இந்தியாவானது பேரினவாத இனவொடுக்குமுறையை பயன்படுத்தி, இலங்கையை தன் பிராந்திய மேலாதிக்க பிடிக்குள் வைத்திருக்க முனைந்தது. இதுவே தமிழினத்துக்கு எதிரான, கடந்த 30 வருட வரலாறாகும். இதன் பின்னணியில் இந்தியா தமிழீழக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் பணத்தை வழங்கி, அவற்றை தமது பிராந்திய நலனுக்கு ஏற்ற கூலிக் குழுக்களாக உருவாக்கியது.

 

ஆனால் ஏகாதிபத்திய சார்பு புலிகள் இயக்கம் தம் பாசிச மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், இந்தியா சார்புக் குழுக்களை சேர்த்து அழித்தது. இதன் விளைவாக, இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கம் தான் நிறுவிய வழியில் சிதறிப்போனது. 

 

இருந்தபோதும் சிங்களப் பேரினவாதிகள் புலிகள் மேல் நடத்திய தாக்குதலினால், புலிகளுக்கு  தோல்வி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திய இந்தியா, அதை தமிழின அழிப்பாகக் காட்டியது. இதன் மூலம் நேரடியான ஆக்கிரமிப்பை நடத்தி, தன் மேலாதிக்கத்தை நிறுவமுனைந்தது. ஆனால் புலிகள் மற்றும் சிங்கள அரசுடனான இந்தியாவின் மோதல் போக்கால், இதிலும் தோல்வியை தழுவியது. இப்படி இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நலனை, இலங்கையில் தான் விரும்பியவாறு இந்தியாவால் ஏற்படுத்த முடியவில்லை.

 

இதனால் நேரடி தலையீட்டுக்கு பதில், மறைமுகமான தலையீட்டை நடத்தி வந்தது. பேரினவாதம் தமிழின அழிப்பாக மாற, இதன் மூலம் இந்திய நலனுக்கு முரணான பிற நாடுகளின் தலையீடு அதிகரித்தது.

 

இலங்கையில் சீனத் தலையீடு, இந்தியாவுக்கு சவாலாகவே மாறிவந்தது. இப்படி இலங்கையில் சீனாவின் மேலாதிக்கம் உருவாவதைத் தடுக்கவும், தன் மேலாதிக்கத்தை உருவாக்கவும், பேரினவாத இராணுவ அரச இயந்திரத்துக்கு உதவுகின்றது. இதற்கமைய  விரிந்த தளத்தில் இந்தியா தலையிடுகின்றது, தானே முன்னின்று யுத்தத்தை நடத்துகின்றது. இப்படி தன் பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கைக்குள் தக்கவைக்கவே, இந்தியாவே இன்று யுத்தத்தை நடத்துகின்றது.

 

இதை எல்லாம் மீறி இதற்குள் பல நாடுகள், தம் சொந்த நலனுக்காக இலங்கையில் தலையிடுகின்றது, போராடுகின்றது. இந்தியா தானே முன்னின்று இன்று பேரினவாத யுத்தத்தை நடத்திய போதும், தன் பிராந்திய மேலாதிக்க போட்டியில் அது தோற்றுவருகின்றது.

 

சிங்களப் பேரினவாதிகள் பிராந்திய மேலாதிக்க முரண்பாட்டையும், மேற்குடனான நாடுகளின் முரண்பாட்டையும் பயன்படுத்தி, தம் பாசிச சர்வாதிகாரத்தை இன மேலாதிக்கமாக நிறுவ முனைகின்றனர். இலங்கையின் பிராந்திய நலனுக்கான மோதலை, பேரினவாதம் இராணுவ பாசிச சர்வாதிகாரமாக மாற்றி வருகின்றது.

 

இப்படி சிங்களப் பேரினவாதிகள் தமது சொந்த பாசிச சர்வாதிகார நலனுக்காக, நாடுகளின் முரண்பாட்டை கையாளுகின்றது. ஒன்றையொன்று பயன்படுத்தியும், ஒன்றுக்கு எதிராக ஒன்றை மோதவிட்டும், தனது பாசிசத்தை நிறுவுகின்றது. இதன் மூலம் தமது பாசிசத்தை, தமிழர்கள் மீதான வெற்றியாக பிரகடனம் செய்கின்றது. தம் சொந்த பாசிசத்தை மூடிமறைக்க, பேரினவாதத்தை முன்னிறுத்துகின்றது. இப்படி பேரினவாதிகளின் குறுகிய நலன், இலங்கை மீள முடியாத வண்ணம் பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய முரண்பாட்டுச் சிக்கலுக்குள் கொண்டு வந்துள்ளது.

 

இந்தியாவின் பிராந்திய விருப்பங்கள், நோக்கங்கள் அனைத்தையும் மீறும் வண்ணம், இன்று சீனாவின் தலையீடு விரிவாகியுள்ளது. ஈராக் முதல் சூடான் வரையான சீனாவின் தலையீட்டை, மேற்கு தன் இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் தான் வெளியேற்றியது. இலங்கை விடையத்தில் சீனாத் தலையீடும், இந்தியா மற்றும் மேற்கு முரண்பாடுகளும் கூர்மையாகியுள்ளது.

 

இதை மீறியும், சீனா பாரிய அளவில் இலங்கைக்கு யுத்த தளபாட விநியோகம் செய்கின்றது.  பாரிய அன்னிய மூதலீடு மூலம், பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்புக்களை இலங்கையில் நடத்தி வருகின்றது. இப்படி சீன மேலாதிக்கம் இலங்கையிவ் ஏற்படுகின்றது. இந்தியாவோ திணறுகின்றது.

 

இதனால் பேரினவாதத்தின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்திசெய்யும் வண்ணம், தானே முன்னின்று ஒரு இனவழிப்பு யுத்தத்தை நடத்துகின்றது. இதன் மூலம், இந்தியா தரகு முதலாளிகளின், இலங்கைக்கான நலனை சீன மூலதனம் மேவிச் செல்வதை தடுக்க முனைகின்றது.

 

பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய நலன் சார்ந்த முரண்பாட்டின் மையமாக இன்று இலங்கை மாறியுள்ளது. ஒரு இனம் இதற்குள் சிக்கி சீரழிகின்றது. இவை அனைத்தையும் முறியடித்து போராடும் நிலையில், தமிழினமோ சிங்கள இனமோ இன்னமும் தயாராகவில்லை. இலங்கை மக்களின் எதிர்காலம் பிராந்திய முரண்பாடுகளுக்குள் சிக்குகின்ற அபாயத்தையும், இதனடிப்படையிலான மோதலையும் உருவாக்கும் சூழல் அதிகரிக்கின்றது. இதற்கு அமைய பேரினவாதத்தின் நடவடிக்கைகள், பாசிச சர்வாதிகாரமாக உருவாக்கி வருகின்றது.

 

இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வை, முன்முயற்சி எடுத்து வழங்கத் தயாரற்ற நிலையில் பேரினவாதம் உள்ளது. அது அன்னிய சக்திகளை உள்ளிழுத்து, அவர்களை பிரித்தாளும் யுத்த தந்திரத்தின் மூலம் தமது சொந்த சர்வாதிகார பாசிச நிலைப்பாட்டை பேரினவாதம் மூலம் தக்கவைக்க முனைகின்றது. இப்படி பிராந்திய முரண்பாட்டை பேரினவாதம் தன் நலனுடன் பயன்படுத்துகின்றது.

 

இப்படி இந்திய நலனுக்கு முரணாகத்தான், பேரினவாத நடவடிக்கை அமைகின்றது.  இந்தியாவோ இதை தனக்கு ஏற்ப எதுவும் செய்யமுடியாத வண்ணம், புலிகள் என்ற அமைப்பு உள்ளது. மேற்கு நிலைப்பாட்டைக் கொண்ட புலிகளின் மேலான இந்தியாவின் நம்பகத்தன்மை, இந்தியாவின் நலனுக்கு முரணானதாகவுள்ளது. புலிகள் எதை எப்படி எந்த நேரத்தில் செய்வார்கள் என்று தெரியாத நிலையில், இந்தியா உள்ளது. புலிகள் பற்றிய நம்பிக்கையீனம், அவர்களின் மேற்கத்தைய சார்புத்தன்மை, இவைகள் தான் இன்று புலியை விட பேரினவாதத்தை ஆதரிக்க முதன்மையான காரணமாகவுள்ளது.

 

இந்த நிலையில் சீனாவுடனான பிராந்திய மேலாதிக்க முரண்பாட்டை எப்படி கையாள்வது என்பதில், பேரினவாத இனவழிப்புக்கு தாராளமாக உதவி புலியை அழிப்பதன் மூலம் பிராந்திய மேலாதிக்கத்தை தக்கவைக்க முனைகின்றது.

 

இது சாத்தியமில்லாத நிலையில் புலிகளின் அழிவுக்குப் பின், தமிழீழத்தின் பெயரில் இன்னுமொரு தமிழ் கூலிக் குழுவை உருவாக்க சமகாலத்தில் முனைகின்றது. ஜெயலலிதாவின் தமிழீழக்  கோசம் அப்படிப்பட்டது தான். இப்படி இதன் மூலம் பிராந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவ, இன்று புலியையே அழிக்க உதவுகின்றது. 

 

இருந்தபோதும் எதிர்காலத்தில் இலங்கை பிராந்திய மோதல்கள் கொண்ட பிரதேசமாக மாறவுள்ளது. இதற்கு அமைய புதிய கூலித் தமிழீழக் குழுவை இந்தியா உருவாக்கும்  சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகி வருகின்றது. இதற்கு ஏற்றாப்போல் இலங்கையில் சீனா ஏற்படுத்தி வரும் மேலாதிக்கமும், இந்தியா தனிமைப்பட்டு செய்வதறியாது திகைத்தும் நிற்கின்றது. இதில் இருந்து இந்தியா மீள, இனமோதலை மீண்டும் புதிய வடிவில் ஆயுத மோதலாக உருவாக்க முனையும் அல்லது இலங்கை பாசிச அரசின் உறுப்புகளை தனக்கு சார்பாக படுகொலை செய்யும்.

 

பி.இரயாகரன்
06.05.2009