பட்டன. பிரபாகரன், இயேசு கிறிஸ்துவைப்போலவும், ஈழத் தமிழர்கள் அவரது வருகைக்காக காத்திருக்கும் பக்தர்கள் போலவுமான நிலைமை கட்டி எழுப்பப்பட்டது. இவ்வாறான தனிநபர் துதிபாடலை பிரபாகரன் தடுத்தாரில்லை. இதன் உச்சகட்டமாக ‘கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்தான் தி.மு.க. தலைவர்’ என்பதுபோல ‘பிரபாகரனுக்கு பிறகு சார்லஸ் ஆண்டனிதான் விடுதலைப் புலிகளின் தலைவர்’ என்று புலிகளின் ரசிகர்கள் பரப்புரைகளை செய்கின்றனர் (இதைப் புலிகள் செய்யவில்லை. அதேநேரம் அப்படி வரும் செய்திகளை மறுக்கவும் இல்லை). பிரபாகரன் மன்னர் போலவும் சார்லஸ் ஆண்டனி இளவரசர் போலவும் பரப்பப்படும் இந்த வகையான கருத்துக்கள் அபத்தத்தின் உச்சம். அப்படியானால் போர் இன்னும் பல தலைமுறைகள் தொடருமா என்ன?

இன்று ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கும் குரல்களை உற்று கவனித்தால் பிரபாகரனுக்காக மட்டும் கண்ணீர் உகுப்பவர்கள் நிறைய பேர். நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக்கூடும். சுற்றியுள்ள எத்தனையோ பேர் அடிவாங்கி செத்து விழுவார்கள். ரசிக மனநிலைக்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் உறுப்படிகள். கதாநாயகன் அடிபடும்போது மட்டும்தான் ரசிகமனம் விம்மி வெடிக்கும். அதுபோலவே பிரபாகரன் உயிருக்காக மட்டும் பதறுகின்றவர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள். ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்காக பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிர்களை பலியெடுப்பது என்ன நியாயம் என சோனியாவை நோக்கி கேள்வி எழுப்பும் அதே குரல்கள், பல லட்சம் மக்களின் உயிர்களை மறந்து ஒரு பிரபாகரனின் உயிருக்காக மட்டுமே உருகுவதன் பின்னால், கதாநாயக வழிபாடும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இன உணர்ச்சியும் நிரம்பியிருக்கிறது. அதனால்தான் சிங்கள பேரினவாதம் தமிழ் பெண்களை கர்ப்பக் கலைப்பு செய்யும்போது ‘தமிழ் பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் சிங்களன் அஞ்சுகிறான்’ என அதுவும் உணர்ச்சிப் பேச்சாக மொழிபெயர்க்கப்படுகிறது. ‘புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டிருக்கிறார்கள்’, ‘50 பேர் பலியானார்கள், 500 பேர் புலியானார்கள்’ என்ற வசனங்கள் சில கரும்புலிகளை உருவாக்கி சாகடிக்கலாமேத் தவிர போராட்டத்தை உறுதிப்படுத்தாது.

மரபு ரீதியிலான ராணுவத்தைக் கட்டமைத்து போரிட்ட பலம் பொருந்திய போராளி அமைப்பான புலிகள் தங்கள் போராட்டத்தின் இறுதிக்காலத்தில் நிற்கிறார்கள். ‘புலிகள் பலவீனமடைந்திருக்கும் இச்சூழலில் விமர்சனங்களை வைக்க வேண்டாம்’ என்றே பலரும் ஒதுங்கி இருக்கிறார்கள். ஆனால் பேசாமலும் எதுவும் ஆகப்போவதாக தெரியவில்லை. உலகெங்கும் இருக்கும் புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வரையறுக்கப்பட்ட எல்லாப் போராட்ட வடிவங்களையும் செய்தபடியேதான் இருக்கிறார்கள். ஆனாலும் சர்வ தேச நாடுகள் ஓர் இறுதியான அழுத்தத்தை இலங்கைக்கு இதுவரைக்கும் கொடுக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையோ, வேறு ஏதோ ஒரு பலம் பொருந்திய நாடோ தலையிட்டு வெள்ளைமுள்ளிவாய்க்காளில் சிக்கியிருக்கும் அப்பாவி மக்களைக் காப்பாற்றினால் ஒழிய வேறு எந்த நன்மையும் விளையாது என்பதுதான் இப்போதைய யதார்த்தமாக இருக்கிறது.

அதேநேரம் தனிநபர் வழிபாடு, ஜனநாயகமற்ற தன்மை, மிகக் கடுமையான கலாசார அடிப்படைவாதத்தைப் பேணுதல் என்பதுபோன்ற விமர்சனங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் வரலாற்று வகிபாத்திரத்தை முற்றாக நிராகரிக்க முடியாது. முன் காலங்களில் சிங்கள வல்லாதிக்கத்தின் பிடியில் இருந்து தமிழ் மக்களை காத்தவர்கள் புலிகளே. விடுதலை வேண்டி புறப்பட்ட சில குழுக்கள் இந்திய உளவு நிறுவனத்தின் கையாட்களாக மாறியபோதும், கொள்கையில் சமசரம் செய்துகொள்ளாதவர்களாக புலிகள் இருந்தார்கள். இப்போது நடக்கும் இந்த கொடிய போர், இனி புலிகளின் கைகளுக்கு மாறாது என்றால், பிற்பாடு சிங்கள ராணுவ ஆளுகையின் கீழ்தான் தமிழ் மக்கள் வாழ வேண்டியிருக்கும். அது மிகக் கொடுமையானது.

‘நலன்புரி மையங்கள்’ என்றழைக்கப்படும் வவுனியா வதை முகாம்களில் இன்று நடப்பதென்ன..? ஆண்களும், பெண்களும் கொடும் பட்டினிக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர். உணவையும் ஒரு ஆயுதமாக்கியிருக்கிறது ராஜபக்ஷே அரசு. ஒட்டுமொத்த ஈழத் தமிழினமும் இன்று பிச்சைக்காரர்களைவிட கேவலமான நிலையில் அல்லாடுகிறது. கோரமாக செத்துக்கிடக்கும் பிணங்களை விட ஒரு கவளம் சோற்றுக்காக, ஒரு குவளை தண்ணீருக்காக கையேந்தி முண்டியடிக்கும் தமிழ் மக்களின் முகங்கள்தான் நடுக்கமூட்டுகின்றன. வன்னியில் பிறந்ததன்றி இம்மக்கள் செய்த பிழை என்ன..? எனவே ஒரு இனம் முற்றாக அழிக்கப்படும் இச்சயமத்தில் புலிகளின் கடந்தகால தவறுகளை பேசுவது என்பது, நம்மை நாமே விமர்சனம் செய்துகொள்வதற்கு. இப்போதேனும் இதைப் பேசுவோம் என்பதற்காக. இவற்றைப் பேசுவதினூடாக சிங்கள அரச பயங்கரவாதத்தையும், அதற்குத் துணைபோகும் இந்திய, சீன வல்லாதிக்கங்களையும் மேலும், மேலும் வீச்சோடு அம்பலப்படுத்த வேண்டும்.

புலிகளை இத்தகைய விமர்சனத்துடன் அணுகும்போக்கு தமிழகச் சூழலில் வேறுவிதமான பின்விளைவுகளை உருவாக்குகிறது. மாலன், சோ, குருமூர்த்தி, ஹிண்டு ராம், வாஸந்தி போன்றவர்கள் எல்லா காலங்களிலும் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். புலிகளின் ஜனநாயகமற்றத் தன்மைப்பற்றி இவர்கள் பேசுவது ஆடு நனையுதென்று ஓநாய்கள் அழுவதற்கு ஒப்பானது. இவர்கள் ஒருபோதும் சிங்கள பேரினவாதத்தின் அட்டூழியங்கள் பற்றி பேசுவதே இல்லை. ராஜீவ்காந்தி கொலையில் செத்துப்போன அப்பாவி போலீஸ்காரர்கள் 14 பேருக்காக கசிந்துருகும் ஞாநியின் பேனா, ராஜபக்ஷேவின் ராணுவம் கொன்றொழிக்கும் அப்பாவித் தமிழர்கள் பற்றி பேசாது. அதற்கு ‘ஓ’ போடாது. உண்மையில் இவர்கள் அனைவரும் தனி தமிழீழம் என்ற கோரிக்கைக்கே எதிரானவர்கள். ‘பிழைக்கப் போனவர்கள் நாடு கேட்கும்’ அதிகபிரசங்கித்தனத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் இவர்கள் தற்போது விமர்சனப் பூர்வமான புலி எதிர்ப்புக் கருத்துக் குரல்களுடன் தங்களை வலிய வந்து இணைந்துகொள்கிறார்கள். ‘நாங்கதான் அப்பவே சொன்னமே..’ என்று ஒத்திசைக்கிறார்கள். இந்த பார்ப்பன சக்திகளிடம் மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது.

இன்னொரு பக்கம் புலிகளை விமர்சனப் பூர்வமாக அணுகும் அனைவரையும் ‘ஷோபா சக்தி, அ.மார்க்ஸ் வகையறா’ என்று வகைப்பிரிக்கும் போக்கு நிலவுகிறது. புலி விமர்சனத்தின் ஈழத் தமிழர் குறியீடாக ஷோபா சக்தியும், தமிழகத் தமிழர் குறியீடாக அ.மார்க்ஸும் முன்வைக்கப்படுகிறார்கள். அது சரியா, தவறா என்பதிருக்கட்டும்... ஒரு கருத்தை பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ‘பிராண்ட்’ செய்து ஒதுக்குவது ஆபத்தானது. ஒரு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று நடந்தால் ஆதரவு சக்திகள் அனைவரும்தான் வருவார்கள். புலிகளை விமர்சனப் பூர்வமாக அணுகுபவர்கள் இருக்கும் அதே ஆர்ப்பாட்டத்தில் ‘பிரபாகரன் வாழ்க’ குரல்களும் ஒலிக்கத்தான் செய்யும். இது யதார்த்தமானது. இதை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டம் ‘புலி ஆதரவுக் கூட்டம்’ அல்லது ‘இது புலி எதிர்ப்பாளர்களின் கூட்டம்’ என்று பிராண்ட் செய்வது அபத்தமானதும், ஆபத்தானதுமாகும். ‘நீ எங்களுடன் இல்லை என்றால் எதிராளியுடன் இருப்பதாக அர்த்தம்’ என பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பங்கெடுக்கச் சொல்லி ஜார்ஜ் புஷ் விடுத்த அழைப்பின் அதே தொனி இதில் ஒலிக்கிறது. ஏறக்குறைய இதேப் போக்கு இப்போதைய ஈழத் தமிழர் பிரச்னையை முன்னிட்டு தமிழக அரசியல் சூழலிலும் நிலவுகிறது.

ஈழத் தமிழர்களை கொன்றொழிக்கும் சிங்கள அரசுக்குத் துணைபோகிற காங்கிரஸ் கட்சியையும், அதன் தமிழக பங்காளியான தி.மு.க.வையும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைபாட்டை பலபேர் எடுத்திருக்கிறார்கள். தேர்தல் புறக்கணிப்பை வலியுறுத்தும் சில அமைப்புகள் கூட இந்த தேர்தலில் ஒரு தற்காலிக நிலைபாடாக காங்கிரஸுக்கு எதிரான வாக்குப்பதிவை வலியுறுத்துகின்றனர். காரணம், தேர்தல் அரசியலை ஒதுக்குபவர்களுக்கு தேர்தல் வெற்றிகள் ஒரு பொருட்டல்ல. ஆனால் ஓட்டுப் பொறுக்குவதில் உள்ள லாபங்களை ருசித்துப் பார்த்துவிட்ட ஓட்டுக் கட்சிகள் தேர்தல் வெற்றிகளையே உச்சமாக கருதுகின்றன. எனவே அவர்கள் பெரியதாக நினைக்கிற அதை பெறவிடாமல் தடுக்க வேண்டும். அதன்மூலம் நம் எதிர்ப்பைக் காட்டலாம் என்பதே இந்த நிலைபாடு உள்ளவர்களின் எண்ணம். இதனால் ஈழத் தமிழர்களுக்கு விளையப்போகும் நன்மை எதுவும் இல்லை என்றாலும் இது உடனடி எதிர்ப்பைக் காட்டுவதற்கு தேர்தல் அரசியல் அனுமதித்திருக்கும் ஒரு வழிமுறை. ஆனால் இந்த நிலைபாட்டை எடுப்பவர்களை, ‘பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதாவின் அடிவருடிகள்’ என்றும் ‘ஜெ.பேரவையின் உறுப்பினர்கள்’ என்றும் வகைபிரிக்கின்றனர். ‘என்னுடன் இல்லாவிட்டால் எதிரியுடன்’ என்கிற அதே மனநிலை.

இதுவரைக்கும் ஈழத் தமிழர் பிரச்னையில் தங்கள் கட்சியின் முன்னெடுப்புகளை பட்டியல் இட்டுக்கொண்டிருந்த தி.மு.க.வினர், இப்போது தோல்வி பயத்தில் மிக நேரடியாக ஈழத் தமிழர்கள் மீதே பாய ஆரம்பித்துவிட்டனர். ‘உங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம். அது உங்கப் பிரச்னை’ என்று ஈழத் தமிழர்களை அவமானப்படுத்தவும் செய்கின்றனர். பொதுவாக கருணாநிதி ஒன்று பேசினால் அதற்கு எதிர்நிலை எடுத்துப் பேசுவது ஜெயலலிதாவின் வழக்கம். அதேபோல்தான் இந்தம்மா ஒன்று பேசினால் அவர் அதற்கு எதிராகப் பேசுவார். இப்போது ஜெயலலிதா ‘தனி தமிழீழம் அமைத்தேத் தீருவேன்’ என்றெல்லாம் சாமியாடி வருவதால், தி.மு.க. தொண்டனின் மனம் இயல்பாகவே அதற்கு எதிர்நிலை எடுக்கத் தொடங்கிவிட்டது. அதுதான் ஆங்காங்கே வார்த்தைகளாக வெளிப்படுகிறது.

உண்மையில் இது ஈழத் தமிழர், தமிழகத் தமிழர் என்று தொப்புள் கொடி உறவாக சுருக்கிப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய பிரச்னை அல்ல. எந்த ஒரு தேசிய இனத்துக்கும் அந்த நாட்டுடன் இணைந்து வாழவும், பிரிந்துபோகவுமான உரிமை உண்டு. அப்படி இலங்கைத் தீவின் ஈழத் தமிழர் என்ற தேசிய இனம் பிரிந்துபோவதை சிங்கள பேரினவாதம் அனுமதிக்கவில்லை. தன் ஆளுகையின் கீழ் வாழச்சொல்லி நிர்பந்திக்கிறது. ‘நீ என் குடிமகன். அந்த உரிமையில் உன்மீது குண்டுபோடுவேன். நீ பொறுத்துக்கொண்டு இதே நாட்டில் வாழ வேண்டும்’ என்கிறது. இதன் உச்சமாக இந்த நூற்றாண்டின் மிக மோசமான இன சுத்தீகரிப்பு ராஜபக்ஷே ராணுவத்தால் இலங்கைத்தீவில் மேற்கொள்ளப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தச்சொல்லி போராடுவதற்கு நாம் தமிழராக இருக்க வேண்டும் என்பதில்லை. மனிதாபிமானம் உள்ள மனிதனாக இருந்தாலே போதுமானது. ஒருவேளை இலங்கையில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக இருந்து, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்து இந்த ஒடுக்குமுறை தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தால் நம் குரல் சிங்களருக்காகவே ஒலித்திருக்கும்/ ஒலிக்க வேண்டும். ஆகவே இது மனிதகுலத்துக்கு எதிரான போர் என்பதையும், இது ஒரு மனித பேரவலம் என்பதையும் உரக்கப் பேசுவோம். இதை புலிகளின் பக்கமிருந்தோ, தமிழக ஓட்டுக்கட்சிகளின் நிலையிலிருந்தோ பக்கச்சார்புடன் அணுகுவதை நிறுத்துவோம். இந்த கொடுஞ்சமரை முன்னெடுக்கும் இலங்கை ராணுவத்திடம் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்ற நம் கோரிக்கைக் குரல்களை மேலும், மேலும் உயர்த்திப் பிடிப்போம்!

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்